ஜல்லிக் கட்டுத் தடை நீடிப்பு
இதில் உயிர் இழப்பும், மிருகங்களைத்
துன்புறுத்தலும் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதையும்
மீறி, இது தமிழ் கலாச்சரம் சார்ந்த வீர விளையாட்டு, பொலி காளைகளை
உருவாக்க உதவும் விளையாட்டு, தமிழ் நாட்டு உள்ளூர் கால்நடைகள் பெருக்கம் வளரப் பெரிதும்
பயன்படும் விளையாட்டு, மேலைப் பன்னாட்டு இனங்களான ஜெர்சி, ஃபிரீசியன், பிரவுண்
ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு மாட்டினங்களைப் புகுத்தும் பல பன்னாட்டு நிறுவன்ங்களின் முயற்சிகளை
முறியடுக்க உதவும் விளையாட்டு, சத்து நிறைந்த ஏ 2 பாலைப்
பெறுவதற்கு உள்ளூர் மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் விளையாட்டு - என்று பல
நன்மைகளை தங்கள் தரத்துக் கருத்துக்களாக முன் வைக்கின்றனர் ஜல்லிக் கட்டு ஆதரவாளர்கள்.
இயற்கையான இனச் சேர்க்கை மூலம் மரபணு வளம் மிகுந்த நம் நாட்டு
மாட்டினங்களின் எண்ணிக்கை பெருகுவது தடுக்கப்படும் பொழுது, இதற்கு
மாற்றாக செயற்கைக் கருவூட்டலை மேற்கொள்வதற்கு அரசையோ, தனியார்
நிறுவனங்களையோ விவசாயிகள் சார்ந்திருக்க வேண்டிய நிலையால், மாட்டினங்களின்
மரபணு வளமும் வீழ்ச்சியடையும் என்ற காரணங்களும் முன் வைக்கப்படுகின்றன.
ஆனால் ஜல்லிக் கட்டில் காளைகள் துன்பப்படுவதில்லை என்பதை
எந்தவித ஐயத்திற்கும் இடம் இல்லாதபடி ஜல்லிக் கட்டை ஆதரிப்பவர்களால் உத்திரவாதம் அளிக்கமுடியாமல்
இருக்கும் நிலைதான் காணப்படுகிறது. ஜல்லிக் கட்டு நடைப்பதற்காக
தமிழக அரசு இயற்றிய ‘தமிழ்நாடு அரசின் ஜல்லிக் கட்டு நடைமுறைச் சட்டம் 27
- 2009’ - அதில் தான் ஜல்லிக் கட்டு நடைபெற காளைகள் மற்றும் வீர்ர்களின்
பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன - சுப்ரீம் கோர்ட்டால்
ரத்து செய்யப்பட்டு விட்டது. இதற்குக் காரணம் 2011-ம் ஆண்டு, சுற்றுச்
சூழல் மந்திரிசபை காளைகளையும் விளையாட்டுக்கும், காட்சிப்
பொருட்களாகவும் பயன்படச் செய்வதையும், அவைகளுக்கு அதற்காகப்
பயிற்சிகள் கொடுப்பதையும் தடை செய்து உத்திரவு
பிறப்பித்து விட்டது.
அதைச் சுட்டிக் காட்டி, இந்திய
மிருக பாதுகாப்பு அமைப்பு (Animal Welfare Board of India - AWBI) மற்றும்
பீட்டா (PETA - People for
Ethical Treatment for animals) என்ற பிராணிகள் உரிமைகளைப் பாதுகாக்கும்
அமைப்பு - இரண்டும் சுப்பீரீம் கோர்ட்டில் தகுந்த ஆதரங்களைக்
காட்டி, தமிழ் நாட்டின் ஜல்லிக்கட்டு - மஹராஷ்ராவின் காளைகள் கட்டிய வண்டிப் பந்தயம் - ஆகியவைகளைத்
தடை செய்யக் கோரிக்கை வைத்தது. அதை ஏற்று, மே மாதம் 2014 ஆண்டு சுப்ரீம் கோர்ட் தடை செய்து உத்திரவு
பிறப்பித்தது.
