துரோணர் ஏகலைவனுக்கு இழைத்த பெரும் பிழை
1. துரோணர் ஏகலைவனுக்கு இழைத்த பெரும் பிழை துரோணரின் வாழ்க்கை ஒரு சோகக் கதையாகும். அவரது பிறப்பே விசித்திரமான ஒன்று. அவரது இறப்பும் மிகவும் சோகமான ஒன்றாக அமைந்து விட்டது. அவருக்கு தாயின் கற்பவாசம் இல்லாமலேயே துரோண் என்ற ஒரு பாத்திரத்தில் பிறக்கும் நிலை உண்டாயிற்று. துரோணரின் தந்தை பெயர் பரத்வாஜ மஹரிஷி. அவர் ஒரு நாள் வழக்கம் போல் கங்கை நதியில் ஸ்நானம் செய்ய தமது சிஷ்யர்களுடன் சென்றார். அப்போது கிரிதாசி என்ற ஒரு பேரழிகியான அப்சரஸ் கங்கை நதியில் குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, கட்டுப்படுத்த முடியாத காம உணர்ச்சியின் காரணமாக ஜீவ விந்து வெளிப்பட அதை ஒரு பாத்திரத்தில் பாதுகாத்து அதுவே ஒரு அற்புதக் குழந்தையாக ஜனித்தது. துரோண் என்றால் பாத்திரம். ஆகையால் அதில் பிறந்ததால் துரோணர் என்று பெயர் பெற்றார். துரோணர் தமது இந்த அசாதாரணப் பிறப்பைப் பற்றி மிகவும் பெருமைப் பட்டு அதை வெளிப்படுத்தி உள்ளார். அதே போல் துரோணரின் இறப்பும் சோகமான ஒன்றாகும். யுத்தகளத்தில் சிரஞ்சீத்துவ வரம் பெற்ற தன் அன்பு மகன் அஸ்வத்தாமன் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தவறான செய்தியால் துக்கம் தாங்காமல் தம...