மணிக்கொடி பிறந்த கதை


மணிக்கொடி பிறக்கக் காரணம் என்ன என்பதை சீனிவாசன் வாயிலாகவே கேட்பது ஒரு சுவை. இதோ அவர் சொல்கிறார்: லண்டனில் ஃப்ரீ பிரஸ் நிருபராக வேலையில் இருந்த பொழுது, என்னைக் கவர்ந்த ஒரு பத்திரிகை தான் அப்ஸர்வர். அதன் மீது எனக்கு ஒரு மோகம் பிறந்தது. காரணம், அதன் பரந்த நோக்கு, கொள்கை திட்பம், செய்திச் செறிவு, கலை ஆர்வம், கட்டுரை வன்மை இவைகளே. அப்ரஸர் ஞாயிறுதோறும் வெளிவரும். அன்று மற்ற தினசரிகள் வெளிவருவதில்லை. ஆகவே அப்ஸர்வருக்குத் தனி மதிப்பு. தமிழில் அத்தகைய ஞாயிறு செய்திப் பத்திரிகையை வெளியிட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அதுவே மணிக்கொடிக்குக் கரு. அப்பொழுது அதற்கு அந்தப் பெயர் இல்லை. 1930- ல் உப்பு சத்தியாக்கிரகம் தீவிர தேசீய லட்சியங்களை ஆதரிக்கத் தமிழில் பத்திரிகை இல்லை. சொக்கலிங்கம் தமிழ் நாட்டை விட்டு விலகி, காந்தி என்ற காலணா பத்திரிகையை நடத்தி வந்தார். சுதந்திரச் சங்கும் காந்தியுமே காங்கிரஸ் போராட்டத்தை ஆதரித்து வந்த பத்திரிககைகள். பம்பாயில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் உதவிப் பொறுப்பு என்னிடம் இருந்தது. 1933 மார்ச் மாதம் சத்தியாக்கிரகத்தின் வெற்றி. அதே வருடம் டிசம்பரில் லண்டன் வட்ட மேஜை மகாநாடு முறிந்தது. 1932 ஜனவரியில் போராட்டம் மூண்டும் ஆரம்பமாயிற்று. நாசிக்கில் சிறை வாசத்தை முடித்து விட்டு, 1932 நடுவில் சென்னை வந்தேன். அப்பொழுது வ்.ரா. தமது ஊர் திருப்பழனத்தில் இருந்தார். போய் அவரை அழைத்து வந்தேன். சொக்கலிங்கம், வ.ரா., நான் மூவருமாக எங்கள் லட்சியப் பத்திரிகைக்குத் திட்ட மிட்டோம். என்ன பெயரிடுவது என்று வெகுவாக விவாதிப்போம். ஒரு நாள் ஏதோ நினைவாக கம்பனைப் புரட்டியபோது அவன் மிதிலையில் மணிக்கொடிகளைக் கண்டதாகச் சொன்னது என் மனத்தை நெருடிக் கொண்டே இருந்தது. அன்று மாலை கோட்டைக்கடுத்த கடல் மணலில் நாங்கள் மூவ்ரும் பத்திரிகையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். கோட்டை கொடிமரத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் தீடீரென்று கீழே விழுந்தது. அதைக் கண்ட எங்களுக்கு உணர்ச்சி பொங்கிற்று. விழுந்தது ஆங்கிலக் கொடி. இனி அங்கு பறக்க வேண்டியது நமது மணிக்கொடி என்றேன். அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயராகட்டும் என்று குதூகலத்துடன் முடிவு செய்தோம். பத்திரிகையின் கொள்கையாக பாரதியின் சத்திய பிரமாண சொற்பதங்களான பொருள் புதிது, முறை புதிது, நடை புதிது ஏற்கப் பட்டன.

அதன் விளக்கம் என்ன?

பொருள் புதிது: அந்த நாட்களில் ஞாயிறண்று செய்தித் தாள்கள் வெளிவருவதில்லை. மணிக்கொடி ஞாயிறு செய்தி பத்திரிகையாக வெளிவந்தது. செய்திகளோடு கூட பல்வேறு துறைகளில் கட்டுரைகளாகத் தாங்கி வந்தது. பத்திரிகையின் நோக்கையும், போக்கையும் அதன் பொதுத் தலைப்புகள் புலப்படுத்தின. ஸ்வதந்திரப் பண்ணை, வீரச் சொல், வீரச் செயல், பழங்கணக்கு, இலக்கியச் சோலை, கலைக் கூடம், ஞான தீபம், சறுக்கு மலை, ஜனனடை, நடைச் சித்திரம் என்ற தலைப்புகளின் கீழ், வாழ்வின் எல்லாத் துறைகளையும் மணிக்கொடி தனது களமாகக் கொண்டிருந்தது.

