2021 வருட நோபல் அமைதிப் பரிசு பெறும் இருவர் – பிலிப்பைன்ஸ் பெண் பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா & ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி ஏ. முரடோவ்
கருத்துச் சுதந்திரத்தை காப்பாற்றும் கொள்கையை தைரியமாகவும், துணிச்சலாகவும், அரசு இயந்திரத்தின் இருப்புக் கரங்கள் கொண்டு அடக்கும் எதேட்சிகாரத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் தீரர்கள் இவர்கள் இருவரும். அவர்களுக்கு இப்பரிசினைக் கொடுப்பதின் மூலம், பிற நாட்டில் உரிமைக்கும், சுதந்திரமான எதிர்ப்புகளுக்கும் குரல் கொடுக்கும் அத்தனை பத்திரிகையாளர்களின் சார்பாகவே இவர்களுக்கு இந்த வருட சமாதானப் பரிசு வழங்கப்படுகிறது – என்பது தான் நோபல் பரிசு வழங்கும் குழுவின் வாழ்த்துரையாகும்.
சிறு குறிப்பு:
மரியா ரெஸ்ஸா (வயது 58) – துப்பறிந்து பல தவறான அரசின் அராஜகம், அரசியல் பழி வாங்கல், சுதந்திர சிந்தனைகளை எப்படி அரசு பொய்ச் செய்திகளை ஆயுதமாகப் பரப்பி ஊழல், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கல் ஆகியவைகளை வெளிக்கொணர்ந்து பிலிப்பைன்ஸ் அரசின் பழிவாங்கும் செயல்களையும் உள்ளூரிலும், வெளி உலகத்திற்கும் தெரியப்படுத்தியவர்.
டிமிட்ரி ஏ. முரடோவ் (வயது 59 ) - பல பத்திரிகைகளில் பணியாற்றிய முரடோவ் 1993-ல் தாமே நோவாயா கெசட் என்ற பெயரில் தொடங்கினார். அந்தப் பத்திரிகைக்கு ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மிக்கேல் கோர்பசேவ் அந்தப் பத்திரிகையை நடத்த தனக்குக் கிடைத்த நோபல் பரிசுத்தொகையின் ஒரு பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார். கோபர்சேவின் ‘கிளாஸ்னோஸ்ட்- Glasnost – ரகசியமற்ற வெளிப்படைத் தன்மை – க்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நோபல் பரிசுத் தொகையில் ஆரம்பித்த முரடோவிற்கு உலக சமாதானப் பரிசு கிடைத்திருப்பது எவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது என்பதை நினைத்து அவர் அச்சரியப்படுகிறார்.
அதே சமயம் இந்தப் பரிசு உண்மையிலேயே ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராகவும், அரசை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அரசியல் வாதியாக இப்போது ஜெயிலில் இருக்கும் இப்போதைய அரசு விஷம் கொடுத்து கொல்ல முயன்றும் உயிர்பிழைத்த அலெக்செல் ஏ. நவல்னி என்பவருக்குத் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார் உரடோவ். இந்த பெருந்தன்மைக்கே இன்னொரு நோபல் பரிசை அவருக்குக் கொடுத்துக் கவுரவிக்கலாம்.

Comments