முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்
முக்குணங்கள் என்றால் அவைகள் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம்
என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் விளக்கம் சொல்கிறான்.
சதுர்வர்ணம் என்று கீதையில் சொல்லி இருப்பது நான்கு வர்ணம் –
அதாவது நான்கு நிறம் என்பதைக் குறிக்கும் சொல்லாகும். அந்த நான்கு வர்ணங்களுக்கும்
ஆணி வேர் முக்குணங்களாகும்.
அந்த மூன்று குணங்களையும் மூன்று நிறங்களாக உருவகப்படுத்தி அதன்
தன்மையை வெளிப்படுத்துவார்கள்.
சத்துவ குணம் வெளுப்பு, ரஜோ குணம் – சிகப்பு; தமோ குணம் – கருப்பு.
இந்த மூன்று குணங்களையும் முறையே – தூய்மை, வலிமை, எளிமை என்றும்
வகுக்கலாம்.
பிருக்ரிதி என்ற இயற்கை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் ஐந்து
மூலப் பொருள்களான – காற்று, தீ, நீர், நிலம், ஈதர் ஆகியவைகளின் ஒருங்கிணைப்பால் உண்டானது.
அவைகள் தான் அனைத்து பிறப்புக்களுக்கும் தாயாய் இருந்து, பரப்பிரம்மம் என்ற
தகப்பனால் ஜீவ விந்து பெற்று உலகத்தின் இனப்பெருக்கம் உண்டாகிறது.
உயிரை உடலுடன் இணைப்பது அந்த மூன்று குணங்களாகும்.
இப்போது அந்த மூன்று குணங்களின் தன்மைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணன்
கீதையில் விளக்கியதைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக சத்துவ குணம் என்பது ஞானம் மேலோங்கிய குணம் என்றும், ரஜோ
குணம் என்பது ஆளும் ஆசை மேலோங்கிய குணம் என்றும், தமோ குணம் என்பது அஞ்ஞானம்
மேலோங்கிய குணம் என்றும் கீதை விளக்கம் கொடுக்கிறது.
சத்துவ குணம் என்பது தூய்மையாகவும், ஒளிவிடும் தன்மையுடன் உயிரை உடலுடன்
சந்தோஷம் – ஞானம் ஆகியவைகளால் இணைக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். அந்த சத்துவ குணம் உயிரை மேம்படுத்தி,
மறுபிறவி இல்லா முக்திக்கு வழிகோலும்.
ரஜோ குணம் என்பது காமம் மற்றும் பற்று ஆகியவைகளால் உயிரை உடலுடன்
செயல்கள் – அவைகளின் பலன்கள் ஆகியவைகளால் இணைக்கும் தன்மை கொண்டது. மேலும் இந்த
குணம் உயிர் வாழும் காலத்தில் பேராசை, சுயநலம், பதட்டம் ஆகியவைகளால்
பாதிக்கப்பட்டு, உடலிருந்து அந்த உயிர் பிரியும் போது அது செயல்களின் மேல் கொண்ட
பற்றின் காரணமாக மறுபிறவி - மீண்டும் பிறவி எடுக்கும் தன்மை கொண்டதாக அமையும்.
அஞ்ஞானம்
என்ற குணம் அழுக்கு மற்றும் குழப்பம் ஆகியவைகளால்
உயிரை உடலுடன்
கவனமின்மை, சோம்பேறித்தனம், உறக்கம் ஆகியவைகளால் இணைக்கும் தன்மை கொண்டது. அது உயிரை
கீழ் நோக்கிப் பயணிக்கச் செய்து, அந்த உயிர் உடலை விட்டு நீங்கும் போது மிகவும் கீழான
மறுபிறவி எடுக்ச வைக்கும்.
ஆகையால் உயிரின் அனைத்துச் செயல்களும் இந்த மனித குணங்களால்
தூண்டப்பட்டு
நடைபெறுகின்றன.
நடைபெறுகின்றன.
