வள்ளுவம் 6 - கொல்லாமையும் புலால் மறுத்தலும்

வள்ளுவம்: 6
கொல்லாமையும், புலால் மறுத்தலும்
ஆக்கம்: எஸ். சங்கரன்
வள்ளுவப் பெருந்தகை ஜைனமதத்தைச் சார்ந்தவர் என்பது ஒரு சாராரின் கருத்து. அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால், ஜைனமதத்தின் முக்கிய கொள்கையான அஹிம்சை அவருக்குப் பிடித்த கொள்கைகளில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் தான் 'கொல்லாமையும், புலால் மறுத்தலும்' அவர் மனத்திற்குப் பிடித்தவைகளாக இருக்கின்றன.

இந்த பரந்த உலகத்தில் வள்ளுவர் காலத்திலிருந்து இன்றுவரை, புலால் உண்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். சைவ உணவு முறையினை மேற்கொள்பவர்கள் மிகவும் சொற்பம். அதிலும் உலகளவில் பார்த்தால், இந்தியாவில்தான் புலால் புசிக்காதவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். புலால் மறுத்தலும், கொல்லாமையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. கொல்லாமை நிகழாவிடில், புலாலும் கிடைக்காது. ஆனால், புலாலுக்காக பிராணிகளைக் கொல்வதைத் தடுப்பது முடியாத ஒன்றாகும் என்பது வள்ளுவருக்கும் தெரிந்தது தான். ஆகையால் தான், அவர் புலாலை மறுக்கச் சொல்கிறார். புலால் உண்பவர்களின் தொகை குறையக் குறைய, கொல்லாமையும் குறையும் என்பது வள்ளுவரின் கருத்து. அப்பொழுதான் உலகில் அருளும், அறமும் பெருகி, நரக வாழ்வு நீங்கி, நிலையான இன்ப வாழ்வை அடையலாம் என்பது வள்ளுவம் போதிக்கும் நீதி.

'விரதம்' என்ற தலைப்பின் கீழ், 'புலால் மறுத்தல்' மற்றும் 'கொல்லாமை' என்ற இரு அதிகாரங்கள் வருகின்றன. விரதம் என்றால் என்ன?

இப்படிப்பட்ட அறம் செயதல், இப்படிப் பட்ட பாவம் செய்யாதிருத்தல்-என்பதை ஒவ்வொருவரும் தம் தம் ஆற்றலுக்கு ஏற்ப ஒழுகுவது தான் விரதம் எனப்படும்.அப்படி என்றால், எவைகள் அறத்தின் கண் அமையும், எவைகள் பாவத்தின் கண் அமையும் என்பதை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

செய்ய வேண்டிய அறங்கள்: அருள் அல்லது கருணை காட்டல், தவம், வாய்மை.

தவிர்க்க வேண்டிய பாபச் செயல்கள்: புலால் உண்ணுதல், கூடா ஒழுக்கம், களவாடுதல், சினம் கொள்ளல், துன்பம் அல்லது இன்னா செய்தல், உயிர் கொலை செய்தல்.

புலால் மறுத்தல், கொல்லாமை - ஆகிய இவ்விரண்டைப்பற்றியும் வள்ளுவரின் கருத்துக்கள் என்ன என்று சிறிது ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். கொல்லாமை என்பது அறங்களிலெல்லாம் சிறந்த அறம் என்பதுதான் வள்ளுவரின் தீர்மானமான கருத்தாகும். மற்ற அறங்களைப் பின் பற்றினாலும், கொல்லாமை என்ற அறத்தைக் கடைப்பிடிக்காவிடில், எந்த வித பலனும் இருக்கப் போவதில்லை என்று வள்ளுவர் கூறுகிறார்.

இதற்கு அவர் கூறும் காரணங்கள் தான் என்ன?

மனிதன் ஆறறிவு படைத்தவன். ஐந்தறிவு படைத்த உயிர் முதல் ஓர் அறிவுடைய உயிர் வரை உள்ள சகல உயிர்களையும் பசிக்கு உணவிட்டுப் பாதுகாப்பது, மனிதனின் தலையான அறமாகும். வீடு பேறு அடைய உதவும் வழியாகும் இச் செயல்கள்.

'புலால் விற்பது ஒரு தொழிலாகச் செயல்படுகிறது. கொல்லாமையும், புலால் மறுத்தலும் எல்லாராலும் ஏற்கப் பட்டால், அவர்கள் தொழில் பாதிக்கப் படுமே! அதற்கு வள்ளுவரின் தீர்வு என்ன?' என்ற கேள்வி எழலாம்.