தமிழ் நாட்டில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெற முயற்சி
எடுக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கோரிக்கையின் பேரில்,
மோடி அரசின் சுற்றுச் சூழல் மந்திரிசபை ‘காளைகளை
காட்சிப் பிராணிகள் பட்டியலிருந்து விலக்கி’ இந்த ஜனவரி அன்று
உத்திரவு பிறப்பித்தது. உடனே பீட்டா அமைப்பு சுப்ரீம் கோர்ட்டை
அணுகி, அந்த உத்திரவை ரத்து செய்து, ஜல்லிக்
கட்டுத் தடையை மீண்டும் அமல் படுத்தும் நிலையை உருவாக்கினர். அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘மத்திய சுற்றுச் சூழல்
அரசின் அறிக்கையில் உள்ள காளைகளை விலக்கிய உத்திரவு, பிராணிகள்
பாதுகாப்புச் சட்டத்திற்குப் புறம்பானது. மேலும், காளைகள் துன்புறுத்தப்படும் போது, மரபு பண்பாடு கலாச்சாரம்
என்பவைகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் இல்லை. மேலும், தமிழ் நாட்டின் ஜல்லிக் கட்டு நடைமுறைச் சட்டம்-2009
ரத்து செய்யப்படுகிறது’ என்று தீர்ப்பு வழங்கி
விட்டது.
இதனால் சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு
நடைபெற வில்லை.
இதில் முக்கியமான அம்சம் காளைகள் பலவிதத்திலும் துன்புறுத்தப்
படுகின்றன என்பது தான் முக்கிய வாதம். அதற்கு இந்திய பிராணிகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பீட்டா இரண்டும் கோர்ட்டில்
சமர்ப்பித்த வீடியோ படக் காட்சிகள் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்பதைத் தெளிவாகக்
காட்டி உள்ளன. ஆதாரம் - வீடியோ
இதில் காளைகள் பலவிதங்களில் துன்புறுத்தப்படுகின்றன
என்பதை யாரும் மறுக்க முடியாது. வாலை முறுக்கியும்,
பல்லால் கடித்தும், கூர்மையான இரும்புக் கம்பால்
அடித்தும் குத்தியும், மதுவை வாயிலே ஊற்றியும் - இவைகள் அனைத்தும் ஜல்லிக் கட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
பல ஜனங்கள் பலவித குணங்கள் கொண்டவர்கள் இருப்பதால், சட்டங்களாலும் - போலீஸாலும் இவைகளைத் தடுக்க முடியாது.
இதை ஒழுங்கு படுத்த அதை நடைத்தும் கிராம மக்களே முன் வரவேண்டும்.
இதில் பீட்டாவைக் குறை சொல்வது சரியானதாகப் படவில்லை. இது மேல் நாட்டில் தோன்றிய அமைப்பாக இருந்தாலும்,
உலக அளவில் பலவிதமான அநியாயங்களை உலகத்தின் முன் நிறுத்தி, ஓரளவு வென்றுள்ளனர். உலகத்தில் உள்ள பல ஆய்வுக் கூடங்களில்
குரங்குகள், நாய்கள், மற்றும் பல ஜீவராசிகள்
ஆராய்ச்சி என்ற போர்வையில் கல் மனங்களையே உறைய வைக்கும் பல கொடூரங்களை உலக அரங்கில்
தெரியப்படுத்தி, அவைகளைத் தடுத்து நிறுத்திய பெருமை இந்த பீட்டா
அமைப்பிற்கு உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
‘ஜல்லிக் கட்டில் காளைகள் துன்புறுத்துவதைத்
தவறு என்று சொன்னால், காளைகள் உணவிற்காகக் கொல்லப்படுவதையும்
தடுக்க வேண்டும் இந்த அமைப்பு’ என்று சொல்பவர்கள் உண்டு.