எந்த உயிர் இந்த மனித குணங்களை வெற்றி கொள்கிறதோ, அந்த
உயிர் தான்
பரப்பிரம்மமான இறைவனடி சேர்கின்றது. பிறகு அந்த உயிருக்கு மறு பிறவியோ,
மூப்போ, இறப்போ இல்லை.
பரப்பிரம்மமான இறைவனடி சேர்கின்றது. பிறகு அந்த உயிருக்கு மறு பிறவியோ,
மூப்போ, இறப்போ இல்லை.
இந்த முக் குணங்கள் ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை, உட்கொள்ளும்
உணவு,
வாழ்வில் எளிமை, செய்யும் தானம் ஆகியவைகளைப் பொறுத்தே அமையும்.
வாழ்வில் எளிமை, செய்யும் தானம் ஆகியவைகளைப் பொறுத்தே அமையும்.
முக் குணத்தவர்கள் அனைவரின் நம்பிக்கையும் அவர்களது முற்பிறவியைப்
பொறுத்தது.
சத்துவ குணமுடையோரின் நம்பிக்கை பிரம்மத்தைக் கடவுளாகக் கும்பிடும் தன்மையை
ஏற்படுத்தும். அதற்குக் காரணம் அவர்கள் உண்ணும் உணவாகும்.. அந்த உணவு
சாத்வீகமானது. நீண்ட அயுளையும், பலத்தையும், நற்பண்புகளையும்,
ஆரோக்கியத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்க வல்லது. தவம், தானம், பற்றில்லா
கர்மா ஆகிய உயர்ந்தவைகளை சத்துவ குணவான்கள் இடம் பொருள் காலம் அறிந்து
செய்வார்கள்.
ரஜோ குணமுள்ளவர்களின் நம்பிக்கை கீழான தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தும்.
அதற்குக் காரணம் அவர்கள் விரும்பும் காரமான, அதிக சூடான, புளிப்பான,
அதிக உப்புள்ள உணவு தான். அந்த ரஜோ குண உணவு உடல் வலி, மன அழுத்தம், அஜீரணம் ஆகியவைகளுக்கு
வழி வகுக்கும். அவர்களின் எந்தச் செயலும் பலனை எதிர்பார்த்தும், புகழை குறிக்கோளாகவும்
இருந்து, மனமில்லாமல் அவர்கள் செய்யும் தானமும் அதனால் ஆதாயம் அடையும் நோக்குடன் இருக்கும்..
தமோ குணவான்களின் நம்பிக்கை அஞ்ஞானத்தில்
உருவானது. அவர்கள் இறந்தவர்கள் – பீசாசுகள் ஆகிய துர்தேவதைகளை வணங்குவார்கள். அதற்குக்
காரணம் அவர்கள் ருசியற்ற, துர்வாசனையுள்ள, முந்திய நாளில் சமைத்த தூய்மையற்ற உணவை விரும்பி
உண்பதால் ஆகும். அவர்களின் தெய்வ வழிபாடு ஆஹம விதிப்படியோ, மந்திர உச்சாடணங்கள் இன்றியோ,
நிவேதனம் இல்லாமலோ நடக்கும். அவர்கள் தங்கள் உடலை வறுத்தியும், மற்றவர்களை அழிக்கவும்,
முட்டாள்தனமான மூர்க்கமான பூஜை செய்வார்கள். அவர்கள் செய்யும் தானமும் அகாலத்திலும்,
தவறான இடத்திலும், தவறானவர்களுக்கும் வெறுப்போடும், திட்டியும் பணிவில்லாமல் இருக்கும்.
மூன்று மனித குணங்களைப் பற்றித்
தான் கீதையில் மிகவும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ளது.
அத்தியாயம் 14 – ன் தலையங்கமே
‘மூன்று குணங்களைப் பற்றிய யோகம்’ என்பதாகும். அதில் உள்ள 27 ஸ்லோகங்களில் ஸ்லோகங்கள்
4-லிருந்து 23-வரை மூன்று குணங்களைப் பற்றிய விரிவான விளக்கங்கள் தான் உள்ளன.
