திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
டிசம்பர் 03 புதன் - பரணி தீபம் (காலை 4 மணி), மகா தீபம் (மாலை 6 மணி)
திருவண்ணாமலையில் சிவ பெருமான் ஜோதி வடிவமாக காட்சி அளித்ததை நினைவுபடுத்தும்
விதமாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலை மீது மகாதீபம்
ஏற்றப்படுவது வழக்கம். திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றப்பட்ட பிறகு தான்
வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கமும் உள்ளது.
கார்த்திகை தீபத் திருநாள் அன்று மாலையில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்தால் முக்தியை தரும் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை தீபத் திருவிழா நடத்தப்படுவதற்கு புராணங்களில் பல கதைகள்
சொல்லப்படுகின்றன. புராண கதைகளின் படி, சிவபெருமான் ஜோதி வடிவமாக மகாவிஷ்ணுவிற்கும்
பிரம்மாவிற்கு காட்சி அளித்த திருநாள் திருக்கார்த்திகை தீபத் திருநாளாகும். அதே
போல் அடி முடி காண முடியாத அண்ணாமலையாராக லிங்கோத்பவ மூர்த்தியாக சிவ பெருமான்
வெளிப்பட்டதும் இதே நாளில் தான் என சொல்லப்படுகிறது. சிவ பெருமானை எப்போதும்
பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தவம் செய்து, கிரிவலம் வந்த பார்வதி
தேவிக்கு, சிவ பெருமான் கிரிவலப் பாதையில் எட்டு இடங்களில், ஜோதி வடிவம் உள்ளிட்ட
எட்டு விதமான ரூபங்களில் திருக்காட்சி அளித்ததும், தனது உடலில் சரிபாதியை
அம்பிகைக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்ததும் திருக்கார்த்திகை தீபத்
திருநாளில் தான் என சொல்லப்படுகிறது.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை என்று கொண்டாடப்படும் தீபத் திருவிழாவில் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவான சிவபிரானைத் தொழுது அனைத்துத் செல்வங்களையும், நோயற்ற நீண்ட வாழ்வினையும், இனிய இன்ப வாழ்வையும் அருள வேண்டுகிறோம்.
ஓம் நம சிவாய !


Comments