வள்ளுவம் - வளைவது வணக்கம் அல்ல
வளைவது வணக்கம் அல்ல
ஆக்கம் : எஸ்.சங்கரன்
'வில் வணக்கம்', 'சொல் வணக்கம்' என்றும் 'வில்லேர் உழவர்', 'சொல்லேர் உழவர்' என்றும் பதப்பிரயோகங்களை வள்ளுவர் இரண்டு குறட்பாக்களில் குறிப்பிட்டுள்ளார். ஒருவருக்கு வணக்கம் செலுத்துவதில் பல வகைகள் உண்டு. தன்னை விட வயதில் மூத்தவர்களையும், மெத்த படித்த மேதாவிகளையும் வணங்கும் பொழுது, வணங்குபவர் தம் உடம்பை மிகவும் வளைத்து, தன் இருகைகளையும் கூப்பி வணங்குவது வழக்கம். இதில் அவரது செய்கையும், உள்ளமும் இயந்து இயங்கினால், அது வரவேற்கத் தக்கது தான். அப்படி யில்லாமல், அவரது உள்ளம் விஷத்தால் நிரம்பி இருப்பின், அவரது வணக்கம் உண்மையிலேயே வெறுக்கத் தக்க தாகும். அதில் ஆபத்தும் பொதிந்திருக்கும்.
நாதூராம் கோட்சே மஹாத்தா காந்தியை கைகூப்பி வணங்கினான். பிறகு, தன் கைத் துப்பாக்கியால் மஹாத்தாவைச் சுட்டுக் கொன்று விட்டான். இப்படிப் பட்ட நாதுராம் கோட்சேயின் வணக்கத்தையும், நாம் சந்தித்திருப்போம். ஆனால், அதைத் தெரிந்து கொள்வதுதான் மிகவும் கஷ்டமான ஒன்றாகும். நேருக்கு நேராக எதிப்பவர்கள் நமக்குத் தீங்கு செய்பவர்கள் தான் என்றாலும், மறைமுகமாக வெளிவேஷதாரியாக நம்மிடம் பழகியே தீங்கு செய்பவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால், அப்படிப் பட்டவர்களை உண்மையான நண்பர்களாக ஏற்று, ஏமாறுவதுதான் உலக நியதியாக இருக்கிறது. இதை வள்ளுவர் மிகவும் அழகாகச் சித்தரிக்கிறார். அதற்கு 'வில் வணக்கம்' மற்றும் 'சொல் வணக்கம்' என்ற இரு பதப் பிரயோகங்கள் செய்கிறார்.
கூடா நட்பு என்ற அதிகாரத்தில் வில் வணக்கம்-சொல் வணக்கம் என்ற பதப் பிரயோகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வில் வணக்கம் என்றால் என்ன?
ஒருவன் நம் எதிரே வில்லோடு வருகிறான். அந்த வில்லை வளைத்து நமக்கு 'வணக்கம்' சொல்கிறான் என்றால் என்ன அர்த்தம்? வில்லை வளைத்து, நம் மீது அம்பு எய்து, நமக்குத் தீங்கு செய்யப் போகிறான் என்பதுதான் அர்த்தம்.
சொல் வணக்கம் என்றால் என்ன?
பகைவன் நம் எதிரே வந்து, நற்சொற்கள் சொல்கிறான். மிகவும் பணிவுடன் சொல்கிறான். வணக்கிச் சொல்கிறான். அவனது சொல்வளவும், சொல்வதில் பணிவும், 'இதுவல்லவோ சொல் வணக்கம்!' என்று நம்மை அகமகிழ வைக்கின்றன. அவைகளை நம்பி, நாம் செயல்பட்டால், சொல் வணக்கமும் தீங்கைத்தான் இழைக்கும்.
வில் வணக்கம் தீங்கானது என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து விடும். ஆனால், பகைவர்களது சொல் வணக்கம் தீங்கானது என்பது நேரிடையாகத் தெரிய வாய்ப்பில்லை என்று வள்ளுவர் நம்மை எச்சரிக்கிறார். நாம் மதி மயங்காது சொல் வணக்கம் நன்மை விளைவிக்கும் என்று கொள்ளக் கூடாது என்று வள்ளுவர் விளக்கம் சொல்கிறார். சொல் வணக்கம், வில் வணக்கத்தைப் போல் தீங்கானது என்பது வள்ளுவரின் தீர்ப்பு.
