யக்ஷ பிரஸ்னா - யக்ஷன் கேள்விகள்
யக்ஷப் பிரஸ்னா என்ற யக்ஷனின் கேள்விகளும், தர்ம ராஜா யுதிஸ்டிரரின் பதில்களும் மஹாபாரதம் ஆரண்ய பர்வம் 311 - 12 -ல் வருகிறது.
த்வைத வனத்தில் பாஞ்சாலி மற்றும் தமது சகோதரர்களுடன் தர்மர் வசிக்கும் பொழுது பனிரென்று வருடங்கள் முடிந்தும் அஞ்யாத வாசம் ஒரு வருடம் இருக்கும் ஆரம்ப நிலையில் யக்ஷ பிரஸ்னா நேர்ந்தது.
அந்த வனத்தில் வசிக்கும் ஒரு மான் ஆரணி என்ற மரக் குச்சியையும், மாந்தா என்ற தீ உண்டாக்க கடையும் கீழ்பாக மரப் பாகத்தையும் தன் கொம்புகளில் மாட்டிக் கொண்டு ஓடியது. அவைகள் யாகம் செய்ய அக்னியை உண்டாக்கப் பயன்படுத்தப்படும் கட்டைகளாகும். அது ஒரு பிராமணனின் உடமையாகும். அந்தப் பிராம்மணன் தர்மபுத்திரர் வசிக்கும் குடிலுக்கு வந்து 'யாகத் தீ மூட்டும் மரக் கட்டைகளை ஒரு மான் எடுத்துக் கொண்டு ஓடி விட்டது. அதை மீட்டுத் தர வேண்டும்' என்று விண்ணப்பித்தான்.
அந்த மானை பிடிக்க தர்மர் தமது சகோதரர்களுடன் செல்ல அவர்கள் களைப்பினால் ஒரு ஆல மர நிழலில் சிறிது இளைப்பாறினர்.
அப்போது தாங்கள் படும் கஷ்டங்களை ஒவ்வொருவரும் சொல்லி விசனப்பட்டார்கள்.
முதலில் நகுலன் சொன்னான்: தர்மத்தை நாம் கடைப்பிடித்தாலும், தர்மம் நம்மைக் காக்கவில்லை.
தர்மர்: நாம் செய்த தர்மம் நாம் செய்த அதர்மத்தால் பாதிக்கப்பட்டு நாம் துன்பம் அனுபவிக்கிறோம்.
பீமன்: திரெளபதியை அரச சபையில் மான பங்கம் செய்த துச்சாதனனை அப்போதே கொல்லாத காரணத்தால் நாம் இப்போது கஷ்டப்படுகிறோம்.
அர்ஜுனன்: கர்ணனைப் பற்றி நான் அப்போதே தூற்றிப் பேசி இருக்க வேண்டும்.
சகாதேவன்: சகுனியை நான் கொல்லாமல் இருப்பதால் தான் இந்த கஷ்டங்களை நாம் அனுபவைக்கிறோம்.
இருப்பினும் பீமன், அர்ஜுனன், சகாதேவன் ஆகியவர்களின் கருத்துக்களை தர்மர் அங்கீகரிக்க வில்லை.
அவர்களுக்கு தாகமாக இருந்தது. அந்த ஆலமரத்தில் ஏறி சமீபத்தில் ஏதாவது குளம் இருக்கிறதா என்று நகுலனைப் பார்க்க தர்மர் சொன்னார்.
'மரங்கள் நிறைந்தும், கொக்குகளின் இரைச்சல்கள் இருப்பதால் அருகில் நீர் நிறைந்த ஏரி இருக்கும்' என்று நகுலன் சொல்ல அவனை தங்களுக்கு நீர் கொண்டு வரப் பணிக்க அவனும் சென்றான்.
அங்கு ஒரு ஏரியில் நீர் இருப்பதைப் பார்த்து, அதைக் குடிக்க முயன்ற போது, 'இது என் ஏரி நீர். என் கேள்விகளுக்குப் பதில் சொன்ன பிறகு தான் நீர் நீர் அருந்த வேண்டும்' என்ற எச்சரிக்கையை மதிக்காமல் நீர் அருந்த நகுலன் உயிர் இழந்து, ஏரிக் கரையில் வீழ்ந்தான். இதே போல் ஏரியின் பாதுகாவலனான யக்ஷனின் எச்சரிக்கையையும் மீற மற்ற சகாதேவன், பீமசேனன், அர்ஜுனன் ஆகியவர்களும் ஒருவர் பின் ஒருவராக யக்ஷன் கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பாமல் அவர்களும் ஏரிக் கரையில் இறந்தார்கள்.
இறுதியில் தர்மர் அந்த ஏரிக்கரைக்கு வந்து யக்ஷன் தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டுப் பிறகு நீர் அருந்தவும் என்று சொல்லவும், தர்மரும் அதற்குச் செவி சாய்த்து பதில் சொல்கிறார்.
அது தான் மிகவும் முக்கியமான யக்ஷ பிரஸ்னம் என்ற தத்துவ விசாரமாகும்.
யக்ஷ பிரஸ்னா என்பது 33 விஷயங்களின் பிரிவுகளில் யக்ஷன் தர்மரைக் கேள்வி கேட்பதாகும். அந்த ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒரு விஷயத்தின் தொடர்புடைய பொருள் பற்றி 4 கேள்விகள் 30 பகுதிகள்லும், கடைசியாக உள்ள 29, 30 & 31 பகுதிகளில் ஒரு கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன. ஆகையால் மொத்தம் தர்மரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் 123 ஆகும்.
யக்ஷ பிரஸ்னாவில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் ஒளவையின் ஆத்தி சூடி நீதி நூல் போல் குறைந்த வாசகம் கொண்டவை. (கடைசியாக உள்ள 29, 30 & 31 இருக்கும் ஒற்றைக் கேள்விகள் அவைகளின் பதில்களைத் தவிர்த்து). ஆனால் அதன் அர்த்தம், உட் கருத்து, விளக்கம் என்று அவைகளை அறிய நாம் பலரது ஆழ்ந்த ஆராய்ந்த உரைகளைப் படிக்க வேண்டும். அப்பொழுதான் சொன்ன தர்ம போதனைகள் விளங்கும்.
ஆகையால் அந்த 33 பிரிவுகளின் கேள்வி - பதில்களைப் பதிவு செய்து அதன் பிறகு அவைகளின் சிறப்புரைகள் எழுதப்பட்டுள்ளன.
அந்த யக்ஷன் கொக்கு ரூபத்தில் இருந்து கேள்வி கேட்டாலும், இறுதியில் அது யமதர்ம ராஜா என்பதை அறிகிறோம்.
தன் கேள்விகளுக்கு தர்மர் சரியாகப் பதில் சொன்னதைக் கேட்டு மனம் மகிழ்ந்து 'ஒருவரைத் தான் உயிர்பிக்க வேண்டும் என்றால் யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு தர்மர் 'நகுலன்' என்று சொன்னதைக் கேட்ட யக்ஷன் அதிசயமும், ஆச்சரியமும் அடைந்து சொன்னது: 'தர்மா! உனக்குப் பிரியமானவர்கள் பீமன் - அர்ஜுனன். இவர்களை விடுத்து நகுலனைத் தேர்வு செய்ததன் காரணம் என்ன?'
தர்மர்: அரசரான என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் - குந்தி - மாத்ரி. குந்தியின் மகனாக நான் உயிரோடு இருக்கிறேன். மாத்ரியின் மகன் நகுலனை அதனால் தான் தேர்வு செய்தேன்.
இதைச் செவிமடுத்த யக்ஷன் மனம் மகிழ்ந்து 'பாரத தேசத்தின் காளையே! உன் அனைத்து சகோதரர்களும் உயிர் பெற்று எழுவார்கள்' என்ற சொல்ல அனைவரும் அதன்படி உயிர் பெற்று எழுந்தார்கள்.
யக்ஷன் தர்மருக்கு மூன்று வரங்களை அளித்தார்.
அதன் மூலம் யாகத் தீயை வளர்க்கும் மரக் கட்டைகளை அந்த பிராமணனுக்கு அளிக்கும் முதல் வரமும், பதின்மூன்றாவது வருட அஞ்ஞாத வாசம் வெற்றிகரமாக முடிய இரண்டாவது வரமும் யக்ஷன் வழங்கியது ஆகும்.
மூன்றாவது வரம் தர்மர் தாம் கடைப்பிடிக்கும் தருமம் பழுதுபடாமல் தொடர வேண்டும் என்கிறார். அப்படி வேண்டும் பொழுது தருமர் யக்ஷனிடம் இவ்வாறு பகர்கிறார்: ஓ, யக்ஷனே! கோபத்தை என் மனம் வெற்றி கொண்டு, தானம், தர்மம், உண்மை, தூய எளிமையான வாழ்க்கை ஆகியவைகளைக் கடைப்பிடித்து தர்ம வாழ்வை எப்போதும் எந்த நேரத்திலும் கைவிடாமல் இருக்க வேண்டும்' என்று அதை ஒரு வரமாக அருள வேண்டுகிறார். யக்ஷனும் தர்மருக்கு அந்த மூன்றாவது வரத்தையும் அளிக்கிறார்.
தர்மம் என்பது அஹிம்சாவாகும். வாழ்க்கைத் தத்துவமே மூன்று உண்மைகளைச் சுற்றியே வளைய வருகிறது. அந்த மூன்று உண்மைகள் மூன்று வகைப்படும். ரிதா, சத்யா, தர்மம்.
ரிதா என்றால் மனத்தில் எழும் எண்ணங்களில் உண்மை - சத்யா என்றால் வெளிப்படுத்தும் சொற்களில் உண்மை - தர்மம் என்றால் செய்யும் காரியத்தில் உண்மை என்று தெரிந்து தெளிய வேண்டும் என்பது தான் இந்த யக்ஷ பிரஸ்னாவின் உட் பொருளாகும்.
யக்ஷா ப்ரஸ்னா 127-வது ஸ்லோகத்தில் தர்மம் அழிந்தால் தர்மம் அழிகிறது; தர்மம் காப்பாற்றினால் தர்மம் காக்கப்படுகிறது. ஆகையால் நான் தர்மத்தை ஒரு பொழுதும் கை விட மாட்டேன். தர்மம் எங்களை அழிக்காமல் நாங்கள் காப்பாற்றப்பட வேண்டுகிறேன் - என்ற தருமரின் வாக்கு பொருள் பொதிந்த ஒன்றாகும். அது தான் அவரது வாழ்வின் சூத்திரமாகும்.
கே. பாலசுப்ரமணிய ஐயர் யக்ஷ பிரஸ்னாவின் விளக்க உரைக்கு மிகவும் புகழ் வாழ்ந்த மஹாபாரதத்திற்கு சம்கிருத மொழியிலேயே விளக்க உரை எழுதிய நீலகண்ட சதுர்தரா என்பவரின் கருத்துக்களைப் பயன்படுத்துகிறார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அவரது அந்த சம்ஸ்கிருத மொழி விளக்க உரை - பாரத பாவ தீபா (மஹாபாரதத்தின் உள் ஒளி விளக்கம்) - என்ற தலைப்பால் மஹாபாரத தத்துவ விளக்கங்களை படிப்பவர்கள் அறிய மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது தான் பலரது கருத்து.
நீலகண்டா இந்திய தத்துவத்தில் கரை கண்டவர். மீமாஸ்சா தத்துவத்தில் விவாதம் செய்வதில் நிபுணர். ஆறு இந்திய தத்துவ சாஸ்திரத்திலும் அவர் மேதை என்பதையும் அறிய வேண்டும். அவர் ஆதி சங்கரரின் அத்வைத மார்க்கத்தைச் சேர்ந்தவர்.
இந்தப் பதிவின் முக்கிய அமசம் இதில் வியாசரின் மஹாபாரத சமஸ்கிருத கிரந்தந்தான் அடிப்படையாக வைத்து தமிழில் மொழிபெயர்த்துள்ளது என்பது இதன் சிறப்பாகும்.
யக்ஷப் பிரஸ்னா - யக்ஷனின்
கேள்விகள்
1. முதல் பகுதி - சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்:
கேள்விகள்:
1.
எது சூரியனை உதிக்கச் செய்கிறது?
2.
இதற்கு சூரியனுக்கு உதவும் நண்பன் யார்?
3.
யார் சூரியனின் அஸ்தமனத்திற்குக் காரணம்?
4. எது சூரியனைத் தாங்குகிறது?
பதில்கள்:
1.
சூரியனை உதிக்கச் செய்வது வேதம்.
2.
சூரியனுக்கு துணை நிற்பவர்கள் தேவதைகள்.
3.
சூரிய அஸ்தமனத்திற்கு காரணம் தர்மம்.
4. சூரியனைத் தாங்குவது உண்மை.
விளக்க உரை:
நீலகண்டா என்ற நூலாசிரியர் இந்த முதல் நான்கு கேள்விகளைப் பற்றியும் விளக்கும் பொழுது, இந்த கேள்வி - பதில் ஆத்மாவின் உண்மை சொரூபத்தை விளக்குவதாகத் தான் அமைந்துள்ளது என்று சொல்கிறார்.
உபநிடதங்கள் சொல்வது இது தான்: ஆத்மாவை அறிந்தவன் துக்க சமுத்திரத்தை தாண்டி விடுகிறான். ஆகையால் அத்மாவை அறிந்தவனுக்குக் கிடைக்கும் லாபம் துக்கமின்மை என்று அறிய வேண்டும். இந்த கருத்தை அடிப்படையாக வைத்து முதல் நான்கு கேள்விகளையும் ஆராய வேண்டும் என்பது தான் நீலகாந்தாவின் அணுகுமுறையாகும்.
