கன்வார் யாத்ரா 2022 – ஜூலை 14-லிருந்து ஜூலை 24-வரை







இந்த 2022 வருடம் கன்வார் யாத்திரை ஸ்ரவன மாதம் ஜூலை 14-ல் ஆரம்பித்து, ஆகஸ்ட் 12-ல் முடிவு பெறுகிறது.

அதில் முதல் பாதியான ஜூலை 14-லிருந்து ஜூலை 28 வரையான 15 நாட்கள் கிருஷ்ண பக்ஷம் என்றும், அடுத்த 15 நாட்களான ஜூலை 29-லிருந்து ஆகஸ்ட் 12 வரையான நாட்கள் சுக்ல பக்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஸ்ரவன மாதம் சிவன் – பார்வதி ஆகியவர்களுக்கு உகந்த நாளாகும்.

தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், அரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான சிவபக்தர்கள் சோமவார விரதம் மேற்கொண்ட பின்னர், காவடி ஏந்தி, தொலைதூரத்தில் உள்ள அரித்துவார், கங்கோத்திரி, கோமுகம், கேதார்நாத், வாரணாசி, பிரயாகை போன்ற புனித தலங்களுக்கு கால்நடையாக யாத்திரை மேற்கோண்டு, புனித கங்கை நீரை சேமித்து, அதனை தங்கள் சொந்த ஊரில் உள்ள சிவலிங்கத்திற்கு, அமாவாசை அல்லது மகா சிவராத்திரி அன்று கங்கை நீரால் அபிஷேகம் செய்வார்கள்.

ஒவ்வொரு வருடமும் 2 கோடி கன்வாரியாஸ் – இந்த புனித கங்கா ஜல யாத்திரையில் பங்கு கொள்கிறார்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.. இந்த விழாவினை ‘ஸ்ரவன மேளா’ என்று வடநாட்டவர்கள் அழைக்கிறார்கள். இதில் ஆண்களுடன் பெண்களும் கலந்து கொள்கிறார்கள்.

ன்வார் என்றால் மூங்கில் கம்பு என்று அர்த்தம். மூங்கில் கம்பின் இரு முனைகளிலும் கங்கை ஜலம் நிரப்பிய சொம்பு பாத்திரங்களைத் தொங்க விட்டு பயபக்தியுடன் தங்கள் தோள்களில் சுமந்து அந்த கங்கை நீரை தங்கள் ஊரில் உள்ள கோயில் சிவனுக்கு அபிஷேகம் செய்து யாத்திரையைப் பூர்த்தி செய்வார்கள். 

அந்த யாத்திரையின் போது ‘போல் பாம்’ என்று சரண கோஷம் செய்வார்கள். சிவன் மேல் பஜனைப் பாடல்களையும் பாடுவார்கள்.

இதில் முக்கியமாக கங்கை நீர் நிரம்பிய பாத்திரம் தரையில் படாதவாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது விதி.

அந்த யாத்திரையின் போது கன்வாரியாஸ்கள் வெறும் தரையில் தான் படுக்க வேண்டும். தோல் சம்பந்தப்பட்டவைகளைப் பயன் படுத்தக் கூடாது. சைவ உணவு தான் உட்கொள்ள வேண்டும். மது, லாகிரி வஸ்துக்கள் எதுவும் கூடாது. பிரம்மச்சர்ய விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

கன்வார் யாத்ராவின் புராண வரலாறு:

பாற்கடலை அமுதம் கிடைக்க தேவ – அசுரர்கள் கடையும் போது ண்டான ஆலகால விஷத்தை உலக நன்மைக்காக சிவபிரான் உட்கொண்டு, நீலகண்டர் என்று துதிக்கப்படுகிறார்.  ஆனால் விஷத்தின் வீர்யம், சூடு குறைய சிவபிரான் தன் தலையில் பிறைச் சந்திரனைச் சூடிக் கொண்டார். தேவர்களும் பிற கடவுளர்களும் பரம சிவனின் விஷத்தின் ஜூவாலையைத் தணிக்க கங்கையிலிருந்து புனித நீரை எடுத்து அபிஷேகம் செய்தனர். இது ஸ்ரவன மாதத்தில் நிகழ்ந்த ஒன்றாகும். அந்த நிகழ்வை நிகழ்த்திக் காட்டு  முகமாக ஒவ்வொரு வருடமும் சிவனுக்கு கங்கா அபிஷேகம் பக்தர்களால் செய்யப்படுகிறது. அது தான் கன்வார் யாத்திரையின் தாத்பர்யமாகும்.


பாரத நாடு பழம்பெரும் நாடு, நீர் அதன் புதல்வர், இந்நினைவு அகற்றாதிர்என்ற அற்புதக் கவிஞன் பாரதியின் வாக்குப் படி அந்த நினைவை நிலை நிறுத்தி பெருமை கொள்வோம். நம்மைக் காக்க விஷத்தை உண்ட சிவனை நினைத்துத் துதிப்போம்.   

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017