மஹாபாரதத்திலிருந்து ஒரு துளி
பட விளக்கம்: பீஷ்மர் அவரது அமரண சய்யையில் (சரச் சய்யா) தரித்திருக்கும் ஒரு ஓவியம். அவரைச் சுற்றி யுதிஷ்டிரர் மற்றும் அவரது சகோதரர்கள் அவருடைய தர்ம உபதேசங்களை கேட்பதைக் காணலாம். அருகில் கிருஷ்ணர் தெய்வீக மகிமையுடன் நிற்கிறார். இந்த ஓவியம் ஒரு உணர்ச்சிபூர்வமான மற்றும் ஆன்மீகமான சூழ்நிலையைக் காட்டுகிறது. படம் மற்றும் பட விளக்க உபயம்: சாட் ஜிபிடி.
மஹாபாரத்தில் அனுசாசன பர்வா மொத்தமுள்ள 18 பர்வாக்களில் 13-வது பர்வாவாகும். இது பீஷமர் தான் உயிர் விடும் முன் அம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டே யுதிஷ்டிரருக்கு நீதி போதனை வழங்கியதால் இது பீஷ்ம நீதி என்று மதிக்கப்படுகிறது.
அனுசாசன பர்வாவில் பாரம்பரிய பதிப்பில் 168 அத்தியாயங்களுடன் 8000 ஸ்லோகங்கள் உள்ளன.
அனுசாசனம் (अनुशासन / Anushasana) என்ற சொல்லிற்கு ஒழுங்கு, கட்டுப்பாடு, உபதேசம், அல்லது ஒழுக்கத்துக்கான போதனை என்று
பொருள்.
இது இரண்டு முக்கியமான பொருள்களை கொண்டுள்ளது:
- ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு (Discipline & Regulation) – சமூகத்திலும், வாழ்க்கையிலும் ஒழுங்கு, சீர்திருத்தம், மற்றும் ஒழுக்கம் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. ஒரு அரசன் தனது நாட்டை எவ்வாறு சரியான முறையில் ஆள வேண்டும், மக்கள் தங்களது கடமைகளை எப்படி சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும் விளக்கும்.
- அறச்சாசனம் மற்றும் உபதேசம் (Moral & Ethical
Instruction) – தர்மத்திற்கிணங்க ஒழுக்கம், நன்னெறி, வாழ்க்கை வழிகாட்டல், மற்றும் போதனைகளை குறிக்கும். இது ஒரு ஆசானின் (குரு) அறிவுரை போன்றதாக இருக்கும், அதாவது, நல்ல முறையில் வாழ வேண்டிய
நெறிகளை கற்றுக்கொடுப்பது.
மஹாபாரதத்தின் அனுசாசன பர்வம் என்ற பெயர் இந்த அர்த்தங்களைக் கொண்டே வந்தது. அதாவது, பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு வாழ்க்கையின் ஒழுங்கு, அறம், மற்றும் பக்தியின் முக்கியத்துவத்தை போதிக்கிறார் என்பதால் இது "அனுசாசன பர்வம்" என அழைக்கப்படுகிறது.
மஹாபாரதம் வெவ்வேறு பதிப்புகளிலும் பல்வேறு ஆரம்ப ஸ்லோகங்கள் காணப்பட்டாலும், பொதுவாக, வ்யாசர் எழுதியதாகக் கருதப்படும் மஹாபாரதம் வ்யாசர் இறைவனை வணங்கும் ஒரு மங்கல ஸ்லோகத்துடன் தொடங்குகிறது:
வ்யாசர் மங்களாசாசனம்
நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
தேவீம் சரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத்
அர்த்தம்:
ஓம், நாராயணனை வணங்கி, உயர்ந்த மனிதராகிய நரனை வணங்கி, தேவி சரஸ்வதியையும் மக ரிஷி வ்யாசரையும் வணங்கி, ஜயம் என்ற மஹாபாரதத்தைப் பிரார்த்திக்க வேண்டும்.
இந்த ஸ்லோகம் பொதுவாக மஹாபாரதம் வாசிக்கத் தொடங்கும் முன் சொல்லப்படும் மங்களாசாசனம் ஆகும்.
