நூலகம்: சகோதரி சுப்புலட்சுமி
பிராமண ஜாதியில் பிறந்த சகோதரி சுப்புலட்சுமி சிறுவயதிலேயே விதவையாகி
விட்டார்.
அப்போதைய விதவைகள் அதிலும் பிராமணச் சமூதாயத்து விதவைகள் படும்
அவஸ்தைகள் சொல்லிடங்கா. ஆனால், சுப்புலட்சுமியின் பெற்றோர் தம் பெண்ணின்
எதிர்காலம் இருட்டாகி விடாமல், சுப்புலட்சுமியைப் படிக்க வைத்தனர்.
படித்துப் பட்டம் பெற்று, ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு, பல
விதவைகளின் மறுவாழ்விற்கு வித்திட்டவர். மோனிகா ஃபெல்டன் ஆங்கிலத்தில்
சுப்புலட்சுமியைப் பேட்டி கண்டு எழுதிய அவரது புத்தகம், அநுத்தமா
என்ற தமிழ் எழுத்தாளரால் மொழி பெயர்க்கப் பட்டு வெளி வந்திருக்கிறது. ரொம்பவும் சுவாரஸ்யமாகவும், சில
சம்பவங்கள் மனதை உருக்குபவைகளாகவும் இருக்கின்றன.
அவைகளிலிருந்து சில உங்கள் பார்வைக்கு வைக்கப் படுகின்றன.
1. உன்னுடைய நீண்ட பெயரைச் சொல்வதற்கு எங்கள்
நாக்கு உருளாது போலிருக்கிறதே?' என்றாள்
மதர் பாட்ரிக். உன்னை இனி 'சிபில்' என்று அழைக்கிறோம். இது உனக்குப் பிடிக்கிறதா?' என்று
கேட்டாள்.
சுப்புலட்சுமிக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை தான். ஆயின் அந்தக்
கான்வென்டில் சேர்ந்து அன்றைக்குத் தான் இரண்டாவது நாள். படிப்பை ஆரம்பிக்கும்
முன்பேயே ஆசிரியைகள் கூறுவதை எதிர்த்துச் சொல்வது மரியாதைக் குறைவாக இருக்கும்
என்று அவளுக்குத் தோன்றியது. அதனால் 'சரி' என்று சம்மதித்து விட்டாள். இருந்தாலும், அந்த
மாறுதல் ஒரு சந்தேகத்தையும் கிளப்பி விட்டது. 'தன்னைக் கிறிஸ்வ மதத்திற்கு மாற்றுவதற்கு
இது முதல் படியாக அமையும் என்று மதர் பாட்ரிக் எதிர்பார்க்கிறாள்' என்று
சுப்புலட்சுமி ஊகித்துக் கொண்டாள்.
அவள் கான்வென்டில் சேர்ந்து சில வாரங்களே ஆகியிருந்த பொழுது, மதர்
பாட்ரிக் ஒரு பைபிளை அவளுக்குப் பரிசளித்தாள்.
'உன்னுடைய ஆங்கில ஞானத்தை அபிவிருத்தி செய்து
கொள்ள நன்றாகப் பயன்படும்' என்றாள்.
சுப்புலட்சுமி அந்தப் பரிசைப் பெற்றுக் கொண்டா§ள் தவிர, வேறோர் உள்நோக்கத்தோடு இந்தக் காரியம் செய்யப்பட்டது என்று அவள்
உறுதியாக நம்பினாள். ஆகவே அவள் அதை வீட்டுக்கு எடுத்துச்
சென்று ஓரளவு சந்தேகத்துடன், 'நான் இதைப் படிக்கலாமா?' என்று
தன் தந்தையிடம் கேட்டாள்.
'கட்டாயம் படி. மிகவும் தூய்மையான, நேர்த்தியான
ஆங்கிலத்தில் எழுதப்பட்டது இது என்பது உண்மைதான். மேலும், கிறிஸ்துவப்
படிப்பினைகளில் எவ்வளவோ உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன. இனி நீ ஒரு குழந்தையல்ல. எல்லா மதங்களைப்
பற்றியும் நீ அறிந்து கொள்வதுதான் முறை. பிறகு அந்தப் போதனைகளில் எவற்றிலெல்லாம் உனக்கு நம்பிக்கை ஏற்படுகிறது என்பதை நீயாகவே
நிச்சயித்துக் கொள்ளலாம்' என்று அவர் கூறினார்.