ஆகையால் அந்த முதல் கேள்வியை நீலகண்டா சூரியனை ஆத்மாவாக உருவகப்படுத்தி, இப்படிப் பார்க்கிறார்:
எது ஆத்மாவை எழச் செய்கிறது?
ஆதித்யா என்றால் சூரியன் தான். ஆனால் அந்த சூரியனை 'மனித உயிர் அல்லது மனித ஆத்மா' என்றும் பொருள் கொள்ளலாம். அந்த ஆத்மா உடலில் உள்ள பல புலன்களின் மூலம் தான் - அவைகளை வெற்றி கொள்வதின் மூலம் தான் - உடலில் உறையும் ஆத்மாவை விழிப்படையச் செய்கிறது.
புலன்களை அடக்க சாம, தான, தண்டம் ஆகிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் இந்த சாம, தான, தண்டம் ஆகியவைகள் தான் தேவர்கள் என்று உருவகம் பெறுகின்றன.
சூரியன் மறைவுக்குப் பிறகு கர்மா, உபாசனா ஆகியவைகள் இரவில் செய்யப்படுவதில்லை. அதனால் தான் நித்திய கர்மம் நிறைவு பெற்றதால் தர்மம் சூரியனை பூமியிலிருந்து மறையச் செய்கிறது என்று வியாக்யானம் செய்கிறார்கள்.
ஹிருதய கமலத்தில் பரப்பிரம்மத்தை - மனத்தின் அழுக்கான அனைத்துக் குணங்களும் அழிந்து முற்றிலும் தூயதாகி - காணும் நிலைதான் தர்ம நிலை என்று தெரிதல் வேண்டும்.
இப்படித் தான் நீலகண்டா தர்மரின் முதல் நான்கு பதில்களை ஆத்ம தத்துவ ரீதியில் அணுகுகிறார்.
ஆனால் இதையே வேறு வகையாகவும் பார்க்கலாம் என்று சொல்கிறார் கே. பாலசுப்ரமணிய ஐயர்.
ஆதித்யா என்ற சூரியன் கிழக்கில் உதிப்பது ரிக் என்ற வேதத்தினால், உச்சிக் காலம் யஜுர் என்ற வேதத்தினால், மேற்கே அஸ்தமனம் சாம வேதத்தினால் என்று யஜிர் வேதம் வர்ணிக்கிறது.
2. இரண்டாம் பகுதி - வேத பண்டிதர்
கேள்விகள்:
1.
எதனால் ஒருவன் வேத பண்டிதனாகிறான்?
2.
எதனால் ஒருவன் புகழ் பெறுகிறான்?
3.
எதனால் ஒருவன் முதல் இடத்தை அடைகிறான்?
4. எதனால் ஒருவன் சிறப்படைகிறான்?
பதில்கள்:
1.
வேத கலாச்சாரம் ஒருவனை வேத பண்டிதானாக்குகிறது.
2.
தபஸ் ஒருவனை புகழ் அடையச் செய்கிறது.
3.
திடமனத்தால் ஒருவன் முதல் இடத்தை அடைகிறான்.
4. மூத்தோருக்குச் செய்யும் சேவையால் ஒருவன் சிறப்படைகிறான்.
விளக்க உரை:
கல்வி - அறிவு என்றால் அது வெறும் விஞ்ஞான அறிவாகும். இது வாழ்க்கைக்கு அவசியமான கலாச்சார அறிவை அளிக்காது. ஒருவன் வேத மந்திரங்களை உச்சரிப்பதால் மட்டும் வேத வித்தாகக் கருத முடியாது. அதற்கு வேத அத்யயனம், வேத பாரம்பரியம் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
தபஸ் என்றால் ஆன்மீகத் தேடல் என்று சொல்லலாம். ஒருவனின் ஞானம் தபஸால் பெறப்படுகிறது என்று அறியலாம். திட மனது தான் ஞானத்தின் திறவு கோல். திட மனது பகவத் கீதையில் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில் திட மனது கொண்டவன் தனது இந்திரியங்களையும், மூச்சுக் காற்றையும் அடக்கி தனது மனதை ஒரு நிலைப்படுத்தி அமைதி காண்பான் என்று விளக்கப்பட்டுள்ளது.
ஒருவன் முதலில் உபநிடத வாக்கியங்களைக் கேட்க வேண்டும். பிறகு அவைகளை ஓத வேண்டும். இந்த வேதாந்தங்களை கேட்டல், ஓதுதல், கடைப்பிடித்தல் ஆகியவைகளால் ஆத்மா அந்த அனுபவத்தால் அனுபூதி அடையும்.
மூத்தோர் என்றால் குரு என்று கொள்ள வேண்டும். குருவுக்கு பணிவிடை செய்வது, குருவின் அனுக்கிரஹத்தைப் பெறுவது ஆகிய இரண்டையும் மனம் ஒன்றிச் செய்வதின் மூலம் ஆன்மீக வாழ்வை அனுபவிக்க முடியும். இதன் மூலம் தெய்வ அனுக்கிரஹம் பெற முடியும்.
பிரம்ம ஞானம் பெற குரு அவசியமாகும்.
சாஸ்திர ஞானம் ஒருவனுக்கு பரிபூர்ணமாக இருந்தாலும், குருவின் மூலம் தான் அவன் பிரம்ம ஞானம் பெற முடியும் என்று ஆதி சங்கரர் தமது பாஷ்யத்தில் விளக்குகிறார்.
மேற் கண்ட நான்கு பதில்கள் மூலம் தர்ம புத்திரர் சொல்வதின் தாத்பரியம் இது தான்: 'ஆன்மீக அறிவுக்கு வேதம் தான் ஆதார நூல். அதன் மூலம் ஆத்மாவை அறிய முடியும். ஆனால் வேதத்தை படிப்பதால் மட்டும் ஆத்ம ஞானம் கிட்டாது. அதற்கு குருவின் உபதேசம் வேண்டும்.'
3. மூன்றாம் பகுதி - பிரம்மணனின் குணாதிசயங்கள்
கேள்விகள்:
1.
பிராமணனின் தெய்வீக குணம் எது?
2.
பிராமணனின் நேர்மையான செயல் எது?
3.
பிராமணனில் சாதாரண மனிதனைப் போல் உள்ள குறை எது?
4. பிராமணனில் கெட்ட மனிதனைப் போல் வெளிப்படும் குணம் எது?
பதில்கள்:
1.
வேத அறிவு தான் பிராமணனின் தெய்வீக குணம்.
2.
தவம் செய்வது தான் பிராமணனின் நேர்மையான செயல்.
3.
இறப்பு தான் சாதாரண மனிதனைப் போல் பிராமணனுக்கும் ஏற்படும்
குறை.
4.
அவதூறு பரப்புவது தான் பிராமணனின் கெட்ட குணம்.
விளக்க உரை:
'வேதம் பயின்ற பிராமணனின் உள்ளத்தில் உறைவது தேவர்களாகும்' என்று ஸ்ருதி சொல்கிறது. இந்த வேதத்தைக் காப்பவர்கள் பிராமண சமூகம். வேதம் பிராமணர்கள் குருகுல வாசத்தில் குருவான ரிஷிகளிடமிருந்து அவர்கள் உச்சரிக்கும் வேத மந்திரங்களைக் காதால் கேட்டு காலம் காலமாக காப்பாற்றி வந்துள்ளனர். இதனால் தான் வேதங்கள் எழுதாக் கிளவி என்று போற்றப்படுகிறது.
வேதங்கள் எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும், இதைப் போல் எந்தவித பாட பேதங்கள் இல்லாமல் காப்பாற்றப்பட்டிருக்காது என்பது தான் உண்மை. இதற்கு வேத மந்திரங்களைச் செபிக்கும் ஸ்வரம், சிக்ஷா, சாண்டாஸ் ஆகியவைகள் தான் காரணம். இந்த வேதங்களைக் காக்கும் உத்தமமான கடமையால் பிராமணர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள் ஆகிறார்கள்.
'வேதம் ஓதும் பிராமணர்கள் என் தெய்வம்' என்பது ஸ்ரீ கிருஷ்ணனின் கீதை வாக்கியம்.
தர்மம் வேதத்தில் அடங்கி உள்ளது. வேதம் மனிதனால் இயற்றப்பட்டதல்ல. வேதம் கடவுளின் உபதேசங்கள். அந்த வேதத்தைக் காக்கும் பிராமணர்கள் கடவுளைப் போல் வணங்கப்படவேண்டியவர்கள் - என்பது தான் கீதாஉபதேசம்.
வேத அறிவுடன் தபசும் சேர்ந்து தான் பிராமணனை ஒரு முழுமையானவனாக உருவாக்குகிறது.
இறப்பை வெற்றி கொள்ளும் நிலையை பிராமணன் அடையவேண்டும் என்பது பிராமணனுக்கு ஒரு முக்கிய கொள்கையாகும்.
மனத்தூய்மை என்பது பிறரை மதித்து நடப்பதாகும். பிறரது நல்ல குணங்களைப் போற்றியும், தீய குணங்களை மறந்தும், எந்தவிதமான அவதூறுகளையும் பிற மனிதர்களைப் பற்றி பேசாமலும் இருப்பது தான் பிராமணகுணமாகும். இந்த எண்ணங்களால் பிராம்மணன் தனது மனத்தை தூயதாக எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்தத் தூய்மை இறப்பு ஏற்படும் போது பிரம்மணன் முக்தி அடைய வழிகோலும்.
4. நான்காம் பகுதி - க்ஷத்திரியரின் குணங்கள்
கேள்விகள்:
1.
க்ஷத்திர வீரர்களின் சிறப்பென்ன?
2.
க்ஷத்திரியர்களின் நல்ல குணம் எது?
3.
க்ஷத்திரியர்களின் மனிதாபிமானம் எது?
4. க்ஷத்திரியர்களின் தவிர்க்கப்பட வேண்டிய கெட்டது குணம் எது?
பதில்கள்:
1.
அம்புகளையும், பல யுத்தம் செய்யும்
ஆயுதங்களையும் பயன்படுத்தும் திறமை க்ஷத்திரியர்களின் சிறப்பு.
2.
யாகம் அல்லது தியாகம் க்ஷத்திர்யர்களின் நல்ல குணம்.
3.
தர்மத்திற்குப் பயப்பட்டு செயல்படுவது
க்ஷத்திரியர்களின் குணம்.
4. துன்பப்படுபவர்களைக் காப்பாற்றாது இருப்பது க்ஷத்திரியர்களின் கெட்ட குணம்.
விளக்க உரை:
இந்தக் கேள்விகள் பிராமணர்களுக்குக் கேட்கப்பட்ட நான்கு கேள்விகளைப் போன்றது தான்.
ஒரு சிறந்த வீரனுக்கு உள்ள அனைத்து குணங்களும் பெற்று அந்த வீர சக்தி அவன் உடலில் ஒரு ஒளி வட்டமாகத் திகழ வேண்டும். அஸ்வமேத யாகம், ராஜ சூய யாகம் ஆகியவைகள் செய்வது க்ஷத்திரிய தர்மம்.
பயம் தான் க்ஷத்திரியனுக்கு சத்துரு. க்ஷத்திரியன் என்பவன் ஆளும் வம்சமான அரசனாவான். ஆகையால் ராஜ்ய பரிபாலனம் செய்ய வீரம் வேண்டும். ஆயுதப் பயிற்சி வேண்டும். எதிரிகளைக் கொல்லும் மனத் திடம் வேண்டும். பயம் என்பதை ஒரு போதும் மனத்தில் இடம் கொடுக்கக் கூடாது.
பயம் இருந்தால் மக்களைக் காப்பது இயலாமல் போய்விடும். துன்பப்படும் மக்களைக் காப்பது அரசனின் கடமை.
இதை விளக்கும் விதமாக ஒரு கதை உண்டு. இது மார்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
மஹாராஜா விபாஸ்சித் நல் ஆட்சி வழங்கினான். அவன் இறக்கும் பொழுது அவனுடைய நல்ல குணத்திற்கு சொர்க்கம் அளிக்க தீர்ப்பானது. ஆனால் அந்த அரசன் ஒரு மிகச் சிறிய தப்பு செய்ததால் அதை நிவர்த்தி செய்ய அந்த அரசனின் ஆத்மா முனே முக்கால் நாழி நேரம் நரகத்தில் இருக்க வேண்டிய தண்டனை பெற்று நரகத்தை அடைந்தது. அந்த அரசனின் ஆவி அந்த நரகத்தை அடைந்தவுடன் அரசனின் ஆவியிலிருந்து நறுமணம் வீச, அந்த நறுமணம் அந்த நரகத்தில் தண்டனையின் வேதனையில் துயர் பட்ட மற்ற ஆவிகளின் வலிகளுக்கு நிவாரணமாக அந்த நரகமெங்கும் வீசியது.
இந்த நிகழ்வுக்கு பொருத்தமான வேதத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற செய்யுளை நினைவு கூறலாம்.
'பல மலர்கள் கொண்ட ஒரு மரத்திலிருந்து வீசும் நறுமணம் வெகு தூரத்தில் இருக்கும் ஒருவனுக்கு சுகந்தத்தை அள்ளித் தெளிக்கும். அதே போல் தான் ஒருவனின் புண்ணிய கர்மாவும் மற்றவர்களுக்கு - அவர்கள் வெகு தூரத்தில் இருந்தாலும் நன்மை தரும்' என்பது தான் வேதம்.
