அவன் ஒரு எழுத்தாளன் - எழுதியவர்: ஜெயந்திநாதன்

சிறுகதை:

இரண்டு பேர்கள் மெரினா கடற்கரை ரோடு வழியே அருகருகே நடந்து போய்க்கொண்டிருந்தனர்.

"நீங்கள் யார்?" என்று ஒருவர் கேட்டார்.

"நான் ஒரு எழுத்தாளன்" என்று ஒரு பெருமிதத்துடன் மற்றவன் பதிலளித்தான்.

"உங்கள் கதைகள் எந்த எந்தப் பத்திரிகைகளிலெல்லாம் வந்திருக்கின்றன?"

"இதில் தான் மனிதன் தவறிவிடுகின்றான். பத்திரிகைகளில் கதைகள் வந்தால்தான் அவன் எழுத்தாளனா? மிகச் சாதாரணமான கதைகளும் பத்திரிகைகளில் இடம் பெறும் பொழுது, அவர்களெல்லாம் எழுத்தாளராகிவிட முடியுமா? என்னுடைய கதைகளை அவர்கள் பிரசுரிக்கவில்லை என்றால், என் கதையின் மதிப்பு ஒரு போதும் குறையாது. நான் ஒரு எழுத்தாளன்" என்று மிகுந்த உத்வேகத்துடன் சொன்னான்.

"ஆம். நீங்கள் சொல்வதிலும் உண்மையிருக்கிறது" என்று பதிலளித்தார்.

நமது எழுத்தாளன் உடனே, "கைகொடும். என்னை நீர் சரியாகப் புரிந்து கொள்ளும் சக்தி பெற்றிருக்கின்றீர். நீர் ஓர் உயர்ந்த ரஸிகர்" என்று அவரது கைகளைப் பிடித்துக் குலுக்கினான். அவருக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. எழுத்தாளனுக்கு உள்ளமெல்லாம் பூரித்தது.

"உயர்தரக் கதைகளைப் படைக்க வேண்டும். அவைகள் பிரசுரிக்கப் பட்டாலும் படாவிட்டாலும், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. பிரசுரிக்கப் படுவதற்காகக் கதைகள் எழுதுபவன் ஒரு எழுத்தாளனே அல்ல!" - இவ்வாறு சொல்லிவிட்டு எழுத்தாளன் அவரைப் பார்த்தான். தம் பேச்சை அவர் கவனிக்கிறார் என்பதைத் திடம் செய்து கொண்டு மேலே தொடர்ந்தான்: "பலருக்கும் புரியும்படி எழுதவேண்டுமென்று சொல்கிறார்கள். எழுத்தாளன் தன் பீடத்தை உயரமான இடத்தில் தான் அமைத்துக் கொள்வான். அவனைப் புரிந்து கொள்ள வாசகர்கள் சிறிது முயன்று, அந்நிலையை அடைய முயலவேண்டும்."

எழுத்தாளன் சிறிது நிறுத்திக் கொண்டான். அவர் லேசாகச் சிரித்தார். 'ஆஹா! நமக்கு ஏற்ற ஆள் கிடைத்து விட்டார்!' என்று எழுத்தாளன் பூரிப்படைந்தான். அந்த பூரிப்பிலே, அவன் உணர்ச்சியுடன் சொன்னான்: "உமக்கு 'மார்வல் ப்ரவஸ்ட்' தெரியுமா? அவன் ஒரு மேதை. டேவி காப்பர் வீல்ட் தெரியுமா?"

"டேவிட் காப்பர் வீல்ட்டா? இல்லையே! சார்லஸ் டிக்கன்ஸ் தானே ஆசிரியர்?" என்று அவர் நமது எழுத்தாளைனைத் திருத்தினார்.