2. யூக்லிட் பெரியப்பா சுப்புலட்சுமி தனியாக
அமர்ந்து பைபிள் படிப்பதைப் பார்த்து விட்டு, 'நீ படிக்க வேண்டிய புத்தகம் இன்னொன்று
இருக்கிறது. கர்னல் ராபர்ட் இன்கர்சால் என்ற ஓர் அமெரிக்கர் எழுதியது அது. அடுத்த
முறை நான் வரும் பொழுது கொண்டு வந்து தருகிறேன்' என்றார். சொன்னபடியே செய்தார்.
'கடவுள் மனிதனைப் படைத்தாரா, மனிதன்
கடவுளைப் படைத்தாரா என்ற கேள்வியுடன் அந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. என்ன
அற்ப்புதமான கேள்வி? அந்நூலைப் படிப்பது எனக்கு மிகவும்
சுவாரசியமாக இருந்தது' என்று சுப்புலட்சுமி சொன்னாள்.
சுப்புலட்சுமி அந்த புத்தகத்தை மதர் பாட்ரிக்கிடம் படிக்கக்
கொடுத்தார். ஓரிரண்டு நாட்களுக்குப் பிறகு, கன்னியா ஸ்திரியான பாட்ரிக்
சுப்புலட்சுமியை தன் அறைக்கு அழைத்துச் சொன்னாள்: 'இங்கர்சாலின் இந்தப் புத்தகம் மிகவும்
மோசமானது. இதை நான் தீக்கிரையாக்கப் போகிறேன்'
சுப்புலட்சுமி ஆச்சரியத்துடன் அவளை நோக்கினாள். சரி எது, தப்பு
எது என்பதைப் பற்றி மனிதருக்கு மனிதர் அபிப்பிராய பேதம் இருக்கக் கூடாதா? சில
சமயத்தில் அவ்வாறு மாறுபாடு இருப்பதே நல்லதல்லவா? தன்னுடைய வாழ்க்கையிலேயே இம்மாதிரி மாறுபாடுகளால்தானே
அபிவிருத்தி ஏற்பட்டிருந்தது. ஒருவர் எழுதியது எவ்வளவுதான் தப்பு என்று வேறொருவர்
எண்ணினாலும் அதற்காக அந்தப் புத்தகத்தையே எரிப்பதா என்ன?
இக்கருத்தை சுப்புலட்சுமி தைரியமாக வெளியிட்டார்.
மதர் பாட்ரிக் ஒத்துக் கொள்ளவில்லை. புத்தகம் கொளுத்தப்படத்தான்
வேண்டும். அதை யார் படித்தாலும் அவர்கள் மனத்தை அது மாசுபடுத்தி விடும்!
அதுதான் அந்தக் கன்னிகாஸ்திரியின் முடிவான அபிப்பிராயம் என்றால் அதை
மாற்ற முயல்வது வீண்பிரயாசையாகத்தான் இருக்கும். 'அந்தப் புத்தகம் என் பெரியப்பாவினுடையது. அதை
நான் அவருக்குத் திருப்பித் தர வேண்டும். தயவு செய்து கொடுத்து விடுங்கள்' என்று கேட்டாள்
சுப்புலட்சுமி.
'ஒரு நிபந்தனையின் பேரில் புத்தகத்தை உனக்குத் திருப்பிக் கொடுப்பேன். அதை மீண்டும் படிக்க
மாட்டேன் என்று நீ உறுதி கூறவேண்டும்' என்றாள்
பாட்ரிக்.
சிறிது யோசித்து, 'சரி. நான் இந்தக் கான்வென்டில் இருந்து
படிக்கும் வரை இதை மீண்டும் படிப்பதில்லை என்று உறுதி கூறுகிறேன்' என்றாள்
சுப்புலட்சுமி.
அதைவிட அதிகமாக ஒன்றும் எதிர்பார்க்க முடியாதாகையால், மதர்
பாட்ரிக் புத்தகத்தைத் திருப்பித் தந்தாள்.