அரசனின் உயிருக்குத் துணையாக வந்த தூதுவன் அரசனை அந்த நேரம் முடிந்தவுடன், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றான். அப்போது நரகத்திலுள்ள மற்ற உயிர்கள் அந்த அரசனின் உயிரிலிருந்து உற்பத்தியாகிற அற்புத நறுமண நிவாரண மருந்தினால் வலி நீங்கி இன்பம் அடைந்த காரணத்தால், அந்த அரச உயிரை தங்களுடன் நரகத்திலேயே விட்டு விடும் படி வேண்டின.
அரச ஆவியும் 'சுவர்க்கம் எனக்கு வேண்டாம். இந்த நரக வாழ்வே எனக்குப் போதும். இவர்களின் வலிகளை போக்கும் புண்ணியம் கிடைப்பதே எனக்குச் சொர்க்கம்' என்று வேண்ட அரச ஆவியும் நரகத்திலேயே விடப்பட்டது.
இறந்தும் அரச ஆவி தன் சுகத்தைப் பெரிதாக எண்ணாமல், மற்றவர்களின் துயர் நீக்க தன் சுகத்தையும் தியாகம் செய்யத் துணிந்ததை நாம் பாராட்ட வேண்டும். அது தான் க்ஷத்திரிய குணமாகும்.
5. ஐந்தாம் பகுதி - யாகம்
கேள்விகள்:
1.
சாம வேதத்தில் எது யாகத்திற்கு உபயோகமானது?
2.
யஜுர் வேதத்தில் எது யாகத்திற்கு உபயோகமானது?
3.
இந்த இரண்டு வேதங்களில் எது யாகத்திற்கு தேர்வு
செய்யப்படுகிறது?
4. எந்த வேதம் இல்லாமல் யாகம் செய்ய முடியாது?
பதில்கள்:
1.
பிராணம் என்ற மூச்சுக் காற்றுச் சக்தி தான் சாம
வேதத்தில் யாகத்திற்குப் பயன்படுவதாகும்.
2.
யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட மன நிலைதான் யாகத்திற்கு
மிகவும் பயன்படுவதாகும்.
3.
ரிக் வேதம் தான் யாகத்திற்கு தேர்வாகிறது.
4. ரிக் வேதம் இல்லாமல் யாகம் இல்லை.
விளக்க உரை:
இந்த கேள்வி - பதில்கள் யாகம் பற்றியவைகளாகும். நான்கு வேதங்கள் தான் யாகத்தை நடத்தும் வழிமுறைகளை ஆதியோடு அந்தம் வரை விளக்கி உள்ளது.
யாகம் செய்ய மூன்று புரோகிதர்கள் வேண்டும் என்று வேதம் விதிக்கிறது. ஹோட்டா, ஆத்வர்யு, உட்கதா ஆகியவர்கள் தான் அந்த மூன்று புரோகிதர்கள்.
முதல் புரோகிதர் ஹோட்டா ரிக் வேத மந்திரங்களை உச்சரித்து ஒவ்வொரு தேவதைகளையும் யாகத்திற்கு வந்து அவரவர்களின் அவிஷைப் பெற்றுக் கொள்ள வேண்டப்படுவார்கள்.
ஆத்வர்யு என்ற இரண்டாவது புரோகிதர் ஹோமம் என்ற அக்னியை எஜுர் வேத மந்திர உச்சாடனம் செய்து சுடர் விட்டு எரியச் செய்வார்.
மூன்றாவது புரோகிதர் உட்கிதா சாம வேத மந்திரங்களை ஜபித்து கடவுளைத் துதிப்பார்.
ஆகையால் இந்த மூன்று புரோகிதர்களும் யாகத்திற்கு முக்கியமானவர்கள்.
லோகம் முழுவதும் செல்வச் செழிப்போடு இருக்க வேண்டுவது தான் யாகம் செய்வதின் நோக்கமாகும். இப்படி யாகம் செய்வதால் மழை குறித்த நேரத்தில் பெய்து, வேளாண்மை நன்கு நடந்து, பயிர்கள் செழித்து வளர்ந்து, மகசூலும் அதிக அளவில் கிட்டி நாடு வளம்பெறும்.
யாகம் செய்வது மட்டும் போதாது. ஒவ்வொருவரும் யோகாசனம், தியானம் ஆகிய உபாசன நித்திய கர்மாவைச் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் சாம, யஜுர், ரிக் ஆகிய வேதங்களில் விதிக்கப்பட்டபடி பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் தனக்கு விதிக்கப்ப்ட்டவைகளைக் கர்மாவாகச் செய்ய வேண்டும் என்பது உபநிடதங்களின் உத்திரவாகும்.
தியான முறைகளை பிரஹதாரண்ய உபநிடதம் விளக்குகிறது. ரிக் வேதம் வாக்காகவும், யஜுர் வேதம் மனதாகவும், சாம வேதம் பிராணக் காற்றாகவும் நினைத்து தியானம் செய்ய வேண்டும். மேலும் சாம வேத பிராணக் காற்றுத் தான் ரிக் வேத வாக்கையும், யஜுர் வேத மனதையும் இணைக்கும் கருவியாகும்.
தியான முறையில் மேலும் சில விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். சாம வேத மந்திரங்களை உச்சரிப்பதில் ஸ்வரம் முக்கிய அம்சம். ஸ்வரத்திற்கு மூச்சுக் காற்று மூலாதாரம். மூச்சுக் காற்றுத்தான் பிராணன்.
ரிக் வேத மந்திரங்களை யாகத்தில் ஏன் மிகவும் முக்கியமாகக் கருதுகிறார்கள் என்ற கேள்வி எழும். ரிக் வேத மந்திரங்கள் மூலம் தான் பல தேவதைகளான இந்திரன், வருணன், அக்னி ஆகியவர்களை வரவழைத்து அவரகளுக்கு யாகத் தீயின் மூலமாக உணவு அளிக்கப்படுகிறது.
யாகம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று வெளிப்படையாக தீ வளர்த்துச் செய்யும் சடங்கு. மற்றொன்று மானசீகமான யாகம். வெளிப்படையானதை கர்ம மார்க்க யாகம் என்றும், மானசீகமான யாகத்தை ஞான மார்க்க யாகம் என்றும் சொல்வார்கள். இரண்டின் மூலம் பிரம்மத்தை அறிந்து, முக்தியான விடுதலை அடையலாம்.
6. ஆறாவது பகுதி - பூமியில் உள்ள நான்கு சிறப்பானவைகள்
கேள்விகள்:
1.
பூமிக்கு எது சிறந்தது?
2.
பூமியில் விதைக்கப்படுவதில் எது சிறந்தது?
3.
பூமியில் நான்கு கால்கள் கொண்ட பிராணிகளில் எது சிறந்தது?
4.
பூமியில் பிறந்ததில் எது சிறந்தது?
பதில்கள்:
1.
பூமியில் பெய்யும் மழை சிறந்தது.
2.
பூமியில் விதைக்கப்படும் விதை சிறந்தது.
3.
பூமியில் பிறந்த பசு சிறந்தது .
4. பூமியில் தந்தைக்குப் பிறந்த மகன் சிறந்தது.
விளக்க உரை:
பூமி செழிக்க வேண்டு மென்றால் மழை பெய்து, விதைகள் விதைத்து தானியங்களை அபரிமிதமாக அறுவடை செய்து பசி நீங்கி, பசுக்களைத் தெய்வமாக வணங்கி வாழும் வாழ்க்கைதான் சிறப்பானதாகும்.
இந்தச் செல்வங்களுக்கெல்லாம் தலை சிறந்த செல்வம் மக்கள் செல்வம் என்பதையும் தர்மர் இதில் தெரிவிக்கிறார்.
7. ஏழாவது பகுதி - உயிரோடு இருந்தும் இறந்தவனாகும் ஜீவன்
கேள்விகள்:
1.
ஐம்புலன்களையும் பயன்படுத்தி இன்பசுகம் காண்பவன்
2.
ஆறறிவு படைத்தவன்
3.
உலகத்தோரால் போற்றப்படுபவன்
4.
அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுபவன் -
ஆகிய அனைத்து சிறப்புகளையும் பெற்றவன்
மூச்சை விட்டுக் கொண்டு உயிரோடு இருப்பினும் செத்தவனுக்குச் சமம் என்ற நிலையில் உள்ள அவன் யார்?
பதில்கள்:
கடவுள்கள், விருந்தாளிகள், வேலையாட்கள், மூதாதையர்கள், தன்னை அண்டி உள்ளோர்கள், தனக்கு ஆகிய ஐவர்களுக்கும் எந்த உணவுகளையும் அளிக்காதவன் எவனோ அவன் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தாலும் இறந்தவனுக்குச் சமம்.
விளக்க உரை:
இந்தக் கேள்வியும் - பதிலும் பஞ்ச மஹா யக்னம் என்ற ஐந்து கிரஹஸ்தனின் தர்மமாக ஹிந்து மதத்தில் விதிக்கப்பட்டது இங்கு வலியுறுத்தப்படுகிறது.
இது மனுஸ்ருதியின் அத்தியாயம் 3 - 72-வது ஸ்லோகத்தை நினைவு படுத்துகிறது.
இந்த ஐந்து கடமைகளும் கிரஹஸ்தனனின் தலையாய - தவறாது கடைப்பிடிக்க வேண்டியவைகளாகும். இது தான் சனாதன தர்மம்.
இந்த தர்மம் மூன்று வகையானவைகள்:
1.
தேவ மற்றும் பித்ரு (மூதாதையர்)
யக்னம் (தர்மங்கள்) - இவைகள்
மேலுலகம் பற்றியது.
2.
அதிதி யக்னம், பூத யக்னம்
- இந்த தர்மங்கள் பூமிலோகம் பற்றியது.
3. ஆத்ம யக்னம் - இது தனிப்பட்ட மனித தர்மம் பற்றியது.
இந்த ஐந்து கடமைகளும் பிராமணர்களுக்கு மட்டும் என்பது ஒரு தவறான கொள்கையாகும். இந்த ஐந்து தர்மங்களும் அனைத்து ஹிந்துமதத்தினருக்கும் பொதுவாகும். ஹிந்து மதம் இந்த ஐந்து கடமைகளையும் ஒவ்வொரு ஹிந்துவும் தினமும் தவறாது கடைக்கப்பிடிக்க வேண்டும் என்று சொல்கிறது. இதில் சாதி வித்தியாசம் இல்லை என்பதையும் ஒவ்வொரு ஹிந்துவும் அறிய வேண்டும்.
ஹிந்து மதத்தின் அடிப்படைக் கடமையாக இந்த ஐந்தையும் அனைவருக்கும் விதித்திருக்கிறது என்பதை அனைவரும் அறிந்து அவைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த ஐந்தை திருவள்ளுவர் தமது குறள் 43-ல் (அதிகாரம் 5 - இல்வாழ்க்கை) இல்லறத்தானின் தலையாய கடமை என்று சொல்கிறார்:
குறள்:
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தா றோம்பல் தலை
விளக்க உரை:
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
8. எட்டாவது பகுதி - உலகத்தில் உன்னதமானவைகள்
கேள்விகள்:
1.
பூமியை விட கனமானது எது?
2.
ஆகாயத்தை விட உயரமானது எது?
3.
காற்றை விட வேகமாகனது எது?
4. புல்லை விட அதிகமானது எது?
பதில்கள்:
1.
தாய் பூமியை விட கனமானது.
2.
தகப்பனார் ஆகாயத்தை விட உயரமானது.
3.
உள்ளம் காற்றைவிட வேகமானது.
4. எண்ணங்கள் புல்லை விட அதிகமானது.
விளக்க உரை:
பூமியை பூமித்தாய் என்று தான் வணங்குவார்கள். அந்த பூமி தான் உயிர் வாழ மிகவும் அவசியமான தானியங்களை அபரிமிதமாக அள்ளி வழங்குகிறது. அப்படி வழங்கிய தானியங்களை ஒவ்வொரு தாயும் தன் குடும்பத்தினர்களுக்கு சோறு பொங்கி காக்கிறாள். ஆகையால் பெற்ற தாய் பூமியைக் காட்டிலும் சிறப்பானவர்.
ஆகாயத்திலிருந்து பெய்யும் மழையால் ஆகாயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. தந்தையும் தனது மகனின் வாழ்க்கை உயர்வுக்கு உதவியாக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார். ஆகாயம் - பூமி ஆகிய இரண்டையும் தாய்-தந்தையாக உருவகித்து வேதம் அவர்களைப் போற்றுகிறது. தாய் - தந்தையர்களை போற்றிக் காப்பதை மகனின் முக்கிய கடமையாக ஹிந்து மதம் விதிக்கிறது.
இதை ராமாயண ராமன் இந்த மாத்ரு-பித்ரு பக்தியை மிகவும் உருக்கமாக தன் வாழ்க்கையில் கடைப்பிடித்துள்ளார்.
ராமன் சொல்கிறார்: 'என் தந்தை நெருப்பில் குதி என்று சொன்னால், நான் எந்த விதமான கேள்வியும் கேட்காமல் உடனே நெருப்பில் குதித்து விடுவேன். இதனால் நான் எந்தவிதமான துக்கமும் படமாட்டேன்.'
இப்படிப் பட்ட ராமன் தான் ராமர் வனவாசம் சென்று, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற வாசகத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக நிகழ்ந்துள்ளார்.
அடுத்து மனம் பற்றிய கேள்வி பதில். மனத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று. காற்றைக் கூடக் கட்டுப்படுத்தி விடலாம், ஆனால் மனத்தைக் கட்டுப் படுத்துவது என்பது மிகவும் கஷ்டமான செயலாகும்.
