மம்தா பானர்ஜியின் ஜனநாயக மரபு மீறிய பேயாட்டம்



மேற்கு வங்காளத்தில் மம்தா முந்தைய மாநில சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல் மந்திரியாக ஆட்சி பீடத்தில் அமர்ந்ததிலிருந்து அங்கு அமைதி இல்லை. அராஜகம் தான் தலைவிரித்தாடியது. ஆனால், அங்குள்ள இடது சாரி மேதாவிகள், எழுத்தாளர்கள், போராளிகள், மோடியைத் தீவிரமாக வெறுக்கும் குழுக்கள், ‘காவியின் ஆட்டத்தைக் கமண்டலும் வீழ்த்தும்’ என்று களம் இறங்கும் அர்பன் நக்ஸல்கள் ஆகிய கும்பல்கள் மம்தா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் அதி பயங்கரமான நிலையில் பாதிக்கப்ப்ட்டாலும் மோடியை முன்னிலைப் படுத்தி அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி மம்தாவின் ஜனநாயகப் படுகொலைகளைப் பற்றி வாய் திறக்காமல் மவுனம் காத்தனர்.

மேலும் சாரதா சிட் பண்டில் பல ஏழைகள் பாதிக்கப்பட்டதையும் கண்டு கொள்ள வில்லை. சென்ற வருடம் நடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் வன்முறையில் திரிணமுல் காங்கிரஸ் பகிரங்கமாக இறங்கி அதில் 25 பேர்களுக்கும் மேல் உயிரிழந்தனர். 573 பூத் களுக்கும் மறு தேர்தல் நடந்த அவலமும் நிறைவேறியது. தேர்தல் பெட்டிகள் களவாடப்பட்டதுடன், வாக்குச் சீட்டுக்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. இதை எல்லாம் போலீஸ் வேடிக்கை பார்க்கும் நிலையை மக்கள் கண்டு கொதித்தார்கள். 

மேலும் எதிர்கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்க முடியாமல் கொலைவெறியுடன் ஈடுபட்ட திரிணமுல் காங்கிரஸ் குண்டர்களை மம்தா போலீஸ் உதவியுடன் ஊக்கி வித்துள்ளார். இதை எல்லாம் பார்த்தும் பல எதிர்க்கட்சிகள் ‘ஓட்டுச் சீட்டு முறை’யை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று போராட்டம், கோர்ட் படிகள் ஏறி தேர்தல் கமிஷனை தூஷிப்பது, மேடைகளில் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி மேடைகளில் தோன்றி காட்சி அளிப்பது என்ற நாடகங்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் மக்கள் விழித்து விட்டார்கள். ஆகையால் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடைந்துள்ளதைத் தான் பல தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.

வங்காளத்தில் நடந்த லோக் சபா தேர்தலில் பல பி.ஜே.பி. தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தாலும், முதல் குற்றப்பத்திரிகை தாக்கலைப் போலீஸ் தவிர்த்த காரணத்தால் கொலைகள் மேலும் நடக்கும் நிலை ஏற்பட்டது.

லோக் சபாவில் பி.ஜே.பி.யை முற்றிலும் தோற்கடிக்க மம்தா பல தில்லு முல்லுகளைச் செய்தார். ஊழல் செய்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஆதரவாக சி.பி.ஐ. விசாரணை செய்ய முடியாமல் பல தடங்கல்களை ஏற்படுத்தி, தர்ணாவும் மம்தா செய்துள்ளார். பி.ஜே.பி. தேர்தல் பிரசாரம் செய்ய முடியாமல் பல முட்டுக் கட்டைகளைப் போட்டார். ஆனால் அத்தனையையும் மீறி மேற்கு வங்காள மக்கள் பி.ஜே.பி.யை 18 லோக் சபா இடங்களில் வெற்றி அடையச் செய்து மம்தாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்துள்ளனர். என்றாலும் மம்தா இதனால் மேலும் கோபம் கொண்டு மோடி – அமித் ஷா அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியபடிதான் காலத்தை ஓட்டினார்.

ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னவர்களைச் சிறையில் அடைக்கவும் மம்தா தயங்கவில்லை. “வங்காள மக்களுக்கு அரசியல் சாயம் பூசும் பி.ஜே.பி.யின் இந்த கோஷங்கள் தேவை இல்லை. இங்கு ஜெய் பெங்கால், ஜெய் ஹிந்த் தான் அனுமதிக்கப்படும். முஸ்லீம்களுக்கு எதிரான ஜெய் ஸ்ரீராம் வங்காள மக்களுக்குத் தேவை இல்லை” என்று முழங்கியதுடன், ‘வங்காள மொழி பேசாதவர்கள் வங்காளத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற அளவில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற சுதந்திர கோஷம் போல் மம்தா முழங்குவது, முஸ்லீம்களின் ஓட்டு வங்கியை மனத்தில் கொண்டு உரக்க கோபமாக கோஷங்களை எழுப்பி, வங்காளத்தை ஒரு மினி-பாகிஸ்தானாக உருவாக்க முயல்கிறாரோ என்று கூட சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.

‘ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை வங்காளத்தில் தடை செய்யும் முகத்தான், கோஷம் போடும் மக்களை போலீஸ் கொண்டு சிறையில் அடைப்பது மிகவும் தண்டிக்கத் தக்கது. இது முலாயம் சிங் 1990 வருடத்தில் உத்திரப்பிரதேச மக்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் எழுப்பியதை ‘மண்டல் கமண்டலைத்தை ஜெயிக்கும்’ என்று சிக்குலர் மேதாவிகளின் கருத்தை ஏற்றுச் செயல்பட்டதை நினைவு படுத்துகிறது. 

