4-ம் தேதி நவம்பர் 2021 –வியாழக்கிழமை தீபாவளித் திருநாள்

 


தீபாவளி என்ற சொல் தீபம் + ஆவளி என்ற இரண்டு சொற்களின் தொகுப்பு.

தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு. ’ஆவளி‘ என்றால் வரிசை.

வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.

தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். மனத்தை இருளடையச் செய்யும் மாசான அகங்காரம், பொறாமை, ஆணவம் போன்ற தீய சக்திகளை விரட்ட கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி பகவானை வணங்கி, பூஜித்து இனிப்புப் பண்டத்தை நிவேதனம் செய்து பிரசாதமாக உண்டு வாழ்க்கையை ஒளிமயமாக்க பிரார்த்திக்கும் மகிழ்ச்சி பொங்கும் பண்டிகை தான் தீபாவளி.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நரகாசுரன் என்ற அசுரனை அழித்த நாளைத் தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார். அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், “அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது,

எண்ணெயில் லட்சுமிதேவியும், சீக்காய்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள்.

தீபாவளி தினத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்வது புனித கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

வாய்மை அன்பர்கள் அனைவரும் தீபாவளித் திருநாளில் கங்கா ஸ்நானம் செய்து பகவான் விஷ்ணுவின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறோம்.

ஜெய் கங்காதேவி ! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ! ஜெய் ஸ்ரீ விஷ்ணு !


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017