இதற்குக் காரணம் மனத்தில் எழும் எண்ணற்ற எண்ணங்களாகும். அதிலும் தீய எண்ணங்கள் மனத்தில் புகுந்து கொடூரமான பூதமாகி ஐம்புலன்களையும் ஆட்டிப் படைத்து, பல தீய செயல்களைச் செய்து வாழ்வையே ஒரு நரக வாழ்வாக மாற்றி பூலோக வாழ்க்கையும், பரலோக வாழ்க்கையையும் பாழாக்கி உழலும் ஜீவனாகிறது.
இதற்கு விமோசனம் இரண்டு: 1. மனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். 2. மனத்தின் எண்ணங்களின் எண்ணிக்கைகளைக் குறைக்க வேண்டும்.
வேகம் குறைந்தால் மனம் வேண்டாத தவிற்க வேண்டிய காட்சிகள் குறையும். அதே சமயத்தில் மனத்தின் எண்ணங்களின் எண்ணிக்கை குறைந்தால் மனம் அமைதியாகி அதன் உலகம் சுற்றும் நிலை கட்டுப்பட்டு, வாழ்வையே சிறப்பிக்கும்.
இந்த மன நிலை அடைய உதவும் சாதனம் யோகா. யோகா தான் மனத்தை தூயதாக்கும் கருவி. தூய மனது உண்மையை உணர்ந்து அந்த மனத்தினனை உயர்த்தி உயர்ந்தோனாக உருவாக்கும்.
9. ஒன்பாதாவது பகுதி - பிறவியின் ரகஸ்யம்
கேள்விகள்:
1.
தூங்கும் பொழுது எது கண்களை மூடுவதில்லை?
2.
பூமியில் பிறந்த பிறகு எது நகருவதில்லை?
3.
ஹிருதயம் இல்லாதது எது?
4. எது சக்தியினால் தானாகவே பெருகுகிறது?
பதில்கள்:
1.
மீன் துங்கும் பொழுது கண்களை மூடுவதில்லை.
2.
முட்டை பூமியில் பிறந்த பிறகு நகருவதில்லை.
3.
கல் ஹிருதயம் இல்லாதது.
4. நதி தனது நீரின் சக்தியால் பெருகிறது.
விளக்க உரை:
மீனை மனிதனின் ஜீவனுடன் ஒப்பிடுவது வழக்கம். மீன் எவ்வாறு நதியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்திச் செல்கிறதோ, அதே போல் ஜீவனும் கனவு உலகத்திலிருந்து நிலையான அமைதியான இடத்திற்கு நீந்தி நிம்மதியடைகிறது.
விழிப்பு நிலை, கனவு நிலை, கனவு இல்லா அமைதி நிலை ஆகிய நிலைகளை ஜீவன் கடந்து தான் உயர் நிலை அடைய வேண்டும். முக்தி நிலைக்கு அது தான் வழிகோலும்.
இதைத் தான் பத்ரகிரியார் தமது பாட்டில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
ஆங்காரம் உள்ளடக்கி
ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது என்பதில் உள்ள சுகம் என்பது முக்தியாகும். அதற்கு பத்ரகிரியார் சொல்லும் வழி ஆங்காரம் அடக்கி, ஐம்புலன்களையும் சுட்டு அறுத்து முக்தி நிலை அடைய வேண்டும்.
கருணை இல்லா ஹிருதயம் கல் போன்றது என்பர். கஷ்டப்படும் ஒருவருக்கு உதவ வேண்டும் என்றால் கருணை உள்ளம் வேண்டும். கல் நெஞ்சக்காரர்கள் இவ்வுலகில் இருப்பதை விட இறப்பதே மேல் என்பது தான் தர்ம சாஸ்திரம் சொல்லும் நியதியாகும்.
நதி நீர் ஓடும் தன்மை கொண்டது. ஓடும் சக்திதான் நதியின் குணம். மனமும் ஒரே எண்ணத்தில் ஆழ்ந்து அமிழாமல் இருக்கும் அளவில் அந்த எண்ணத்தை - அவை தர்மமான எண்ணமாக இல்லாவிடில் - ஓட விட்டு மன அமைதி பெற முயலவேண்டும். அப்படி நிகழாவிடில் அந்த கெட்ட எண்ணம் தவறான பாதைக்கு வித்திட்டு தவறான செய்கைக்கு வழிகோலும். புதிய தர்ம எண்ணங்கள் நதியில் ஓட்டம் போல் மனதில் நிரம்பி, பழைய தீய எண்ணங்களை ஓட விரட்டி வாழ்வை ஓளி மயமாக்க வேண்டும்.
10. பத்தாவது பகுதி - நண்பன் யார்?
கேள்விகள்:
1.
வியாபார யாத்திரை செல்வதற்கு கூட வரும் நண்பன் யார்?
2.
வீட்டில் இருக்கும் பொழுது கூட இருக்கும் நண்பன் யார்?
3.
வியாதியால் அவதிப்படும் நோயாளிக்கு நண்பன் யார்?
4. இறக்கும் தருணத்தில் உதவும் நண்பன் யார்?
பதில்கள்:
1.
செல்லும் இடத்தில் வசிக்கும் வியாபாரி தான் நண்பன்.
2.
வீட்டில் இருக்கும் பொழுது மனைவி தான் நண்பன்.
3.
வைத்தியன் தான் நோயாளிக்கு நண்பன்.
4. தானம் தான் இறக்கும் மனிதனுக்கு நண்பன்.
விளக்க உரை:
வியாபார யாத்திரை செய்பவர்கள் ஒரு கூட்டமாக ஒன்றாகச் செல்வார்கள். ஆகையால் ஒருவருக்கொருவர் உதவுவார்கள். மேலும் சேரும் இடம் வந்த உடன் அங்குள்ள அவரது வியாபார நண்பரின் துணையும், உதவியும் கிடைக்கும்.
அடுத்தது மணமகன் - மணமகள் தாம்பத்திய வாழ்க்கை பற்றியது. கல்யாணத்தில் சப்தபதி சடங்கு ஒரு முக்கியமான ஒன்றாகும். அதில் மணமகன் தன் மணமகளின் காலைப் பிடித்து ஏழு அடிகள் எடுத்து வைக்கும் பொழுது சொல்லும் மந்திரம் மிகவும் அர்த்த புஷ்டி உள்ளது:
'இந்த ஏழு அடிகளை எடுத்து வைப்பதன் மூலம் நீ என் வாழ்வின் நீண்ட நண்பனாகிறாய். நான் என்றும் உன் நட்பினைப் மதித்து நடப்பேன். நீயும் என் நட்பினை எப்போதும் ஏற்பாயாக. நாம் இருவரும் ஒன்றாக இணந்துள்ளோம். நாம் இருவரும் ஒரே எண்ணங்கள் கொண்டு வாழ்வோமாக. நாம் இருவரும் அன்புடன் வாழ்வோமாக. நாம் இருவரும் முக மலர்ச்சியுடன் ஆனந்தமாக இருப்போமாக. இருவரும் ஒன்றாக உணவு உண்டு, பலம் பொருந்திய தம்பதிகளாக வாழ்வோமாக. இருவரும் மனம் ஒன்று பட்டு, சடங்குகளைச் செய்வோமாக.'
இன்னொரு மந்திரத்தில் மணமகன் தன் மணமகளிடம் வேண்டுவதாக அமைந்துள்ளது.
அதில் மணமகன் வேண்டுவது: 'என்னால் போற்றும் படி நடந்து கொள்வாயாக. 10 குழந்தைகளைப் பெற்றெடுப்பாயாக. நீ என் வீட்டின் ராணியாக இருப்பாய். மாமனார், மாமியார், நாத்தனார், மைத்துனர் ஆகியவர்கள் பாராட்டும் ராணியாக வலம் வருவாய். வீட்டில் உள்ள அனைத்துப் பேர்களிலும் நீ தான் ஒளி விளக்காகச் சுடர் விடுவாய்.'
வியாதியால் அவதிப்படும் மனிதனின் வலிகளுக்கு மருந்து கொடுத்து உதவுவதால் வைத்தியன் வியாதி மனிதனின் நண்பனாகிறான். வைத்தியனின் மருந்து மனிதனின் வியாதியைக் குணப்படுத்தும். ஆகையால் தான் வைத்தியனை வியாதிக்கார மனிதனின் நண்பன் என்று தருமர் சொல்கிறார்.
இறக்கும் மனிதனுக்கு உற்ற நண்பன் தானம் என்பது தர்ம சாஸ்திரம். இருக்கும் பொழுதும், இறக்கும் பொழுதும் தானம் செய்ய ஹிந்து மதம் வலியுறுத்துகிறது.
கருட புராணம் இப்படிச் செய்யும் தானங்கள் தான் இறந்த ஜீவன்களின் மேலுலகப் பயணத்தில் ஏற்படும் பல தடைகளை தகர்த்து சொர்க்க வாசல் கதவைத் திறக்க வழி வகுக்கிறது என்கிறது.
11. பதினொன்றாவது பகுதி - அதிதி, தர்மம், அமிர்தம், பிரபஞ்சம்.
கேள்விகள்:
1.
அனைத்து ஜீவராசிகளுக்கும் விருந்தாளி யார்?
2.
எப்போதும் நிலைத்து அழியாது இருக்கும் தர்மம் எது?
3.
ஓ, அரசர்களில் மேலானவரே! அமிர்தம் எது?
4. பிரபஞ்சம் எங்கும் நிறைந்துள்ளது எது?
பதில்கள்:
1.
அக்னி அனைத்து ஜீவராசிகளுக்கும் விருந்தாளி.
2.
சோமா எப்போதும் நிலைத்து அழியாது இருக்கும் தர்மம்.
3.
பசுவின் பால் அமிர்தமாகும்.
4. வாயு பிரபஞ்சம் எங்கும் நிறைந்துள்ளது.
விளக்க உரை:
அக்னி தேவதை தான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அதிதியாகும். அக்னியில் ஆகுதியாகப் போடப்படும் பசும் பால், பசும் வெண்ணைய், பசும் நெய் ஆகியவைகள் சூரியனை அடைந்து, மேகங்கள் உருவாக உதவி, மழை பொழிய உதவுகின்றன. மழை பெய்வதால் தான் பயிர்கள் வளர்ந்து, தானியங்கள் அறுவடையாகி, உணவு கிடைக்கிறது.
சோமா என்றால் சந்திரனாகும். அது பசும் பாலாக உருவகம் கொண்டுள்ளது. மேலும் சோமா தான் அமிர்தம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
பிரபஞ்சம் எங்கும் நிறைந்து, வாயு பரப்பிரம்ம ரூபமாகவும் கருதப்படுகிறது.
சோம பானம் பற்றிய குறிப்பு:
இரண்டாவது கேள்வி - பதிலில் குறிப்பிடப்பட்ட சோமம் பற்றிய குறிப்பு தான் கீழே பதிவிடப்படுகிறது.
சோமம் என்பது சோமக் கடவுளையும், சந்திரனையும், சோமச் செடியையும், சோமச் செடியின் கிளைத் தண்டுகளிலிருந்து வரும் சோம சாற்றையும் குறிப்பிடும்.
சோமா பானம் அல்லது சோம ரஸம் என்பது ஒரு தெய்வீக சக்திவாய்ந்த உடலுக்கும், உள்ளத்திற்கும் சக்தியையும், புத்துணர்ச்சியையும் கொடுக்கும் ஒரு அமிர்தமான பானமாகும். இதை ஒரு மயக்கம் அளிக்கும் லாகிரி பானமாக மேலாட்டவர் சொன்னது மிகவும் தவறானதாகும்.
சோமா என்பது ஹிந்து மதத்தின் நவக்கிரஹங்களில் ஒரு கிரஹமான சந்திரனாகும். இந்த ஹோமா என்ற சந்திரன். இருள், தாவரங்கள் ஆகியவைகளின் கடவுள் என்று வணங்கப்படுகிறது.
பகவத் கீதை அத்தியாயம் 9, சுலோகம் 20 - ல் சோப பானத்தைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. அதில் கிருஷ்ணன் சொல்கிறார்:'பலன் கருதி யாகம் செய்பவர்கள் சோம ரசத்தைப் பருகி முக்தி அடைகிறார்கள். அந்த சோம ரசம் யாகத்திலிருந்து உருவாக்கப்பட்ட பானமாகும்.'
சோமா பற்றிய விரிவான விளக்கங்கள் வேதத்தில் அதிலும் குறிப்பாக ரிக் வேதத்தில் உள்ளது. சோமக் கடவுள் சந்திரக் கடவுள் என்று தெரிவிக்கிறது. இதையே பல இடங்களில் அதர்வன வேதம், சாண்டோக்கிய உபநிடதம், ஆத்ரேய உபநிடதம் ஆகியவைகள் திரும்பத் திரும்ப வேத மந்திரங்களாக ஒலிக்கின்றன.
'சோமாவின் ராஜா சந்திரன். கடவுள்களின் உணவு சோம பானம். கடவுள்களால் அருந்தப்படுவது சோம பானம்' - என்று வேத - உபநிடத மந்திரங்கள் இருக்கின்றன.
சோமா பற்றி சொல்லப்படும் சொல்லாடல்களை இங்கு தெரிவோம்:
v
சோமன் யுத்தத்தில் வேற்றி அளிக்கும் சக்தித் தெய்வம்.
v
சோமன் இந்திரன், விஷ்ணு,
அக்னி, சூரியன், சொர்க்கம்
போன்றவற்றின் தந்தை ஆவார்.
சோமன் அனைத்து முக்கியமான வேத தெய்வங்களுக்கும் தந்தை ஆவார்.
v
சோமன் காளை போன்று பயமற்ற உருமும் தன்மையையும் உடையது.
