ராம அவதார ரகஸ்யம் அறிவோம் வாரீர்
பாற்கடலில் ஆதிசேஷன் மீது மகா விஷ்ணு சயனம். பகவான் அருகில் மஹா லட்சுமி. சங்கு – சக்கரம் ஏந்திய திருக்கோலம். இந்த நிலையில் தான் பூலோகத்தில் புதிய அவதாரம் எடுக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார் பகவான்.
மனித பண்பாட்டுக்கு இலக்கணமாகத் திகழ்ந்து அதர்மத்தை வேரறுக்க பகவான் பூலோகத்தில் அவதரிக்க விருப்பம் கொண்டார். ஆகையால் மஹா விஷ்ணு கோசலை வயிற்றில் ராமனாகப் பிறந்தார்.
நடந்து சென்றால் குடையாக நிழல் தருபவரும், அமர்ந்திருந்தால் சிம்மாசன இருக்கையாகத் திகழ்பவரும், நின்றிருந்தால் பாதுகையாக மாறுபவரும், படுத்திருந்தால் தாங்கிக் கொள்ளுபவருமாக சேவை சாதிக்கும் ஆதிசேஷனை பூலோகத்தில் தன் தம்பியாக ஏற்க தீர்மானித்தார். அவர் தான் லட்சுமணன்.
தமது சங்கு சக்கரம் இரண்டையும் தமது மேலும் இரண்டு தம்பிகளான பரதன், சத்துருக்கனன் ஆக அவதரிக்கச் செய்தார்.
கைகேயின் வயிற்றில் பரதனைப் பிறக்கச் செய்த பரந்தாமன் இரட்டை குழந்தைகளாக லட்சுமணன் – சத்துருக்கனன் இருவரையும் சுமித்திரையின் வயிற்றில் பிறக்கச் செய்தார்.
ராமன் – லட்சுமணன், பரதன் – சத்ருக்னன் என்ற சகோதரப் பிணைப்பு ஏற்பட சுமித்திரை வழிகாட்டினாள். சுமித்திரை என்றால் நல்ல அறிவுடையவள், உரிய தருணத்தில் காப்பாற்றக் கூடியவள் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாகவே இராமாயணத்தில் வலம் வந்த புண்ணியவதியாகத் திகழ்ந்தாள் சுமித்திரை.
Comments