பிச்சை எடுத்து பிழைத்தல்

வள்ளுவம்: 3
பிச்சை எடுத்துப் பிழைத்தல்
எழுதியவர் : எஸ். சங்கரன்
பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவது மிகவும் கேவலமான ஒன்று. ஆனால், தானம் சிறந்தது என்கிறது சாத்திரம். 'ஏற்பது இகழ்ச்சி' என்று சொன்ன ஒளவையார், 'ஐயம் இட்டு உண்' என்று சொல்கிறார். 'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பது கற்பதின் அவசியத்தை வலியுறுத்த, 'மிகவும் கீழான தொழிலான பிச்சைகூட எடுத்தாகினும் படிக்கலாம்; தப்பில்லை' என்ற அளவுக்கு ஒளவைப் பிராட்டியார் சொல்கிறார். பிச்சை போடுவது-அதாவது தானம் செய்வது நல்லது என்றால், அதைப் பெற பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் வேண்டும் என்பதாகிறது. 'பிச்சை எடுப்பது இழிவு; ஆனால், பிச்சை இடுவது தர்மம்' என்ற நிலை முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகப் படும். கஷ்டப்படுவரிடம் கருணை காட்டுவது அவசியமானதால், உதவியின் ஒரு பரிணாமம் தான் பிச்சை என்றாகிறது. இருப்பினும், பிச்சை போடுவது புண்ணியமான காரியமானாலும், பிச்சை எடுப்பது ஒரு கேவலமான தொழில் என்பதில் எந்த வித கருத்து மாறுபாடும் இருக்க முடியாது.
'பிச்சை என்பது ஒரு தொழிலா?' என்ற கேள்வி எழலாம். வள்ளுவருக்கும் அந்தக் கேள்வி எழுந்தது. உலகத்திலேயே மிகவும் கேவலனமானது என்னவென்றால், அது பிச்சை எடுத்து வயிறு வளர்ப்புதான்.
'பிச்சை எடுத்து வயிறு வளர்த்து, அதையே ஒரு தொழிலாக இறைவன் இந்த உலகத்தில் மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருப்பானா?' என்ற ஐயம் வள்ளுவருக்கு வருகிறது.
'இறைவன் மனிதர்களுக்கு இதைத் தொழிலாக வைக்காவிட்டால், ஏன் பலர் உலகத்தில் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்?' என்று வள்ளுவரின் மனம் சஞ்சலப்படுகிறது.
வள்ளுவர் மீண்டும் சிந்திக்கிறார்:'தண்டனையாக ஒரு வேளை மனிதர்களைப் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்த, இறைவன் பணித்திருப்பானா?'
இந்தச் சிந்தனையால் வள்ளுவர் கோபத்தில் சீறுகிறார்: 'மனிதன் இந்த உலகத்தில் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்று இறைவன் விதித்திருந்தால், அந்த இறைவனே தெருத் தெருவாக உலகம் முழுதும் அலைந்து அல்லற்பட்டு கெடட்டும்!'
வள்ளுவரின் கோபம் இமயமலை உச்சிக்கே சென்று விட்டது. பிச்சை எடுப்பது மிக மிக இழிவானது என்பதைக் காட்டத்தான் வள்ளுவர் இவ்வாறு இறைவனையே-உலகியற்றியானையே வம்புக்கு இழுக்கிறார்!
ஆதாரம்: குறள் எண்:1062
Comments