ராஹுல் இடும் ஓலங்கள்




ராஹுலிடம் முன்பு எதைப் பற்றிக் கேட்டாலும், ‘சிஸ்டம் சரியில்லை’, ‘சிஸ்டத்தை மாற்ற வேண்டும்’, ‘மகளிர் எம்பவர்மெண்ட் தான் எல்லாவற்றிற்கும் தீர்வு’ – என்று கிளிப்பிள்ளை போல் காங்கிரஸ் ஐக்கிய முற்போற்குக் கூட்டணியின் மன்மோஹன் சிங் ஆட்சியின் இறுதி நாட்களில் சொல்லி தன்னையும், மீடியாவையும், அரசையும், மக்களையும் குழப்பியதால் சென்ற லோக்சபா தேர்தலில் 44 தொகுதியாக காங்கிரசை முடக்கி விட்டார். ஆனால், அதற்குக் காரணமான அவரது தாய் சோனியாவையோ, மகன் ராஹுலையோ காங்கிரஸ்காரர்கள் குற்றம் சொல்ல வில்லை.

இந்த இமாலயப் படுதோல்விக்கு தலைவர்கள் யாரையும் குற்றம் சாட்டும் ஜனநாயக தர்மம் காங்கிரசில் இல்லை. மன்மோஹன் சிங் தான் காரணம் என்ற முனு முனுப்பும் எழுந்த வேகத்திலேயே அடங்கி விட்டது.

 புல்வாமாவின் தீவிரவாதியின் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜாய்ஸ்-இ-முஹமதின் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் ஆசார் தான் இதற்குக் காரணம் என்பதை அந்த இயக்கமே மார்தட்டி உள்ளது.

இந்த ஜாய்ஸ்-இ-முஹமதுவின் தலைவன் மசூத் ஆசாரை வாஜ்பாய் அரசு டிசம்பர் 1999 அன்று 154 விமானப் பயணிகள் – மற்றும் 15-க்கும் மேற்பட்ட விமான ஓட்டிகள் – சிப்பந்திகள் ஆகியவர்களை இந்திய விமானம் ஐசி – 814 விமானம் இதே ஜாய்ஸ் தீவிர வாத இயக்கத்தினர் கடத்திய போது அவர்களைக் காப்பாற்ற விடுவித்தது உண்மைதான். அவனோடு இன்னும் இரண்டு தீவிரவாதிகள் இந்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த விடுவிப்பிற்கு காங்கிரசும் ஒப்புதல் அளித்ததும் உண்மையாகும்.

விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் இந்தியச் சிறையில் உள்ள 35 தீவிரவாதிகளை விடுதலை செய்யும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவுடன், 3 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் தங்கள் கோரிக்கையினை தளர்த்தியதால் தான் அவர்கள் பயணிகளையும், விமானத்தையும் காப்பாற்ற வாஜ்பாய் அரசு – எதிர்கட்சிகளின் ஒப்புதலுடன் செயல்பட்டதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் அரசின் முக்கிய தலைவர் ப. சிதம்பரம் ‘எந்த அரசும் இதே முறையில் தான் நடந்து கொண்டிருக்கும்’ என்று வாஜ்பாய் அரசைக் குறைகூறவில்லை. ஆனால், ராஹுலோ புல்வாமா தீவிர தாக்குதலுக்கு வாஜ்பாய் அரசு மசூத் ஆசாதை விடுதலை செய்தது தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.

இந்த சமயத்தில் காங்கிரஸ் அரசு தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு உண்மையிலேயே கடும் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? என்பதற்கு இரண்டு கடந்த கால நிகழ்ச்சிகளை நாம் நினைவு கூறுவது அவசியமாகிறது.

  v  20-12-1978 அன்று இந்தியன் ஏர்லைன்ஸ் ஐ.சி.410 விமானம் 132 பயணிகளுடன் லக்னோவிலிருந்து டெல்லிக்குப் பறந்து  கொண்டிருக்கும் போது, இரண்டு பயணிகள் – போலோநாத் பாண்டே மற்றும் தேவேந்திர பாண்டே – அந்த விமானத்தை துப்பாக்கி முனையில் கடத்த முயன்றனர். அவர்கள் வைத்த கோரிக்கைகள் இரண்டு: ஒன்று – ஜனதா கட்சியின் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் அரசு கைது செய்த இந்திரா காந்தியை ஜெயிலிருந்து விடுவிக்க வேண்டும். இரண்டு – சஞ்சை காந்தியின் மேல் போட்ட அத்தனை வழக்குகளையும் வாபஸ் வாங்க வேண்டும்.