மேலும் மான் போன்று வேகமாகச் செல்லும் சக்தி பெற்றது சோமன்.
v
சோமன் ஞானஸ்ரூபி.
v சோமன் யாகத்தின் உயிர் நாடி.
சோமா என்ற செடி பல கிளைகள் கொண்டு இமயமலைக் காடுகளில் பாறைகளுக்கு இடையில் தானாகவே வளரும் ஒர் தாவரமாகும். அந்த தாவரம் சொர்க்கத்திலிருந்து கருடனால் பூமிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தெய்வீகச் செடி என்று வர்ணிக்கப்படுகிறது.
இதன் கிளைத் தண்டுகள் ஒவ்வொன்றும் 15 இலைகளைக் கொண்டு வளரும். இதில் என்ன ஆச்சரியம் என்றால் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு தண்டிலும் ஒவ்வொரு இலையாக 15 நாட்கள் வளரும். சநதிர வளர்பிறையான சுக்ல பக்ஷத்தின் 15 நாட்களில் இது 15 இலைகளாக பவுர்ணமி சந்திர நாளில் வளர்ச்சி முற்றுப் பெரும். பிறகு அடுத்த தேய் பிறையில் வளர்ந்த 15 இலைகளும் ஒரு நாளைக்கு ஒரு இலையாக உதிர்ந்து அமாவாசை அன்று தண்டின் அனைத்து இலைகளும் உதிர்ந்து மொட்டையாகிவிடும். அந்த அம்மாவாசையில் அந்த சோமா செடியின் தண்டுகளைச் சேகரிப்பார்கள். சோமா செடியின் இலைகளையோ அல்லது அதன் பூ - பழங்களையோ சோம சாறு பிழிய உபயோகிக்க மாட்டார்கள்.
அந்த இலைகளற்ற இருக்கும் சாறு தான் மிகவும் முக்கியமான பானமாகும்.
சோம சாற்றின் துளி தான் நீரில் கருவாக வளர்க்கிறது. நீரின் ஏழு கன்னிகைகளின் கருவில் தான் சோமா வளர்சியடைகிறது. ஆகையால் நீர் தான் சோமாவின் தாயாக கருதப்படுகிறது.
சோமா செடியின் இலைகள் - பழங்கள் இல்லா தண்டுகளை கல்லால் நசுக்கி சாறு எடுப்பார்கள். அந்தச் சாற்றை மரப் பாத்திரங்களில் சேகரிப்பார்கள். அந்த சாற்றை வெள்ளாட்டின் கம்பளி ரோமங்களால் செயப்பட்ட சல்லடையால் சக்கைகள் போக வடித்தெடுப்பார்கள். இந்த வடித்த தூய சோம ரசத்தை தூய பசும் பால், பார்லி ஆகியவைகளுடன் சேர்ப்பார்கள். இந்த ரசம் பழுப்பு நிறம், சிகப்பு நிறம், பச்சை நிறம், தங்கத்தின் நிறமான மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். ரிக் வேதம் சோம ரசத்தை ஒளி வீசும் தன்மை கொண்டது என்று விவரிக்கிறது.
இது சோமா செடிகள் வளரும் மலைப் பிரதேச சிதோஷ்ணத்திற்கு ஏற்ப மாறுபட்டாலும், அதன் குணம் - சக்தி ஆகியவைகளில் எந்தவிதமான குறைபாடுகள் இருக்காது.
இந்த பானம் அக்னி பகவான் மூலம் அனைத்து தேவதைகளுக்கும் அளிக்கப்படுகின்றன. யாகம் செய்பவர்களும் இந்த சோம பானம் அருந்தி, அதனால் தெய்வீக சக்தி பெற்று, எந்தவிதமான சோர்வோ, தளர்வோ அடையாமல், அவர்களின் குரல் உச்சரிப்பும் தங்கு தடையின்றி தவறுகள் இல்லாமலும் யாகம் வெற்றிகரமாக நடைபெற உதவும்.
சோம பானம் உடல் நோய்க்கு உற்ற மருந்தாகும். மேலும் அது மனதைத் தூய்மைப் படுத்தும் சக்தி பெற்றது. அதை அருந்துவதே ஒரு யோகம் என்று சொல்லப்படுகிறது.
சோம பானம் அருந்திய வீரனின் பலம் பல மடங்கு பெறுகும் என்பதால் இந்த யாகம் போர் செய்ய முடிவெடுத்த அரசர்கள் செய்வார்கள். அந்த யாகத்திற்கு பயன்பட உருவாக்கப்பட்ட சோம பானம் அருந்தி மனத் திடம் பெற்று யுத்தகளத்திற்கு நம்பிக்கையுடன் புறப்படுவார்கள். சோம பானத்திற்கு இந்திரன், வாயு, அக்னி ஆகிய தேவதைகள் சேவகர்களாகி அரசனின் வீரம் பன் மடங்கு பெறுகும் என்பது வேத வாக்கு.
12. பனினென்றாவது பகுதி - பிரயாணம், பிறப்பு, பனி, பாத்திரம்
கேள்விகள்:
1.
துணையின்றி தனியாகப் பயணிப்பது எது?
2.
மீண்டும் மீண்டும் வளர்ந்து - தேய்வது எது?
3.
பனிக்கு எதிராக உதவுவது எது?
4. மிகப் பெரிய கொள்ளளவு பாத்திரம் எது?
பதில்கள்:
1.
துணையின்றி தன் சக்தியால் மட்டுமே பயணிப்பது சூரியன்.
2.
சந்திரன் தான் வளர்பிறை - தேய்பிறை என்று மாற்றமடைகிறது.
3.
தீ தான் பனிக்கு எதிராக உதவுகிறது.
4. பூமி தான் அனைத்து ஜீவராசிகளையும் தங்க உதவும் பாத்திரம்.
விளக்க உரை:
இந்த பதில்களை நீலகண்டா புதிய கோணத்தில் விளக்குகிறார்.
வாயு என்ற பூத கணத்தை அவர் முன்னிலைப் படுத்துகிறார். உலகத்தில் வாயு மறைந்து விட்டால், ஆத்மா செயலிழந்து விடும்.
சூரியன் என்பது ஜோதியாகும். ஆத்மாவை ஜோதியாக - பரம்ஜோதி என்று பிரஹதாரண்ய உபநிடதம் வர்ணிக்கிறது. பிரளய காலத்திற்குப் பின் எஞ்சி இருப்பது இந்த ஆத்ம ஜோதியான பரம்ம ஜோதி ஒன்று தான்.
ஆத்மா தான் மனிதனின் மூன்று நிலைகளிலும் விழித்திருக்கிறது: முழித்திருத்தல், கனவு காணுதல், கனவற்ற ஆழ்ந்த தூக்கம் ஆகியவைகள் தான் அந்த நிலைகள்.
சந்திரனை மனதுடன் ஒப்பிடுவர். மனதின் ஞானமில்லா நிலையால் - அவித்யா நிலையால் பனியால் அவதிப்படுவது போல் ஜீவன் கஷ்டப்படுகிறது. அதற்கு நிவாரணம் அந்தப் பனியை விரட்டும் சக்தி பெற்ற அக்னியின் தயவு வேண்டும்.
அவித்யா என்றால் ஆண்டவனை அறியாமல், ஆணவமாக இப்பூமியில் வாழ்வது. வித்யா என்றால் 'தத்துவமசி' என்ற மஹா வாக்கியத்தை உணர்ந்து ஆத்ம ஞானம் பெறுவது.
13. பதின்மூன்றாவது பகுதி - நற்குணம், புகழ், சொர்க்கம், ஆனந்தம்.
கேள்விகள்:
1.
ஒட்டு மொத்த நற்குணங்கள் கொண்டது எது?
2.
எல்லாவற்றையும் விட மேலான புகழ் அளிப்பது எது?
3.
சொர்க்கம் அடைய வழி காட்டுவது எது?
4. ஆனந்தம் எதில் அடங்கி உள்ளது?
பதில்கள்:
1.
நாணயம் தான் ஒட்டு மொத்த மேலான நற்குணமாகும்.
2.
தானம் தான் எல்லாவற்றையும் விட புகழ் அளிப்பது.
3.
சத்தியம் தான் சொர்க்கத்திற்கு வழி காட்டும்.
4. ஒருவனின் நற்குணம் தான் ஆனந்தம் அளிக்கும்.
விளக்க உரை:
நாணயம் என்பது நற் செயல்களைக் குறிப்பிடும். காலம் தாழ்ந்து செய்யப்படும் நற்செயல்களால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. ஆகையால் உடனே உதவி செய்வது தான் உத்தமம்.
தானமும் பத்திரம் அறிந்து, காலம் தாழ்த்தாமல் செய்தால் தான் அதன் முழுப் பலனான புண்ணியம் கிட்டும்.
இந்திரத்யும்மா என்ற அரசனைப் பற்றிய ஒரு கதை மஹா பாரதம் வன பர்வாவில் வருகிறது. அந்த அரசன் வெகு காலம் சொர்க்கத்தில் வாழ்ந்ததால் அந்த அரசன் செய்த புண்ணியம் செலவாகி விட சொர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்படுகிறான்.
அந்த அரசனின் கீழ் நோக்கிய பயணத்தில் மார்கண்டயனைச் சந்திக்க அவனிடம் அரசன் 'உன்னை விட அதிக காலம் உயிரோடு இருக்கும் ஜீவனைத் தெரியுமா?' என்ற கேள்விக்கு 'ஒரு கொக்கு உண்டு' என்று தெரிவிக்க, அரசன் அந்த கொக்கைச் சந்தித்தான். 'என்னை விட நேர்மையானவனும், தானம் செய்பவனுவானவன் தான் இந்திரத்யும்மா. மேலும் விவரம் அறிய ஒரு தெப்பக்குளத்தில் வசிக்கும் ஆமையிடம் கேட்கவும்' என்று சொன்னவுடன் அரனும் அந்த ஆமையைச் சந்தித்துக்கு கேட்க, அந்த ஆமை 'இந்த குளம் கட்டியது இந்திரத்யும்மா என்ற அரசன். இந்தக் குளமும் அவன் பெயரில் தான் உள்ளது. நானும் பல வருடங்கள் இதில் வாழ்ந்து வருகிறேன். அந்த அரசன் தான் தர்ம வான்' என்று சொன்னதைச் செவிமடுத்த அரசன் ஆனந்தக் கண்ணீர் விட்டான்.
அந்த அரசன் மீண்டும் சொர்க்கத்திற்கு ஒரு புஷ்பக விமானம் வர அதில் பயணம் சென்றான்.
ஆகையால் செய்யும் தானம் தான் ஒருவனுக்கு சொர்க்கத்தை நிர்ணயம் செய்கிறது. மேலும் ஒருவன் செய்த தானத்தைப் பிறர் புகழ்ந்து சொல்லுவதை தானம் செய்தவரே கேட்பது ஒர் பெரிய மனத்திற்கு இனியதாகும்.
பத்திரஹரி ஒரு சுலோகத்தில் 'உயர்ந்த குணம் எது?' என்பதற்கு கீழ்க்கண்ட பதில் சொல்கிறார்: பேசுவதில் அடக்கம் தான் வீரம். மன அமைதிதான் ஞானம். பணிவு தான் கல்வி. பாத்திரம் அறிந்து தானம் செய்வது தான் செல்வம். கோபம் இல்லாமை தான் தபஸ். பொறுமை தான் அதிகார பலம், நேர்மை தான் தர்மம். இவைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரம் ஒருவனின் நற்குணமாகும். நற்குணம் தான் ஆட்சி செய்பவர்களுக்கு ஆபரணம்.'
14. பதினான்காவது பகுதி - ஆத்மா, தெய்வீகம், வாழ்வின் துணை, அடைக்கலம்.
கேள்விகள்:
1.
ஒருவனின் ஆத்மா எது?
2.
தெய்வீகத்திற்கு வழிகாட்டும் நண்பன் யார்?
3.
உயிர் வாழ மனிதனுக்கு உதவுவது எது?
4. மனிதனின் மிகப்பெரிய அடைக்கலம் எது?
பதில்கள்:
1.
மகன் தான் மனிதனின் ஆத்மா.
2.
மனைவி தான் மனிதனுக்கு தெய்வீகத்திற்கு வழிகாட்டும்
உற்ற நண்பன்.
3.
மழை தான் மனித வாழ்வுக்கு உதவ முக்கியமானது.
4. தானம் தான் மனிதனின் மிகப் பெரிய அடைக்கலம்.
விளக்க உரை:
மனிதனின் ஆத்மா மகன் என்பது வேத வாக்கு. மனைவி தான் மனிதனுக்கு கடவுள் அருளிய பரிசு.
மனுஸ்மிருதியில் எங்கு பெண்கள் போற்றி காப்பாற்றப்படுகிறார்களோ அங்கெல்லாம் தேவர்கள் மனம் மகிழ்ந்து மனிதர்களுக்கு அருள்கிறார்கள் என்று சொல்கிறது.
15. பதினைந்தாவது பகுதி - சிறந்த குணம், சிறந்த செல்வம், சிறந்த லாபம், சிறந்த ஆனந்தம்.
கேள்விகள்:
1.
புகழைக் கொடுக்கும் சிறந்த குணங்களில் எல்லாம்
சிறந்தது எது?.
2.
சொத்துக்களில் எல்லாம் சிறந்த சொத்து எது?
3.
லாபங்களிலெல்லாம் எது சிறந்த லாபம்?
4.
ஆனந்தங்களிலெல்லாம் எது சிறந்த ஆனந்தம்?
பதில்கள்:
1.
நேர்மை தான் ஒருவனுக்கு புகழைக் கொடுக்கும் சிறந்த
குணமாகும்.