அதே போல், அத்தியாயம் 17 –ன்
தலையங்கமே ‘மூன்று வகையான நம்பிக்கை பற்றிய யோகம்’ என்பதாகும். இதில் உள்ள 28 ஸ்லோகங்களில்
ஸ்லோகங்கள் 1-லிருந்து 22-வரை மூன்று குணங்களைப் பற்றிய விளக்கங்கள் தான் உள்ளன.
மேலும் அத்தியாயம் 18 – ன் மொத்த
ஸ்லோகங்கள் 78. அதில் ஸ்லோகங்கள் 4, 7, 8, 9, 19, 22 to 40, 51 to 53 – என்று மொத்தம்
27 ஸ்லோகங்கள் முக்குணங்கள் பற்றியதாகும். இதன் தலையங்கமே, மோட்ச, சந்நியாச யோகம் என்பதால், குணங்களால் தான் மோட்சமும், சந்நியாசமும் ஏற்படும் என்று விளக்கப்பட்டுள்ளதையும் அறிய வேண்டும். 'குலம் அல்ல குணம் தான்' ஜீவன் முக்தி அடையவும், சந்நியாசம் பெறவும் அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைவராலும் முக்தியோ, சந்நியாசமோ அடைய முடியாது என்றாலும், அதை அடையும் வழிமுறைகளை அறிந்து கொண்டு, அடுத்த பிறவியிலேயாவது ஜீவன் முக்தி அடைய முயல வேண்டும் என்பது தான் கீதை சொல்லும் உபதேசம்.
அத்துடன் கீதையின் மற்ற அத்தியாயங்களிலும்
இந்த மூன்று குணங்களைப் பற்றிய விளக்கங்கள் பரவலாக உள்ளன.
அதன் முழு விபரங்கள்:
அத்தியாயம் – 2 – 45, 46.
அத்தியாயம் 3 – 27, 28, 29,
37.
அத்தியாயம் 7 – 4, 5, 12,
13, 14
அத்தியாயம் 13 – 19, 21, 23.
ஆகையால் கீதையில் உள்ள மொத்த
700 ஸ்லோகங்களில், முக்குணங்களைப் பற்றிய ஸ்லோகங்களின் மொத்த எண்ணிக்கை 83 ஆகும். இது
12 விழுக்காடு என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் கீதாசாரிய கிருஷ்ணபரமாத்மா, மனிதனுக்கு 'உயர
‘குணம்’ அவசியம் என்பதை நமக்கெல்லாம் உணர்த்துவதற்காகத் தான் மிகவும் விஸ்தாரமாக விளக்கி
உள்ளார்.
ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு
வரவேண்டும். அத்தியாயம் 18 - ‘மோக்ஷ சந்நியாச யோகம்’ என்பதை முக்கியமாக விளக்க எழுதப்பட்டதாகும்.
அந்த அத்தியாயத்தில் மொத்த 78 ஸ்லோகங்களில், 27 ஸ்லோகங்கள் – அதாவது 35% ஸ்லோகங்கள்
இந்த முக்குணங்களை மிகவும் விஸ்தாரமாக விளக்கி உள்ளது. ஆகையால் இதன் மூலம் உயர் குணம்
– அதாவது சத்துவ குணம் – எவ்வளவு உயர்ந்தது, எவ்வளவு சக்தி வாய்ந்தது, எவ்வளவு தூரம்
மோஷத்திற்கும் – சந்நியாசத்திற்கும் உதவக் கூடியது – என்பதை நமக்குப் புரியும் படி
விளக்கி உள்ளார் பகவான் கிருஷ்ணன்.