ஆனால் அவர்கள் பொம்மைத் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டியது தெரிவந்துள்ளது. அவர்கள் சில நிமிடங்களுக்குள்ளேயே கைது செய்யப்பட்டார்கள்.

விமானத்தைக் கடத்த முயன்று தோற்ற அந்த இரண்டு பேர்களை காங்கிரஸ் இந்திரா காந்தி மீண்டு பதவிக்கு வந்த உடன் அந்த இருவருக்கும் மாநில அவைத் தேர்தலில் போட்டி இட வைத்து, வெற்றி அடைய வைத்துள்ளார். போலோநாத் பாண்டேக்கு ஏழு மக்கள் அவைத் தேர்தலிலும் போட்டி இட காங்கிரஸ் டிக்கட் வழக்கி உள்ளது. இது தான் காங்கிரஸ் தீவிரவாதச் செயல்களைப் பார்க்கும் கண்னோட்டமாகும்.

  v  26-11-2008 அன்று நடந்த பம்பாய் தீவிர வாத தாக்குதலில் 164 பேர்கள் இறந்தனர். 308 பேர்கள் காயம் அடைந்துள்ளனர். அதை நிகழ்த்தியது லஷ்கர்-இ-தொய்பா என்ற இயக்கம் பாகிஸ்தான் உளவுத் துறையின் துணையுடன் நடத்தி உள்ளது. இது நடந்து 18 மாதங்கள் ஆனபிறகு, இந்த பயங்கரமான தீவிர வாதத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருப்பது தெரிந்தும், அதை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத சோனியா – மன்மோஹன் சிங் அரசு, நல் எண்ணம் அடிப்படையில் இந்தியச் சிறையில் இருக்கும் 25 பாகிஸ்தான் பயங்காரவாதிகளை    28-05-2010 அன்று விடுதலை செய்தது. இதில் இந்தியாவின் பாதன்கோட் ராணுவ தளவாடக் கிடங்கை தாக்க முக்கிய மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஸ்-இ-மொஹமத் இயக்கத்தின் தலைவனான ஷாஹித் லதிப்பும் உண்டு.

164 பேர்களை பம்பாய் தீவிரவாதத் தாக்குதலில் இழந்தோம். அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கத் தைரியம் இல்லாத அப்போதைய மன்மோஹன் சிங் – சோனியா அரசு, பாகிஸ்தான் அரசுக்குப் பணிந்து சமாதான உடன்படிக்கை என்ற பெயரில் நமது பலவீனத்தையே காட்டி விட்டோம். 

இந்தியா எந்த விதத்தில் இதை நல் எண்ணம் என்று சொல்கிறது என்று தெரியவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் அணுகுமுறை 25 பாகிஸ்தான் தீவிரவாதிகளின் விடுதலைக்குப் பின்னும் மாறவில்லை. இந்தியாவின் மீது நடத்தும் தீவிரவாத நடவடிக்கை குறையவே இல்லை. 

பாகிஸ்தான் ராணுவம் நமது ஜவான் ஒருவனை கொடூரமாகக் கொன்று, அவன் தலையை வெட்டி, தங்களது வெற்றியின் சின்னமாகக் காட்டிய வீடியோ காட்சிகளைப் பார்த்து இந்தியாவே கொதித்தது. அந்தக் குடும்பத்தினர் தலையில்லா ஜவானைத் தான் இறுதிச் சடங்கு செய்யும் நிலையை பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் இந்த நல் எண்ணத்திற்குக் கொடுக்கும் மரியாதையாகும். 

இந்த அதி பயங்கரச் செய்கையை காங்கிரஸ் சகித்துக்கொண்டு எந்தவிதமான சலனமும் இன்றி தைரியத்தையும் இழந்து இருக்கும் நிலையைத் தான் கண்டோம்.

மோடி அரசின் பாலகோட் சர்ஜிகல் ஸ்ரைக்கை ராஹுல் நம்பத்தயாராக இல்லை. இந்திய ராணுவத்தினர் ‘சர்ஜிகல் ஸ்ரைக் நடத்தினோம். எங்கள் குறி சரியாக இலக்கைத் தாக்கி சேதம் விளைவித்துள்ளது. இறந்தவர்கள் உண்டு. ஆனால் எவ்வளவு என்று எண்ணுவது எங்கள் வேலை இல்லை. அதை அரசாங்கம் சொல்லும்’ என்று ரத்தினச் சுருக்கமாக, சுரீர் என்று உரைக்கும் படிச் சொல்லியும், சூடு சுரணை அற்ற நாட்டுப் பற்று இல்லாத ராஹுல் காங்கிரஸ் நம்மத் தயாரில்லை. ஆனால், இப்போது ஜய்ஸ்-இ-மொஹமத் தீவிரவாத இயக்கமே ‘எங்கள் கூடாரங்கள் இந்திய ராணுவத் தாக்குதலால் சேதம் அடைந்துள்ளது’ என்பதை ஒப்புக் கொண்டுள்ளது.