2.
கல்வி தான் சொத்துக்களிலெல்லாம் சிறந்த சொத்து.
3.
ஆரோக்கியமான உடல் தான் சிறந்த லாபம்.
4. மனத் திருப்தி தான் சிறந்த ஆனந்தம்.
விளக்க உரை:
நேர்மை, கல்வி, ஆரோக்கியம், திருப்தி ஆகிய நான்கும் தான் ஒருவன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பது தான் தர்மர் சொல்லும் நெறியாகும்.
ஞானமில்லாதவனிடம் குமிந்திருக்கும் செல்வத்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்பது தான் ஆதி சங்கரரின் அருள் வாக்கு.
ஆகையால் தான் உபநிடத்தில் கடவுளைத் துதிக்கும் பொழுது முதலில் ஞானத்தை அருளும் படி வேண்டிய பிறகு தான் செல்வம் அளிக்கும் படி பிரார்த்திக்கிறோம்.
தானம் செய்யும் ஞானம் வந்தால் தான் செல்வத்திற்கு ஒரு மதிப்பு உண்டாகும். இல்லாவிடில் அது கருமியிடம் இருக்கும் சொத்திற்குச் சமம்.
16. பதினாறாவது பகுதி - தர்மம், தர்ம பலன், துக்கம், நீங்காத நட்பு
கேள்விகள்:
1.
உலகத்திலேயே உயர்ந்த தர்மம் எது?
2.
எந்த தர்மம் பலனை எப்போதும் கொடுக்கும்?
3.
எதை அடக்கினால் ஒருவன் ஒருபோதும் துக்கப்படமாட்டான்?
4. யாருடன் கொண்ட நட்பு ஒரு போதும் உடையாது?
பதில்கள்:
1.
அனைவரிடமும் அன்புடன் இருப்பது தான் உயர்ந்த தர்மம்.
2.
வேதத்தில் விதிக்கப்பட்ட தர்மம் எப்போதும் பலன் தரும்.
3.
மனத்தைக் கட்டுப்படித்துவதன் மூலம் மனிதர்கள் ஒருபொழுதும்
துக்கப்பட மாட்டார்கள்.
4. நல்லவர்களின் நட்பு ஒருபொழுதும் பிளவு படாது.
விளக்க உரை:
நீலகண்டாவின் விளக்கம் இங்கு கவனிக்க வேண்டும். அவர் 'அனைவரிடமும் அன்பு கொள்பவர்கள் எந்த ஜீவனையும் காயம்ப்படுத்த மாட்டார்கள். அஹிம்சை தான் அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கையாகும். இது சன்யாச தர்மாவைக் குறிப்பிடுகிறது' என்ற அவரது விளக்கம் ஏற்புடையதே.
ஆகையால் சன்னியாசிகளின் கொள்கையே மிகச் சிறந்த தர்மம் என்று தர்மர் சொல்வதாக நீலகந்தாவின் வியாக்யானம் சரியாகப் படுகிறது.
தர்மம் தழைக்க வேண்டுமென்றால் சன்னியாசிகள் 'ஓம் என்ற பிரணவ மந்திரத்தைத் ஜபம் செய்து, மனத் தூய்மை பெற வேண்டும்' என்பது நீலகந்தாவின் விளக்கம்.
மாண்டூக்கிய உபநிடதம் ஓம் பற்றி மிகவும் விஸ்தாரமாக விளக்கி உள்ளது. அதன் சாராம்சம் தான் கீழே உள்ளவைகள்:
ஓம் என்ற சப்தத்தின் வார்த்தை அழியாத ஒன்று. அந்த ஓம் தான் நாம் காணும் இந்த உலகம். முக்காலத்தையும் ஓம் குறிக்கும் - அதாவது கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம். அது மட்டுமல்ல. உலகத்தின் இந்த முக்காலத்தையும் கடந்த காலமும் ஓம் என்ற ஒலியில் அடக்கம்.
ஓம் என்பது பரப்பிரம்மம். பரப்பிரம்மத்தில் ஆத்மா அடக்கம். ஆத்மாவிற்கு நான்கு நிலைகள் உண்டு. ஓம் என்ற சொல்லை அ + உ + ம் என்று அந்த சொல்லின் ஒலியை வைத்துத் தமிழில் பிரிக்கலாம்.
அ என்பது கடந்த காலம், உ என்றால் நிகழ் காலம், ம் என்றால் வாருங்காலம் என்பது ஓம் என்பதின் மூன்று கால நிலைகளாகும். நான்காவது கால நிலை ஒலிகளற்ற சமாதி - அதாவது அமைதி நிலையாகும்.
அதை மாண்டூக்கிய உபநிடதம் இன்னும் தெளிவாக இப்படி விளக்குகிறது;
|
Quarter நிலை |
Aspect of Atman ஆன்மாவின்
நிலை |
Letter of Aum ஓம் என்ற
வார்த்தையில் குறிப்பிடும் எழுத்து |
|
Vaishvanara |
Waking state விழிப்பு
நிலை |
A அ |
|
Taijasa |
Dreaming state கனவு
நிலை |
U உ |
|
Prajna |
Deep sleep state ஆழ்
உறக்க நிலை - சமாதி நிலை |
M ம் |
|
Turiya |
Pure consciousness state தூய
விழிப்பு நிலை |
Amātra, or
without a letter எழுத்தில்லாதது
|
இந்த நான்கு நிலைகளின் அதிபதிகள் விரத், ஹிரண்ய கர்ப்பா, ஈஸ்வரா அல்லது அவ்யகிரிதா, பிரம்மம்.
ஓம் மூலம் மனித ஆத்மா பிரம்மத்துடன் ஐக்கியமாக வேண்டும்.
ஆதி சங்கரரின் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கம்
ஆதிசங்கரர் ஓம் எனும் மந்திரத்திற்கான விளக்கத்தை தான் எழுதிய உபதேச ஸாஹஸ்ரி எனும் நூலில் விளக்கியுள்ளார்.
v எது
ஞானவடிவத்தை உடையதோ,
v ஆகாயத்தைப் போன்று வடிவம் இல்லாததோ,
v எல்லாவற்றிற்கும் மேலானதோ,
v எப்பொழுதும் ஒளிர்ந்து கொண்டு உள்ளதோ,
v பிறப்பற்றதோ, இரண்டில்லாமல் ஒன்றாகவே உள்ளதோ,
v அழிவற்றதோ,
v எத்துடனும் சேர்க்கையற்றதோ,
v எங்கும் நிறைந்து உள்ளதோ,
v இரண்டற்றதோ,
v எப்பொழுதும் சுதந்திரமாக உள்ளதோ,
v அதுவே பிரம்மமான நான்.
v அதுவே ஓம்.
17. பதினேழாவது பகுதி - அன்புநிலை , துக்கமற்ற நிலை, செல்வ நிலை, ஆனந்த நிலை
கேள்விகள்:
1.
எதைத் துறந்தால் ஒருவன் அனைவராலும் விரும்பப்படுவான்?
2.
எதைத் துறந்தால் ஒருவன் ஒருபொழுதும் கவலைப் படமாட்டான்?
3.
எதைத் துறந்தால் ஒருவன் செல்வந்தனாக ஆவான்?
4. எதைத் துறந்தால் ஒருவன் சந்தோஷமாவான்?
பதில்கள்:
1.
அகங்காரத்தைத் துறந்தால் ஒருவன் அனைவராலும் விரும்பப்
படுவான்.
2.
கோபத்தைத் துறந்தால் ஒருவன் ஒருபொழுதும் கவலைப் படமாட்டான்.
3.
ஆசையைத் துறந்தால் ஒருவன் பணக்காரனாகிறான்.
4. பேராசையைத் துறந்தால் ஒருவன் சந்தோஷமாவான்.
விளக்க உரை:
நீலகண்டாவின் விளக்கம்: 'நான்கு வகையான தீயவைகளைத் துறந்தால் மனம் அடங்க வழி பிறக்கும். அந்த நான்கு தீயவைகள் தான்: அகங்காரம், கோபம், ஆசை, பேராசை ஆகியவைகள்'
கீதையில் கிருஷ்ணன் 'அகங்காரத்தை மனத்திலிருந்து ஒழி. அதனால் மன அமைதி கிட்டும். மன அமைதி தான் பிரம்மத்தை அறியும் முதல் படி. அதன் பிறகு மனப் பிரமை, மனக் குழப்பம் போய்விடும். இறுதியில் மனிதன் பரப்பிம்மத்தை அடைகிறான்' என்று உபதேசிக்கிறார்.
18. பதெனெட்டாவது பகுதி - பிராமண தானம், கலைஞர்களுக்கு பரிசு, வேலையாட்களுக்கு பரிசு, அரசனுக்கு கப்பம்.
கேள்விகள்:
1.
பிராமணனுக்குத் தானம் செய்வது எதற்காக?
2.
நடிகர்கள் - நடனக்கலைஞர்கள்
ஆகியவர்களுக்கு பரிசுகள் கொடுப்பது எதற்காக?
3.
வேலைகாரர்களுக்கு பரிசுகள் கொடுப்பது எதற்காக?
4. அரசனுக்கு கப்பம் கட்டுவது எதற்காக?
பதில்கள்:
1.
பிராமணனுக்குத் தானம் செய்வது தர்மமாகும்.
2.
புகழ் பெறவே நடிகர்கள் - நடனக் கலைஞர்களுக்கு
பரிசுகள் கொடுக்கப்படுகின்றன.
3.
வேலைக்காரர்களிடம் வேலை வாங்குவதால் பரிசுகள் கொடுக்கபடுகின்றன.
4. அரச பயத்தால் அரசனுக்கு கப்பம் கட்டுகிறார்கள்.
விளக்க உரை:
கிரஹஸ்தர்கள் தங்கள் வீடுகளில் மதச் சடங்குகள் செய்யும் பொழுது அதை நடத்திக் கொடுக்கும் பிராமண புரோகிதர்களுக்கு தக்ஷிணைப் பணம் கொடுப்பது சடங்குகளில் முக்கிய அம்சமாகும்.
19. பத்தொன்பதாவது பகுதி - இருட்டு, ஒளியை விழுங்கும் இருட்டு, நண்பர்கள் இழப்பு, சொர்க்க இழப்பு.
கேள்விகள்:
1.
உலகத்தைச் சுற்றி எங்கும் பரவி இருப்பது எது/
2.
உலகத்தில் எதனால் பொருள்கள் பிரகாசமாக இருப்பதில்லை?
3.
எந்தக் காரணத்தால் ஒருவன் தன் நண்பனின் உறவை
உதறித்தள்ளுகிறான்?
4. எந்தக் காரணத்தால் ஒருவன் சொர்க்கம் செல்ல முடிவதில்லை?
பதில்கள்:
1.
அறியாமை தான் உலகத்தைச் சுற்றி எங்கும் பரவி
இருக்கிறது.
2.
அந்தகாரம் - அதாவது இருட்டு உலகத்தில்
சூழ்ந்திருப்பதால் பொருள்கள் பிரகாசமாகத் தெரிவதில்லை.
3.
ஒருவனின் பேராசைதான் தன் நண்பனின் உறவை உதறித் தள்ளக்
காரணம்.
4. ஒருவனின் உலகப் பற்றுத்தான் சொர்க்கம் செல்ல தடைக்கல்லாக இருக்கிறது.
விளக்க உரை:
கீதையில் பகவான் கிருஷ்ணன் பகர்வது இது தான்: 'மாயையில் மயங்கி துக்கப்படுகிறான் மனிதன். இந்த மாயை மயக்கத்திற்கு மூல காரணம் அவித்யா என்று சொல்லப்படும் அறியாமையாகும். அது தான் உண்மையான ஞானமான பிர்ம்மத்தை அடையும் வழியை அடைக்கிறது. அதனால் ஜீவன் பிறப்பு-இறப்பு என்ற வாழ்வின் நிற்காத சுழலும் வட்டமான சக்கரத்தில் அகப்பட்டு உழல்கிறது. அதைத் தான் சம்சார சாகரம் என்பர். இந்த இருளிலிருந்து விடுபடாமல் உழன்று, சொர்க்கம் அடைய முடியாமல் ஜீவன் அவதிப்படுகிறது.'
மனித புலன்களைப் பற்றிய எண்ணங்களால் பற்று பிறக்கிறது. பற்றுக்கு மூலம் காரணம் ஆசை. கோபம் ஆசையை கொழுந்து விட்டு எரியவைக்கும் அக்னி. கோபம் மனத்தை ஆட்கொண்டு மயங்க வைக்கிறது. அதனால் மறதி மனத்தைச் சூழ்ந்து, அதனால் அறிவை அழிக்கிறது. அறிவு அழிந்தால் மனிதன் அனைத்தையும் இழந்ததற்குச் சமம்.'
20. இருபதாவது பகுதி - யார் இறந்தோன்
கேள்விகள்:
1.
ஒருவன் இருந்தும் இறந்தான் என்பதை எப்படி
நிர்ணயிப்பது?
2.
ஒரு ராஜ்யம் இருந்தும் இல்லாத இறந்த நிலையை எப்போது
அடையும்?
3.
யாகம் செய்யும் பொழுது சிரத்தை அல்லது மன ஈடுபாடு
இல்லாதவன் எப்போது இறந்தவனாக கருதப்படுகிறான்?
4. யாகம் எப்போது உபயோகமில்லாத செத்த நிலையை அடைகிறது?
பதில்கள்:
1.
ஏழ்மையில் உழலும் மனிதனை இறந்தவனாக உலகத்தில்
நிர்ணயம் செய்ய வேண்டும்.
2.