"டேவிட் காப்பர் வீல்ட் என்று சொன்னாலும் அது சார்லஸ் டிக்கன்ஸைத் தானே குறிக்கும். கிரியாதிபன் அவன் செய்யும் கிரியையில் தானே இருக்கிறான்!" என்று விளக்கினான் எழுத்தாளன்.

"நீர் ஒரு பெரிய உளவாளி!" என்று அவர் முணுமுணுத்தார். எழுத்தாளன் தான் சொன்னதையே நினைத்துத் தானே மகிழ்ந்து கொண்டிருந்ததால், அவர் சொன்னது அவன் காதில், 'நீர் ஒரு பெரிய அறிவாளி!' என்பதாக விழுந்தது. எழுத்தாளனுக்குத் தலைகால் புரியவில்லை.

"கை கொடும்! முதன் முதலில் என்னை நீர் 'அறிவாளி' என்று புகழும் பாக்கியம் பெற்றீர்!" என்று அவர் கையை நன்றாகக் குலுக்கினான். அவர், "நான் அறிவாளி என்று சொல்ல வில்லையே! உளவாளி என்றல்லவா சொன்னேன்!" என்று தெளிவாக எழுத்தாளன் காதில் ஓதினார். எழுத்தாளன் துடிதுடித்து விட்டான்.

"ஓய்! என்னை அறிவாளி என்று சொன்னால் என்னய்யா குறைந்து விடும்? உலகமே என்னை அறிவாளி என்று புகழப்போகிறது. நான் உமது புகழைக் கேட்டு எவ்வளவு குதூகலப் பட்டேன்! அந்தக் குதூகலத்திலே அருமையான சிருஷ்டிகளைப் படைத்துத் தமிழர்களுக்கு அளித்திருப்பேனே! தமிழகத்துக்கே பெரும் துரோகம் செய்து விட்டீர்!" என்று குமுற ஆரம்பித்தான். சிறிது நேரம் சென்றது. எழுத்தாளன் நிதானமாகச் சிந்தித்தான். 'என்னை அவர் உளவாளி என்று தானே சொன்னார்? உளவறியவும் அறிவு முக்கியமே! உளவாளி என்று புகழ்ந்தவர் அறிவாளி என்று நாளா வட்டத்தில் என்னைப் புகழ்வாரே!' என்று நினைத்தான். உடனே தன் கையை நீட்டி, "கைகொடும்! நான் ஒரு உளவாளிதான்!" என்று கைகளைப் பிடித்துக் கொண்டான். தான் பிடித்த கை மிகவும் சின்னதாக இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டான்.

"ஸார் ஸார் --காசு கொடுங்க ஸார்!" என்று கத்திக் கொண்டிருந்த ஒரு பிச்சையெடுக்கும் சிறுவனின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதை எழுத்தாளன் உணர்ந்தான்.