அதை விட ஒரு அற்புதம் என்ன வென்றால், பிரான்ஸ் அரசு மசூத் ஆசாதின் பிரான்சில் உள்ள சொத்துக்களை முடக்கி விட்டது. மேலும், பிரான்ஸ் – யு.எஸ். மற்றும் 14 யு.என்.எஸ்.சி. அங்கத்தினர்கள் மசூத் ஆசாதை தீவிரவாதி என்று பிரகடணப்படுத்த சீனாவை வற்புறுத்துகிறது. 

சீனாவின் இந்திய தூதர் ‘மசூத் ஆசார் பற்றிய எல்லா விவரங்களைப் பற்றி புரிந்துள்ளோம். அவைகளை நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் கவலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். விரைவில் இதற்கான முடிவை எடுப்போம்’ என்ற அளவில் தெரியப்படுத்தி உள்ளார். இது தான் நேர்மையான, தீர்க்கமான, சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையின் அணுகுமுறையாகும். அது மோடியால் மட்டுமே முடியும்.

பவன் கேரா என்ற காங்கிரஸின் அதிகார பூர்வ பேச்சாளர் சமீபத்தில் நடந்த இந்தியா டி.வி. உரையாடலின் போது ‘மோடி என்ற அவர் பெயர் – மசூத், ஒசாமா, தாவுத், ஐ.எஸ்.ஐ. ஆகியவர்களுடன் பொருந்தும்’ என்று மோடியை அந்த அதிபயங்கர தீவிரவாதிகளைப் போல் சித்தரித்துள்ளார். அதைக் கேட்ட அங்கு கூடி இருந்த பார்வையாளர்கள் தீவிரமாக எதிர்த்துக் குரல் எழுப்பி உள்ளனர். இது காங்கிரஸ் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து விட்டது என்பதையே காட்டுகிறது. (What he said was: Modi means M for Masood, O for Osama, D for Dawood, I for ISI).

நெஞ்சு பொறுக்குதில்லையே என்று ஒவ்வொரு இந்தியனின் இதயமும் கொதிக்கும் அளவிற்கு காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. ராஹுல், சோனியா, ராபர்ட் வாத்ரா, ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் என்று காங்கிரசின் பெரும் தலைவர்களே ‘பெயில் வண்டி’ அளவில் ஜெயிலைத் தவிர்க்கத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஹுல் ஒவ்வொரு இடத்திலும், ‘மோடி சோர். சோக்கிதார் சோர்’ என்று அபாண்டப் பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறார். ‘சோக்கிதார் என்று நான் சொன்ன பிறகு, நீங்கள் சோர்’ என்று கோஷம் எழுப்ப வேண்டும் என்று பொதுக் கூட்டங்களில் சொல்லி, மக்களை முட்டாள் என்று நினைக்கிறார் போலும்.

அதற்கு மோடி அற்புதமாக அழகாக பதிலடி கொடுத்து விட்டார். தனது ட்விட்டரின் பெயரை ‘சோக்கிதார் நரேந்திர மோடி’ என்று மாற்றி ‘உங்களுடைய சோக்கிதார் உரிதியாக, தேச சேவை செய்ய நிற்கிறார். ஆனால், இதில் நான் மட்டும் தனியாக இல்லை. ஊழல், அழுக்கு, சமூதாய அநீதி ஆகியவைகளை எதிர்க்கும் ஒவ்வொருவரும் சோக்கிதார் தான். இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் ஒவ்வொருவரும் சோக்கிதார் தான். இன்று ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ‘நானும் சோக்கிதார்’ என்று குரல் எழுப்புகிறான்.’

மோடியின் இந்த ‘சோகிதார்’ எழுச்சி 2014 லோக் சபா தேர்தலின் ‘சாய்வாலா’ போல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டது.
எந்தக் கேள்வி கேட்டாலும், அதில் சம்பந்தமே இல்லாத – ‘ரபேல் மோடி ஊழல். அனில் அம்பானிக்கு மோடி 30,000 கோடி பணம் கொடுத்தார்’ – என்பது இடம் பெறுகிறது. 

