அப்துல் கலாம் என்ற மா மனிதர்



அப்துல்கலாம் ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது அவரது செகரட்டிரியாகப் பணி ஆற்றிய பி.எம். நாயர், ஓய்வு பெற்ற ஐ..எஸ். அதிகாரி, கலாமுடம் பழகி அந்த அற்புத நாட்களைப் பற்றி சமீபத்தில் பொதிகை தொலைக் காட்சியில் ஒளிபரப்பட்ட பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘கலாம் எஃபக்என்ற தலைப்பில் புத்தகமும் எழுதி உள்ளார்.

அதன் தழுவலான பேட்டியின் கருத்துக்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

Ø  கலாம் வெளிநாட்டிற்குச் சென்ற போது அவருக்குக் கொடுக்கப்படும் பரிசுகளை வாங்காமல் இருந்தால் அது அந்த நாட்டினரை அவமானப்படுத்துவதுடன், இந்தியாவிற்கும் தர்ம சங்கடமான நிலையை உருவாக்கும் என்பதால், அவைகளை வாங்கி, பிறகு அவைகளை போட்டோ எடுத்து பட்டியல் இட்டு, பிறகு அவைகளை அரசாங்கக் கருவூலத்தில் சேர்த்து விடுவது கலாமின் பாணிராஷ்ரபதி பவனிலிருந்து செல்லும் போது, கலாம் ஒரு பென்சில் கூட எடுத்துச் செல்ல வில்லை என்பதை நான் தெரிவிக்க வேண்டும்.
Ø  2002 வருட ரம்தான் நோன்பு ஜூலை-ஆகஸ்ட் மாதம் வந்தது. ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி இஃப்தார் விருந்தை ராஷ்ரபவதி பவனில் நடத்துவது மரபு. ஆனால், கலாம், ‘நல்ல நிலையில் உள்ளவர்களை அழைத்து விருந்து வைப்பது ஏன்? அதற்கு ஆகும் செலவு என்ன? அந்தப் பணத்தை டெல்லியில் உள்ள அனாதை இல்லங்களுக்கு உணவு, உடை, போர்வைகள் அளிக்கலாமே!’ என்று உத்திரவு பிறப்பித்தார். அதற்கு ஆகும் செலவு 22 லட்சம் என்று கணக்கிடப்பட்டு, அனாதை இல்லங்களைத் தேர்வு செய்வதை ராஷ்ரபதி பவனில் பணிபுரிபவர்களிடமே ஒப்படைத்து, அதில் கலாம் தலையிடாமல் இருந்தார். அத்துடன், என்னை கலாம் தனியாக அழைத்து, 1 லட்சம் செக்கை என்னிடம் கொடுத்து, ‘இது எனது சொந்தச் சேமிப்புப் பணம். இதையும் சேர்த்துச் செலவு செய்யவும். ஆனால், இதை யாரிடமும் சொல்லக் கூடாதுஎன்றார். ஆனால், அதற்கு நான், ‘சார், நான் வெளியே சென்று எல்லோரிடமும் சொல்வேன். இந்த உங்கள் நல்ல காரியத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும்.’ கலாம் மிகவும் புனிதமான முஸ்லீம் என்றாலும், அவர் பதவிக் காலம் வரையிலும், இஃப்தார் விருந்தை ராஷ்ரபதி பவனில் நடத்தவில்லை
Ø  ஆமாம்என்று எதையும் சிந்திக்காமல் தலையாட்டும் நபர்களைக் கண்டால் கலாமிற்குப் பிடிக்காது. ஒரு முறை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியின் முன்னால், ‘நாயர், நீங்கள் நான் சொல்வதை ஒப்புக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘இல்லை, சார், என்னால் நீங்கள் சொல்வதை ஆமோதிக்க முடியாதுஎன்று சொன்னேன். இதைச் செவியுற்ற நீதிபதிக்கு ஒரே ஆச்சரியம். நீதிபதியிடம் நாயர் விளக்கினார்: பிரசிடண்ட் என்னைப் பிறகு தனியாக அதற்கான காரணங்களைக் கேட்டு அறிவார். நான் சொல்வதில் 99%  உண்மை இருப்பின், அவர் தமது கருத்தை மாற்றிக் கொள்வார். அவர் தான் கலாம்!
Ø  கலாமின் சொந்தக்காரர்கள் 50 பேர்கள் டெல்லிக்கு வந்து ராஷ்ரபதி பவனில் தங்கினார்கள். அவர்கள் டெல்லி நகரைச் சுற்றிப் பார்க்கும் பஸ் வாடகையை கலாம் கொடுத்தார். எந்தவிதமான அரசாங்க கார்களையும் அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வில்லை. அவர்கள் தங்கி இருந்த ரூம் வாடகை, உணவுச் செலவு எல்லாம் கணக்கிடப்பட்டு ரூபாய் 2 லட்சத்தை கலாம் தமது சொந்தக் கணக்கிலிருந்து கொடுத்தார். இன்னொரு செய்தி. கலாமின் மூத்த சகோதரரை தமது அறையிலேயே தங்கச் செய்தார். அந்த அறை வாடகையும் கொடுக்க முயன்ற போது, நான் அதை வன்மையாக எதிர்த்தேன். ‘இது உங்களது நேர்மை வரம்பு மீறியதாகும்என்று சொன்னதால், கலாமும் அதை வற்புறுத்தவில்லை.

Ø  கலாம் ராஷ்ரபதி பவனை விட்டுச் செல்லும் அந்த நாளில் அங்குள்ள ஒவ்வொரு ஊழியரும் அவரை நேரிலே சந்தித்து விடை கொடுத்தனர். நான் மட்டும் தனியாக வருவதைக் கண்ட கலாம், ‘உங்கள் மனைவி எங்கே?’ என்று கேட்டதற்கு, ‘என் மனைவி ஒரு விபத்தினால் கால் அடிபட்டு படுக்கையில் இருக்கிறாள்என்று சொன்னேன். அடுத்த நாள், நான் எதிர்பார்க்காத ஒன்று நடந்தது. கலாம் அவர்களே என் வீடு தேடி வந்து என் மனைவியின் நலம் விசாரித்தார்! இது எந்த ஒரு அரசுப் பணி அதிகாரிக்கும் கிடைக்காத பாக்கியம். இந்தச் செய்கையை கலாமிடம் தான் எதிர்பார்க்க முடியும்.  

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017