பிரம்மத்தை அறிந்த குணவான் அனைவரும்
பிராமணர்கள் என்று சொன்னாலும், வைதீகத் தாக்கத்தால், அந்தக் குணம் – குலமாக உருவாகி
விட்டது. இது ஹிந்து மதத்திற்கு ஏற்பட்ட ஒரு கறை என்பதையும் நாம் புரிந்து, ஒத்துக்கொள்ளத்தான்
வேண்டும். அதனால் சூத்திரதாரியாக – தொழிலாளியாக – மற்ற வர்ணத்தினரான பிராம்மணர், கஷத்திரியர்,
வைஸ்யர் – ஆகியவர்களுக்கு உற்ற துணையாக கர்மம் செய்த சூத்திரர் குணத்தவர் – தச்சர்,
கொல்லர், நாவிதர், கொத்தனார் ஆகிய பல தொழில்கள் செய்து உதவிய சூத்திரர்கள் – ஒதுக்கப்பட்டோராக
சமூகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்டு விட்டது ஒரு பெரிய சமூகப்பிரச்சனை என்பதும் ஒரு
மறுக்கமுடியாத உண்மை தான்.
இப்போது மிகவும் விமரிசிக்கப்படும்
ஒரு பிரச்சனையை நேர்மையாக, தர்மமாக, எந்தவிதமான பயமும் இன்றி, சத்தியமான முறையில் நாம்
அணுக விழைகிறோம்.
“கீதை, குலம் – ஜாதி பாகுபாட்டை
ஆதரிக்கிறது. குறிப்பாக சூத்திரன் என்பவனை கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டு, அவனை பல ஜாதிக்
கொடுமைகளுக்கும் ஆளாக வித்திட்டு உள்ளது” – என்பது தான் ஒரு பொதுவான குற்றச் சாட்டு.
கீதையைக் குறை கூறுபவர்கள் மேலும்
சுட்டிக் காட்டுவது இது தான்:
“கீதை சொல்லும் ‘சதுர்வர்ணம்
என்ற நான்கு வர்ணங்கள்’ உண்மையிலேயே ஜாதியை அல்லது குலத்தையே குறிக்கிறது. அதில் குறிப்பிடப்பட்ட
நான்கு ஜாதிகளான – பிராமணன், க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்திரன் – ஆகியவர்களில் சூத்திரனைக்
கீழான ஜாதியாகக் குறிப்பிட்டு, ஹிந்து மதத்தில் ஜாதியின் பேரால் தீண்டாமை – கல்வி மறுப்பு
– வேலை மறுப்பு – தனி குடியிருப்பு – ஆலயப் பிரவேச மறுப்பு – தனி குளம் – தனி சுடுகாடு
– தனி போஜனம் ஆகியவைகள் ஏற்பட வழிவகுத்துள்ளது கீதை.”
இந்தக் குற்றச் சாட்டை இரண்டு
பகுதியாகப் பிரிக்க வேண்டும்.
1. சதுர்வர்ணம் என்று கீதை சொல்வது
ஜாதியைக் குறிப்பிடுகிறதா?
2. மனிதனில் உயர் ஜாதி – கீழ்
ஜாதி என்பதை கீதை வரையரை செய்கிறதா?
அதற்கு முன் கீதையில் நான்கு
வர்ணங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும் வர்ணனைகளையும், விளக்கங்களையும் நாம் சற்று
விளக்கமாகப் பார்க்க வேண்டும்.
மூன்று குணத்தைப் பற்றி மிகவும்
விரிவாக விளக்கிய கீதை, சதுர்வர்ணம் என்ற நான்கு வர்ணத்தாரைப் பற்றி ஒன்பது ஸ்லோகங்களில்
மட்டும் தான் குறிப்பிட்டுள்ளது.
அதன் விவரம்:
அத்தியாயம் 4 – 13
அத்தியாயம் 18 – 41 – 48
அந்த ஸ்லோகங்களில் பகவான் கிருஷ்ணன்
– அவனே யாதவர் குலத்தால் – கீழ் குலம் என்று தான் கணிக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது
– என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நாம் படித்துப் பார்த்து அதைப் பற்றியும் சிறிது
சிந்திப்போமாக.