ஆட்சி செய்யும் அரசாங்கம் இல்லாத ராஜ்யம் இருந்தும் இறந்த
ஒன்றிற்குச் சமம்.
3.
வேதம் தெரியாதவன் செய்யும் சிரத்தையற்ற யாகம் பிரயோசனம்
இல்லாமல், பயனற்றுப் போகும்.
4. யாகம் செய்த வேத பண்டிதர்களுக்கு தக்ஷிணை அளிக்காத வேள்வி பயனற்ற ஒன்றாகும்.
விளக்க உரை:
நீலகண்டா தனது விளக்க உரையில் 'தரித்திரம் என்ற வார்த்தை பணக்காரனாக இருந்தாலும் தான தர்மம் செய்யாமல் கருமியாக இருப்பவனைக் குறிக்கும். அவன் சமூகத்திற்கு எந்த உதவியும் செய்ய மாட்டான்' என்று விளக்குகிறார்.
சரியான அரசாட்சி இல்லாத நாடு கொடுங்கோல் ஆட்சியாக மாறிவிடும். அதனால் அந்த நாட்டில் ஒழுங்கான வியாபாரமோ, வாணிகமோ, அமைதியான செயல்களோ நிகழாமல் அமைதி - வளர்ச்சி இன்றி மக்கள் துயரப்படுவார்கள். ஆகையால் தான் தர்மர் அப்படிப்பட்ட தேசம் இறந்த தேசமாகவே கருதப்படும் என்று சொல்கிறார்.
இந்த அவல நிலையை வால்மீகி தமது ராமாயணத்தில் இப்படி வர்ணிக்கிறார்: 'அரசன் - அரசாங்கம் இல்லாத நாட்டில் மழை பெய்யாது. விவசாயம் செய்ய வயல்களில் நாற்று நடமாட்டார்கள். அந்தகாரம் தான் மக்களின் இல்லங்களிலும், இருதயங்களிலும் குடிகொண்டிருக்கும். எது தவறு, எது சரி என்ற வித்தியாசம் இன்றி தர்மம் நிலைகுலைந்து அமைதி இன்மை தான் எங்கும் பரவி இருக்கும்.'
வேதம் அறியாதவன் நெருப்பில் இடும் தர்ப்பையைப் போன்றவன். அந்த தர்ப்பை உடனேயே சாம்பலாகிவிடும். ஆகையால் வேதம் ஓதும் - வேத நியமனத்தைக் கடைப்;பிடிக்கும் வேத வித்தை அணுகி சடங்குகள் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட வேத வித்துக்களுக்கு தட்சிணையை மனம் உவந்து தாராளமாகக் கொடுக்க வேண்டும்.
தட்சிணை என்ற சொல்லுக்கு 'வளர்தல்' என்று அர்த்தம். தட்சிணையை 'யாகத்தின் பத்தினி' என்று மிக உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. சடங்குகளில் தகுந்த தட்சிணையால், கர்மா செய்யும் கிர்ஹஸ்தரின் ஆயுள், செல்வம், இன்பம் ஆகியவைகள் அனைத்தும் வளரும் என்பதை உணர்தல் வேண்டும்.
மூதாதையர்களுக்குச் செய்யும் வருடம் ஒருமுறை செய்யும் சடங்கை 'ஸ்ரார்த்தம்' என்று சொல்வார்கள். ஸ்ரார்த்தம் என்ற சொல்லுக்கு மிகவும் சிரத்தையாகச் செய்ய வேண்டிய சடங்கு என்றே பொருளாகும். இந்த சடங்கைச் செய்யும் கர்த்தா - சடங்கைச் செய்து வைக்கும் புரோகிதர் ஆகிய இருவருக்கும் சிரத்தை இருக்க வேண்டும். தட்சிணையைக் கொடுப்பதிலும் ஒரு பணிவு கர்த்தாவுக்கு இருக்க வேண்டும். புரோகிதரும் ஆசீர்வதிக்க வேண்டும்.
சடங்கு செய்யும்
சாஸ்திரிகள் ஆசி வழங்கும் மந்திரம் இது:
"தனம், தானியம், பசும், பஹுபுத்ரலாபம், ஷத சம்வத்ஸரம் திர்கமாயுஹு"
பொருள்: செல்வம், தான்யம், கால் நடைகள், பல புத்திரன் கள், 100 ஆண்டுகள் வாழ்க்கை - அருள ஆசிகள் வழங்குவர்.
தட்சிணையால் சாஸ்திர்களின் உள்ளம் மகிழ வேண்டும். அப்போது தான் அவர்களின் ஆசிகளின் முழுப்பலன்களும் கிட்டும்.
ஆகையால் தட்சிணையைத் தாராளாமாக அளிக்காவிடில் யாகம்/சடங்கு ஆகியவைகள் அத்தனையும் வீணாகிவிடும்.
21. இருபத்தி ஒன்றாவது பகுதி - பாதை, நீர், உணவு, விஷம்.
கேள்விகள்:
1.
எந்த பாதையை தேர்வு செய்ய வேண்டும்?
2.
உலகத்தில் நீர் என்று எதைக் குறிப்பிடுகிறோம்?
3.
உலகத்தில் உணவு எது?
4. உலகத்தில் விஷம் எது?
பதில்கள்:
1.
வேத வித்துக்கள் காட்டும் பாதையை தேர்வு செய்ய வேண்டும்.
2.
ஆகாசம் அல்லது பரந்த உலகம் தான் நீர் என்று அறிய வேண்டும்.
3.
உலகத்தில் பசி தீர்க்கும் உணவை அருளுவது தெய்வப்பசு.
4. மனிதனின் தீராத தேவைகள் தான் விஷம்.
விளக்க உரை:
நீலகண்டாவின் விளக்கம் தான் இங்கும் ஆசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
மஹாபாரதம் வானப் பர்வாவில் ஒரு ஸ்லோகம் வரும். அதில் சொல்லப்படும் விவரங்கள் மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவைகள். அதில் 'வேதங்கள் பலவிதமான மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கும். ஸ்மிருதி வேதங்களிலிருந்து மாறுபட்டதாகும். ஒரு ரிஷியின் கருத்து மற்றொரு ரிஷியின் கருத்துடன் ஒத்துப் போகாமல் வித்தியாசமாக வேறுபட்டிருக்கும். தர்ம கொள்கை கண்டு பிடிக்க முடியாத ரகசியமாக ஒளிந்தே காணப்படும் தன்மை கொண்டது. ஆகையால் எது நல்லது என்பதைத் தேர்வு செய்து அந்தப் பாதையில் பயணிப்பது தான் தர்மம்.'
வேத ரிஷிகளில் உயர்ந்த ஞானி காட்டும் பாதையில் பயணிப்பது தான் சரியானது என்பதை அறிந்து அதையே தேர்வு செய்து பயணிக்க வேண்டும் என்பது தான் தர்மரின் வாக்கு.
காமதேனு - நந்தினி பசுக்கள் எவ்வளவு பேர்கள் இருந்தாலும், அவர்களின் பசியினைத் தீர்க்கும் வல்லமை பெற்றவைகள். அவைகள் தெய்வப்பசுக்களாகும். பூலோகப் பசுக்களும் தங்களின் அமிர்த்மான பாலைத் தந்து நமது பசியை நீக்கி உயிர் வாழ உதவுகிறது.
22. இருபத்திரெண்டு - தவம், புலன் அடக்கம், பொறுமை, அவமானம்.
கேள்விகள்:
1.
தவத்தின் குணாதிசயங்கள் யாது?
2.
புலன் அடக்கம் என்றால் என்ன?
3.
எது பொறுமையின் சிகரமாகச் சொல்லப்படுகிறது?
4. எது அனைவரும் அறிந்த அவமானம்?
பதில்கள்:
1.
தர்மத்தைக் கடைப்பிடிப்பது தான் தவம்.
2.
மனத்தை அடக்குவதே புலன் அடக்கமாகும்.
3.
நல்லது - கெட்டது,
சுகம் - துக்கம் போன்ற எதிர் எதிரானவைகளால் பாதிக்கப்படாமல்
கடைப்பிடிக்கும் பொறுமைதான்
சிகரம் போன்று உயர்ந்தது.
4. கெட்ட குணத்தைக் கட்டுப் படுத்துவது அதனால் ஏற்படும் அவமானத்தால் தான்.
விளக்க உரை:
மூன்றாவது கேள்வி - பதில் மிகவும் விஸ்தாரமாக பகவத் கீதையில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
'குளிர் - வெய்யில், இன்பம் - துன்பம், புகழ் - இகழ்ச்சி - என்ற பலவகையான இரு மாறுபட்டவைகளை எதிர்கொள்ளும் பொழுதும் ஒருவன் அதனால் எந்தவிதமாகப் பாதிக்க்படாமல் இருந்தால் அப்படிப்பட்டவன் தர்மவான் - நீதிமான் - அவன் செயல்களின் தளைகள் அவனைப் பாதிக்காது. மேலும் இந்த இரு மாறுபட்டவைகளும் மாயத் தோன்றங்களே!' என்ற கீதையின் தத்துவம் ஒருவனின் மனம் குழப்பமடைவதிலிருந்து மீண்டு, தான் ஆற்ற வேண்டிய கடமையை 'கிருஷ்ணார்ப்பணம்' என்ற சரணாகதியாகச் செய்ய வலியுறுத்துவதாகும்.
23. இருபத்திமூன்றாவது பகுதி - அறிவு, அமைதி, கருணை, எளிமை.
கேள்விகள்:
1.
ஓ, அரசே! உண்மையான அறிவு என்று எதைச் சொல்கிறோம்?
2.
எது உண்மையான அமைதியாகும்?
3.
எதன் அடிப்படையில் கருணை தீர்மானிக்கப்படுகிறது?
4. எளிமை என்று எதைச் சொல்கிறோம்?
பதில்கள்:
1.
தெய்வீக சிந்தனைதான் உண்மையான அறிவு.
2.
மன அமைதிதான் உண்மையான அமைதியாகும்.
3.
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற நினைப்புத்
தான் கருணையைத் தீர்மானிக்கிறது.
4. மனத்தின் சமநிலையைத் தான் எளிமை என்று சொல்கிறோம்.
விளக்க உரை:
மூளை - மனது இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். அறிவு வழி காட்ட, மனது தூய எண்ணங்கள் - கருணை - அமைதி - எளிமை ஆகியவைகளின் பெட்டகமாக உருவெடுத்து, உலகம் உவப்ப மனிதன் உயிர் வாழ வேண்டும் என்பது தான் தர்மரின் விருப்பமாகும்.
24. இருபத்தி நான்காவது பகுதி - எதிரி, வியாதி, நேர்மை, வஞ்சகம்
கேள்விகள்:
1.
கண்ணுக்குத் தெரியாத எதிரி எது?
2.
மனிதனுக்கு குணப்படுத்த முடியாத வியாதி எது?
3.
நேர்மையான மனிதன் எப்படிப்பட்டவன்?
4. வஞ்சக மனிதன் எப்படிப்பட்டவன்?
பதில்கள்:
1.
கோபம் தான் கண்ணுக்குத் தெரியாத எதிரி.
2.
பிறரது சொத்தை அபகரிக்கும் குணம் குணப்படுத்த முடியாத
வியாதி.
3.
உலக ஜீவராசிகள் அனைத்தின் ஆரோக்கியத்தையும் விரும்பும்
மனிதன் நேர்மையானவன்.
4. கருணை அற்ற கல் மனம் கொண்டவன் தான் வஞ்சக மனிதன்.
25. இருபத்தி ஐந்தாவது பகுதி - மாயை, தற்பெருமை, சோம்பேறித்தனம், துக்கம்.
கேள்விகள்:
1.
ஓ, ராஜாவே! அறியாமை
எது?
2.
தற்பெருமை எது?
3.
சோம்பேறித்தனம் எது?
4. துக்கம் எது?
பதில்கள்:
1.
தர்மம் பற்றி அறியாது இருப்பது தான் அறியாமை. .
2.
தன்னைப் பற்றிய சிந்தனையில் பெருமை கொள்ளல். தான் தற்பெருமை.
3.
தர்ம காரியங்களைச் செய்யாமல் இருப்பது தான் சோம்பேறித்தனம்.
4. அறியாமை தான் துக்கம் என்று சொல்லப்படுகிறது.
26. இருபத்தியாறாவது பகுதி - திட சித்தம், பொறுமை, ஞானஸ்தானம், தானம்.
கேள்விகள்:
1.
ரிஷிகளால் நிர்ணயம் செய்யப்பட்ட திட சித்தம் என்றால் எது?
2.
பொறுமை எது?
3.
உண்மையான ஞான ஸ்தானம் எது?
4. கருணை எது?
பதில்கள்:
1.
திட சித்தம் என்றால் பிறந்த மதத்திலேயே மாறாமல் இருப்பது.
2.
புலன்களை அடக்குவதுவதில் பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றி
காண்பது.
3.
மனத்தின் அனைத்து அழுக்குகளையும் போக்கும் உண்மையான குளியல்
தான் ஞானஸ்தானம்.
4.
அனைத்து ஜந்துக்களையும் காப்பதுதான் கருணையாகும்.
27. இருபத்தி ஏழுவது பகுதி - கற்றவன், நாஸ்திகன், அறிவிலி, ஆசை - பொறாமை.
கேள்விகள்:
1.
எதை வைத்து ஒரு மனிதனை கற்றவன் என்று கணிக்கிறோம்?
2.
யார் நாஸ்திகன்?
3.
யார் முட்டாள்?
4. ஆசை - பொறாமை என்றால் என்ன?
பதில்கள்:
1.