வில் வணக்கத்தில் வீரம் சிறிது இருப்பதாகத் தோன்றினாலும், சொல் வணக்கம் அப்பட்டமான சூழ்ச்சி என்பதில் நமக்கு ஒரு சிறிதும் ஐயப்பாடு இருக்க முடியாது. இந்த நிலைப்பாட்டை, வள்ளுவர் மேலும் இரு சொற்களால் மிகவும் அற்புதமாக விவரிக்கிறார். அந்த இரு சொற்கள் தான்'வில்லேர் உழவர்' மற்றும் 'சொல்லேர் உழவர்' என்பதாகும். இந்தப் பதப் பிரயோகக் குறள் 'பகைத்திறம் தெரிதல்' என்ற அதிகாரத்தில் உள்ளது. 'வில்லேர் உழவர் பகையை விட, சொல்லேர் உழவர் பகையைத் தவிர்த்தல் வேண்டும்' என்பது தான் அந்தக் குறளின் கருத்து. இதில் இரு விதமான ஆற்றல்கள் குறிக்கப் பட்டிருகின்றன. அவைகள் தான் வீரமும், சூழ்ச்சியுமாகும். வில்லேர் உழவர் வீரத்தையும், சொல்லேர் உழவர் சூழ்ச்சியையும் குறிக்கின்றன. 'வில்லோர் உழவரிடத்தில் பகை கொண்டாலும் கொள்ளலாம்; ஆனால், சொல்லேர் உழவரிடத்தில் ஒரு போதும் பகை கொள்ளக் கூடாது' என்பது வள்ளுவரின் அறிவுரை.
அதற்கு என்ன காரணம்?
வில்லேர் உழவர் வீரம் உடையவர்கள். அவர்களுடன் பகை கொண்டால், அவர்கள் நம்முடன் நேருக்கு நேர் நின்று சண்டை செய்வார்கள். இதனால், தோல்வி உற்றவர் மட்டும் தான் துயர்படுவர். மற்றவர்கள் யாரும் பாதிக்கப் படமாட்டார்கள்.சொல்லோர் உழவர் சூழ்ச்சி உடையவர்கள். அவர்களுடன் பகை கொண்டால், அவர்களது சொல்லின் வலிமையான சூழ்ச்சியால், அதை எதிர்கொள்பவரை மட்டும் இன்றி, அவரைச் சார்ந்த மற்றவர்களையும் துயர் தாக்கும். ஆகையால், 'வில்லேர் உழவரின் பகைகொளினும், சொல்லேர் உழவரின் பகை கொள்ளற்க' என்பது குறளின் கருத்தாகும்.
******************
வளைவது எல்லாம் வணக்கம் இல்லை என்று விளக்கிய வள்ளுவர் அத்துடன் நில்லாது, 'வளையாமல் நேராக நிற்பவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள் இல்லை; அவர்களில் தீமை செய்வோரும் உண்டு' என்பதை அழகாக விளக்குகிறார்.
'வளையாத வடிவெல்லாம் நேர்மையானது; வளைந்த வடிவெல்லாம் குறைவுள்ளது' என்று உருவத்தைப் பார்த்து எடைபோடுவது, சரியான மதிப்பீடு இல்லை என்பதை ஒரு குறளில் வள்ளுவர் அம்பு-யாழ் உதாரணத்தால் தெளிவிக்கிறார். ஒருவன் நிமிர்ந்து நடக்கிறான். கொஞ்சம் கூட முதுகு வளையாமல் இருக்கிறான். வேறு ஒருவன் வளைந்து நடக்கிறான். இவ்விருவருள் அவர்களது வடிவைப் பார்த்து, நிமிர்ந்து நடப்பவன்தான் சிறந்தவன் என்று தீர்மானித்தால், அது வள்ளுவருக்கு உடன்பாடில்லை. அதற்குரிய காரணங்களை வள்ளுவர் மிகவும் அற்புதமாக 'கூடா ஒழுக்கம்' என்ற அதிகாரத்தின் ஒரு குறட்பாவில் விளக்குகிறார்.
அம்பு, வடிவில் வளையாமல் நன்கு அமைந்திருக்கிறது. ஆனால், அதன் செய்கை மிகவும் கொடிது. வடிவால் செவ்விதாயினும், செயலால் கொடிது. யாழ், வடிவில் வளைந்து அமைந்திருக்கிறது. ஆனால், அதன் செய்கை மிகவும் இனிது. வடிவால் வளைந்திருப்பினும், செயலால் செவ்விது.
'வடிவால் மதிப்பிடல் ஆகாது. செயலால் மதிப்பிட வேண்டும்' என்ற கருத்தை அம்பு-யாழ் இவைகளை உபமானமாகக் காட்டி, வள்ளுவர் மிகவும் அழகாக விளக்கி இருக்கிறார்.
ஆதாரம்: குறட்பாக்கள்: 279, 827 & 872

Comments