இந்த மங்கல ஸ்லோகம் ஒவ்வொரு பர்வாவின் ஆரம்பத்திலும் சொல்லப்படுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள ஜயா - ஜயம் அல்லது வெற்றி - என்ற சொல் மஹா பாரதத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
பின்னணியாக அமைந்த இந்த மங்கல ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் "ஜயம் உதீரயேத்" என்பது "ஜயத்தைப் புகழ்ந்து பாடுவோம்" அல்லது "ஜயத்தை (மஹாபாரதத்தை) தொடங்குவோம்" என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மஹாபாரதம் முதலில் "ஜயா" என்ற பெயரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இதை எழுதும்போது, அது 8,800 ஸ்லோகங்கள் கொண்டதாக இருந்தது. பின்னர், அது விரிவடைந்து "பாரதம்" என அழைக்கப்பட்டது, இதன் அளவு 24,000 ஸ்லோகங்கள் ஆக வளர்ந்தது. பின்னர், இது மேலும் விரிவடைந்து "மஹாபாரதம்" என உருவெடுத்தது, அதில் 1,00,000 ஸ்லோகங்கள் அடங்கியுள்ளன.
"ஜயா" என்பது வெற்றியை (ஜயம்) குறிக்கும். மஹாபாரதத்தின் மையக்கருத்து தர்மத்தின் வெற்றி என்பதிலேயே இருக்கிறது. இந்நூல் இறுதியில் தர்மம் நிலைபெற்று, அதனால், அது "ஜயா" என முதலில் அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தர்மம் எப்போதும் வெல்லும் என்ற உண்மையை வலியுறுத்துவதால், "ஜயா" என்பது ஒரு பொருத்தமான தலைப்பாக இருந்தது. பின்னர், இதன் மகத்துவத்தால் "மஹாபாரதம்" என்ற உயர்ந்த பெயரைப் பெற்றது.
இதன் மூலம் மஹாபாரதம் வெறும் போர்க்கள கதையாக இல்லாமல் ஒரு உயர்ந்த தர்ம நூலாகப் பார்க்கப்படுகிறது.
அந்த போதனையிலிருந்து அனுசாசன வர்வா ஆரம்பத்தில் பீஷ்மரால் சொல்லப்பட்ட 'எந்த ஒரு பிராணிக்கும் ஹானி உண்டாக்கக் கூடாது என்ற அஹிம்சா த த்துவத்தை விளக்கும் ஒரு கதையை இங்கு பதிவு செய்கிறேம்.
இதற்கு ஆதாரப் பதிவு இதோ:
மின் வலை இணைப்பு:
https://archive.org/details/mahabharatam-in-tamil-vlo-12-2-sri-vedavyasa/Mahabharatam%20in%20Tamil%20Vlo-13%20-%20Sri%20Vedavyasa/mode/2up
அஹிம்சா தர்மம்
யுதிஸ்டிரர் பீஷ்மரைப் பார்த்து உரைக்கிறார்:
'என்னுடைய மதிப்பு மிக்க தாத்தாவே! மன அமைதி என்பது மிகவும் சூட்சமமானதும், பலவிதமான மாறுபட்ட உருவங்கள் கொண்டதுமாகும். உங்களது உன்னதமான போதனைகளைக் கேட்டும் என் மனம் அமைதி அடையவில்லை. ஏனென்றால் என் மனச் சஞ்சலம் அடைய நான் தான் மூல கர்த்தாவாக இருக்கும் பொழுது மன அமைதியை நான் எப்படி அடைய முடியும்? நீங்கள் உடம்பெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வலியால் துடிப்பதைப் பார்க்கும் பொழுது - அதற்கு நான் காரணமானவன் என்பதை நினைக்கும் பொழுது நான் எப்படி மன நிம்மதி அடைய முடியும். ஒரு குன்றிலிருந்து பாயும் நீரைப் போல் குருதியால் குளித்துக் கொண்டிருக்கும் உங்களைக் காணும் நான் மழையில் நனைந்து அல்லாடும் தாமரை போல் துக்கத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். நீங்கள் மட்டும் இல்லை; மற்ற நமது மகன்கள், சுற்றத்தார்கள் ஆகியவர்களின் சாவிற்கு நான் தான் காரணமாகி விட்டேன். திருதராஷ்டிரரின் பிள்ளைகளான துரியோதனன் ஆகியவர்கள் உங்களது இந்த நிலையைப் பார்க்காத அதிர்ஷ்ட சாலிகளாவார்கள். நான் உங்களை இந்த நிலையில் பார்க்காமல் இருக்க சாவையே விரும்பி ஏற்க விழைகிறேன். எனக்கு நீங்கள் ஏதாவது நல்லது செய்ய விரும்பினால், நீங்கள் இந்த என் பாபத்திலிருந்து முழுவதும் விடுதலை அடையும் வழியினைப் போதிக்க வேண்டுகிறேன்.
