விடியல் அரசு - வீழும் அரசு
2011, 2016, 2021 ஆண்டுகளில் நடந்த தமிழக தேர்தல்களின் முடிவுகள் இதோ:
2011 தேர்தல் அதிமுக ஜெயலலிதா தலைமையில் நடந்தது. அப்போது கருணாநிதியின் அரசைத் தோற்கடித்து அதிமுக கட்சி மட்டுமே மொத்தமுள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகளில் 150 இடங்கள் + அதன் கூட்டணிக் கட்சிகள் 78 இடங்கள் என்று சரித்திரம் படைத்தது. ஆனால் திமுக 23 இடங்கள் + காங்கிரஸ் 5 இடங்கள் என்று மிகப் பெரும் தோல்வியைத் தழுவியது.
2016 ஆண்டு நடந்த அடுத்த தேர்தலிலும் ஜெயலலிதா மீண்டும் அதிமுக 134 இடங்களில் வென்று (திமுக வென்ற இடங்கள் 89 இடங்கள் மட்டுமே) அதே ஆண்டு மே 23 -ல் முதல்வரானார். ஆனால் அவர் உடல் நலக் குறைவால் அதே ஆண்டு டிசம்பர் 5-ல் உயிர் இழக்க வழக்கம் போல் ஓ. பன்னீர் செல்வம் - பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியவர்கள் முதல்வராகப் பதவி ஏற்று ஆட்சி செய்தாலும், அந்தக் கட்சி மூன்றாக உடைந்தது. பன்னீர் செல்வம், எடப்பாடி, தினகரன் என்ற அளவில் அதிமுக பிளவு பட்டது.
அடுத்த 2021 ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா - கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் களமாகும். அந்தத் தேதலில் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி அமைத்து திமுக 133 இடங்களில் வென்று ஸ்டாலின் முதலமைச்சர் - அவரது மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் ஆட்சி செய்கின்றனர். திமுக கூட்டணிக் கட்சிகள் பெற்ற இடங்கள்: 26 (மொத்த வெற்றி பெற்ற இடங்கள்159 - திமுக 133).
அந்த 2021 தேர்தலில் அதிமுக - பிஜேபி - பாமக அணிகள் வெற்றி பெற்ற மொத்தஇடங்கள் - 75 - அதிமுக 66 + பிஜேபி 4 + பாமக 5.
தமிழ் நாட்டில் அடுத்த தேர்தல் அடுத்த வருடம் 2026 நடக்க உள்ளது. இந்த முறை புதிதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்று ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து 2026 ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் தானே முதன் மந்திரியாக தேர்வாக களம் இறங்குகிறார். அவர் திமுக - வை ஆட்சிப் பீடத்திலிருந்து இறக்கி தானே முதல் அமைச்சராக அமர ஆசைப்படுகிறார். தன்னை முதல் அமைச்சராக தேர்வு செய்ய ஆதரிக்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி வைக்கவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இது காங்கிரசுக்கு விஜய் மறைமுகமாக விடுக்கும் அழைப்பு என்று அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்தப் பின்னணியில் காங்கிரசுக்கு திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் அதிக இடம் பெற ஒரு துருப்புச் சீட்டாக உபயோகிக்கக் கூடும். தமிழ் நாடு காங்கிரஸ் எந்த மாதிரியான கருத்துக்கள் கொண்டிருந்தாலும், காங்கிரஸ் மேலிடம் திமுக உடனான கூட்டணியில் இருந்து விலகாது என்றே திடமாக நம்பலாம். அது திமுகவிற்கு அனுகூலமாகும்.