"நீயா? -- போடா போ!" என்று விரட்டி விட்டான். 'அவர் எங்கே?' என்று தன்னையே கேட்டுக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தான். காணவில்லை. எழுத்தாளனுக்கு ஒரு பெரும் பொக்கிஷமே பறிபோன மாதிரியாகி விட்டது. எழுத்தாளன் மேலும் நடந்து கொண்டிருந்தான். எழுத்தாளன் சிந்தித்தான்: 'நான் எவ்வளவு எழுதிக் குவித்திருக்கிறேன்! எவ்வளவு அற்புதமாக எழுதிகிறேன்! அவைகள் பத்திரிகைகளில் பிரசுரமாகாததாக இருக்கட்டுமே! என்னுடைய நண்பர்களாலேயே ரஸிக்க முடியவில்லையே! சே! அவர்களின் ரஸிக்கத் தன்மையே மட்டம். நான் எத்தனை நோட்டுக்களில் என் பொன்னான எழுத்தோவியங்களால் நிரப்பியிருக்கிறேன்! ஐந்தோ, ஆறோ யிருக்கும் என்று நினைக்கிறேன். நாளைக்கு, ஏன், இன்னிக்கே- எண்ணிப்பார்த்து விடவேண்டும். நீல அட்டை போட்ட நோட்டு, சிவப்பு அட்டை போட்ட நோட்டு - இவைகளில் நான் படைத்த எழுத்துக்கள் உலக இலக்கியத்திலேயே இடம் பெற வேண்டியவைகள். ப்ரவ்ஸ்ட் இன்று உயிரோடிருந்தால், ஆஹா! என் எழுத்துக்களைப் படித்து விட்டு, என் கைகளை முத்த மிடுவானே! ஓ! அவனுக்குத் தமிழ் தெரியாதே! தெரியாவிட்டால் என்ன! என் எழுத்துக்களைப் படிப்பதற்காக தமிழ்ப்படிப்பானே! அவனை நான் மேதையாகக் காண்கிறேன். என்னையும் அவன் மேதை யென்று காண்பான். மேதையை மேதைதான் அறியமுடியும்!' ஆஹா! எவ்வள்வு ஜோராக நம் எண்ணங்கள் ஓடுகின்றன! யார் இக்காலத்திலே நம்மைப் போல் சிந்திக்கிறார்கள்? இந்த மாதிரி எண்ணங்களையும் நோட்புத்தகத்தில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. பச்சை அட்டை போட்ட நோட்டு நேற்றே காலியாகப் போச்சே! அந்த நோட்டின் கடைசிப் பக்கத்தில் பிரமாதமாக எழுதியிருக்கிறேன். என்ன எழுதியிருந்தேன்? இப்போ ஞாபகமில்லை. போய்ப் படிக்க வேண்டும். அற்புதங்களைப் படித்து ரஸிக்க என்னைப் போன்றோர்களால் தானே முடியும்!' எழுத்தாளன் சிந்தனை வேகமாகச் சென்று கொண்டே இருந்தது. ஒரு கடையின் மெர்க்குரி லைட் அவன் முகத்தில் விழவும், பைக்குள் கையை விட்டான். 'இப்போ ஊதா நிற அட்டை போட்ட நோட்டுத்தான் வாங்க வேண்டும். என் வண்ண எழுத்துக்களைப் போல், அதைத் தாங்கும் நோட்டுக்களும் வண்ணமயமாகத்தான் இருக்க வேண்டும்!' என்று நினைத்தான். எழுத்தாளன் தன் பைக்குள் கையை விட்டான். ஆனால் ஒரு முழு ரூபாய் நாணயம் தான் அதில் இருந்தது. அதை வைத்துக் கொண்டு, நோட்டுப் புத்தகம் வாங்கமுடியாது என்பதை எழுத்தாளன் உணர்ந்தான்.