முறை புதிது: வேப்பெண்ணைய் விளக்கெண்ணெய் முறையை விட்டால் பத்திரிகைகளில் வழங்கி வந்தது விகட முறை. ஆனந்த விகடன், பிரசண்ட விகடன், குமார விகடன், விநோதன், விசித்திரன் என்ற பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்த காலம். விகடப் பத்திரிகைகள் பெயருக்கேற்ப நகைத் துணுக்குகளையும், லேசான அகத்தினைக் கதைகளையுமே வெளியிட்டு வந்தன. ஊருக்கு பொருத்தமில்லாத ஹாஸ்யமும், வழக்கத்திற்கு பொருத்தமில்லாத சிருங்காரமும், படிப்பவர் மனங்களை உலர்த்தி விடுகின்றன. நாடு அடிமைப் பட்டு கிடக்கிறது. ஸமூகம், கட்டழிந்து அழுகி மடிகிறது. விகட மென்ன, ஐயா வேண்டிக்கிடக்கிறது விகடம்? என்று வ.ரா. கடிந்து கொள்வார். வாழ்க்கையில் லட்சியங்களின் அவசியத்தையும் தூய்மையின் அவசியத்தையும் தூய்மையின் பலத்தையும் விளக்கும் கட்டுரைகள் மணிக்கொடிக்குப் புது மதிப்பு ஈட்டித் தந்தன. கலைக்கும், ஹாஸ்யத்துக்கும் வாழ்வில் இடம் உண்டு. ஆனால், அவைகளைக் காட்டிலும் முக்கியம் கொள்கை, தூய்மை, திண்மை, ஒழுக்கம் என்று மணிக்கொடி கோஷித்து வந்தது.

நடை புதிது: வ.ரா. இலக்கணம் என்றால் சீறுவார். எனினும் அவர் நடை, 'சிலவகை எழுத்தில் பல்வகைப் பொருளை, செவ்வனாடியிற் செறித்து இனிது விளக்கி திட்ப நுட்பம் சிறந்தது' என்ற நன்னூலார் போற்றும் சூத்ரச் சிறப்புடையதாக இருக்கும். அதுவே பாரதி வகுத்த வழி. பண்டிதத் தமிழில் அவருக்கு எவ்வளவு வெறுப்போ அத்தனை வெறுப்பு ஆங்கிலோடமில் மணிப் பிரவாளத்தில். வ.ரா.விற்கு விருப்பமானது சங்கத் தமிழ் அல்ல. தங்கத்தமிழ். ஆனால், அதற்கு அந்தப் பெயரிட்டு அவர் அழைக்கவில்லை. எனினும், தங்கத்தின் சிறப்புகளைத்தான் அவர் தமிழில் விரும்பினார். வளர்த்தார். தங்கத்தின் சிறப்புகள் யாவை? மன்னன் முடியிலோ? மண்ணின் அடியிலோ, நீரிலோ, நெருப்பிலோ, வெயிலிலோ, மழையிலோ எங்கு இருந்தாலும் தன்மை மாறாத் திண்மை. துருவோ, களிம்போ ஏறாத உள்திறன். தட்டத் தட்ட அகலும் மென்மை. இழுக்க இழுக்க நீளும் எளிமை. மங்காத ஒளி. மாயாத மதிப்பு-இவைகளே தங்கத்தின் சிறப்புகள். இந்தச் சிறப்புகள் அனைத்தும் தமிழுக்கு வேண்டும் என்று வ.ரா. தவம் கிடந்தார். ஆங்கிலத்தைப் போல் தமிழும் அகன்று ஆழ்ந்து தமிழர் வாழ்வைப் புதுப்பிக்க வேண்டும் என்பதே அவர் கண்ட ஓயாக் கனவு. முப்பது, முப்பத்தைந்து வருஷங்கள் இந்த லட்சியத்திற்காகவே உழைத்தவர். மணிக்கொடியில் மற்றவர்கள் மணிகளைப் பொருத்தினார்கள். தங்கத் தமிழில் கடைக்கல் நாட்டினது வ.ரா.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017