விஜய் கட்சிக் கூட்டத்தில் முன்பு திமுகவின் அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் பங்கு கொண்டது திமுகவுக்கு ஒரு பின்ணடைவாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் திமுகவின் அரசியல் - அந்தக் கட்சியின் தலைவர்களின் ஜாதகங்கள் - உடன் பிறப்புகளின் ஈடுபாடுகள் - ஸ்டாலின் - உதயநிதி ஆகியவர்களின் பலம் - பலவீனங்கள் ஆகியவைகளை அறிந்த பிரசாந்த் கிஷோர் விஜய் கட்சிக்கு தேர்தல் சமயத்தில் ரகஸ்யமாகவோ அல்லது வெளிப்படையாகவோ உதவி செய்யலாம்.
பிஜேபியின் தமிழ் நாட்டு மாநிலைத் தலைவர் கே. அண்ணாமலை தமக்கே உரிய பாணியில் அரசியல் களம் காணுகிறார். அவரின் வழிகாட்டுதலின் படி அவரே போன தேர்தலில் நின்று தோற்றாலும், அதனால் மனம் கலங்காமல் உழைக்கிறார். மேலும் பிஜேபி 4 சட்ட மன்ற தொகுதிகளைக் கைப்பற்றியதில் அண்ணாமலையின் பங்கு உண்டு.
தமிழ் நாட்டுக் கட்சிகளில் வேகமும், விவேகமும். வீரமும் கொண்டு செயல்படும் அதிக அளவில் படித்த இளம் வயது அரசியல் வாதி என்றால் அது பிஜேபியின் புதிய கண்டு பிடிப்பான கே. அண்ணாமலையாகும்.
திமுகவின் ஊழலை 'டிஎம்கே ஃபைல்ஸ்' என்று மீடியாவில் வெளியிட்டு 'என் மண் என் மக்கள்' என்று பாத யாத்திரை சென்று பிஜேபியை தமிழ் நாட்டில் பரவச் செய்துள்ளார். பிஜேபியின் இதயக் கொள்கையான ஆன்மீகத்தை தமிழ் மக்களிடம் எடுத்துச் சொல்லும் அதே வேளையில் திமுகவின் ஹிந்து மத எதிர்ப்பு, கோயில் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவது, தெய்வ நிந்தனைகளை நேரடியாக களத்தில் இறங்கி திமுகவைத் திணறடிப்பது என்று பல முனைகளில் அரசியல் செய்கிறார்.
அவசியம் நேரிட்டால் பிஜேபி தனித்தே தேர்தலைச் சந்திக்கும் என்றும் கே. அண்ணாமலை தைரியமாகச் சொல்கிறார்.
இருப்பினும் இப்போது உள்ள நிலைமையில் மூன்றாக இயங்கும் அதிமுக ஒன்றாக தேரதலுக்கு முன் ஒன்றிணைந்து அது பிஜேபி, பாமக, விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று கூட்டணி அமைந்தால் திமுகவை வெல்வது சுலபமாகப் போய்விடும். அதற்கான நல்ல சகுனங்கள் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் காணப்படுகிறது.
விஜய் நடிகரின் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் காங்கிரசைத் தன் பக்கம் இழுத்து கூட்டணி அமைத்துப் போட்டி இட்டால் அது திமுகவுக்கு பெரும் இழப்பைத் தரும் என்பது அரசியல் நிபுணர்களின் கணிப்பு.
ஒன்று மட்டும் நிச்சயம். எந்தக் கூட்டணிக்கும் இந்த 2026 தமிழக சட்ட மன்றத் தேர்தல் ஒரு பெரிய சோதனையாகும். இதில் வென்றால் அது அவர்களின் சாதனை என்று சொல்லிவிடலாம்.
ஸ்டாலின் திமுக அரசு கெஜ்ர்வால் டெல்லி அரசைப் போல் கவர்னர், மத்திய அரசு ஆகிய இரண்டு முனையிலும் மோதல் போக்கை அரசு அமைந்த நாள் முதல் கடைப்பிடிப்பதை நடுநிலை மக்கள் பாரத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ் நாட்டில் எப்போதும் இல்லாத அளவில் சட்டம் ஒழுங்கு கெட்டு போலீஸ் செயல் இழந்து இருப்பதை மக்கள் கண் கூடாகப் பார்க்கிறார்கள்.
