இரத்தல் இனிது எழுத்து: பவித்திரன்.
இரத்தல்
இனிது
எழுத்து: பவித்திரன்.
குறிப்பு: வள்ளுவர் முரண்பாடான கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார் என்று தெய்வப்புலவரை நமது நிருபர் அவமதிப்பதாகத் தோன்றும். ஆனால், எந்த ஒரு இலக்கியத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் எந்தவித பயமுமின்றி ஆராயும் தீரம் இருந்தால்தான் அந்த மொழியும் செழித்து வளரும்.
தமிழைப் பொருத்த அளவில், ஆங்கில இலக்கியத்தைப் போல் ஆழ்ந்த ஆராயும்
சூழ்நிலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழில் வாழ்த்துரைதான் உண்டு. ஆய்வுரை
அறவே இல்லை என்ற நிலைதான் இன்றும் நிலவுகிறது. பல மதிப்புரைகள் எல்லாம்
வாழ்த்துரையாகத் தான் இருக்கின்றன. இந்த நிலை மாறினால்தான் இலக்கியம் நின்று
நிலைத்திருக்கும்.
'ஆகாய விமானமா? எங்கள் மூதாதையர்களுக்கு
முன்பே தெரியும். புஷ்பக விமானம் தான் ஆகாய விமானத்தின் முன்னோடி!' என்று
திண்ணை வேதாந்தம் மறைந்து, ஆகாய விமானத்தை முதலிலேயே கண்டு பிடித்திருந்தால்
அது நமக்குப் பெருமை. வெறும் கற்பனை உலகத்தில் மட்டும்
சஞ்சரிப்பதால் நாட்டுக்கோ, வளர்சிக்கோ எந்தவிதத்திலும் உதவிபுரியாது.
பரந்த உள்ளம், விரிந்த
உலகப் பார்வை, சீர்தூக்கி ஆய்வு செய்யும் திறன் - இவைகள்
அனைத்தும் வேண்டும்.
'உலகத்தில் நிரந்தரமான வஸ்து மாற்றம்' என்பது
ஒருவரின் வாசகம். 'மாற்றம்' என்ற சொல்லை வைத்தே, பாரக்
ஒபாமா யு.எஸ். ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று விட்டார்.
'மாற்றுக் கருத்துக்களையும், சீரிய
மாற்றங்களையும் வரவேற்ப்போம்' என்பது தான் உலக மக்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
படியுங்கள், மாறுபட்டால் எழுதுங்கள். ஏற்றுக்கொள்கிறோம்.
- ஆசிரியர்.
இரத்தல் என்றால் யாசித்தல் என்பது பொருள். பசி ஆறப் பிச்சையெடுப்பதும், குடும்பம் நடத்த பணத்தைத் தானமாகப் பெறுவதும், அரசர் மற்றும் செல்வந்தர்களைப் புகழ்ந்து பாடி பொற்காசுப் பரிசுகள் பெறுவதும் இரத்தல் தான். இந்த இரத்தல் இழிவு என்பது தான் பொதுவான கருத்து. ஆனால், இரத்தல் இனிது என்ற தலைப்பு பலருக்கும் தவறாகப்படும்.
இரத்தல் இனிது என்று சொல்வது வள்ளுவர். அது மட்டுமல்ல, இரத்தல்
அழகு என்று கூடச் சொல்கிறார்.அதற்கும் ஒரு படி மேலே சென்று, செல்வத்தை
ஒளிப்பதைக் கவனவிலும் நினைக்காதவர்களிடம் இரப்பது, கொடுப்பது போன்றதாகும் என்று கூடச்
சொல்லிவிட்டார். இதை யெல்லாம் பார்க்கும் பொழுது, வள்ளுவர் இரத்தலை ஆதரிக்கிறாரோ என்று
ஆதங்கப்பட வேண்டியிருக்கிறது.
இரத்தல் இனிது, அழகு என்று சொன்ன வள்ளுவர், 'இரவு
அச்சம்' என்ற அடுத்த அதிகாரத்திலோ அதற்கு நேர்மாறாகச் சொல்வதைச் ஜீரணிப்பது
சற்றுக் கடினமாக இருக்கிறது. அந்த அதிகாரத்தில் வள்ளுவர் அழுத்தம் திருத்தமாக
சொல்வது இதுதான்:
'இரவாமை நன்று அதாவது யாசிக்காமல் இருப்பது
நன்று.' அத்துடன் நிற்காமல், இரத்தல் ஒரு தொழில் அன்று, இரத்தலின்
மூலம் வறுமையைத் தீர்க்க நினைப்பது பேடிகளின் நிலையாகும் என்று மூர்க்கமாகச்
சாடுகிறார்.
இதை யெல்லாம் விட வள்ளுவர் ஒரு குறளில் சொல்வது யாசகம் செய்து
பிழைப்பது யாருக்கும் கூடவே கூடாது என்பதை வலியுறுத்துவதாக இருக்கிறது. அந்தக்
குறளில் வள்ளுவர் சொல்வது இதுதான்: 'தண்ணீர் இன்றி இறக்கும் நிலையில் ஒரு பசு
தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த நிலையில் இருக்கும் பசுவின் தாகத்தைத்
தணிப்பதற்காகத் தண்ணீரை யாசிப்பது கூட மிகவும் இழிவானது ஆகும்.'