சதுர்வர்ணம் என்பதை குணத்துக்கும்,
செய்கைக்கும் தக்கபடி நான் உருவாக்கினேன். செய்கை அற்றவனும், அழிவற்றவனுமாகிய யானே
அவற்றைச் செய்தேன் என்று உணர் – என்பது தான் அத்தியாயம் 4 – 13-வது ஸ்லோகம்.
இதில் சதுர்வர்ணம் என்று குறிப்பிட்டாரே
அன்றி அது – பிராம்மணன், க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்திரன் – என்று குறிப்பிடவில்லை
என்பதை கவனிக்கவும். மேலும், இந்த அத்தியாயம் ‘ஞானம் கர்மம், சந்நியாசம்’ ஆகியவைகளைப்
பற்றிய தத்துவச் சிந்தனையின் போது, சதுர்வர்ணம் பற்றிய விவரம் சொல்லப்பட்டிருப்பதால்,
இதில் எந்தவிதமான குறுகிய நோக்கமோ, மனிதரில் குலத்தின் அடிப்படையில் வேறுபாடு காணும்
கருத்தை தெரிவிக்கவோ, வலியுறுத்தவோ நிச்சயம் இருக்க வாய்ப்பே இல்லை.
நான்கு வர்ணத்தார் என்பவர்கள்
பிராமணர், க்ஷத்திரியர், வைஸ்யர், சூத்திரர் என்பதை அத்தியாயம் – 18 – ஸ்லோகம் 41-ல்
தான் கிருஷ்ணன் முதல் முதலாகத் தெரிவிக்கிறார். இந்த ஸ்லோகத்தில் நான்கு வர்ணத்தாரின் தொழில்கள் அவரவரின்
இயல்பான குணத்தின் படி பிரிக்கப்பட்டுள்ளன என்பது தான் கீதையின் வாக்கியம். குணத்தாலும், செய்யும் தொழிலாலும் தான் ஒருவனின் வர்ணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், பிறப்பால் இல்லை என்பது தான் கீதை வாக்கியம். குடும்பத்தின் குணங்கள் - கர்மாக்கள் ஆகியவைகள் பிறந்த மனிதரை உருவாக்கும் சக்தி பெற்றது என்பதால், மனிதர்கள் அந்தக் குடும்பத் தொழிலையே செய்ய முனைவார்கள் என்றாலும், அதைக் காரணங்காட்டி, குடும்பத் தொழில் குலத் தொழில் என்பதை கீதை ஆதரிக்காது. ஆனால், சமூகத்தில் இந்தக் கருத்து நிலைபெற்றதால் தான் 'பிறந்த குலத்தால் தான் குணமும், தொழிலும் நிர்ணயிக்கப்படுகிறது' என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், பிறப்பின் தாக்கம் ஜீவனுக்கு உண்டானாலும், குணமும் - தொழிலும் வர்ணத்தை வரையரை செய்கிறது என்பது தான் கீதை சொல்லும் தத்துவம்.
அடுத்து வரும் அத்தியாயம் 18
– 42, 43 & 44 – ஆகிய ஸ்லோகங்களில் குணத் தொழில் – குலத் தொழில் இல்லை – அதையே
செய்ய கீதை நான்கு வர்ணத்தினரிடமும் வலியுறுத்துகிறது.
பிராமண இயல்புக் கர்மா என்பது
மனவடக்கம், அகம் – புறத் தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் ஆகியவைகளின்
அடிப்படையில் அமைவதாகும்.
க்ஷத்திரிய இயல்புக் கர்மா என்பது
வீரம், போரில் புறங்காட்டாமை, உறுதி, திறமை, இறைமை ஆகியவைகளின் அடிப்படையில் அமைவதாகும்.
வைஸ்ய இயல்புக் கர்மா என்பது
உழவு, பசுக்காத்தல், வணிகம் ஆகியவைகளின் அடிப்படையில் அமைவதாகும்.
சூத்திர இயல்புக் கர்மா என்பது
தொழிலாளியாக தொண்டு புரிதல் என்பதின் அடிப்படையில் அமைவதாகும்.
