வள்ளுவம் 2- மருந்து

மருந்து
எழுதியவர்: எஸ். சங்கரன்.
வள்ளுவர் டாக்டர் இல்லைதான். ஆனால், உள்ளத்தை உயர்த்த எழுதிய நீதி நூலில் உடம்பின் ஆரோக்கியத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர் சொன்ன அறிவுரை இரண்டே இரண்டுதான்.
ஒன்று: முன் உண்ட உணவு செரித்த பிறகு உண்க.
இரண்டு: அளவோடு உண்க.
இவைகள் தான் ஆரோக்கியத்திற்கு மருந்து என்கிறார்.
முதல் அறிவுரையை மூன்று குறட்பாக்களிலும், இரண்டாவது அறிவுரையை முன்று குறட்பாகளிலும் விளக்குகிறார்.
முன் உண்ட உணவு செரித்த பின் உண்ணுவதற்கு வள்ளுவர் கூறும் காரணங்கள் மூன்று:
1. உடம்பிற்கு நோயே வராது.
2. நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.
3. நன்கு பசித்த பிறகு உண்பது நோய்வராமல் தடுக்கும்.
அதேபோல், குறைந்த அளவு உண்பவருக்கு இன்பம் நிலைத்து நிற்கும் என்கிறார் வள்ளுவர். எப்படி இன்பம் நிலைத்து நிற்கும் என்பதற்கு உபமானமாக வள்ளுவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதில் தான் சுவை இருக்கிறது. பெரிதுண்பவனிடத்தில் எப்படி நோய் நிற்குமோ அதேபோல் குறைவாக உண்பவனிடம் இன்பம் நிலைத்து நிற்கும் என்கிறார்.
இன்பம் வேண்டும் என்றால் பசித்துப் புசி, துன்பம் வேண்டும் என்றால் பெரிதுண்ணவும் என்பதுதான் வளளுவரின் வாசகங்கள். பசியின் அளவின் படி இல்லாமல், வாய் ருசிக்காக அதிகமாக உண்டால் நோயும் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கிறார்.ஆரோக்கியமான வாழ்விற்கு அளவோடு பசித்துப் புசிக்கவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் மருந்தாகும்.
(ஆதாரம்: குறள் பாக்கள்: 942-லிருந்த்து 947-வரை)
Comments