அதுவும் பீட்டாவின் குறிக்கோளில் ஒன்றாகும். அதற்காக,
ஜல்லிக்கட்டில் காளைகளைத் துன்புறுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்று
வாதிடுவது தவறு.
இதற்குத் தீர்வு தமிழ் நாடு ‘பிராணிகள் வதைப் பாதுகாப்புச் சட்டம்’ என்பதில் அதன் சில சரத்துக்கள் காளைகளைப் பாதிக்காத அளவில் சட்டம் இயற்றி,
ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று, ஜல்லிக்கட்டை தடையின்றி
நடத்த முடியும்’ என்பது சட்ட நிபுணர்களின் கருத்தாகும்.
ஆனால், காளைகளின் பாதுகாப்பும் - வீரர்கள் மற்றும் அவைகளைக் காணும் மக்களின் பாதுகாப்பும் தமிழக அரசின் பொறுப்பாகி
விடுகிறது. மேலும், ஜல்லிக் கட்டு ஒரு குறிப்பிட்ட
மைதானத்தில் மட்டும் தான் நடக்க உத்திரவிட வேண்டும். கிராமத்
தெருக்களிலோ அல்லது வேலி இல்லாமல் உள்ள பரந்த வெளிகளிலோ ஜல்லிக்கட்டு - மஞ்சு விரட்டு நடைபெற அனுமதி மறுக்கப்பட வேண்டும்.
ஜல்லிக் கட்டு என்பது ஏழு தழுவதல் தான் என்று வாதிடும்
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ‘காளையின் கொம்புகளையோ அல்லது வாலையோ
களத்தில் உள்ள வீர்ர்கள் பிடிப்பதில்லை. அதன் பிடரியைப் பிடித்து,
கொம்பில் கட்டி உள்ள பணமுடிப்பைக் கைப்பற்றவே செய்வர்’ என்பது முன்பு நடைபெற்ற ஜல்லிக்கட்டின் வீடியோ படங்களைப் பார்த்தால்,
அந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவாகத் தெரியும்.
இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்பு ஒரு முறை
‘கோயில்களில் மாடு - ஆடு - கோழி ஆகியவைகள் பலியிடக்கூடாது’ என்று உத்திரவு போட்டார்.
ஆனால், அவரால் கூட அந்த உத்திரவை அமல் படுத்த முடியாமல்,
அந்த உத்திரவை மக்களின் எதிர்ப்பால் வாபஸ் பெற்றுக் கொண்டார்.
பக்தியின் பெயரால் கிராமத்துக் கோயில்களில் நடத்தப்படும் இந்த கொடூரமான
பலிகளை தடுக்க முடிவில்லை. ஆகையால், ஜல்லிக்கட்டுக்
காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று குரல் எழுப்பினால், அது
தமிழக மக்களின் மனங்களை சென்று அடைவதில்லை.
ஜல்லிக்கட்டை நடத்தும் போது ஜீவகாருண்யத்தை மனப்பூர்வமாக
கடைப்பிடித்து, காளைகள் எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச்
சமம் என்று சொல்வதைச் செயலில் காட்டி, உலக மக்களுக்கே எடுத்துக்காட்டாக
தமிழ் நாட்டு உழவர்களும், இளம் வீர்ர்களும் விளங்க வேண்டும்.
காளைகளுக்கும் துன்பமற்ற ஒரு வீர விளையாட்டாக அமையும்
அளவில் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டு அடுத்த வருட பொங்கலின் போது ஜல்லிக் கட்டு நடைபெற
அனைத்து தமிழ் மக்களும் முயன்று வெற்றி காணுவோம்.
முயற்சி திருவினையாக்கும்.
பொங்கலோ, பொங்கல்!
Comments