இந்த விளக்கம் கொடுத்த பிறகு,
கீதையில் அடுத்த 4 ஸ்லோகங்களில், அவர்கள் வர்ணத்திற்கு ஏற்ற தொழில் செய்து சித்தி அடைய
வேண்டும் என்றும், அவரவர் தொழிலைச் செய்வதால் கடவுளைப் பூஜை செய்த பலனை அடைவர் என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறர்க்குரிய தொழிலை நன்கு செய்வதைக்
காட்டிலும், தன் இயல்புக் கர்மாவை – அது மதிப்பற்ற தொழிலாக இருப்பினும் – செய்தால்
அதனால் பாபம் அவனைச் சேராது. இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதைக் கைவிடலாகாது.
தீயைப் புகை சூழ்திருப்பது போல் எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
– என்பது கீதையின் விளக்கம்.
இதிலிருந்து ஒன்றை நீங்கள் நன்கு
புரிந்து கொள்ள வேண்டும்.
கீதையில் கிருஷ்ணன் – நான்குவர்ணம்
என்பது குணத்தால் உண்டானது என்று தான் அழுத்தம் திருத்தமாக உரைக்கிறார்.
ஆனால், ஒவ்வொருவரும் பிராமண குணத்தை
அடைய வேண்டும் என்றும், அது தான் முக்திக்கு வழி என்றும் சொல்லி, மற்ற குணத்தவர்களும்
தங்களை உயர்த்த சிறந்த குணவான்களாக செயல்படவேண்டும் என்றும் சொல்லும் போது, மறுபிறப்பில்
பிராமண குணத்தை அடைய இப்பிறப்பில் முயல வேண்டும் என்று கீதை சொல்கிறது.
கீதை எழுதப்பட்ட காலத்தில் வர்ணாசிரம
தர்மம் இருந்தது. அதில் நான்கு வர்ணத்தினரும் தொழில் செய்யும் நிலை தான் இருந்தது.
யாகம் செய்ய முதலில் சூத்திரர் என்ற தொண்டரின் பணி தான் முக்கியமாக இருந்தது. யாகத்திற்கு
அமைக்கும் கட்டிட வேலைகள் சூத்திரர்களின் பணியாகும். அவர்கள் தான் யாகத்திற்கும், மற்றவர்களுக்கும்
தொண்டு செய்யும் சூத்திரதாரர்கள்.
சிற்பிக்கு உளியை உருவாக்கியவர்கள்
– சித்திரத்திற்குச் சீலை, தூரிகை ஆகியவைகளை உருவாக்கியவர்கள் – க்ஷத்திரியருக்கு எஃகு
ஆயுதங்களை உருவாக்கியவர்கள் – உயர்ந்த கோபுரங்கள் – கோயில்கள் – குளங்கள் ஆகிய கடினமான
வேலைகளை தொண்டு உள்ளத்தோடு சமூக சேவை செய்தவர்கள் சூத்திரர்கள். ஆனால் அவர்கள் காலப்போக்கில்
தனித்து விடப்பட்டு தவிக்கச் செய்தது சமூகம்.
ஹிந்து மதம் சீரழிந்ததற்கு இஸ்லாமிய
முஸ்லீம்கள், கிருஸ்துவ ஆங்கிலேயர்கள் முக்கிய காரணம் என்றால் அது ஒரு சரித்திர உண்மையாகும்.
ஜாதி பேதம் – இன பேதம் – மத பேதம்
என்ற விஷ விதைகள் அவர்கள் ஆட்சியில் வேரூன்றி ஹிந்து மதத்தின் சனாதன தர்மம் தன் தன்மையை
இழந்து, அதனால் ஹிந்து மதமும் தலைகுனிவை ஏற்கவேண்டிய நிலையை அடைந்தது.
எப்படிப் பார்த்தாலும் இப்போதுள்ள
ஜாதிப் பாகுபாட்டிற்கு கீதையையோ, கிருஷ்ணனையோ குறை சொல்வது மிக மிகத் தவறு.