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லி தனது திராவிட பிரிவினை மன நிலையை மறைத்து சுய ஆட்சி என்ற போர்வையில் இந்திய இறையாண்மைக்கு இழுக்கை பல தன் செய்கைகளால் ஸ்டாலின் அரசு காட்டுகிறது. நீட் எதிர்ப்பு, தேசிய கல்வித் திட்டம் 2020 எதிர்ப்பு, பிஎம்ஸ்ரீ (PMSHRI - PRIME MINISTER SCHOOLS FOR RISING INDIA) என்ற புதிய கல்வித்திட்டத்தைச் செயல்படுத்த உருவாக்கும் பள்ளிகளுக்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு ஆகியவைகள் அனைத்தும் எதிர்மறைச் செயல்களாகும்.
புதிய கல்விக் கொள்கையை இந்தித் திணிப்பு, சம்ஸ்கிரத மொழித் திணிப்பு, குலக் கல்வித் திட்டம் என்று வசைபாடி தமிழக மக்களின் கல்வி மேம்படுத்தும் இந்திய அரிசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களை முன்னேற விடாமல் தடுக்கிறது இந்த ஸ்டாலின் அரசு. குலக்கல்வி இல்லை இது - தொழிற் கல்வி என்று அனுபவஸ்தர்கள் கூறும் கருத்துக்கள் தமிழக ஓட்டர்களின் காதுகளில் விழுந்து, மனதைக் கவர்ந்து, ஆதரவு கிட்டினால் அது ஆண்டவனின் திருவருளாகும்.
இதை எல்லாம் விட ஸ்டாலின் அரசு ஊழல் அரசாக உள்ளது என்பது சமீபத்தில் நடந்த பல திடீர் சோதனைகள் மூலம் தெரிய வருகிறது. குறிப்பாக சாராய உழல் ஸ்டாலின் அரசை ஒரு ஊழல் அரசு என்ற முத்திரையைக் குத்தி இந்திய அளவில் முந்தைய கெஜ்ரிவால் டெல்லி அரசைப் போல் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.
கெஜ்ரிவால் டெல்லி அரசு எப்படி ஆட்சியை இழந்ததோ அதே மாதிரி ஸ்டாலின் அரசும் 2026 வருட தேர்தலில் படு தோல்வியைத் தழுவும் என்று சொல்லத் தோன்றுகிறது.
மத்திய அரசை எதிர்க்கும் முகமாக தனது தற்போதைய பட்ஜெட்டில் ' ₹ ' என்ற சின்னத்திற்குப் பதில் ' ரூ ' என்ற புதிதாக உருவாக்கிய சின்னத்தைப் பயன்படுத்தி 'தமிழக அரசின் இந்தச் செயல் தமிழுக்குச் செய்யும் தொண்டு' என்று விளக்கமும் கொடுத்துள்ளது. இந்தச் செயல்கள் எல்லாம் இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மீண்டும் இந்தியாவைப் பிளவு படுத்தும் ஒரு துரோகச் செயலாகும் என்பதை தமிழக ஓட்டர்கள் விழிப்புடன் இருந்து திமுக - வை 'தீய திராவிட விடியல் வேண்டாம் போடா' என்று சொல்லி, விடியல் அரசு - வீழும் அரசு என்பதை தங்கள் ஒட்டுக்கள் மூலம் 2026 ஆண்டு தேர்தலில் நிகழ்த்திக் காட்ட வாய்மை அனைத்து இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் மன நிலை கொண்டவர்களை தாழ்மையுடன் வேண்டுகிறது.
தமிழ் வளர, தமிழக மக்கள் வாழ, இந்திய நீரோட்டத்தில் தமிழக மக்கள் பங்குகொள்ள விடியல் அரசை வீழ்த்தி நம் வாழ்வை மலரச் செய்வோம்.
Comments