ஒபாமாவிற்கு நோபல் பரிசா? – அனுப்பு: வத்ஸலா சங்கரன்
ஒபாமாவிற்கு நோபல் பரிசா?
– அனுப்பு: வத்ஸலா சங்கரன்
தூங்கிக் கொண்டிருந்த ஒபாமாவை எழுப்பி அவரது அரசாங்க அலுவலர் ஒருவர்,'நீங்கள் சமாதனத்திற்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள்' என்று அறிவித்த பொழுது, ஒபாமாவினால் இதை நம்பவே முடியவில்லை. 'எனக்கா சமாதானத்திற்கு நோபல் பரிசு? அதற்கு நான் அருகதை அற்றவன். இருப்பினும், அந்தப் பரிசினை ஏற்கிறேன். இந்தப் பரிசினால், நான் பெருமை அடைவதை விட, இன்னும் பணிவாகப் பணிசெய்யத் தூண்டப்படுகிறேன்' என்று சொல்லி இருக்கிறார்.
ஒபாமாவிற்குச் சமாதன நோபல் பரிசு கொடுத்ததை உலகம் மிகவும் ஆச்சரியத்துடன் நோக்குகிறது.
'நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வதற்குக் கடைசி நாள் இந்த வருடம் பிப்ரவரி1-ம் தேதி. இது ஒபாமா 44-வது ஜனாதிபதியாகப் பதிவி ஏற்பதற்கு 11-நாட்கள் முன்பு தான் இந்த கடைசித் தேதியாகும். அப்படி இருக்கும் போது, ஒபாமா செய்த காரியத்திற்காக இல்லாமல், செய்யப் போகும் காரியத்திற்காகத் தான் இந்த பரிசா?' என்றும் பலர் கேள்விகள் எழுப்பி இருக்கிறார்கள்.
நோபல் குழு ஒபாமாவிற்கு இந்தப் பரிசை கொடுத்ததற்குக் கூறும் காரணங்கள் இதோ: 'ஒபாமா ஒரு ஜனாதிபதியாக ஒரு புதிய சூழ்நிலையை அகில உலக அரசியலில் உருவாக்கி உள்ளார். அத்துடன் அவர் செனட் உறுப்பினராக இருக்கும் பொழுது செயலாற்றிய விதங்கள், தேர்தலின் போது உரையாற்றியவைகள் இவைகளையும் கருத்தில் கொண்டுள்ளோம்.'
'இந்தப் பரிசைப் பெறுவதற்கு நான் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது. ஆகையால், இந்தப் பரிசுக்கு நான் இப்போது தகுதியானவன் இல்லை' என்று சொல்லி ஒபாமா இந்தப் பரிசை ஏற்காமல் இருந்தால், அது அவரது புகழை மேலும் உயர்த்தி இருக்கும் என்பது பலரது அபிப்பிராயம்.
காந்தியின் பெயர் சமாதானப் பரிசுக்கு 1937, 1938, 1939, 1947 -ஆகிய வருடங்களில் பரிந்துரை செய்யப்பட்டும், ஏகாதிபத்தியத்தில் அக்கரை கொண்ட சுவீடன் நாட்டு குழுவினர் காந்திக்கு அந்தச் சமாதானப் பரிசை அளிக்கத் தவறி விட்டனர். இதை அவர்கள் தாங்கள் செய்த மிகப் பெரிய தவறு என்பதை பிற் காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது ஒரு ஆறுதலான செய்தி. அது மட்டுமல்ல. மஹாத்மா காந்தி 30-ம் தேதி ஜனவரி 1948 அன்று கொல்லப் பட்டார். அது அந்த வருடத்தில் பரிந்துரைக்கப் படும் கடைசித் தேதிக்கு இரண்டு நாட்கள் மட்டும் முன்னதாகும். ஆனால், அதற்குப் பிறகு காந்திக்கு நோபல் சமாதானப் பரிசு கொடுக்க வேண்டும் என்று ஆறு பரிந்துரைக் கடிதங்கள் நோபல் குழுவிற்கு அனுப்பப் பட்டன.
ஆனால், இறந்த நபருக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை என்ற விதியினால், அந்த பரிந்துரை நிராகரிக்கப் பட்டது. ஆனால், அந்த வருடம் ஒருவருக்கும் சமாதனப் பரிசு அளிக்கப்படவில்லை. அதற்கு நோபல் பரிசுக் குழுவினர் சொன்ன காரணம்: உயிரோடு இருக்கும் எவரும் இந்த வருடம் சமாதான நோபல் பரிசுக்குத் தகுதியானவர் இல்லை'
இந்த விளக்கமே காந்திக்குக் கொடுக்கப்படாத - ஆனால் கொடுக்கப்பட வேண்டிய - சமாதான நோபல் பரிசாகக் கொள்ளலாம்.
காந்திஜியின் கொள்கையைக் கடைப்பிடித்த மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங்க் சன் சுயூ கீ, தலை லாமா ஆகியவற்களுடன் ஒபாமாவும் சேர்ந்து, நோபல் பரிசு பெற்றவராகிறார். குருவுக்குக் கிடைக்காத பெருமை, சிஷ்யர்களுக்கு கிடைத்ததில் எல்லோரையும் விட காந்திக்குத் தான் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால், இது தன் கொள்கையான சத்தியாக்கிரஹத்திற்குக் கிடைத்த அங்கீகாரமும், வெற்றியுமாகும் என்று தான் காந்திஜி கருதி மகிழ்வார்.
Comments