3. கிறிஸ்துவ மதத்திலும், அதுவும்
மாதாகோயிலில், தீண்டாமை கடைப்பிடிப்பதைப் பற்றி காந்திஜியின் காரியதரிசியாக இருந்த
தேசாய் 1932-ம் வருடம் டிசம்பர் மாதம் 10-ம் தேதி
டைரியில் இவ்வாறு எழுதி இருக்கிறார்: 'திருச்சிராப்பள்ளியில் உள்ள கிறிஸ்துவர்களில் சிலர் சென்னை பிஷப்பை
எச்சரித்திருக்கிறார்கள். மாதா கோயிலில் பிராமணர்களுக்கும், மற்றக்
கீழ் ஜாதியினர், தீண்டாதவர் முதலியோருக்கு மிடையே இருக்கும் குறுக்குச் சுவரை எடுக்கா விட்டால்
அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்
போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். காந்திஜிக்கு இது வேடிக்கையாக இருந்ததாம்.
செயலிலே கருத்துடையவரான வல்லபாய் பட்டேலோ 'பிராமணர் அல்லாத கிறிஸ்தவர்கள் ஏன் உடனே குறுக்குச் சுவரைத் தாங்களகவே தகர்த்து எறிந்து
கூடாது. அதை
விட்டு விட்டு, மற்றவர்களைச் செய்யும்படி வற்புறுத்திக்
கொண்டு பட்டினி கிடக்க வேண்டும்?' என்று கேட்டாராம்.
4. கல்யாணமான தம்பதிகள் அலகாபாத் செல்லும்
போது தங்கள் புரோகிதரை அழைத்துக் கொண்டு திருவேணிக்குப் போவது வழக்கம். அவர்கள்
படகில் ஏறின உடனே மனைவி கணவரின்
மடியில் அமர்வாள். படகோட்டிகள் படகைச் செலுத்திக் கொண்டு போக அவள் தன் கூந்தலை
அவிழ்த்து விடுவாள். கணவர் அதை ஒரு நீண்ட சடையாகப் பின்னி விடுவார். சங்கமத்தை
அடைந்தவுடன் பின்னலின் கடைசி ஓர் அங்குலத்தை வெட்டி அதைப் புரோகிதருக்குத்
தட்சிணையுடன் தானம் செய்வார். இந்தத் தட்சிணை அவள் கணவரின் பொருளாதார வசதியைப்
பொறுத்து ரூபாய் ஐந்து முதல் ஆயிரம் வரையில் எந்தத் தொகையாக வேணுமானாலும்
இருக்கலாம்.
சுப்புலட்சுமியின் தந்தைக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாது. அவர்
பக்தி நிறைந்தவர். ஆசாரசீலர். இந்து மதத்தில் பற்றுள்ளவர் தான் ஆயினும், இந்த
மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு அவர் இடமளிக்க விரும்பவில்லை. ஆனால், அவரது
தாயாரோ இதற்கு எதிர். 'இந்த சம்பிரதாயங்கள் செய்யப்பட வேண்டியவைகள்' என்ற
நம்பிக்கை கொண்டவர் அவரது தாயார்.
5. ஆந்திர தேசத்து புரோகிதர்களிடம் நிலவிய
சில பழக்க வழக்கங்கள் தம் தாயருக்கும், தன் தந்தைக்கும் கட்டோடு பிடிக்க வில்லை.
தன் தாத்தா இறந்த பொழுது, சிராத்தம் செய்ய முற்பட்ட போது, மிகவும்
கஷடப்பட்டார்கள். சிராத்தம் செய்து வைக்க வந்த புரோகிதர்கள் தன்
தாயாரையே அவர்கள் தலையில் எண்ணெய் வைக்க வேண்டுமென்று
கட்டளையிட்டார்கள். தாய் மறுத்தாள். அவர்கள் வற்புறுத்தினார்கள். அவ்வாறு
செய்தாலொழியச் சிரார்த்தம் திருப்தியாக அமையாது என்று அவர்கள் விளக்கினார்கள்.
'பாவம், என அம்மாவோ புதியதான அந்த இரண்டு ஆண்களும்
தங்களுக்கு எண்ணெய் தேய்க்கும்படி சொல்லவும் மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டாள்.
புரோகிதர்கள் மிகவும் வற்புறுத்தவும், என் தகப்பனார் அதெல்லாம் முடியாது என்று
கூறிவிட்டார். அவருக்கு அந்தப் பழக்கம் அருவருப்பாக இருந்தது' என்கிறார்
சுப்புலட்சுமி.