ஏன் இந்த முரண்பாடு?
சிந்திக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
உலகத்தில் தானம் செய்வது அவசியமான தொன்று. ஏழ்மையைப் போக்க
இது ஒரு பொருளாதாரச் செய்கையாகும். இருப்பவர் இல்லாதவர்க்கு மனமுவந்து உதவுவது அவசியமானதொன்று என்பதை மறுக்க முடியாது. உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வதை
ஒரு தர்மமாக நமது வேதங்களும், நீதி நூல்களும் கூறுகின்றன.
'தர்மம் தலைகாக்கும்' என்பது
பொது விதி.
இரப்பவர்களின் குணங்களையும், கொடுப்பவர்களின் குணங்களையும் கூறும்
பொழுது அவைகளின் அழுத்தம் காரணமாக முரண்பாடு இருப்பதாகப் படலாம்.
'யாசிக்கும் பொருள்கள் துன்பமின்றிக்
கிடைக்குமாயின், யாசிப்பது இனிது' என்றும், 'ஒளிவு மறைவு இன்றிக் கடமை உணர்வு உள்ளவர்களிடம் யாசிப்பது ஒரு அழகு' என்றும், ஒரு வரையறையை
வள்ளுவர் ஏற்படுத்தி விட்டார்.
'எல்லோரிடமும் யாசிப்பது இழிவு. கொடுக்கும்
வள்ளல் குணம் அறிந்து, அவர்களிடம் மட்டும் யாசிக்கவும்' என்பதால், இரத்தல்
இனிதாகவும், இழிவாகவும் காணப்படுகின்றதைத் தான் வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.
‘செல்வம் உள்ளவர்கள் அந்தச் செல்வத்தை ஒளிக்காமல், கொடுத்துப்
புகழ் அடையுங்கள். இரப்பார் இல்லாவிடில், கொடுப்பாரின் நிலை கடலில் மரப்பாவை
அலைக்கழிவதைப் போல் அல்லர்படும்' என்று தர்மம் செய்வதின் அவசியத்தையும்
எடுத்துச் சொல்லுகிறார்.
கொடுக்கும் குணத்தை அற்புதமாக ஒரு குறளில் 'ஈகை' என்ற
அதிகாரத்தில் சொல்கிறார்.
உலகத்திலேயே துன்பமானது சாவு ஒன்றுதான். ஆனால், வறியவர்க்கு
ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலையில் சாதல் இனிமையானதாகிறது' என்பது
தானத்தின் சிறப்பை வெகு அழகாக விவரிக்கிறது.
இதைப் போல் இரத்தலுக்கும் ஒரு எல்லையை நிர்ணயிக்கிறார் வள்ளுவர். ஒரு
முக்கியமான கருத்து மையமாகக் கொள்ளப்படுகிறது. அதுதான் 'கரவாரிடம்
இரவாதீர்' என்பதாகும்.
அதாவது, தன்னிடம் நிறையச் செல்வம் இருந்தும், அதை
ஒளித்து வைக்கும் குணம் உள்ளவர்களிடம் யாசிக்க வேண்டாம் என்று இருகரம் கூப்பி வேண்டுகிறார். ஒரு
குறளில்
வள்ளுவர் சொல்கிறார்: 'கரவாரிடம் (உள்ளதை ஒளிப்பவர்களிடம்) சென்று இரக்க வேண்டாம் என்று இரப்பவர்களை இரந்து
வேண்டுகிறேன். இப்படி இரவாமல் இருப்பது கோடி மடங்கு நன்று.'
இதை இன்னும் வலுவாக வலியுறுத்த ஒரு அற்புதமான உவமையைக் கையாளுகிறார்
வள்ளுவர். 'வறுமை என்பது ஒரு கடல். அந்தக் கடலைக்
கடக்க இரக்க வேண்டிய நிலை வந்தால், கரவாரிடம் இரவாதீர். இரந்தால் மரக்கலம் உறுதியிழந்து, கடும்பாறை தாக்கி உடைந்து விடும்' என்பதில்
உள்ள சுவை இனிது; வலிது.
'வாழ வேறு ஒரு வழியும் இல்லாத நிலையிலும்
இரவாமல் வாழ்வது, உலகளாவிய பெருமை உடைத்து' என்று சொன்ன வள்ளுவர், ஓவ்வொருவரும்
வேலை செய்து சம்பாதித்துச் சாப்பிட வேண்டும் என்பதை எவ்வளவு அழகாக சொல்கிறார்
பாருங்கள்
:'வேலை செய்து சம்பாதித்துச் சமைத்தது கூழே ஆனாலும், அதைக்
குடிப்பதைப் போல் இனிமையான உணவு வேறொன்றும் இல்லை.'