இது 2014 தேர்தலுக்கு முன் அர்னாப் கோஸ்வாமியின் பேட்டியின் போது, எந்தக் கேள்விக்கும் ‘சிஸ்டம் மாறவேண்டும்’, ‘மகளிர் சக்திபெற வேண்டும்’ என்ற சொன்ன ராஹுலின் மன நிலை இன்னும் மாறவில்லை என்று தான் நிரூபணம் ஆகிறது.

மஹாகட்பந்தன் என்ற மஹா கூட்டணி மஹாமிலாவத் அதாவது மஹா கலப்படக் கூட்டணி என்று கேலிக் கூத்தாகி விட்டது. ராஹுலை பிரதம மந்திரியாக தி.மு.க. மட்டும் தான் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜே.டி.எஸ். கூட எல்லாம் தேர்தல் முடிவிற்குப் பிறகு தான் பிரதம மந்திரியை தேர்வு செய்ய வேண்டும் என்று தேவ கவுடா பின் வாங்கி, தானும் அதற்குத் தகுதி ஆனவர்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

ராஹுல் அமேதி தொகுதியுடன் இன்னொரு தொகுதியிலும் போட்டி போட வேண்டிய நிலையில் தான் இருக்கிறார். மாயாவதி இப்போது தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால் நான் எந்தத் தொகுதியிலும் இப்போது நிற்கப் போவதில்லை என்று சொல்லி விட்டார். அத்துடன் நிறுத்த வில்லை. ராஹுல் தங்கை பிரியங்கா வாத்ரா பீம் சேனைத் தலைவர் சந்திரசேகர் ஆசாதை – டியோபாண்ட் போலீஸ் காவலில் உடம்பு சரியில்லாததால் மீரட் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – சந்தித்துள்ளார். இதைக் கேள்விப் பட்ட மாயாவதி, ‘அகிலேஷ்! நாம் ராஹுலை எதிர்த்து அமேதியில் போட்டி இட வேண்டும். இது காங்கிரஸ் தலித் ஓட்டுக்களைப் பிரிக்கும் சதி’ என்று ஊர்த்துவ தாண்டவமாடுகிறார்.

ராஹுலுடன் அணி சேர எந்தக் கட்சிகளும் – தி.மு.க. மற்றும் ஜே.டி.எஸ். தவிர – தயாராக இல்லை. லல்லு கட்சியும் காங்கிரசைக் கைவிடும் எண்ணத்தில் இருப்பதாகத் தெரிகிறது. அதை விட சரத் பவாரும் ராஹுலை கை கழுவி விட்டார் என்று தான் படுகிறது. சரத் பவார் இப்போது ‘பாகல்காட் சரிஜிகல் ஸ்ரைக்கை மோடிக்கு பரிந்துரை செய்தது நான் தான்’ என்று மார் தட்டுகிறார். மம்தாவும் ராஹுலைப் புறக்கணித்து விட்டார்.

ஆனால், கெஜ்ரிவால் மட்டும் காங்கிரசுடன் கூட்டணிக்கு தலை கீழாக நிற்கிறது என்பது காலத்தின் கோலம். ‘டெல்லி – பஞ்சாப் இல்லாவிடினும், ஹரியானாவிலாவது கூட்டணி அமைக்கலாமே?’ என்று கெஜ்ரிவால் பிச்சைக்காரனைப் போல் கெஞ்சுகிறார். இது ஒன்று தான் ராஹுலுக்கு சிறிது மனத் திருப்ப்தியைத் தரும். கெஜ்ரிவால் போல் தான் ராஹுலும் பொய் பேசுவதில் நிபுணர். அதற்கு பரிசு என்றால், ராஹுல் நிச்சயம் பெருவார். அதைப் பெற்றால், அதையும் பெருமையுடன் நினைக்கும் வல்லமை ராஹுலுக்கு மட்டும் தான் உண்டு.

ராஹுலின் ஓலங்கள் ஓயப்போவதில்லை. அதை நிறுத்தும் சக்தி மக்கள் கைகளில் தான் இருக்கிறது.

மே 23-ம் தேதி கைச் சின்னத்தை ஒரே அடியாக ஒதுக்கி அந்தக் கட்சிக்கு பலத்த தோல்வியைத் தந்து, மக்கள் சாதித்துக் காட்டினால் ஒழிய, இந்த ஓலம் ஓயப்போவதில்லை.



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017