பீஷ்மர் பதில் சொல்கிறார்:
இதை விளக்க ஒரு பழமையான கதையைச் சொல்கிறேன், கேள்.
இந்தக் கதையின் கதாநாயகர்கள் - கவுதமி என்ற வயதான பெண், அவளது மகன், மிருத்யு, காலன், அர்ஜுனகா என்ற வேடன், ஒரு பாம்பு.
ஒரு நாள் அர்ஜுனகா என்ற வேடன் ஒரு பாம்பை ஒரு கயிற்றால் கட்டி கவுதமி முன்னால் கொண்டு வந்து 'இந்தப் பாம்பு உங்களது மகனைக் கடித்துக் கொன்று விட்டது. அதற்கு தகுந்த தண்டனையை நான் அளிக்க வேண்டும். என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதை நீங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்' என்று முறையிட்டான்.
'இந்தப் பாம்பை தீயில் போட்டு கொல்லடட்டுமா? அல்லது இதை துண்டு துண்டாக வெட்டிக் கொல்லட்டுமா? உன் குழந்தையைக் கொன்ற இந்த பாம்பு இந்த உலகத்தில் இனியும் வாழ்வதற்கு அருகதை அற்றது.' என்றான் அந்த வேடுவன்.
இதைக் கேட்ட கவுதமி 'ஓ, அர்ஜுனகா! அறியாமையால் நீ ஏதோ சொல்கிறாய். இந்தப் பாம்பை உயிரோடு விட்டு விடு. அது நம் கைகளால் சாகக் கூடாது. தூய்மையான செயல்களால் தான் ஒருவன் வாழ்கை என்ற சமுத்திரத்தை ஒரு கப்பல் கடலைத் தாண்டுவதைப் போல் தாண்ட முடியும். பாபம் செய்பவர்களோ ஒரு அம்பு எப்படி நீரில் மூழ்கி ஆழத்திற்குச் சென்று விடுமோ அது போல் பாபத்தால் மூழ்கி அழிந்து விடுவார்கள். இந்தப் பாம்பைக் கொல்வதால் என் மகன் உயிரோடு திரும்பி வரப்போவதில்லை. இந்தப் பாம்பைக் கொல்வதால் ஒரு உயிரைக் கொன்ற பாபம் தான் மிஞ்சும்.'
ஆனால் வேடுவன் அர்ஜுனகாவிற்கு இந்த தத்துவம் ஏற்புடையதாக இல்லை.
'ஓ, தாயே! இந்த சரி - தவறு என்ற வேற்றுமை எல்லாம் ஒரு மனத்தை அடக்கிய யோகிக்குத் தான் பொருந்தும். துக்கம் உண்டாக்கிய இந்த பாம்பைக் கொல்வது தான் எனது வேட்டுவ தர்மம். ஆகையால் நான் இந்தப் பாம்பைக் கொல்ல வேண்டும். மன அமைதி வேண்டும் அனைவரும், அனைத்துக் காரியங்களும் விதியால் ஏற்படுவதாக நினைத்துச் செயல்படுகிறார்கள். ஆனால் என்னுடைய துக்கம் நீங்க நான் பழி வங்கியே ஆக வேண்டும். அடுத்த உலகத்தில் நிம்மதியாக இதனால் இருக்க முடியாது என்ற பயத்தினால் - அது உண்மையாக இல்லாமல் மாயையான எண்ணமாக இருப்பினும் - பாம்பை கொல்லக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் என் துக்கம் போக இந்தப் பாம்பைக் கொல்லப்போகிறேன்.'