"ஒரு சிகரெட்!" என்று அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எழுத்தாளன் நீட்டினான். சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடையைக் கட்டினான். 'உலகத்திலே முட்டாள்கள் அதிகமாக நடமாட ஆரம்பித்து விட்டார்கள்!' என்று முணுமுணுத்தபடியே எழுத்தாளன் புகையை வேகமாக ஊதித்தள்ளினான். எழுத்தாளன் தன் வீட்டில் மேஜையின் பக்கத்திலே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தான். பக்கத்தில் எலக்ட்ரிக் விளக்கு ஒளி வீசிக்கொண்டிருந்தது. அவனுக்கு முன்னால் ஒரு பெரிய ஆங்கிலப் புஸ்தகம் விரித்து வைக்கப் பட்டிருந்தது. அவனுக்குப் படிக்க ஓடவில்லை. சிந்தனை அலைகள் தான் எழும்பிக்கொண்டே யிருந்தன. 'உலக இலக்கியத்திலே நன்கு பரிச்சயம் கொண்டவன் நான். எவ்வளவு ஆங்கிலப் புஸ்தகங்களைப் படித்து என் கற்பனா சக்தியையும், ரஸிக்கத் தன்மையையும் பெருக்கிக் கொண்டிருக்கிறேன்! இந்தப் புஸ்தகத்தை-ப்ரவ்ஸ்ட் எழுதிய புஸ்தகத்தை, என்னைத் தவிர யார் படிப்பான்? உலக இலக்கியத்திலேயே இடம் பெரும் அற்புதமான மற்ற எழுத்துக்களையும் நான் படிக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட எழுத்துக்களை இந்த தமிழ் மக்கள் ரஸிப்பார்களா? தமிழ்ர்களின் ரஸிக்கத்தன்மையே மிகவும் மோசமாக இருக்கின்றது. எப்படி ரஸிக்க வேண்டும், ஏன் ரஸிக்க வேண்டும் என்பதெல்லாம் தெரியமாட்டேன் என்கிறது. ஆகையால், நான் முதலில் தமிழ் மக்களுக்கு ரஸிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, உயர்ந்த எழுத்துக்களைப் படித்து ரஸிக்கும் பக்குவ நிலையை அவர்கள் அடைந்திருப்பார்கள். அப்பொழுது என் உயர்ந்த எழுத்துக்களைத் தமிழர்கள் முன் படைத்தால் புளகாங்கிதம் அடைவார்கள்.' எழுத்தாளன் சிந்தனை சிறிது நின்றது. அவன் சிந்தனை நீண்ட நேரம் சலிப்பின்றித் தொடர்ந்து செல்லும். இன்று என்னவோ அது சிறிது ஓய்வை வேண்டி நிற்கிறது. இதோ, அவன் சிந்தனை இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டது. அதை என் பேனா, தொடர வேண்டும். 'ஏன்? நான் முன்பே தான் பல உயர்ந்த கிரியைகளைச் சிருஷ்டித்திருக்கின்றேனே! நீல அட்டை, சிகப்பு அட்டை போட்ட நோட்டுக்களில்-- ' என்று நினைதான். உடனே தன் மேஜையிலும் மற்றும் எல்லா இடத்திலும் எழுத்தாளன் தன் இலக்கிய ஏடுகளைத் தேடிக்கொண்டிருந்தான். பல புத்தகங்களைத் தரையிலே போட்டான்.

"அம்பி! என்னடா தேடறே இந்த அர்த்தராத்திரியிலே! பேசாமத் தூங்காம, மத்தவாளையும் தூங்கவிடாம-என்னடாயிது?" என்று அவன் அம்மா அலுத்துக் கொண்டாள்.

"அம்மா! நான் என்னோட நோட்டுப் புஸ்தகங்களையெல்லாம் தேடறேன்!" என்று திரும்பவும் தேட ஆரம்பித்தான்.

"நீலம்-சிகப்பு அட்டை போட்டிருக்குமே அது தானே!" என்று அவன் அம்மா கேட்டாள்.

"ஆமாம்மா, அதே தான்! எங்கே யிருக்கு சொல்லேன்!"

"உனக்கு வெந்நீர் வைக்கிறதுக்கு-அடுப்பிலே எல்லாத்தையும் போட்டுட்டுட்டேன்--நீ பேசாமத் தூங்கு" என்று அம்மா புரண்டு படுத்தாள். அவனுக்கு உலகமே இருண்டு வந்தது. தலையெல்லாம் சுற்றியது.

"என் உயிரையே சாம்பலாக்கி விட்டாயே!" என்று இரைந்தான்.