6. கயையில் சிராத்தம் நடக்கும் விதத்திலும்
புரோகிதர்களின் அட்டகாசம் உண்டு.
புரோகிதர்கள் அருகிலேயே அமர்ந்து மந்திரங்களைச் சொல்லிப்
பிண்டப்பிரதானங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில நிமிஷங்களுக்கு ஒரு முறை
நின்று, 'வேறு யாரும் உங்கள் குடும்பத்தில் இறக்க வில்லையா? செத்துப்போன வேறு யாருடைய பெயரும்
நினைவில்லயா? ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்' என்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு எந்த
யாத்திரீகனும் தானாக விடை பெற்றுக் கொள்ள முயலக்கூடாது. புரோகிதர் வந்து அவன்
தோளைத் தொட்டு, உ‾ன் முன்னோர்கள் எல்லாம் சொர்க்கத்தில்
செளக்கியமாக இருக்கிறார்கள்' என்று கூறும் வரை காத்திருக்க வேண்டும்.
அப்படி அவர் திருவாய் மலர்ந்தருளுவதற்குப் பிரதியாக கணிசமான தொகையை எதிர்பார்பது
சகஜம்தானே? பணம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டால் அவர் தமது ஆசியைத்
தெரிவிக்க மாட்டார்!'
என் தந்தையும், தாயும், நானும் சிரார்த்தம் நடக்கும் இடத்துக்குச்
சென்ற பொழுது, தெற்கத்திய கிழவர் ஒருவர் கண்களில் நீர் மல்க, புரோகிதரிடம்
கெஞ்சிக் கொண்டிருந்தார்: 'நான் இங்கு இருபத்தொரு நாட்களாக
இருக்கிறேனே! என் பணம் எல்லாம் செலவழிந்து விட்டது. என்னால் இயன்றவரை கொடுத்து
விட்டேன். இப்போது என்னிடம் இருப்பது ஊர் திரும்பத் தேவையான பணம்தான். என்னை
ஆசீர்வதித்து அனுப்பி விடக்கூடாதா?'
இது எங்களுக்குக் கேட்டது. அவர் முகம் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
இப்போது அந்தப் புரோகிதர் ஆசி கூறவில்லை யென்றால் கடந்த மூன்று வாரங்களாக அவர்
செய்த சிராத்தச் சடங்குகள், பிரார்த்தனைகள் யாவும் வீணாகி விடும்.
முன்னோர்களுடைய ஆத்மாக்களும் சொல்லொணாத கஷ்டங்களை அநுபவிக்கும்படி
சபிக்கப்பட்டதாகிவிடும்.
என் தந்தைக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது. அவர் பேசவில்லை. ஆனால், அந்தச்
சினம் அவர் முகத்திலேயே ஜொலித்தது. இதைப் புரோகிதர் கவனித்து விட்டார். தீடீரென்று
புரோகிதர் தமது வலக்கையைத் தூக்கி கிழவரின் தோளைத் தொட்டு, 'போ, எல்லாம்
சரியாகி விடும்' என்றார்.
பிறகு என் தகப்பனார் அமர்ந்தார். சிராத்தம் தொடங்கியது. அது
முடிந்ததும் தட்சிணை கொடுக்கப் போன போது புரோகிதர் அதை மறுத்து விட்டார். 'நீங்கள்
எனக்கு ஒன்றுமே தர வேண்டாம். நானாக ஆசைப்பட்டு உங்களுக்கு இதை யெல்லாம் செய்திருக்கிறேன். தென்னாட்டிலிருந்து
உங்கள் நண்பர்கள் கயா யாத்திரை புறப்படும் போது என்னிடமே
வரும்படி நீங்கள் சிபாரிசி செய்தால் போதும்' என்றார்.
7. சுப்புலட்சுமியின் பராமரிப்பில் இருந்த
ஒரு இளம் விதவைகளுள் மூத்தவள் இருபது வயதுப் பெண். சேரும் பொழுதே அவளுக்கு
க்ஷயரோகத்தினால் வருந்திக் கொண்டிருந்தாள்.
எவ்வளவோ ஜாக்கிரதையாகப் பராமரித்தும், அப்பெண் குணமடையாமல், இறந்து
விட்டாள்.
