111 – வது வீர வாஞ்சியின் நினைவுதினம் - 17 – 06 – 2022
“எங்கள் வ.உ.சி.,யை சிறையில்
தள்ளி செக்கிழுக்க வைப்பதா?” என வெகுண்டெழுந்த மக்களை காக்கை
குருவி போல சுட்டுத்தள்ள உத்திரவிட்ட ஆஷ் துரையை துப்பாக்கியால்
சுட்டு பிறகு தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு வீர மரணம் அடைந்த 25 வயது
வீர வாஞ்சியின் 111-வது
நினைவு தினம் தான் 17 – 06 -2022.
தென் இந்தியாவின் ஒரே புரட்சிகர நிகழ்வு ஆஷை வாஞ்சி வதம் செய்ததுதான், அதற்கு 20 வருஷம் கழித்துத்தான் பகத்சிங் செய்த புரட்சி . ஆனால் பகத்சிங் அடைந்த அளவு புகழை ஏனோ வீர வாஞ்சி அடையவில்லை - ஏன் தமிழகத்தில் கூட இல்லை என்பது ஒரு பெரிய சரித்திரப் பிழை என்றால் அது மிகை அன்று.
நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.
செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.
தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை. ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.
புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு உதவி,, ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி.
புதுச்சேரியில் நடந்த வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய பாரதியார் ஆகியோரின் சந்திப்புகள், வாஞ்சிநாதனுக்கு மேலும் ஊக்கத்தை தந்தது.
இதற்கிடையே நடந்த சம்பவம் ஒன்று, வாஞ்சிநாதனுக்கு கடும் ஆத்திரத்தை மூட்டியது. தான் மிகவும் போற்றிவந்த வ.உ.சி., சுப்ரமணிய சிவா ஆகியோரை, நெல்லை கலெக்டர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.
இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டது. தாங்க முடியாத துயரமடைந்த அவர், இதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார். இதற்கான சரியான தருணம் வாய்த்தது. 1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச் புறப்படத் தயாராக இருந்த கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சி தன் கைத்துப்பாக்கியால் சுட்டு வீழ்ந்தினார்.
ஆஷ் துரையை யார் கொல்வது என்பதை முடிவு செய்ய முதல் நாள் அடர்ந்த கானகத்தினுள் காளி சிலை முன் கூடியிருந்த இளைஞர்கள், வாஞ்சியை இந்த செயலில் இருந்து விலகியிருக்கக் கேட்டுக் கொண்டனர். அதற்கு காரணமாக “இப்போதுதான் உனக்கு திருமணம் நடந்திருக்கிறது. இன்னும் அந்த மணமாலை கூட வாடவில்லை. ஆகவே இதில் நீ பங்கேற்க வேண்டாம்” என்று நண்பர்கள் சொன்னபோது “அதெல்லாம் கூடாது” என காளியைவிட அதிக உக்ரம் கொண்டார் வாஞ்சி.
“என் மேல் உள்ள கரிசனத்தில் என்
பெயரை எழுத மாட்டீர்கள். ஆகவே நானே என் பெயர் உள்பட எல்லோர்
பெயரையும் எழுதுகிறேன்” என்று சொல்லி எல்லோருடைய பெயரையும்
சீட்டில் எழுதி காளி சிலை முன் குலுக்கி போட்டு எடுத்த போது வந்த பெயர்தான்
வாஞ்சிநாதன். எல்லா சீட்டிலும் அவர் தன் பெயரே எழுதிப்போட்டார் என்றும் சில
குறிப்புகள் சொல்கின்றன.
தேர்ந்து எடுக்கப்பட்ட சீட்டில் தன் பெயர்
வந்ததும் “இந்த நாள் எனக்கு
பொன்நாள் ! காளி உத்திரவிட்ட நன்நாள்”
என்று ஆனந்தக்கூத்தாடினார்.
வாஞ்சிநாதனின் தியாகம் விடுதலை போராட்ட
வேள்வியை கொளுந்துவிட்டு எரியச் செய்தது. தேசமும் விடுதலை பெற்றது. ஆனால் வீரன்
வாஞ்சிநாதனுக்கு அன்று முதல் இன்று வரை வஞ்சனைகள் தொடரத்தான் செய்கிறது.
ஆஷ் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம்
செய்து நினைவு சமாதி மண்டபம் எல்லாம் கட்டினர். ஆனால் வாஞ்சிநாதன் உடலை என்ன செய்தனர் என்பது இன்று வரை
தெரியாத மர்மங்களில் ஒன்று.
இளம் விதவையான அவரது மனைவி
சுதந்திரத்திற்கு பிறகு கூட எவ்வித உதவியும் கிடைக்கப்பெறாமல் சிரமப்பட்டு இறந்து
போனார்.
வாஞ்சிநாதன் இறந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் வாஞ்சி மணியாச்சி என்று
பெயர் வைக்கப்பட்டது. ஆனால்
இன்று வரை வாஞ்சியின் நினைவாக அங்கு அவரது படமோ அல்லது நினைவுச் சின்னமோ எதுவும்
இல்லை. அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட கட்டிடம் கூட இடித்து
தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது.
மாவீரன் வாஞ்சி அவரது மனைவி சுமங்கலி மாமி என்றழைக்கப்ப்ட்ட
பொன்னம்மாள் . தம்பதிகளின் திருவடிகளில் தலை சாய்போம்.
வந்தேமாதரம்..வந்தே மாதரம்..வாழிய பாரத
மணித்திருநாடு
Comments