கவிதைகள் - ஆக்கியோன் - நைத்ருபன்



1. வேண்டுதல்


1. வளைந்த முகம்
வாழ்விக்கும் ஓங்காரம்
ஒடிந்த தந்தம்
ஓங்கு புகழ்பாரதம்.

2. அடியெடுத்துக் கொடுக்க
அடிபணிந்து அழைக்கிறேன்!
ஆணை முகன் சுழி இட்டேன்
ஆரம்ப மொழி வேண்டுகிறேன்.

3. குட்டித் தொழுது
குறுநூலை எழுத
முகவுரை அருளி
முகமலர வேண்டுகிறேன்.


2. எழுதுகோல்

1. வான்புகழ் வள்ளுவன் நீதிக்கோல்
பண்புகழ் சிலம்பின் கற்புக்கோல்
நாண்புகழ் கம்பராமன் வீரக்கோல்
மண்புகழ் மணிமேகலை துறவுக்கோல்
எங்கே, எங்கே, எங்கே?

2. எழுத்திலே எழிச்சி எங்கே?
எண்ணத்தின் ஏற்றம் எங்கே?
தர்மத்தின் தன்மை எங்கே?
தர்கத்தின் வெண்மை எங்கே?

3. எழுதுவதெல்லாம் எழுத்து மில்லை;
எண்ணுவதெல்லாம் எழுதுவற்கில்லை;
எழுதுகோலே எழுந்து கொள்ளாயோ?
ஏற்றமிகு புதினம் படைத்துத் தள்ளாயோ?

4. கன்னத்தின் களையிழந்து,
காதணியின் ஒளியிழந்து,
கண்களிலே கண்ணீரோ, தமிழ்த்தாயே!
கலியுகத்தில் காசுக்குப் பலியான எழுதுகோலை,
கருத்துமிக்க காவியத்தால் தகர்ப்பேன், தாயே!

3. தர்மம்
தர்பையைக் கையிலெடு
தர்மத்தைக் காத்துவிடு.
1. தனக்குத் தனம் சேர்த்தால்
தர்மத்தில் குறைசேரும்
தானத்தைக் கைவிட்டால்
தர்மத்தின் ஒளிகுறையும்.
(தர்பையைக் ...... காத்துவிடு.)

2. ஆனந்தம் அறிவிலில்லை
அறிவுக்கு எல்லை இல்லை.
எல்லையை எட்டிவிட்டால்
எல்லாமும் ஒன்று தானே!
(தர்பையைக் ....காத்துவிடு)

3. கடவுளின் கண்ணாகி
கண்ணுக்கு ஒளியாகி
ஒளியின் விழியாகி
ஒளிர்வது வாழ்வாகும்.
(தர்பையைக் .....காத்துவிடு)

4. தூய்மைக்குத் திரை வேண்டாம்
வாய்மைக்குத் துணை வேண்டாம்.
தவத்திற்குத் தனிமை வேண்டாம்
தர்மத்திற்கு பதவி வேண்டாம்.
(தர்பையைக் ....காத்துவிடு)

4. பவித்திரம்

1. தண்ணீரில் தாமரை இலை
தவமிருக்கும் மோன நிலை
தண்ணீரில் தவமிருந்தும்
தவிர்த்து விட்ட ஞானநிலை.
(பவித்திரம், பவித்திரம், பவித்திரம்.)

2. முத்து முத்தாய் தண்ணீரும்,
இலையினிலே உதிர்ந்துவிடும்
முக்தி நிலை கண்டவர்க்கு
இலையின் நிலை இயற்கை அன்றோ?
(பவித்திரம், பவித்திரம், பவித்திரம்)

3. சகதியிலே பிறந்த தென்னை
அமர்தத்தை தலையில் தாங்கி
சகதியும் அமர்தமாகும்
அதிசயம்தான் சகலமுமே!
(பவித்திரம், பவித்திரம், பவித்திரம்)

(இப்போதைக்கு இவ்வளவே!)

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017