ஆடித் தபசு – 23 – 07 – 2021 - வெள்ளிக்கிழமை
ஹரியும் அரனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன் இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் ஊசி முனையில் தவமிருந்தாள்.
அன்னையின் தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர
நாராயணராகக் காட்சி அளித்தார்.
சங்கர நாராயணர் பேரழகு. ஒரு புறம்
சிவப்பு, மறு
புறம் சியாமளம். ஒரு புறம் கங்கை, சந்திரன், சடைமுடி, மறு புறம் வஜ்ர மாணிக்க மகுடம். ஒரு புறம் மழு, மறு புறம் சங்கு. ஒரு புறம் புலித்தோல், மறு புறம்
பீதாம்பரம், ஒரு புறம் ருத்திராட்சம், மறு புறம் துளசி மாலை , ஒரு புறம்
வைணவன் பத்மன், ஈசனுக்குக் குடை பிடிக்கிறான்; மறு புறம் சைவச் சங்கன் பெருமாளுக்குக் குடை
பிடித்து நிற்க அரிஹரனாய் காட்சி தந்தார் இறைவன்.
இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாக
ஆண்டுதோறும் சங்கரன் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இம்மாதம் வருகிற 23-ம் தேதி 2021
வெள்ளிக்கிழமை - தமிழ் காலண்டர் படி 7-ம் தேதி ஆடி
மாதம் பிலவ வருஷம் அன்று சங்கரன் கோவிலில் ஆடித்தபசு திருவிழா கொண்டாடப்படுகிறது.
சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக
அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி
பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு
தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக
இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும்
எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர்.
காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடவே நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர்.
பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த
நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள்
பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த
இடத்தில் அரசன் கோயில் எழுப்பினான். அந்த கோவில்தான் சங்கரன்கோவில்.
ஹரியும் சிவனும் ஒன்றே என்று
மக்களுக்கு உணர்த்த அம்மன் தவமிருந்த தலம் சங்கரன் கோவில். ஆடி பவுர்ணமி உத்திராட
நட்சத்திர தினத்தில் ஸ்ரீசங்கரநாராயண தரிசனம் அன்னை கோமதிக்கு கிடைத்தது. இதை
உணர்த்தும் விதமாக இங்கே ஆடித்தபசு பிரம்மோற்சவம் ஆடி மாதத்தில்
கொண்டாடப்படுகிறது.
புன்னை வனத்தில் தவம் செய்ய அன்னை
கிளம்பிய உடன் கூடவே தோழியர்களும் கிளம்பினார்கள். அவர்கள் பசுக்கூட்டங்களாக
அன்னையுடன் தவம் இருக்க அன்னை ஆவுடை நாயகியாக ஒற்றைக்காலில் ஊசி முனையில் இறைவனை
நோக்கி தவம் இருந்தாள். பசுக்களுடன் அன்னை தவம் இருந்ததால் கோமதி என்று
அழைக்கப்பட்டார்.
"அரியும் சிவனும் ஒண்ணு இதை அறியாதவர்
வாயில் மண்ணு" என்ற மாபெரும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்துவதற்காகவே அன்னை
பார்வதி இப்பூவுலகிற்கு வந்து ஒற்றைக்காலில் ஊசி முனையில் தவம் இருந்தார். உமை ஒரு
பாகனாய் காட்சி தரும் சிவ பெருமான் சங்கரன் கோவிலில் புன்னை வனத்தில்
பசுக்கூட்டங்களின் நடுவே அன்னை கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்ததை மெச்சி,
நாராயணரை தனது இடது பாகத்தில் ஏற்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர்.
இந்த நிகழ்வு ஒரு ஆடி மாதத்தில் நிகழ்ந்தது. இன்றைக்கும் ஆடி மாதத்தில்
சங்கரன்கோவிலில் தவசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
கோமதி அம்பாள் தபசுகோலத்தில்
தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள். தபசு மண்டபம் சென்று,
கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில்
சங்கரநாராயணர் அம்பாளுக்குக் காட்சி தருகிறார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி,
யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார்.
அம்மனுக்கு காட்சி தரும் இறைவன் ஆடி பவுர்ணமி தினத்தில் மாலையில் உத்திராட
நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியாக ,
தபசு கோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு
வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமியாக
காட்சியளிக்கிறார். இது ஸ்ரீகோமதி அம்பாளுக்கான மிக முக்கியமான விழா, இதுவே சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவின் சிறப்பு.
அம்மனுக்கு நேர்த்திக்கடன் அம்பாளின்
தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய், வெற்றிலை ஆகியவைகளையும்,
விவசாயிகள் நெல், சோளம், கம்பு,
மிளகாய்வத்தல், பஞ்சு, பூ
என வயலில் விளைந்த பொருட்களை அம்பாள்மீது வீசியெறிந்து நேர்த்திக்கடனைச்
செலுத்துகிறார்கள்.
சங்கரநாராயணராக அம்மைக்கும்
மக்களுக்கும் காட்சி அளித்த ஈசன் நள்ளிரவு 12
மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி
அளிக்கும் 2ஆம் தபசு காட்சி நடக்கிறது.
சங்கன்,பதுமன் என்ற பாம்புகள் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று
இருக்கிறது. புற்று மண்தான் சங்கரன் கோயில் பிரதான
பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். சரும
நோய்கள் நீங்கும். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி,
வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு
வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி
உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும்.
தவமிருக்கும்
அன்னைக்காக பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றுகின்றனர். ஆடித் தபசு கொடி ஏற்றிய பின் 'ஆடிச்சுற்று' என்ற பெயரில், பக்தர்கள்
கோயிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையில் சுற்றுவார்கள்.
ஆடிச்சுற்று சுற்றுவதால், ஒரு காலில் நின்று தபசு காட்சி காணும்
அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். தவக்காலத்தில் கோமதி
அம்மனை சுற்றினால் தங்களது வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாகும். கொடியேற்றம் துவங்கியதிலிருந்து தினமும் ஆயிரக்கனக்கான பக்தர்கள்
அம்மனின் அருள் வேண்டி காலை, மாலை வேளைகளில் கோயில் பிரகாரத்தில்
சுற்றி வருகின்றனர். உள்ளுர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் திரளான
பக்தர்கள் ஆடிச்சுற்று சுற்றி வருகின்றனர்.
Comments