1. கொலைத் தொழிலைச் செய்யும் மக்கள் தாங்கள் செய்யும் தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தவராயினும், புலைத் தொழிலுடையவர்களாகத் தாழ்ந்து தோன்றுவர்.
2. இத்தொழிலில் கிடைக்கும் செல்வம் இன்பத்தைக் கொடுக்கும் அளவிற்குப் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் இத்தகைய செல்வம் மிக இழிவானதாகும்.
3. இழிதொழிலான கொலைத் தொழில் வாழ்க்கை உடையவர், முற்பிறவியில் கொலை பல செய்து உயிர்களை உடம்பிலிருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.

அதாவது, அத் தொழில் ஒரு தொழிலே அல்ல என்பது வள்ளுவரின் கருத்தாகப் படுகிறது.'எப்படி கொலைத்தொழில் செய்பவர் அறம் இழப்பார்களோ, அப்படித்தான் புலால் புசிப்பவர்களும் அருளை இழப்பர்' என்று வெகு அழுத்தமாகச் சொல்கிறார் வள்ளுவர்.

அருள் என்றால் என்ன?
கருணை என்று ஒரே சொல்லில், வள்ளுவர் முடிக்காமல் ஒரு குறளில்-அதுவும் புலால் மறுத்தல் என்ற அந்த அதிகாரத்திலேயே விளக்குகிறார்: 'அருள் என்றால் ஒர் உயிரையும் கொல்லாமலிருத்தல்; அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன் உடம்பைத் தின்னுதல்; இந்தச் செய்கை அறத்தையே கொல்வதாகும்.

'புலால் புசிப்பதால், அருளும் போய், அறமும் போய், அல்லற்பட வேண்டிய நிலையை மனிதன் எய்துவான் ' என்பது வள்ளுவரின் தெளிவான முடிவாகும். 'தன் உடம்பைப் பெருக்குவதற்காக பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?' என்ற கேள்வியை நம் முன் வைக்கும் வள்ளுவர்,'புலால் உண்பவர்கள் உலகில் இல்லாவிடில், புலால் விற்பவரும் இல்லாமல் போவர்' என்று தம் மனத்தைத் தேற்றிக் கொள்கிறார்.

'புலாலைக் கடையில் வாங்கித் தானே நான் புசிக்கிறேன்! நான் எந்த உயிரையும் கொல்ல வில்லையே! அப்படி இருக்கும் பொழுது, பாபம் எப்படி எனக்கு ஏற்படும்?' என்று கேள்வி கேட்கலாம். இதை அறிந்தோ என்னவோ, இதற்கு வள்ளுவர் பதில் சொல்லி இருக்கிறார்.'கொலைப் பாவம் கொன்றார் மேலும் உண்டு. ஊன் அதாவது மாமிசம் உண்பாரிடமும் உண்டு. கொன்ற உயிரின் உடலைத் தின்றால், அது அறத்தை அழித்ததற்குச் சமம். புலால் உண்பவர்களால் தானே, புலால் வியாபாரி உயிர்கொலையில் ஈடுபடுகிறான்?''

' புலால் மறுத்தலுக்கு வேறு காரணங்கள் உண்டா?' என்பதற்கு, கீழே கொடுக்கப் பட்டிருக்கும் இரண்டு காரணங்கள் இரண்டு குறட்பாக்களில் இருக்கின்றன. அவைகள் மிகவும் வலுவான காரணங்களாகப் படுகின்றன:

1. 'புலால் என்பது பிறிதோர் உடம்பின் புண்; தூய்மையான உணவுக்கு உகந்த பொருள் இல்லை' என்ற உண்மையை ஆராய்ந்து அறிவதன் மூலம் தெளிவுபெற்றால், எவரும் புலால் உண்ண மாட்டார்கள்.
2. குற்றமற்ற அறிவினை உடையவர், ஓர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த உடம்பாகிய ஊனை உண்ணமாட்டார்.

முத்தாய்ப்பாக, வள்ளுவர் வணக்கத்துடன் வேண்டுவது, கல் மனத்தையும் உருக்கும் தன்மை கொண்டது. அக்குறட்பாவின் கருத்து இதுதான்:'ஓர் உயிரையும் கொல்லாமலும், புலால் உண்ணாமலும் வாழ்கின்றவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்.

''கைகூப்பித் தெழ வாழ்வோம். வாழவைப்போம்' என்று முடிக்கிறேன்.

ஆதாரம்: குறட்பாக்கள்: 251-யிலிருந்து 260-வரை; 321-யிலிருந்து 330-வரை

Comments

Popular posts from this blog

தமிழில் நான்கு வேதங்கள்

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017