வள்ளுவம்: பெண்ணீயம்
குறிப்பு:
நமது நிருபர் பவித்திரன்
வள்ளுவரைப் பேட்டி கண்டு, எழுதிய ஒரு வித்தியாசமான கட்டுரை
இது. அவரது கருத்துக்களுடன், பலர் ஒத்துப் போகாமல்
இருக்கலாம். என்றாலும், அவர் சொல்வதில் ‾ள்ள நியாயம், நேர்மை, உங்களை
ஈர்க்கும் என்று நினைக்கிறேன். - ஆசிரியர்.
நிருபர்: வள்ளுவப் பெருந்தகைக்கு அநேக வந்தனம். உங்களை 'வாய்மை' இதழுக்குப் பேட்டி எடுக்க பூமியிலிருந்து
வந்துள்ளேன். நீங்கள் வாழ்ந்த காலத்துப் பெண்களை வைத்து, அந்த நாட்களின்
வழக்கத்தை ஒட்டிப் பாடிய பாடல்கள் இந்த 21-ம் நூற்றாண்டிற்குப் பொருந்துமா? என்பது தான் என்
சந்தேகம்.
வள்ளுவர்:வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தில் உள்ள பத்துப் பாட்டுக்களும், மனைவி
எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
நற்குணம், நற்செய்கை, கற்பு, தெய்வமாகக் கணவனைப் போற்றும் பண்பு, கணவனின்
புகழைக் காப்பது, நல்ல புதல்வரைப் பெறுவது ஆகியவைகளைத் தான் மனைவியானவள் வாழ்க்கையில்
கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். அது எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது
தானே?
நிருபர்: கணவன் எப்படி இருந்தாலும் மனைவி மட்டும் வாழ்க்கைத் துணை
நலத்தில் குறிப்பிடுள்ள அத்தனை குணங்களுடன் இருக்க வேண்டும் என்று தாங்கள்
சொல்வதாகப் படுகிறதே?
வள்ளுவர்: ஆடவர்களுக்கு வேண்டிய குணாதிசயங்களைத் தான் பல
அதிகாரங்களில் குறித்துள்ளேனே! உண்மையில் பெண்மைக்குள்ள குணங்கள் குறைவான அதிகாரங்களில் தான்
எழுதப்பட்டிருக்கின்றன.
நிருபர்: தாங்கள் சொல்வது பொதுவாக ஒப்புக்கொள்ள வேண்டிய கருத்தாகத்
தான் கொள்ள வேண்டும். ஏனென்றால், மனைவியைக் காப்பதில் கணவனின் கடமை எவைகள்
என்பதைத் தாங்கள் தெளிவாக, மனைவியின் குணங்களைச் சொன்னது போல் சொல்ல
வில்லை என்பது இந்த நூற்றாண்டில் வாழும் பெண்களின் குற்றச் சாட்டாக இருக்கிறது. 'கற்பை
ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்' என்ற குரலுக்கு, உங்கள்
குறளில் எந்தக் கருத்தோ, ஆதரவோ இல்லையே!
வள்ளுவர்: ஒருவருக்கு ஒருத்தி என்ற எண்ணமோ அல்லது விதியோ அப்போது
இல்லை என்பதைக் கருத்தில் கொண்டால், என் நிலை உங்களுக்குப் புரியும். குறட்பா இயற்றப்பட்ட காலத்தையும்
நீங்கள் மறக்கக் கூடாது. அப்போதெல்லாம், பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழும் நிலை
இருந்தது. தனியாகப் பெண்ணிற்கு தனிப்பட்ட சம்பாத்தியமோ, சொத்தோ, பொருளோ
கிடையாது. அது தான் அந்தக் கால சட்டம்.