கவுதமி மீண்டும் வேடனிடம் வேண்டுகிறாள்: 'குணம் தான் சிறந்த மனிதர்களின் விரும்பமாகும். என் மகன் இறப்பு முன்பே தீர்மானிக்கப்பட்டது. பாம்பு வெறும் கருவி தான். கோபத்தை வளர்க்கக் கூடாது. ஏனென்றால் கோபம் வலிக்கு வழிவகுக்கும். ஆகையால் பாம்பின் செயலை மன்னித்து, அதை உன் கருணை உள்ளத்தால் விடுதலை செய்துவிடு'
ஆனால் இதற்கு வேடன் உடன்படவில்லை.
வேடனின் தத்துவ விளக்கம் இதோ: 'இந்தப் பாம்பைக் கொல்வதால் ஒரு பெரும் நன்மைதான். இறந்த உன் மகனுக்கு அளிக்கும் ஒரு பலியாகும். ஒரு எதிரியைக் கொல்வது தான் தர்மம். இந்த பாம்பைக் கொன்று பெரிய கீர்த்தியை அடைவோம்.'
கவுதமி மீண்டும் வேடுவனிடம் வேண்டுகிறாள்: 'ஒரு பலம் இழந்த எதிரியை விடுவிப்பதால் எந்த நன்மையும் இழக்கப்போவதில்லை. ஆகையால் பாம்பை மன்னித்து, விடுவித்து, அதன் அன்பைப் பெறவும்.'
'பல மற்ற ஜந்துக்களைக் காக்க இந்தப் பாம்பை கொல்வது தான் சரி. நற்பண்பு கொண்ட மனிதர்கள் கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களை அழிப்பது தான் நல்லது. ஆகையால் இந்த கொடூரமான பாம்பைக் கொல்லப் போகிறேன்.;
'விரித்ராவைக் கொன்று தான் இந்திரன் யாகத்தில் சிறந்த ஹவிசைப் பெற்றான். அதே போல் தான் மஹா தேவரான சிவபிரானும் ஒரு யாகத்தை அழித்துத் தான் தனது யாக ஹவிசைப் பெற்றார். ஆகையால் தாயே! இந்த பாம்பைக் கொல்வதால் எந்தவிதமான துக்கமும் உங்கள் மனதில் கொள்ளாதீர்கள்.'
இந்தக் கதையைச் சொல்லி பீஷ்மர் மீண்டும் தொடர்ந்தார்:
கயிற்றால் கட்டப்பட்டுள்ள பாம்பு மிகவும் சிரமப் பட்டு மனிதக் குரலில் மெதுவாகச் சொன்னது:
'ஓ, முட்டாள் அர்ஜுனகாவே! இதில் என் தவறு என்ன இருக்கிறது? நான் என் காரியத்திற்குக் காரணமில்லை; நான் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. மிருத்யு என்னை அனுப்பி வைத்தான். அவன் உத்திரவுப்படி நான் அந்தப் பையனைக் கடித்தேன். நான் இதைக் கோபத்தில் செய்ய வில்லை. இதில் பாபம் என்று சொன்னால், அது மிருத்யுவிடம் தான் சேரும்.'
வேடன் பதில் சொன்னான்: 'நீ இன்னொருவரின் உத்திரவுப்படி இந்தக் காரியத்தைச் செய்திருந்தாலும், அதன் பாபத்தில் உனக்கும் பங்கு உண்டு. மண் பாண்டம் செய்வதில், குயவனின் சக்கரம், கம்பு மற்றும் பிற பொருட்கள் எல்லாம் காரணிகளாகின்றன. அது போல் தான் பாம்பே! நீயும் காரணமாகி பாபத்தில் பங்கேற்கிறாய். காரணம் - விளைவு ஆகியவைகளை ஆராய்ந்தாலும், உன்னைக் கொல்வதில் தவறு ஒன்றுமில்லை. பாம்பே! நீயே உன்னை அறியாமல் நீயே உன்னைக் குற்றவாளி என்பதை ஒப்புக் கொண்டு விட்டாய்.''
