புனித மார்கழி மாதம்
மார்கழி மாதம் முழுவதுமே பக்தி மாதமாகும். திருப்பவை, திருவெம்பாவை என்று பெருமாளையும், சிவனையும் காலையிலேயே எழுந்திருந்து வீதிவலம் வந்து பக்திப் பரவசத்துடன் மேள தாளத்துடன் தம்பூரா - ஹார்மோனியம் சகிதமாக மார்கழிக் குளிரையும் பொருட் படுத்தாமல் பக்தர்களின் பக்தி பார்ப்பவர்களைப் பரவச மூட்டும்.
அந்த பக்திப் பாடர்களை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டின் முன் தெருவில் பெருக்கி, நீர் தெளித்து, பெரிய பெரிய கோலமிடும் பெண்களும் அந்த பக்தியில் பங்கு கொண்டு, ஆனந்தமடையும் அற்புதம் மார்கழி மாதத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் பாக்கியமாகும்.
அடுக்கு மாடி குடியிருப்புகளாக வீடுகள் மாறிய இக்காலத்திலும் அதில் வசிக்கும் பக்தரகள் தங்கள் குடி இருப்புகளின் பொது இடங்களில் பலர் ஒன்றாக இணைந்து அற்புதமான வித விதமான பெரிய கோலங்கள் இட்டு இந்த மார்கழி மாதம் முழுவதையும் கொண்டாடுவதையும் பார்க்கும் பொழுது ஹிந்து மத சனாதன தர்மம் என்றும் தழைத்து வளரத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
பணம், பதவி, படிப்பு என்று பல இருப்பினும் பண்பும், பக்தியும், பணிவும் பெற வேண்டு மென்றால் அது சனாதன தர்மம் உள்ளத்தில் உறங்காமல் குடிகொண்டால் தான் நடக்கும்.
உடல், உள்ளம், உயிர் - ஆகியவைகளைப் புனிதமாகச் செய்ய இந்த மார்கழி மாதம் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சுழி இட்டுப் புதிப்பிக்க வேண்டும்.
பகுத்தறிவு என்று மனத்தை அலைய விடாமல், 'கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு' என்ற அவ்வையின் அருளுரையை நினைவு கொண்டு, வாழ்வை ஒளியுடன் வளம்பெறச் செய்ய வேண்டும்.
இந்த புனித மாதத்தில் தான் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் ஆகியவைகளுடன், சிவனுக்கு உகந்த ஆருத்ரா தரிசனமும் கொண்டாடபட இருக்கின்றன.
'அரியும் சிவன் ஒன்று' என்ற அற்புத மொழியை அறிந்து - உணர்ந்து பெருமாளையும் - சிவனையும் நினைத்து, துதித்து, வணங்கி உய்வோமாக.
ஓம் நமோ நாராயணாய - ஓம் நம சிவாய.


Comments