நிருபர்: 'மங்கலம் என்பது மனைவியின் நற்குண
நற்செயல்களே. அந்த மங்கலமான மனைவிக்கு நல்ல அணிகலன் நல்ல புதல்வரைப் பெறுதல் என்று
கூறுவர்' என்று கூறுவதன் மூலம், முதல் மனைவி மலடியாகி விட்டால், ஆண்மகன்
குழந்தை பெறுவதற்காக மறுமணம் செய்து கொள்ளலாம் என்பது உங்கள் கருதாகப் படுகிறதே?
வள்ளுவர்: குலம் தழைக்க வேண்டுமானால், ஆண்மகன் மறுமணம் செய்து கொள்வது தவறல்ல. 'மங்கலம்' என்று
தொடங்கும் இந்தக் குறட்பா குறிப்பிட்ட அதிகாரத்தின் கடைசியான செய்யுள். இது அடுத்த
அதிகாரமான மக்கட்பேறு என்பதற்கு தோற்றுவாயாகக் கொள்ள வேண்டும்.
நிருபர்: பொருட்பால் அத்தியாயத்தில் 'பெண்வழிச் சேறல்' என்ற
அதிகாரத்தில் உள்ள 10 பாக்களுமே, மனைவியைச்
சாடுவதாகவே இருக்கிறது. அதில்உ‾ள்ள அத்தனை பாக்களும், 'கணவன்
மனைவியின் சொற்களை ஒருபோதும் கேட்கக் கூடாது. கேட்டால், கேடு
வரும்' என்று எச்சரிப்பதாகவே இருக்கின்றன. இதற்கு,உங்களது
பதில் என்ன?
வள்ளுவர்: வெறும் உறவு மட்டும் ஒருவருக்கு புத்தி சொல்லும் தகுதியைக் கொடுக்காது. அதற்கு
அறிவு, அனுபவம், தைரியம், நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
மனைவி என்ற ஸ்தானத்தால் மட்டும் இந்தத் திறமைகள் அவளுக்கு இருப்பதாகக் கொண்டு, ஒருவன் நடப்பானேயாகில், வாழ்வில்
தோல்வியைத் தான் சந்திக்க நேரிடும். பெண்மையில் பேதைமைக்
குணம் அதிகம் உண்டு என்பது உங்கள் காலத்தில்
சொல்லப்படும் 'ஜீன்' பற்றியது. பேதைமை என்றால் பெண்களின்
விழைதல், அஞ்சல், ஏவல் ஆகியவைகளைக் குறிக்கும்.
நிருபர்: கணவனுக்கு ஒரு காப்பாக மனைவி இருக்க வேண்டும் என்று
கீழ்க்கண்ட இரு குறட்பாக்களில் சொல்லி இருக்கிறீர்கள்:
- கற்பால் தன்னைக் காத்து, தன்
கணவனையும் உண்டி முதலியவற்றால்
பேணி, இருவரின் நன்மைக்குகந்த புகழ் காத்து, உறுதியுடையவளே பெண்.
- கணவனின் புகழைக் காக்க விரும்பும் மனைவி
இல்லாதவர், பகைவர்முன் காளைபோல் பெருமித நடை போட முடியாது.
இபடிப்பட்ட மனைவியிடம், ஒரு கணவன் கலந்தாலோசித்து, அவளது
கருத்துக்களைக் கடைப்பிடிப்பதில், நன்மைதான் உண்டாகுமே தவிர தீமை ஏற்பட வாய்ப்பில்லை என்று கருதுவது
தப்பில்லையே?
வள்ளுவர்: இதில் முக்கியமான ஒன்றை நீங்கள் கவனிக்கத் தவறிவிட்டீர்கள்.
இது கணவனின் நிலையைத் தான் குறிப்பாகக் காட்டி இருக்கிறேன். மனைவியிடம் அஞ்சி நடக்கும்
கணவனையும், மனைவி சொல்லே வேத மந்திரம் என்று அவளது ஏவலுக்குக் கட்டுப்படும்
கணவனையும், மனைவியின் மயக்கத்தில் இருக்கும் கணவனையும் தான் இந்தக் குறட்பாக்களில்
எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது.
