மஹாபாரதத்தின் ஒரு துளி


மஹாபாரதத்தின் ஒரு துளி:

தெய்வ நம்பிக்கை - மனித முயற்சி இரண்டில் எது சிறந்தது?



யுதிஷ்டிரர் பீஷ்மரிடம் 'தெய்வ நம்பிக்கை - மனித முயற்சி ஆகிய இரண்டில் எது சிறந்தது?' என்று கேட்கிறார். அதற்குப் பதிலாக வஸிஷ்டருக்கும் பிரம்ம தேவருக்கும் நடந்த உரையாடலை பீஷ்மர் குறிப்பிடுகிறார்

அந்த உரையாடலின் மூலக் கருத்தை இங்கு எழுதுகிறேன்

எஸ். சங்கரன்.

 

வசிஸ்டர்: பிரம்ம தேவரே! தெய்வநம்பிக்கை அல்லது ஊழ்வினை ஒரு பக்கம்; மனித முயற்சி மறுபக்கம். இதில் எது சிறந்தது

பிரம்ம தேவர்: விதையிலிருந்து செடி முளைக்கிறது. செடியிலிருந்து இலையுண்டாகிறது. இலையிலிருந்து காம்பு உண்டாகிறது. காம்பிலிருந்து கிளை உண்டாகிறது. கிளையிலிருந்து மலர் உண்டாகிறது. மலரிலிருந்து கனி உண்டாகிறது. கனியிலிருந்து விதை உண்டாகிறது. மீண்டும் விதையிலிருந்து உற்பத்தி தொடர்கிறது. விதை இல்லாமல் ஒன்றும் உண்டாவதில்லை

அது மட்டுமல்ல. விதை விதைப்பவன் நிலத்தில்  எவ்வகையான விதையை விதைக்கிறானோ அந்த விதையின் குணத்திற்கு ஏற்ற பலனை அடைகிறான். அதுபோல நல்விதை நல்வினைக்கும்தீய விதை தீவினக்கும் மூலமாகி அந்தந்த பலனை மனிதன் அடைகிறான்

நிலமில்லாமல் விதைக்கப்படாத விதைகள் வீண். அது போல, முயற்சி இல்லா ஊழ்வினையும் பயன்படுவதில்லை

மனித முயற்சி பூமியாகவும், ஊழ்வினை விதையாகவும் கூறப்படுகின்றது.  

மனித முயற்சியால் நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் நிலத்துடன் சேர்வதனால்  பயிர்கள் வளர்கின்றன

செய்பவன் தன் செய்கையினால் உண்டான பலனைதத் தானே அனுபவிக்கிறான். ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இருக்கும் மனிதன் தன் நிலை குலைந்து புண்ணில் உப்பு நீர் விட்டது போன்ற துயரத்தை அடைகிறான்

முயற்சியினால் தான் எல்லாம் கிடைக்கின்றன. சொர்க்கமும், விரும்பிய செல்வமும் மனிதன் இந்த பூமியில் இருக்கும் பொழுது முற்பிறவியில் செய்த முயற்சியே காரணம்

ஆகாயத்தில் ஜொலிக்கும் நக்ஷத்திரங்கள், சந்திரன், சூர்யன் ஆகியவைகளுடன் தேவர்கள், நாகர்கள், யக்ஷர்கள், வாயு ஆகிய அனைத்தும் மனிதர்களாக இந்த பூமியில் பிறந்து வாழ்ந்து முயற்சி செய்ததின் பலனால் தேவத் தன்மையை அடைந்தவர்களாவார்கள்

முயற்சி அல்லது கர்மம்  செய்யாதவர்களுக்கு செல்வமும், ராஜ்யமும், தேஜசும்  அனுபவிக்கக் கிடைக்காதவைகளாகும்

பிராமணன் தூய்மையாலும், க்ஷத்திரியன் வீரத்தாலும், வைஸ்யன் விடா முயற்சியாலும், சூத்திரன் பணிவிடையாலும் செல்வத்தை அடைகிறார்கள்

மூன்று உலகங்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியவைகள் அனைத்தும் எவரால் படைக்கபட்டனவோ அந்த பகவான் விஷ்ணுவும் இப்போதும் கடலில் தவம் செய்து செய்கையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார்

உலகம் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு, ஒன்றும் செய்யாமல் இருந்தால் எல்லாம் வீணாய்ப் போய்விடும்

புண்ணிய பாவங்களுக்கு தேவ லோகத்தில் உடனே பலன் உண்டாவது போல, மானிட முயற்சிகளுக்கு பலன் உடனே உண்டாவது இல்லை. அதனால் மனவலிமை இழந்து முயற்சியைக் கைவிடலாகாது

முயற்சி செய்தாதவர்களை தெய்வம் காப்பதில்லை; மனிதன் ஒரு சிறிது முயற்சி செய்தாலும், மிகச் சிறிய நெருப்பு காற்றினால் தூண்டப்பட்டு பெரிதாவது போல் தெய்வம் மனித முயற்சியுடன் சேர்ந்து அந்த சிறிய முயற்சியை பெரிதாக ஒளிவிடும் சுடரான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். அதே போல் மனித முயற்சி குறைந்தால், எண்ணெய் வற்றுவதினால் தீபம் மங்கிப் போவது போல் தெய்வ உதவியும் வலுவிழந்துவிடும்.   

ஆகையால் எப்போதும் மனித முயற்சி தான் தெய்வ நம்பிக்கைக்கு முன் நிகழ வேண்டும். இந்த  உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.   

விடா முயற்சி மற்றும் தெய்வ நம்பிக்கை ஆகிய இரண்டும் சேர்ந்துதான்  மனித வாழ்வை இனிதாக்கும்.  





https://archive.org/details/mahabharatam-in-tamil-vlo-12-2-sri-vedavyasa/Mahabharatam%20in%20Tamil%20Vlo-13%20-%20Sri%20Vedavyasa/


2. https://mahabharatham.arasan.info/2018/12/Mahabharatha-Anusasana-Parva-Section-06.html

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017