அவள் இறக்கும் பொழுது பெற்றோர்கள் கூடவே இருந்தார்கள். புரோகிதர்களை
அழைத்து வந்து ஈமச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
புரோகிதர்களை உயிரிழந்த அந்தப் பெண் கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றனர். அவள்
காலடியில் புஷ்பங்கள் கிடந்தன. அவள் கேசம் நடுவகிடு எடுத்து இரட்டைப்
பின்னல்களுடன் விளங்கியது. ஓர் அழகிய படத்துக்குச் சட்டம் போட்டாற்போல் அவள்
முகத்தைச் சுற்றி வந்து முழங்கால்வரை நீண்டிருந்தன அந்தப் பின்னல்கள். அவள் கண்கள்
மூடிக்கிடந்தன. அவள் அழகான முகம் அமைதியான உறக்கத்தில் தோய்ந்திருப்பது போல் காட்சியளித்தது.
புரோகிதர்கள் இதை ரொம்பவும் மட்டமெனக் கருதிப் பார்த்தார்கள். அந்தப்
பெண்ணின் தகப்பானாரை நோக்கி, உ‾ங்கள் பெண் ஒரு விதவை என்பதாகச்
சொன்னார்களே? அப்படியானால், இவளுக்குக் கேசத்தை மழித்தாக வேண்டும்.
வயது வந்த ஒரு விதவைக்கு மயிர் வாங்காத போது, அவளுக்கு நாங்கள் இறுதிச் சடங்குகள்
செய்து வைக்க மாட்டோம்.' என்றார்கள்.
அப்பெண்ணின் தாயார் கதறிக் கொண்டு, அடுத்த அறைக்குள் Cடிச்
சென்றாள்.
சுப்புலட்சுமியின் அருகே பதறித் துடித்து விழுந்தாள்.
இதற்குள்ளாக பெண்ணின் தகப்பனார் அங்கு வந்து நாவிதரை அழைத்து வர ஓர்
ஆள் அனுப்பு வைக்க வேண்டுமென்று சுப்புலட்சுமியைக் கேட்டுக் கொண்டார்.
'என்ன அக்கிரமம்! முட்டாள் தனம்!' என்று
சுப்புலட்சுமி அரற்றினாள்.
'அக்கிரமம்! கொடூரம்!' என்று
பெண்ணின் தாயார் கதறினாள்.
சுப்புலட்சுமி அப்பெண்ணின் தகப்பனாரிடம், 'நீங்கள்
ஏன் அவர்களை எதிர்க்கக் கூடாது?' என்று கேட்டாள்.
'அவ்வாறு எதிர்க்கவோ மறுக்கவோ முடியாது.
நம் சாஸ்திரம். நாம் கீழ்ப்படிந்துதான் ஆக வேண்டும் என்று ஆணையிடுகிறது' என்று
அப்பெண்ணின் தகப்பனார் சொல்லி விட்டார்.
நாவிதர் வந்து இறந்தவளின் கேசத்தைக் கத்திரித்து எடுத்த பிறகுதான்
சாமக்கிரிகைகளைத் தொடர்ந்தனர் புரோகிதர்கள்.
8. ஒரு நாள் மாலை மவுண்ட் ரோடு சர்க்கார்
மாளிகையில் லார்டு வில்லிங்கனும் அவரது மனைவியாரும் ஒரு வரவேற்பு அளித்தார்கள்.
விருந்தினர்களில் ஒருத்தியான சகோதரி சுப்புலட்சுமி கோமனுக்கு
அறிமுகப்படுத்தப்படுவாள் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுப்புலட்சுமியும் அந்த விருந்திற்கு தன்னை நன்றாக அலங்கரித்துக்
கொண்டு, தனக்கு மிகவும் பிடித்த கருத்த ஊதா நிறத்தில் அகல ஜரிகைக் கரையுடன்
கூடிய பட்டுப் புடவை அணிந்து, அந்த விருத்திற்கு வந்திருந்தாள்.
அங்குள்ள ஆடவர்களும், சில பெண்மணிகளும் கோமனுக்கு
அறிமுகப்படுத்தப்பட்ட போது சுப்புலட்சுமி அதை உன்னிப்பாகக் கவனித்தாள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள்
பெயர் படிக்கப்பட்ட பொழுது முன்னோக்கி வந்து, அவர் நீட்டிய கையைப் பற்றிக்
குலுக்கினார்கள்.
