இன்றைய இனிய சிந்தனை:

 ஒவ்வொரு நாளையும் நீங்கள் அறுவடை செய்ததை வைத்து மதிப்பிடாதீர்கள்.

நீங்கள் பூமியில் விதைத்த விதைகளைக் கொண்டு  தீர்மானியுங்கள்.

ரோபர்ட் லுயிஸ் ஸ்டீபன்ஸன்.  

 விளக்கம்எஸ். சங்கரன்:

அறுவடை என்றால் பலனை அடைதல் என்று பொருள். விளைந்த பயிரை அறுவடை செய்வதற்கு முன் நிலத்தை உழுது, விதைகளை விதைத்து, நீர் பாய்ச்சி, உரம் இட்டு செயல்பட்டால் தான் பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிட்டும்.

அறுவடையை விட மீண்டும் மீண்டும் விதைத்து வயலைப் பராபரிப்பதில் தான் ஒருவனின் தொடர் வெற்றி இருக்கிறது.

அறுவடையின் பலனை மகசூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். மகசூல் அமோகமாக இருக்க விதைகள் அல்லது நாற்றுக்கள் தரமாக இருக்க வேண்டும்.

காய்க்கும் மரங்களின் பழக்களைப் பறித்து மட்டும் காலம் கழித்தால், அந்த மரம் ஒரு சில வருடங்களில் காய்ப்பதை இழந்து பட்டுப் போகும். ஆகையால் புதிய புதிய மரங்களின் விதைகளையும், மரக் கன்றுகளையும் நிலத்திலே விதைத்தும் பதித்தும் தொடர்ந்து பழங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும்.

ஒரு பிரபலமான கதை ஒன்று உண்டு.

ஒரு வயதான விவசாயி ஒரு மரக்கன்றை நட்டுக் கொண்டிருப்பான். அதைப் பார்த்த ஒரு குதிரை வீரன்பெரியவரே ! இந்த வயதான காலத்தில் மரம் நடுகின்றீரே, அது காய்ப்பதற்கு பல வருடங்கள் ஆகுமே ! அதன் பலனை நீங்கள் அனுபவிக்கப் போவதில்லை. அப்படி இருக்கும் போது ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள்என்று கேட்பான்.

அதற்கு அந்த முதியவர்அப்பனே ! இந்தத் தோட்டத்தில் இருக்கும் எந்த ஒரு மரத்தையும் நான் நட்டதில்லை. எல்லாம் என் அப்பாதாத்தா என என் மூதாதையர்கள் நட்ட மரத்தின் பழங்களைத் தான் நான் அனுபவிக்கிறேன்.   ஆகையால் நடும் மரத்தினால் பயன் பெற்றால் தான் நடவேண்டும் என்பது தவறல்லவா?’ என்று விளக்குவார்.

எந்தக் காரியத்தையும் ஆதாயம் கிடைத்தால் தான் செய்ய வேண்டும் என்பது தவறான அனுகுமுறை என்பதைத் தான் இந்தக் கதை நமக்கு அறிவுறுத்துகிறது.

இதையே ஆன்மீகக் கோணத்தில் ஆராய்ந்தால் ஒரு உண்மை வெளிப்படும்.

உள்ளத்தில் விதைக்கும் விதைகளைப் பொறுத்துத் தான் ஒருவரின் செயல்களின் தன்மை இருக்கும். சத்விஷயங்களில் ஒருவன் மனது ஈடுபட்டால், அவன் வாக்கு அமுதமாகும். இல்லாவிடில் விஷமாகும்.

இதைத் தான் பாரதிஉள்ளத்தில் ஒளி உண்டாகில், வாக்கினில் ஒளி உண்டாகும்என்று அற்புதமாகப் பாடிவிட்டுச் சென்றிருக்கிறான்.

இதற்கும் ஒரு படி மேலே கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான்:

கர்மம் செய். பலனை எதிர்பாராதே !’

எந்தக் கர்மத்திற்கும் பலன்அது நல்லதோ அல்லது கெட்டதோ உண்டு. ஆனால் எதிர்பார்த்துச் செயும் செயலில் முழுமையான ஈடுபாடு இருக்காது. கூலிக்கு மாரடக்கும் நிலையில் தான் அந்தச் செயல்கள் இருக்கும்.

கிருஷ்ணார்ப்பணம்என்று கிருஷ்ணனை முன் நிறுத்தி சராணாகதியாகக் செய்யும் காரியங்கள் அத்தனையும் தூய்மையான உயர்ந்த நிலையாகும். அந்த நிலையை அடைய மனம் கிருஷ்ணனின் நினைப்பில் நிரம்பி வழியவேண்டும்.

அப்போது செய்யும் செயலில் மனிதன் பரிபூர்ண நிலையை அந்த பரிசுத்தமான செயலால் அடைவான். இதைத் தான்செய்யும் தொழிலே தெய்வம்என்பர்.

இது கர்ம யோகமாகப் பார்க்கப்படும்.   

  







Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017