எவன் ஒருவன் தன் கடமைகளை ஒழுங்காக ஆற்றுகிறானோ அவன் தான்
கற்றவன்.
2.
முட்டாள் தான் நாஸ்திகன்.
3.
தான் ஒரு நாஸ்திகன் என்பதையும் தெரியாத அவன் தான் முட்டாள்.
4. சொத்து சேர்ப்பதற்கு மூல காரணம் ஆசையும், பொறாமையும் தான். இந்த இரண்டும் தான் துக்கத்திற்கு மூல காரணமான மனக் கவலையாகும்.
விளக்க உரை:
யார் நாஸ்திகன், யார் முட்டாள் - என்ற இரண்டு கேள்விகளுக்கும் பதிலாக - நாஸ்திகன் முட்டாள் என்ற ஒரே பதில் தான் தர்மபுத்திரர் கூறுகிறார்.
இதன் மூலம் நாஸ்திகனும், முட்டாளும் ஒன்று தான் என்று தர்மர் தெரியப்படுத்துகிறார்.
சம்கிருதத்தில் நாஸ்தி என்றால் 'உலகில் இருக்காத ஒன்று' என்று பொருள்.
எது உலகில் இல்லாதது? என்ற கேள்வி எழும்.
இதற்குப் பதில் ஒருவனின் மனத்தின் நம்பிக்கையைப் பொருத்து அமைகிறது.
'இவ்வுலகம் உண்மை; மேலுலகமும் உண்மை' என்ற கொள்கையை நம்புபவன் ஆஸ்திகன். ஆனால் 'இவ்வுலகம் மட்டும் தான் உண்டு; அது தான் உண்மை. மேலுலகம் என்பது இல்லை' என்பது நாஸ்திக வாதம்.
அது மட்டுமல்ல நாஸ்திகன் கடவுளை நம்பாதவன். உயிரோடு இருக்கும் வரை எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், இன்பமாக இருந்து, உயிர் விடுவது தான் சிறந்த வாழ்வு முறை என்ற கொள்கையை உடையவன் நாஸ்திகன்.
பூர்வ ஜென்ம வாசனை ஜீவனின் மனதில் பதிந்து அது புதிய உடலைப் பெற்றவுடன் இந்த வாசனையின் காரணத்தால் உடலின் உருப்புக்கள் தூண்டப்பட்டு செயல்கள் ஆற்றப்படுகின்றன.
28. இருபத்தி எட்டாவது பகுதி - அகம்பாவம், போலித்தனம், தெய்வ அருள், துன்மார்க்கம்.
கேள்விகள்:
1.
எது அகம்பாவம்?
2.
எது போலித்தனம்?
3.
எது தெய்வ அருள்?
4. எது துன்மார்க்கம்?
பதில்கள்:
1.
வடிகட்டின முட்டாள் தனம் தான் அகம்பாவம்.
2.
மதத்தை ஒரு எல்லைக்குள் சட்டமாக்கி முடக்குவது தான் போலித்தனம்.
3.
தானம் செய்வதின் பலன்களை அடைவது தான் தெய்வ அருள்.
4. மற்றவர்களைப் பற்றி குற்றங்கள் சொல்வது தான் துன்மார்க்கம்.
29. இருபத்தி ஒன்பது - நேர்மை, லாபம், ஆசை
கேள்விகள்:
நேர்மை, லாபம், ஆசை ஆகியவைகள் ஒவ்வொன்றுக்கும் எதிர் எதிரானாவைகள். அப்படி இருக்கும் பொழுது ஒரு மனிதனிடம் இந்த மூன்றும் மனத்தில் ஒன்றாக ஒரே இருப்பிடமாகக் கொண்டுள்ள ரகஸ்யம் என்ன?
பதில்கள்:
மனைவியும் நேர்மையும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்ட பிறகு மற்ற லாபம் - ஆசை ஆகியவைகள் நேர்மையுடன் ஒன்றாக செயல்படும். இதைத் தான் தர்ம, அர்த்த காம என்ற மூன்று வாழ்க்கை நெறி முறைகளாகச் சொல்வார்கள்.
விளக்க உரை:
யுக்ஷன் நான்கு கேள்விகளுக்குப் பதில் ஒரே கேள்வியைத் தான் தர்மரிடம் கேட்கிறான்.
தர்மம் கடைப்பிடித்தல், செல்வம் சேர்த்தல், உடல் இச்சையை அளித்தல் ஆகியவைகளை மனைவி தனது கணவனுக்கு தாம்பத்திய கடமையாக ஆற்றுவதின் மூலம் மனைவி தர்ம பத்தினி என்ற அந்தஸ்தை அடைகிறாள்.
30. முப்பதாவது பகுதி - நரகம்
கேள்விகள்:
ஓ, பரத குலத்தில் பிறந்தவர்களில் மிகவும் சிறந்தவனே! மனித ஜீவன்கள் நரகத்தில் எப்பொழுதும் உழலும் காரணங்கள் யாவை? இதற்குப் பதிலை உடனே சொல்லவும்.
பதில்கள்:
1.
ஓரு ஏழை பிராமணனை உதவி செய்கிறேன் என்று வற்புறித்தி அழைத்து
பிறகு 'தருவதற்க்கு ஒன்றும் இல்லை' என்று சொல்பவன்,
நிரந்தரமாக நரகத்தில் உழலுவான்.
2.
வேதத்தின் வாசகங்கள், தர்ம சாஸ்திரங்கள்
ஆகியவைகளில் பொய்யைப் புகுத்துபவர்கள், பிராமணர்களை ஏமாற்றுபவர்கள்,
தேவர்கள் - மூதாதையர்கள் ஆகியவர்களுக்குச் செய்ய
வேண்டிய கர்மாக்களைச் செய்யாமல் இருப்பவர்கள் அனைவரும் நிர்ந்தரமாக நரகத்தில் உழலுவார்கள்.
3. செல்வந்தானாக இருந்தும் கருமி வாழ்க்கை வாழ்பவன் நிரந்தரமாக நரகத்தில் உழலுவான்.
விளக்க உரை:
வேதத்தைக் காப்பவர்கள் சொத்தைச் சேமிக்கக் கூடாது. அதில் மனசு சென்றால் மனத் தூய்மை இல்லாமல் மாசுபடும். ஒவ்வொரு நாளும் யாகத்தீ வளர்த்து வேத கர்மாக்களைச் செய்து வேத வித்தாகி தங்கள் வாழ்நாட்களைக் கழிக்க வேண்டும் என்பது தான் வேத விதி.
இதற்கு மற்ற கிரஹஸ்தர்கள் வேத வித்திற்கு உணவு - உடை ஆகியவைகளை அளித்து அவர்களைக் காப்பது அவர்களது கடமையாக விதிக்கப்பட்டுள்ளது. இதைச் செய்யாவிடில் அவர்கள் நிரந்தரமாக இவ்வுலக வாழ்க்கை முடிந்தவுடன் நரகத்தில் உழுலுவார்கள் என்பது இதில் வலியுறுத்தப்படுகிறது.
31. முப்பத்தி ஒன்று - பிராமணனின் குணாதிசயங்கள்
கேள்விகள்:
ஓ, ராஜாவே! பிராமண நிலை அடைவது எப்படி?
அந்த நிலையை குலத்தால், குணத்தால், முற்பிறப்பால், விரதம் இருப்பதால், வேதப்படிப்பால், வேதம் ஓதுவதால் அடைய முடியுமா?
இதைப் பற்றி ஒரு தெளிவான பதிலைச் சொல்லவும்.
பதில்கள்:
ஓ, மிகவும் வணக்கத்துக்குறிய யக்ஷனே!
பிராமண நிலையை ஒருவன் தன் முற்பிறவியாலோ, வேதம் படிப்பதாலோ அடைய முடியாது.
ஒருவனின் நல் நடத்தைதான் அவனை பிராமண நிலையை அடைய உதவுகிறது.
தன் நடத்தையில் எந்த பழுதும் படாமல் செயல்படுபவன் தான் பிராமணன்.
நடத்தையில் பழுது பட்டவன் தானும் அழிந்து, பிராமண நிலையையும் இழக்கிறான்.
சாஸ்திரங்களைப் படிப்பதால் மட்டும் பிராமணனாக கருதப்பட மாட்டான்.
சிறந்த நடத்தை உள்ளவனும், தன் புலன்களை அடைக்கியவனும், நித்திய கர்மாவான அக்னி ஹோத்திரம் செய்பவனும் பிராமணனாக கருதப்படுகிறான்.
விளக்க உரை:
பிராமணன் என்பவன் தூய மனமுடையவன். தூய மனம் தான் அவன் வேதப் படிப்பிற்கும் மேலாக மதிக்கப்பட வேண்டும். தர்மம், உண்மை, ஆசை இன்மை, ஆன்மீக வாழ்வு, அருளான செயல்கள் அத்தனையும் பிராமண குணங்களாகும்.
32. முப்பத்தி இரண்டு பகுதி - இன் சொற்கள், விவாதங்கள், நண்பர்கள், தர்மவான்கள்.
கேள்விகள்:
1.
இன் சொற்களைப் பேசுவதால் ஒருவன் பெறும் நன்மைகள் யாது?
2.
விவாதங்களின் முடிவில் ஒருவன் பெறும் நன்மைகள் யாது?
3.
பல நண்பர்களை பெறுவதால் ஒருவன் பெறும் நன்மைகள் யாது?
4. தர்மத்தை கடைப்பிடிப்பதால் ஒருவன் பெறும் நன்மைகள் யாது?
பதில்கள்:
1.
இன் சொற்களை ஒருவன் பேசுவதால் அவன் எல்லோராலும் விரும்பப்படுகிறான்.
2.
நன்கு விவாதம் செய்பவன் முடிவில் வெற்றி அடைகிறான்.
3.
பல நண்பர்களைப் பெறுவதால் ஒருவன் வாழ்க்கையில் சந்தோஷமாக
வாழுகிறான்.
4. தர்ம வாழ்க்கை வாழ்பவன் முடிவில் முக்கியான மோட்சம் அடைகிறான்.
33. முப்பத்தி மூன்று - உண்மையான ஆனந்தம், மிகவும் வியக்கச் செய்வது,
கேள்விகள்:
1.
சந்தோஷமாக இருப்பவர் யார்?
2.
மிகவும் ஆச்சரியமானது எது?
3.
எந்த பாதையை தேர்வு செய்ய வேண்டும்?
4. அறிய வேண்டிய செய்தி என்ன?
பதில்கள்:
1.
ஓ, நீரில் வாழும் ஆவியே! தானே கறிகாய்களைச் சமைத்துச் சாப்பிடுபவனும், தேவைகளைக்
குறைப்பவனும், வீட்டை விட்டு வெளியே செல்லாதவனும், உலகில் சந்தோஷமானவன்.
2.
ஒவ்வொரு நாளும் பல மனிதர்கள் யமனின் பாசக்கயிற்றுக்குப்
பலியானாலும், அதை அறிந்த பிறகும், தான்
இவ்வுலகில் சாஸ்வதம் என்று வாழும் மனிதன் தான் ஆச்சரியமான ஜீவனாகும்.
3.
வாழ்வு சாஸ்வதம் இல்லை. ஸ்ருதியின்
கருத்துக்கள் மாறுபட்டவைகளாக உள்ளன. ஒரு ரிஷி சொல்வதை இன்னொரு
ரிஷி ஏற்பதில்லை. ஆகையால் உண்மை - தர்மம்
பற்றிய தெளிவான கருத்தை அறியமுடியாமல் உலக ஜீவன்கள் திண்டாடுகின்றன. அதற்கு ஒரே தீர்வு - உத்தமமான உயர்ந்தோர்கள் வாழ்ந்த
வாழ்வின் பாதையைத் தேர்வு செய்து அதில் பயணிக்க வேண்டும். ஆகையால்
தர்ம நூல்களை விட ஞானிகளின் வாழ்க்கையையே பின்பற்றி நடக்க வேண்டும்.
4.
உலகம் மாயை. காலம் சமையல்காரனாக உருவெடுக்கிறது.
காலம் மனித உயிர்களை பெரிய கொப்பரையில் அடியில் நெருப்பு எரிய சமையல்
செய்கிறது. சூரியன் தான் நெருப்பு. பகல் - இரவு ஆகியவைகள் தான் நெருப்பு எரிய
உதவும் மரக் கட்டைகள். உணவைக் கிண்ட உதவும் கரண்டி தான் மாதங்களும் - காலப்
பருவங்களும். இது தான் உலகத்திற்க்கு நான் சொல்ல வேண்டிய செய்தியாகும்.
(யக்ஷ பிர்ஸ்னா முடிவு பெற்றது.)
யக்ஷ பிரஸ்னாவான பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட பதிவு. இதன் விசேஷம் என்னவென்றால் சம்ஸ்கிரத மூல கிர்ந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஒரு சில அன்பர்களாவது இதைப் படித்து புரியாத இடங்களைக் குறிப்பிட்டு எழுதினால் அதை மீண்டும் சரிபார்த்து மாற்றி எழுத உதவும். அத்துடன் உங்கள் கருத்துக்களையும் - குறிப்பாக இந்த உரைகளிலுள்ள குறைகளை எனக்குத் தெரியப்படுத்தும் படி நான் வேண்டுகிறேன். புகழுரையை விட நியாயமான இகழ் விமரிசனத்தைத் தான் உண்மையான இலக்கியவாதி விரும்புவான் - எதிர்பார்ப்பான்.
என் உரை சிறக்க உங்கள் உதவியை வேண்டுகிறேன்.
ஜயந்திநாதன்.
ஆதாரம்:
1. The Matheson Trust - Link:




Comments