செப்டம்பர் 10, 2019 – இந்திய சரித்திரத்தில் நிகழ்ந்த அதிசயம்
செப்டம்பர்
10, 2019 – இந்திய சரித்திரத்தில் நிகழ்ந்த அதிசயம்
ஆர்ச் பிஷப் அப்போது
உருக்கமாக உரை ஆற்றி உள்ளார்: “நான் இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு
தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்துகிறேன். இங்கிலாந்து ராஜ்யம், அதன் அரசாங்கம்
அல்லது அதன் சரித்திரம் ஆகியவைகளை முன்னிறுத்தி மன்னிப்புக் கேட்கும் தகுதியை நான்
பெற்றிருக்கவில்லை. ஆனால், இந்த கொடுமையான பயங்கரமான செய்கைக்கு நான் என்
தனிப்பட்ட முறையில் மிகவும் வருந்துகிறேன். நான் எனது தேசத்திற்காகப் பேசவில்லை.
ஆனால், நான் சார்ந்த ஆங்கிலிகன் சர்சின் பிஷப் என்ற பதவியிலிருந்து பேசுகிறேன். இங்கு
நடந்தவைகளை நினைத்தால், ஒரு பெரும் வெட்கக் கேடான மன நிலையை என்னிடம் எழுப்புகிறது.
இங்கிலாந்து சரித்திரத்தில் நிகழ்ந்த பல ஆழ்ந்த அவமானங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த கொடூர சம்பம் ஏற்படுத்திய வலி மற்றும் துக்கம் – பல சந்ததியினரிடம் தொடர்ந்து
வந்துள்ளதை – மறுக்கவோ அல்லது அலட்சியப்படுத்தவோ ஒருக்காலும் முயலக் கூடாது.”
எவ்வளவு உருக்கமான உரை? இது பிஷப்பின் உள்ளக் குரல். இது பிஷப்பைப்
பின் பற்றும் கோடானு கோடி கிருஸ்துவர்களின் இதயக் குரல்.
அவர் நாடு, அவர் அரசாங்கம், அவர் போலீஸ் படை – ஆகியவர்கள் 100
நூற்றாண்டுக்கு முன் செய்த கொடுங்கோல் ஆட்சியில் நடந்த ஜாலியன்வாலாபாத் படுகொலையை
நினைவு கூர்ந்து, மன்னிப்பு கேட்பது என்பது அதுவும் பல கிருஸ்துவர்களின் குருவாகத்
திகழும் பிஷப் ஜெஸ்டின் வெல்பிக்குச் ஒரு அசாதாரணச் செயலாகும். இது அவர் ஏதோ
அவசரத்தில் எடுத்த முடிவு இல்லை. மிகவும் தீர்க்கமாகச் சிந்தித்து, சீர்தூக்கி, மனச்சாட்சிப்
படி எடுத்த முடிவு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
பிரிட்டன் அரசிக்கே முடி சூட்டும் அதிகாரம் கொண்டவர் ஆர்ச் பிஷப்.
ஆனால் அந்த அரசியாரே இந்தியாவிற்கு வந்த பொழுது இந்த கோரப் படுகொலைக்கு மன்னிப்பு
தெரிவிக்கவில்லை. யு.கே. அரச பரம்பரை பிரின்ஸ் பிலிப்பும் மன்னிப்பு
தெரிவிக்கவில்லை. ஏன், 2013 ஆண்டு இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டாவிட் கோமெரினும்
மன்னிப்புக் கோரவில்லை.
இதுவரை யு.கே. அரசியோ, யு.கே. அரசோ ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு
மன்னிப்புத் தெரிவிக்காமல் இருக்கும் இந்த நிலையில், ஆர்ச் பிஷப் ஜஸ்டின் வெல்பி
தான் சார்ந்த சர்ச்சின் தலைமைப் பீடாபதி என்ற பதவியை முன்னிறுத்தி மன்னிப்புக்
கேட்டுள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
ஏப்ரல் 13, 1919 அன்று தான் இந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை
நடந்தது. அப்பாவி மக்களை நோக்கி டையர் என்ற கொடுங்கோலன் 1650 குண்டு மழைகளைப்
பொழிய உத்திரவிட்டான். பிறகு ஹண்டர் கமிட்டி நடத்திய விசாரணையின் போது, டையர் ‘நான் ஒரு நேர்மையான
மற்றும் கருணையான செயலைத்தான் செய்தேன்’ என்று சொல்லி தன் கொடுங்கோலத் தன்மையை
வெளிப்படுத்தினான். ‘நீ ஏன் குண்டடி பட்டவர்களுக்கு உதவி அளிக்கவில்லை?’ என்ற
கமிட்டியின் கேள்விக்கு, ‘அது என் வேலை இல்லை’ என்று அகங்காரத் தொனியில்
பதிலளித்தான் டையர்.
துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகும் ஏப்ரல் 15 முதல் மார்ஷியல்
சட்டம் அமல் படுத்தப்பட்டு, பஞ்சாப் மக்கள் கொடுமைப் படுத்தப்பட்டார்கள்.
மிஸ்.ஷெர்வுட் என்ற கிருஸ்துவ மிஷனரிப் பெண் தாக்கப்பட்ட பிறகு, டையர் ஏப்ரல்
19-ல், தரையில் நடக்காமல் தவழ்ந்து தெருவில் செல்லும் உத்திரவைச் செயல்படுத்தி,
பலரையும் தெருக் கம்பங்களில் கட்டி வைத்து சவுக்கடிகள் கொடுக்க உத்திரவிட்டான்.
அந்த அப்பாவி மக்களின் அழுகுரல்கள் தான் ஆர்ச் பிஷப்பை மனம் இறங்க வைத்து,
மன்னிப்பும் கேட்க வைத்துள்ளது.
இந்த பிஷப்பின் செயல் யு.கே. அரசியையும், அரசையும் சிந்திக்க
வைத்து, அவர்களையும் மன்னிப்புக் கேட்க வைக்கும் என்ற நம்பிக்கை பஞ்சாப்
மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. இந்த மன்னிப்பு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டா,
பஞ்சாப் மக்கள் 100 வருடங்களாக அனுபவித்த ஆராத காயத்திற்கு மருந்தாக மாறும் என்ற
நம்பிக்கையும் பஞ்சாப் மக்களுக்கு வலுப்பெறுகிறது.
Comments