பாம்பு சொன்னது: 'பானை செய்பவனின் சக்கரம், கம்பு மற்றும் பிற பொருள்கள் அனைத்தும் தனியான காரணங்கள் இல்லை; ஆகையால் என்னையும் தனிப்பட்ட முறையில் இதற்கு காரணமாக ஆக்க முடியாது. ஆகையால் நான் இதில் குற்றவாளி இல்லை. காரணம் - அதன் விளைவு ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படும் பொழுது, சந்தேகம் எழும். ஆகையால் இந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஆராய்ந்தால், நான் நிரபராதி என்பது தெரியவரும். ஆகையால் எனக்கு மரண தண்டனை கொடுப்பது தவறு. மேலும் நான் பாபம் செய்துள்ளேன் என்று கருதினாலும், அந்த பாபம் மிருத்யுவைச் சாரும்.'
இதைச் செவியுற்ற மிருத்யு பாம்பின் முன்னால் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்தது.
'ஓ, பாம்பே! காலனின் உத்திரவுப்படி தான் நான் உன்னை அந்தப் பையனைக் கடிக்க அனுப்பினேன். காற்றால் அங்கு மிங்கும் அலையும் மேகம் போல் தான் நான் செயல்படுகிறேன். காலனின் ஆதிக்கத்தில் தான் அனைத்து ஜீவன்களும் ஆட்டிப் படைக்கப்படுகின்றன. சத்வ, ரஜ, தமோ குணங்களை எல்லாம் அளிப்பது காலனாகும். அனைத்து கிரகங்கள், ஜீவராசிகள், இயற்கைச் செல்வங்கள், ஐம்பெரும் பூதங்கள், நதிகள், கடல்கள் ஆகிய அனைத்தும் காலனால் உருவாக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. ஆகையால் நான் இதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டியவன் இல்லை.'
இப்போது காலன் தோன்றினான். காலன் மிருத்யூ, பாம்பு, வேடன் ஆகியவர்களை நோக்கிச் சொன்னான்: 'ஓ, வேடுவனே! பையன் பாம்பு கடித்து இறந்ததற்கு நானோ, மிருத்யுவோ, பாம்போ காரணமில்லை; கர்மா தான் இதற்கு காரணம். அந்த பையனின் கர்மா தான் அவன் இறப்பிற்குக் காரணம். கர்மா தான் பாபம் - புண்ணியம் ஆகியவற்றிற்கு காரணம். களி மண்ணால் ஒருவன் நினைத்ததை உருவாக்க முடிவது போல் கர்மாவும் மனிதனை ஆட்டிப் படைக்கிறது. சுடர் விட்டு எரியும் விளக்கும், நிழலும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர் புடையதோ அதே போல் தான் மனிதர்களின் செயல்கள் கர்மாவால் தீர்மானிக்கப்படுகிறது. நானோ, மிருத்யுவோ, பாம்போ, வயதான பிராமணப் பெண்ணோ பையனின் சாவிற்குக் காரணம் இல்லை. அவன் சாவிற்கு அவனே காரணமாகிறான்.
பாம்பு வேடனின் பிடியிலிருந்து விடுபட்டு அதன் இருப்பிடத்திற்குச் சென்றது. காலன், மிருத்யு ஆகியவைகள் அவரவர் இருப்பிடத்திற்குச் சென்றது.
பீஷ்மர் சொன்னார்: ஓ, யுதிஸ்திரா! உன் கவலையை ஒழி. உன் மனம் அமைதியடையட்டும். கர்மாவினால் தான் ஒருவன் சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைகிறான். யுத்தத்தினால் ஏற்பட்ட தீமைக்கு நீயோ அல்லது துரியோதனனோ காரணமில்லை. இது காலனின் கணக்கில் ஏற்பட்ட இழப்பாகும். பூமியின் பாரம் குறைய காலன் செய்த செயல்.
இதைக் கேட்ட யுதிஸ்டிரர் மன அமைதி அடைந்தாலும், மீண்டும் அவரது குற்ற உணர்வு தலை தூக்கி தனது சந்தோகங்களை மீண்டும் பீஷ்மரிடம் கேட்டார்.
Comments