அப்போது, ‘ஹலோ’ என்பது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அளவில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் பிரபலமாகியது. இருப்பினும் சிக்குலர் மேதாவிகள் ‘ராம் மேல்குடி ஷத்திரியர். ஆனால் சிவன் ஒரு பழங்குடியைச் சேர்ந்தவர். ஏன், கிருஷ்ண பரமார்த்தாவும் ஒரு மாடு மேய்க்கும் யாதவ குடியினர்’ என்று முலாயம் சிங் கட்சியினரையும், காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளையும் நம்ப வைத்தனர். ஆனால், இதை எல்லாம் மீறி உத்திரபிரதேச மக்கள் பி.ஜே.பி..யை அரியணையில் அமரவைத்தனர். இதே நிலையில் தான் மம்தாவும் இருக்கிறார். 

வருகிற 2021-ல் நடக்க இருக்கும் சட்டசபைத் தேர்தலில் மம்தா தோற்கும் அளவிற்கு அரசியல் நாகரிகமோ, ஜனநாயகத்தை மதித்து நடக்கும் பண்போ இல்லாமல் ஆட்டம் போட்டு விட்டார். பி.ஜே.பி.யை மம்தாவே அடுத்த தேர்தலில் வெற்றி அடையச் செய்யும் காரியங்களை பதவி வெறியின் காரணமாக முழுமையாகச் செய்து முடித்து விட்டார். 

இதுவே மம்தாவின் அரசியலில் பெரும் சருக்கலை அளிக்கும் என்பது திண்ணம்.

இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் சம்பவமாக சமீபத்தில் என்.ஆர்.எஸ். மெடிகல் காலேஜ் & ஹாஸ்பிடலில் 85 வயது முஸ்லீம் முதியவர் சிகிச்சையில் குணமாகாமல் இறந்துள்ளார். ஆனால் இது டாக்டர்கள் சரியாகச் சிகிட்சை அளிக்காததினால் இறந்துள்ளார் என்று இறந்த முதியவரின் உறவினர்களில் சுமார் 200 பேர்கள் அங்குள்ள டாக்டர்கள், நர்சுகள், கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் என்று எல்லோரையும் அடித்துத் தாக்கி உள்ளனர். இதில் இருவர் தலையில் பலத்த அடிபட்டு ஆபத்தான நிலையில் இருந்து, உயிர் பிழைத்துள்ளனர். 

இந்த தாக்குதலை போலீஸ் தடுக்க வில்லை. ஏன், மம்தாவும், அங்கு வந்து ‘டாக்டர்கள் முஸ்லீம்களுக்குத் தகுந்த சிகிட்சை அளிக்க வில்லை’ என்று இதற்கு மதச் சாயம் பூசி விட்டார். மேலும் ‘டாக்டர்கள் பி.ஜே.பி.யின் ஆட்கள். பலர் வெளி ஆட்கள். அவர்களுக்கு வங்காள மொழி தெரியாவிட்டால், அவர்கள் இங்கு வேலை செய்வதற்கே தகுதி அற்றவர்கள்’ என்றபடி பல வசை மொழிகளை மம்தா தமது கோபக் கனலுடன் ஆக்ரோஷமாக மீடியாவில் திட்டித் தீர்த்துவிட்டார். 

இதனால், இது பூதாகாரமாக வெடித்து, வங்காளத்தில் 700 டாக்டர்களுக்கும் மேல் ராஜினாமா செய்து, வேலை நிறுத்தத்த போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். மேலும் இது நாடு தழுவிய டாக்டர்கள் போராட்டமாக உருவெடுத்து இந்தியாவையே மிரள வைத்துள்ளது. மம்தா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும், அவருடன் பேசுவதை மீடியா முன்னிலையில் நடைபெற வேண்டும் என்றும் போராடும் டாக்டர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதில் திரிணமுல் காங்கிரஸ் டாக்டர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது மம்தாவிற்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

மம்தா இப்போது தம் நிலையை உணர்ந்து அனைத்தும் சரி செய்யப்படும் என்று டாக்டர்களுக்கு உறுதி அளித்ததைத் தொடர்ந்து டாக்டர்கள் போராட்டமும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது ஒரு நற் செய்தியாகும்.
முஸ்லீம் ஓட்டுக்களை மட்டும் நம்பி உள்ள மம்தா இந்துக்களை துச்சமாக மதிக்கும் போக்கு பலருக்கும் பிடிக்க வில்லை. ஏன், சில படித்த முஸ்லீம் மக்களும் மம்தாவை ஆதரிக்க விரும்பவில்லை என்பது ஒரு அதிர்ச்சியான செய்தியாகும்.

மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திருபாதி ‘நான் மம்தாவைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றும் அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் இல்லை. என்னை அவர் தொடர்பு கொண்டால், இது பற்றி விவாதிக்கலாம். அவர் வரட்டும்’ என்ற அளவில் மம்தா செயல்படுகிறார் என்பதை நினைக்கும் போது மம்தாவின் மமதையும், ஜனநாயக மரபை மதிக்காமல் – ஏன், மிதிக்கும் – போக்கும் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

மம்தாவின் செயல்கள் மேற்கு வங்க அரசியலில் கருப்புப் பக்கங்களாக சரித்திரம் பதிவு செய்யும். மேற்கு வங்காள ஓட்டர்கள் மம்தாவின் திருமணமுல் காங்கிரஸை வருகிற 2021-ல் நடக்க இருக்கும் சட்ட சபைத் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய சபதம் செய்ய வேண்டும். இது ஜனநாயகக் கடமையாக அவர்கள் கருத வேண்டும். 


வாய்மை மம்தாவிற்கு சவுக்கடி கேடயம் வழங்கி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறது. வாழ்க மேற்கு வங்கம். வாழ்க பாரதம். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017