நிருபர்: இருப்பினும் மனைவி என்ற ஸ்தானத்திற்கு தக்க மதிபளிப்பளிக்க
வில்லை என்று தான் எனக்குப் படுகிறது. மனைவியை வாழ்க்கைத் துணை என்றுதான் வேதம்
சொல்லுகிறது. அதாவது நல்லது-கெட்ட்து இவ்விரண்டிலும் மனைவிக்கும் சமபங்கு உண்டு. ஆகையால், உங்களது கீழ்க்கண்ட கருத்துக்கள் கொண்ட
குறட்பாக்களை பெண்ணீயம் பேணும் இக்கால மங்கையர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை
மிகத் தாழ்மையுடன் தெரிவிகக் கடமைப் பட்டிருக்கிறேன்.
- மனைவி சொல்படி நடப்பவன் சிறந்த பயனை
அடையான்.
- மனைவியின் மயக்கத்தால் கடமை மறந்தால், பிறர்
நாணும் படியாகும்.
- மனைவியிடம் தாழ்ந்து நடப்பது, நல்லாரின்
முன்னிலையில் தலைகுனிவு ஏற்படுத்தும்.
- மனைவிக்கு அஞ்சி நடப்பவன் செயலாற்றலின்
சக்தியை இழப்பான்.
- மனைவிக்கு அஞ்சி நடப்பவன், நல்லார்க்கு
நல்லன செய்தலுக்கு அஞ்சுவான்.
- மனைவிக்கு அஞ்சி வாழ்பவன், வீரத்தால்
பகைவர்களை வீழ்த்திச் சிறந்தாலும், ஆண்மையிலான்.
- மனைவியின் ஏவலை நாணமின்றிச் செய்யும்
கணவன் ஆண்மையிலான்.
- மனைவி விரும்பியபடி நடப்பவன், நண்பர்களின்
குறைகளைக் களையமாட்டான். மறுமைக்குத் துணையாய் அறமும் செய்யமாட்டான்.
- மனைவியின் சொல்கேட்டு நடப்பவன், அறச்
செயல், பொருளீட்டல், மற்ற கடமைகள் ஆகியவைகளைச் செய்யமாட்டான்.
வள்ளுவர்: இக்காலத்துப் பெண்கள் பல திறமைகளைக் கொண்டு, பல
துறைகளில் சிறந்து விளங்கும் அறிவையும், அனுபவத்தையும், அதீத
தீரத்தையும் பெற்றிருப்பதினால், அவர்கள் கணவருக்குச் சரிசமானமாக திறம்பட
செயலாற்ற முடியும். அத்தகைய பெண்களுக்கு மேற்கூறிய குறட்பாக்கள் பொருந்தாதுதான்.
ஆனால், நான் பெண்வழிச் சேறல் என்ற அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளைச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
"நன்றாக யோசிக்கும் திறனுடைய நெஞ்சுறுதி
கொண்டவர்க்கு, மனைவியின் பேதைமையான விழைதல், அஞ்சல், ஏவல் ஒன்றும் செய்யாது" என்பதுதான்
அந்தக் குறளின் பொருளாகும். ஆகையால், மனைவியின் சொற்களைச் செவிமடுக்கும்
ஒவ்வொரு கணவனும், நன்றாக யோசித்து, நெஞ்சுறுதி கொண்டு செயல்படவேண்டும். மனைவி
என்ற ஸ்தானத்திற்கு மதிப்புக் கொடுக்கும் அதே நேரத்தில், தன்
மதியையும் கணவன் பயன் படுத்த வேண்டும். அதுதான் விவேகம். அதுதான் ஆண்மை. ஆண்மை
அரசாள, பெண்ணீயம் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டியதில்லை. சேர்ந்தே
வாழ்வதுதான் வள்ளுவத்தின் குறிக்கோள்.
நிருபர்: வாழ்க வள்ளுவம். வாழ்க பெண்ணீயம்.
( குறட்பாக்கள்: 51-லிருந்து
60 வரை, 901-லிருந்து 910 வரை)
Comments