வள்ளுவம் 6 - கொல்லாமையும் புலால் மறுத்தலும்
வள்ளுவம்: 6 கொல்லாமையும், புலால் மறுத்தலும் ஆக்கம்: எஸ். சங்கரன் வள்ளுவப் பெருந்தகை ஜைனமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு சாராரின் கருத்து. அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால், ஜைனமதத்தின் முக்கிய கொள்கையான அஹிம்சை அவருக்குப் பிடித்த கொள்கைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான் 'கொல்லாமையும், புலால் மறுத்தலும்' அவர் மனத்திற்குப் பிடித்தவைகளாக இருக்கின்றன. இந்த பரந்த உலகத்தில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றுவரை, புலால் உண்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். சைவ உணவு முறையினை மேற்கொள்பவர்கள் மிகவும் சொற்பம். அதிலும் உலகளவில் பார்த்தால், இந்தியாவில்தான் புலால் புசிக்காதவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். புலால் மறுத்தலும், கொல்லாமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. கொல்லாமை நிகழாவிடில், புலாலும் கிடைக்காது. ஆனால், புலாலுக்காக பிராணிகளைக் கொல்வதைத் தடுப்பது முடியாத ஒன்றாகும் என்பது வள்ளுவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான், அவர் புலாலை மறுக்கச் சொல்கிறார். புலால் உண்பவர்களின் தொகை குறையக் குறைய, கொல்லாமையும் குறையும் என்பது வள்ளுவரின் கருத்த...