வள்ளுவர் பார்வையில் இறைவன்
வள்ளுவர் பார்வையில் இறைவன் டாக்டர் எஸ். ஜெயபாரதி என்ற அன்பர் திருக்குறளைப் பற்றி மிகவும் அழகாகவும், தெளிவாகவும் சொன்ன வார்த்தைகள் இதோ: இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். என்றாலும் திருவள்ளுவரை, தெய்வப் புலவர் என்று தான் நாம் அவரை இறைவன் ஸ்தானத்தில் வைத்துப் போற்றுகிறோம். ஆகையால் அவரது சொற்கள் அனைத்தும் சொர்ணமயம். சொக்கத் தங்கம். திருக்குறளை தமிழ் மறை என்று சொல்லி, அதை வேதத்திற்கு இணையாக வைத்துப் போற்றுகிறோம். ஆகையால், திருவள்ளுவர் மனிதனாக இருந்து திருக்குறளை எழுதினாலும், அவரது வாசகங்கள் எல்லாம் தெய்வமணம் பெற்றவைகள் என்று கொள்வதில் தவறில்லை. ஆகையால் ஜெயபாரதி சொன்னதில் ஒரு திருத்தம் தேவை: மனிதனுக்காக திருக்குறள் சொன்னதாக இருப்பினும், சொன்ன திருவள்ளுவர் தன்னை மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டு எழுதி இருக்கிறார் என்று கொள்வது தான் சாலச் சிறந்தது. இறைவனை - அதாவது பரம்பொருளை வள்ளுவர் கீழ்க்கண்ட சொற்களில் குறிப்பிடுகிறார்: 1. 'இறைவன்' என்ற சொல் 7 குறட்பாக்களில் குறிப...