ஆடி மாதம் அம்பாள் மாதம்

 


பூமாதேவி பூமியில் அவதரித்த மாதம் ஆடி மாதம்.

பார்வதியின் தவத்தை மெச்சி பரமசிவன், ஆடி மாதம் அம்பாள் சக்தி மாதமாக  இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். ஆகையால், தெய்வீக மணம் கமழும் மாதமாக ஆடி மாதம் திகழ்வதால், இந்த மாதத்தை ‘அம்மன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். அந்தளவுக்கு அம்பாள், சக்தி ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த பூஜைகள், ஹோமங்கள், உற்சவங்கள், பால் அபிஷேகம், பூச்சொரிதல் போன்றவை விமரிசையாக நடக்கும். அதிலும் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகள்  மிகவும் சிறப்பு மிக்கவை.

சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.  ஆடி மாதம் மட்டும் சிவன் சக்திக்குள்  அடக்கம் ஆகி விடுகிறார்  என்பது ஐதீகம்.

ஆடித் தபசும் இந்த மாதத்தில் வருகிறது.

ஆடி தபசு சிவபெருமான் பார்வதி தேவி பொதிகை மலையில் புன்னை வனத்தில் சிவபெருமான் விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தரும் விழாவாகும். அம்பாள் ஒற்றைக் காலில் ஊசி முனையில் நின்று தவம் புரிய சிவபெருமான் ஆடி பவுர்ணமி நாளில் பார்வதிக்கு சங்கர நாராயணர் கோலத்தில் காட்சி அளித்தார். அந்த அற்புத திருக்கோலத்தை அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு அந்தக் காட்சியை தரிசனம் செய்தார் என்பது  புராண வரலாறு.

இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.

ஆடிப் பூரம்

ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று.

இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம்.

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஆண்டாள் அவதரித்த தினமும் ஆடி மாதம்.

எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிப்பிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள்.

ஆடி மாதத்தில்  துளசி தோட்டத்தில் ஆண்டாள் ஆடிப் பூர நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. ஆண்டாள் ஆடியில் (கண்ணாடியில்) அரங்கனுக்கு அளிக்கும் மாலைதனை தான் சூடி அழகு பார்த்து, அந்த மாலையை அரங்கனும் ஆர்வமுடன் ஏற்று, ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியானாள்.  

ஆகையால் வைணவத் தலங்களிலும் ஆடி மாதம் சிறப்பாக பூஜைகள் செய்யப்படுகின்றன.

வைணவத்  திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்துநாள் திருவிழாவாகக் கொண்டாடப் படுகின்றது.

ஆடிப் பெருக்கு ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும்.

காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும்.

காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது.

தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017