"என்னடா புலம்பல்? பேசாமல் படுத்துத் தூங்கு" என்று அம்மா சொன்னாள். எழுத்தாளன் நாற்காலியில் போய்த்தொப்பென்று விழுந்தான். 'தமிழகமே! எனக்கு உயிரே போய் விட்டது. என் சாவிற்கு இத் தமிழகமே கண்ணீர் விட வேண்டும் என்று என் ஆத்மா விரும்பியது. ஆனால் இன்றோ, என் தாய் கூட என் சாவிற்குக் கண்ணீர் விட வேண்டாம் என்று தான் விரும்புகிறது. ஆகையால் தமிழ் மக்களே! நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த தடித்த பேனாவின் ஆணையாகச் சொல்லுகிறேன், பேனாவின் மையின் ஆணையாகச் சொல்லுகிறேன், நான் இனி இலக்கிய சேவை செய்யப் போவதில்லை. உங்களது இப்பெரிய நஷ்டத்திற்காக நீங்கள் எவ்வளவு அழுதாலும், நான் என் இந்தச் சபதத்தை மாற்றப் போவதில்லை. நான் தூங்கப் போகிறேன். இனி என்னை எழுப்பாதீர்கள்.'

எழுத்தாளன் எழுதிய கடைசி எழுத்துக்கள் வெள்ளைக் காகிதத்தில் குண்டு குண்டாக மின்னின.