யாசித்து உயிர் வாழ்வது என்பது ஒரு சிலரின் தொழிலாகக் கொள்வதை
வள்ளுவர் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். 'உலகத்தைப் படைத்த கடவுள், சிலரை
யாசித்துத் தான் உயிர் வாழவேண்டும் என்று படைத்திருந்தால், அந்தக்
கடவுளே பல இடங்களில் பிச்சை எடுத்து அல்லற்பட்டுக் கெடட்டும்' என்று
ருத்திரமாகி விடுகிறார் வள்ளுவர்.
யாசிப்பதை அளவோடும், அறிவோடும் செய்யின் அது அழகோடும், இனிமையோடும்
இருக்கும். இருந்த போதிலும், யாசித்து உயிர் வாழ்வது
கொடுமையிலும் கொடுமைதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வறுமையைப்
போக்குவதற்கு, யாசகத்தை ஒரு தற்காலிகமான உபாயமாகத்தான் கொள்ள வேண்டும்.
சங்க காலத்தில் புலவர்கள் அரசர்களையும், தனவந்தர்களையும் தேடி, அவர்களைப்
புகழ்ந்து பாடி பொருள் பெற்று வாழ்ந்தாகச் சரித்திரம் சொல்கிறது. இதுவும் ஒருவகை
யாசகம் தான் என்றாலும், அவர்கள் தங்கள் புலமையை வெளிப்படுத்திக்
கவிதைகள் பாடிப் பெற்ற பரிசிலாகவே கொள்ள வேண்டும். ஒரு புலவர் பாடிப் பரிசில்
பெற்றால், அவரது வாய்மொழியாகப் பல புலவர்கள் அதே புரவலரிடம் சென்று பரிசில்
பெறுவதும் சொல்லப் பட்டிருக்கிறது. பல புலவர்களின் வறுமை இப்படித் தீர்ந்ததாகப் பல
செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
இருப்பினும், செல்வந்தர்களை நாடி, அவர்களைப்
பாடி பரிசு பெறாமல் ஏமாந்த புலவர்களும் ஏராளம் என்பதைப் புறநானூற்றில் உள்ள பல புலவர்களின் பாடல்களிலிருந்து தெரிகிறது.
அப்படி ஏமாந்த புலவர்கள் தாபத்தாலும், ஏக்கத்தாலும், கோபத்தாலும்
அந்தச் செல்வந்தர்களை நேரிடையாகவும், பல சமங்களில் தங்கள் புலவர் கூட்டத்திலும்
ஏசியும், இகழ்ந்தும், சாபம் இட்டும் பாடிய பல பாடல்களும்
புறநானூற்றில் உள்ளன.
'இல்லை என்ற சொல்கேட்டதும், இரப்பவர்
உயிர் பிரிந்து போய்விடுகின்றதே. ஆனால், பொருள்
இருந்தும், அதை ஒளித்து இல்லை என்று சொல்லும் செல்வந்தர்கள் உயிர் போகாது இருப்பதின் மர்மம் என்ன? அவர்கள் தங்கள் உடலில் உள்ள உயிரை அவர்களது
செல்வத்தை ஒளித்து வைத்திருப்பது போல் எங்குதான் ஒளித்து வைத்திருக்கிறார்களோ?' என்று
வெகு அழகாக இரப்பாரையும், இருப்பாரையும் ஒரே வேகத்தில் சாடுகிறார். 'உயிர்
போனாலும் நீங்கள் இரத்தல் எண்ணைத்தை விட்டு ஒழிக்க மாட்டீர்களோ?' என்று
இரப்பவர்களிடமும், 'உடம்பின் உயிர் போனாலும், தானம் செய்ய மாட்டேன் என்று
இருக்கிறீர்களே, இது உங்களுக்கு நியாயமா?' என்று இருப்பவர்களிடமும் வினா
எழுப்புகிறார் வள்ளுவர். ஆனால், இரப்பவர் கொடுக்காதவர்களிடம் கோபத்தால்
குமுறுவது தவறு என்று வள்ளுவர் ஒரு குறளில் சொல்லி இருக்கிறார்.
ஆகையால் புலவர்கள் புரவலர்களைப் பாடிப் பரிசு பெருவதைப் நோக்கும்
பொழுது, அத்தகைய 'இரத்தல் இழிவன்று; அழகானதே; இனிதானதே' என்று
கொண்டால், வள்ளுவரின் பாக்களில் காணப்படுவதாக இருந்த முரண்பாடு [ரளவு
தெளிவுறும்.
இரப்பவர் இரக்கட்டும். கொடுப்பவர் கொடுக்கட்டும். இரப்பவர் இரப்பது
தீது என்பதை மறக்காமல் இருக்கட்டும். கொடுப்பவர் இரக்கம் கொண்டு ஒளிக்காமல் மனம்
மகிழ்ந்து கொடுக்கட்டும். இந்த நிலை ஏற்பட்டால், இரப்பதும், கொடுப்பதும் நன்றே என்பதை உணர்வோம். முரண்பாடும்
முறிந்து விடும்.
ஆதாரம்: குறள்கள்: 221லிருந்து 224 வரை, 230,
1051லிருந்து 1070
Comments