அதற்கு பிறகு வந்த பிராமணர்கள்,
சத்திரியர்கள், வைஸ்யர்கள் – ஆகியவர்களைக் குறைகாணலாமே அன்றி கீதையை அல்ல.
ஜாதிகளை ஒழிப்பது என்பது இயலாத
ஒன்று என்பதை உணரவேண்டும். ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க வேண்டியது அவசியம்.
ஜாதியினால் பல சலுகைகள் இருப்பதால்,
அதைப் பெறுவதற்கும் – மேலும் பல சலுகைகளைப் பெறுவதற்கும், கிடைத்த சலுகைகளின் சதவிகிதத்தை
அதிகரிப்பதற்கும், மேலும் புதிய ஜாதியை சலுகைகள் பெற போராடுவதும் ஆகிய பல பிரச்சனைகளால்
ஜாதியை ஒழிக்காமல், அதில் உள்ள கொடுமைகளைக் கலைய முயலுவது தான் சிறப்பான வழியாகும்.
பாரதியின் பாட்டில் – ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாடம்
பாரதியின் கருத்து இல்லை என்றும் பாரதி – சாதிக்கொடுமைகள் இல்லையடி பாப்பா – என்று
தான் பாடினார் என்றும் ஒரு சாரார் சொல்வார்கள். ஏனென்றால் சாதிகளை ஒழிப்பது என்பது
அரிது என்றும், அதில் உள்ள கொடுமைகளான – தீண்டாமை, தனிக் குவளைப் பாகுபாடு,
அனைத்து ஜாதியினரும் ஆலையப் பிரவேசம் – ஆகியவைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும்
கூறி பல சமூகச் சீர்திருத்தங்களை அரசாங்கங்களும், சமூக ஆவலர்களும் கொண்டு
வந்துள்ளனர்.
பாரதி ஜாதியைப் பற்றிப் பாடிய சில பாக்கள் இதோ:
1. ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம் இத் தேசத்தில்
எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும்
ஒன்றே.
2. எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா
மக்கள்
3. ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தியாவில் இல்லையே!
4. பார்பானை ஐயரென்ற
காலமும் போச்சே –
வெள்ளைப்
பரங்கியைத் துரை யென்ற
காலமும் போச்சே
ஆனால் ஒவ்வொரு குணங்களும் சமூகம் செயல்பட அவசியமாகிறது. வெறும்
ஆன்மிக மார்க்கம் மட்டும் சமூகத்தில் இருந்தால், அது பூர்ணத்துவத்தை அடைய
முடியாது. ஏனென்றால் ஆன்மிகவாதிகளைக் காப்பாற்ற – எதிரிகளிடமிருந்து மீட்க
வீரர்கள் வேண்டும். பொருள்களை விளைவிக்க தொழிலாளர்கள் வேண்டும். அப்படி விளைந்த
பொருட்களை வியாபாரம் செய்ய வணிகர்கள் வேண்டும். அதாவது, பிராமணர்கள்,
க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் – ஆகியவர்கள் சமூகத்திற்குத் தேவை.
இந்த நான்கு குணத்தவர்களை நான்கு வர்ணத்தார்கள் என்று தான் கீதை
குறிப்பிடுகிறது. ஆனால், வர்ணம் என்பதும் ஜாதி அல்லது குலம் என்பது ஒன்று தான்
என்று குறிப்பிடுபவர்களும் உண்டு.
பிறப்பால் வர்ணம் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒருவனின் வர்ணம் அவனது குணத்தாலும் - தேர்வு செய்த தொழிலாலும் தான் தீர்மானிக்கப்படுகிறது.
வர்ணம் என்பது ஜாதி என்பதற்கு கீதையில் ஆதரம் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பது தான் இந்தக் கட்டுரையில் வலியுறுத்தும் கருத்தாகும்.
வர்ணம் என்பது ஜாதி என்பதற்கு கீதையில் ஆதரம் இல்லை இல்லை இல்லவே இல்லை என்பது தான் இந்தக் கட்டுரையில் வலியுறுத்தும் கருத்தாகும்.
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
Comments