தமிழ் மக்களே! நான் உங்கள் முன் ஆணையிட்டேன். என் உள்ளமும் அப்படித்தான் ஆணையிட வேண்டுமென்று விரும்பியது. என் சபதத்தை நான் மீற வேண்டிய காலம் வந்து விட்டது. அதன் காரணத்தை நான் முதலில் சொல்லப் போகிறேன். நான் சபதம் செய்து தூங்கப்போனேன். இது உங்களுக்குத் தெரியும். நான் அப்பொழுது ஒரு சொப்பனம் கண்டேன். என்னை யாரோ எழுப்புவது மாதிரி இருந்தது. நான் லேசாக முழித்துப் பார்த்தேன். 'அன்பனே! எழுந்திரு!' என்று ஒருவர் என்னை எழுப்பிக்கொண்டிருந்தார். நான் நன்கு விழித்துப் பார்த்தேன். ஆஹா! என்ன ஆச்சரியம்? என்னால் என் கண்களையே நம்ம முடியவில்லை! ஆமாம், மார்ஸல் ப்ரவஸ்ட் என்னை எழுப்பிக் கொண்டிருந்தார்! மகா மேதை என்னை எழுப்பிக் கொண்டிருந்தார். ஆனால் நான் எழுத்திருக்க வில்லை. டால்ஸ்டாய் என் கையை முத்த மிட்டவாறே என்னை அன்பு மொழிகளால் எழுப்ப முயன்றார். நான் எழுந்திருக்க வில்லை. இப்படி எவ்வளவோ மேனாட்டு இலக்கிய கர்த்தாக்கள் என்னைத் துயிலெழிப்ப முயன்றார்கள். நான் எழுதிருக்கவே யில்லை. ஒரு தமிழன் வந்து என்னைத் தட்டி எழுப்பினான். 'உயர்ந்த இலக்கியங்களை படைக்க வேண்டிய நீ இன்னும் துயில்வது சரியில்லை. எழுத்திரு!' என்று அத்தமிழன் துயிலெழுப்பவும் தான் நான் எழுந்திருந்தேன். இது நான் கண்ட கனவுதான். கனவுக்கு மதிப்புக் கொடுத்துச் சபதத்தை மீறலாமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், நான் சொல்லுகிறேன்: நான் கலைஞன். கலைஞன் கனவுகளுக்கு மதிப்புக் கொடுப்பான். ஏனென்றால், கனவும் கலையின் அம்சம். நான் இனி என் இலக்கிய சேவையைத் தொடர்ந்து நடத்தப் போகிறேன். பலவிதமான-புதுமையான கருத்துக்களுக்கு அர்த்த புஷ்டியுள்ள வார்த்தைகளால் உயிர்கொடுப்பேன். உலகத்து மொழிகளில் இல்லாத அற்புதம் தமிழில் இருக்கும்படிப் பணிபுரிவேன். தமிழர்களே! நான் இவ்வளவும் பண்ணுவேன். நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். மிகவும் பணிவுடன் கேட்கிறேன். நான் இப்பொழுது மிகவும் களைத்திருக்கிறேன். எனது ஊக்கம் சில மூடர்களின் பேச்சால் சிறிது கலக்க முற்றிருக்கிறது. ஆகையால், நீங்கள் என்னை முதலில் புகழுங்கள். நன்றாகப் புகழுங்கள். நீங்கள் என்னைப் புகழ்வதற்குப் புண்ணியம் பல செய்திருக்க வேண்டும் என்ற என் ஆத்மாவின் குரலையும் உங்களுக்க்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்! என் காதுகள் இரண்டையும் திறந்து வைத்திருக்கிறேன். இரு செவிகளிலும் என் உள்ளம் குளிரப் புகழுங்கள்! என்ன? நீங்கள் புகழமாட்டீர்களா? இல்லை. தவறு என்னிடம் தான் உள்ளது. உங்களுக்குப் புகழவே தெரியாது என்று எனக்கு முதலிலேயே தெரியாது போயிற்று. புகழத்தெரியாதவர்களிடம் என் அற்புத இலக்கியத்தைக் கொடுத்து என்ன பிரயோஜனம்? இதோ நான் தூங்கப் போய் விட்டேன். இனி என்னை யாரும் எழுப்பாதீர்கள்!' எழுத்தாளன் வேகமாக எழுதி முடித்து விட்டான். தன் நெற்றியில் வழிந்த வியர்வையைத் தன் கர்சீப்பால் துடைத்துக் கொண்டான். ஒரு முறை தானே படித்துப் பார்த்தான். 'அற்புதம்! அற்புதம்!' என்று தனக்குத் தானே முணுமுணுத்தான். ஒரு பெரிய புஸ்தகத்தையும், அந்த நீண்ட கடிதத்தையும் எடுத்துக் கொண்டு, சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்றான். அந்தக் கடிதத்தைக் காற்றிலே பறக்க விட்டான். 'தமிழ் நாட்டில் ஒரு ரஸிகனாவது இல்லாமல் போக மாட்டான்!' என்று எண்ணிக் கொண்டான். பிறகு அந்தப் பெரிய புஸ்தகத்தை தலைக்குக் கிழே வைத்து கடற்கரை மணலிலே படுத்துக் கொண்டான். 'என் கடிதம் யாராவது ஒரு ரஸிகனின் கண்களில் நிச்சயம் தட்டுப் படும்!' என்ற திடசித்தத்துடன் துயலமுயன்றான் அவ்வெழுத்தாளன். ஆனால், காற்றுத் தேவன் விரைந்து வந்து தன் கைகளில் அக் கடிதத்தை ஏந்திக் கொண்டு, 'ஓ' வென்று பசியோடு அலறித் துடிக்கும் கடலுக்குள் அமிழ்த்தி விட்டான். வாசர்களே! நீங்கள் எப்பொழுதாவது பீச் மணலில் பெரிய புஸ்தகத்தை தலைக்கு வைத்துக் கொண்டு துயிலும் எழுத்தாளனைப் பார்த்தால், அவன் அருகில் செல்லுங்கள். அவனைத் தட்டி எழுப்பி, 'நீ ஒரு எழுத்தாளன்' என்று சொல்லி விட்டாவது ஓடிவிடுங்கள். நீங்கள் ஓடுவதைக் குறித்துத் தவறாக அவன் நினைக்கவே மாட்டான்.

'ஆஹா! நம்மேல் இவனுக்கு என்ன அன்பு! நம்மை எழுப்பி விட்டு, நம் பெயரை இத் தமிழகம் எங்ங்கனும் பரப்ப எவ்வளவு ஆர்வததுடன் ஓடுகிறான்!' என்று நினைத்துக் கொள்வான். அவன் எழுத்தாளன்.
(எழுதிய நாள்: 01-05-1957)

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017