பிறகு ஒவ்வொருவரும், பின்னால் நகர்ந்து கொண்டு, அடுத்து
வருகிறவர்களுக்கு இடம் தந்தனர். அவர்களில் சிலர் அவரிடம் ஓரிரண்டு வார்த்தைகளைப்
பேசினார்கள்.
கடைசியில் சுப்புலட்சுமியின் பெயர் அறிவிக்கப்பட்டது.
கோமகன் வலக்கையை நீட்டியவாறு ஓரடி முன்னால் வந்தார். சுப்புலட்சுமி
அவர் கரத்தைப் பற்றவில்லை. அதற்குப் பதிலாக ஆழ்ந்த மரியாதையுடன் குனிந்து, இரு
கைகளையும் குவித்து தன் நெற்றிக்கு நேராக செங்குத்தாகக் கொணர்ந்தாள்.
இந்தியாவிக்கு வந்தது முதல் இது வரை யாருமே தம்மை இந்திய
சம்பிரதாயப்படி வணங்குவதைக் காணாத கோமகன் ஒன்றும் புரியாதவராய், இரண்டடி
பின்னோக்கி நகர்ந்தார்.
அந்தக் கூடத்தில் நிசப்தம் நிலவியது. எல்லோரும் சிலையாக மாறி வெறித்து
நோக்கிக் கொண்டிருந்தனர்.
சுப்புலட்சுமி நிமிர்ந்து தன் இடத்துக்குத் திரும்ப விருந்தாள்.
அப்போது கோமகன், என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை போலும் என்று
நினைத்தவர் போல, ஒரு வசீகரப் புன்னகையுடன், மறுபடியும் முன்னே வந்து கையை நீட்டினார்.
சுப்புலட்சுமி மீண்டும் வணங்கினாள். மீண்டும் ஒரு முறை கையைக்
குவித்து மெல்லிய குரலில், 'நமஸ்காரம்' என்றாள்.
கோமகன் திரும்பவும் பின்னோக்கி நகர்ந்தார். சுப்புலட்சுமி
நிமிர்ந்ததும், மூன்றாவது முறையாகக் கை குலுக்க முன் வந்தார். அதே கணத்தில் சட்டென்று
அவள் சிந்தனைப் போக்கைப் புரிந்து கொண்டவராக இரு கைகளையும் சேர்த்துத் தாமும்
வணங்கினார். தமக்குக் கிடைத்த அந்த இந்திய சம்பிரதாய வணக்கத்துக்கு அதே போல்
மிகவும் சரியான முறையில் அவர் பதில் அளித்து விட்டார்.
எல்லோரும் மெய்மறந்து போனார்கள். மறுநாள் காலை இந்தக் கதை வெளியே
பரவியபோது சென்னை நகர் முழுவதும் சகோதரி சுப்புலட்சுமியைப் பற்றின பேச்சாகவே
இருந்தது.
அவளுடைய சில நண்பர்களும் உறவினர்களும் இந்திய தேசியக் காங்கிரஸின் ஆதரவளர்களாக
இருந்தாலும், அவள் மட்டும் எப்போதும் அரசியல் விஷயங்களில் தலையிடுவதில்லை என்பதை
எல்லோரும் அறிவார்கள். இருந்துக் கூட, அவள் மிகவும் உன்னதமான முறையில் தேசீயப்
பண்பைக் காட்டி விட்டாள். கோமகனின் பதில் வணக்கம், சுப்பு லட்சுமியை நித்தித்தவர்களையெல்லாம்
கூட, அவரைப் புகழும்படிச் செய்து விட்டது.
உனக்கு எப்படித்தான் அவ்வாறு செய்யத் தோன்றியதோ?' என்று
சகோதரியைப் பலர் கேட்டனர்.
அந்தக் கேள்விதான் அவருக்குப் புதுமையாகப் பட்டது. மிகவும் சகஜமான
குரலில் சுப்புலட்சுமி பதில் கூறினாள்: 'அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு
ராஜகுமாரனுக்கு மரியாதை காட்டும் முறை அது தான். மேலும், ஓர் ஆடவனின்
கையை ஒருகாலும் நான் தொடமாட்டேன்.'
Comments