காசி விஸ்வநாதர் ஆலயம் புணரமைப்பு மற்றும் ஆலய வளாகம் விரிவாக்கம் – மோடியின் கனவுத் திட்டத்தின் முதல் கட்டம் பூர்த்தி

 






தெய்வீக காசி, பிரம்மாண்ட காசி – என்ற உன்னதமான திட்டத்தின் முதல் கட்டப் பணி முடிந்து மோடி அவர்களால் டிசம்பர் மாதம் 13-ம் தேதி திங்கட்கிழமை 2021 வருடம் வெகு கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எப்படித் திறந்து வைத்தார் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கவும்.

கங்கையில் புனித நீராடி, பிறகு பூக்களால் அர்ச்சித்துப் பிறகு கங்கை நீரை ஒரு சிறு சொம்பிலே எடுத்துக் கொண்டு அதை பிறகு ஒரு வெள்ளிக் குடுவைக்கு மாற்றிதம் இருகைகளிலும் பக்தி சிரத்தையோடு ஏந்தி, நீண்ட தூரப் பாதை நெடுகிலும் அவரை வரவேற்கும் விதமாக உடுக்கைகள் முழங்க, சிவ கோஷங்கள் முழங்க, பூர்ண கும்ப மரியாதையை ஏற்று ஒரு சிறந்த சிவ பக்தராக காசி விஸ்வநாதருக்கு அபிஷேக ஆராதனை செய்தார். அதன் பிறகு கட்டிடத் தொழிலாளர்களை மலர்கள் தூவி பாராட்டி 3000 துறவிகள் – காசி மக்கள் – மக்கள் தலைவர்கள் என்று குழுமிய கூட்டத்தில் விஸ்தாரணமான காசி வளாகத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நாள் ஒவ்வொரு ஹிந்துவையும் பாரதியின் முழங்கத்தை ஒட்டி – ஹிந்து என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா – என்ற அளவில் நெஞ்சை நிமிர்த்தித் தீரமுடன் முழங்க வைக்கும் ஆற்றலை அளித்த மஹா புருஷர் மோடி – யோகி ஆகியவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

மோடியும் தமது புன்னிய காசி க்ஷேத்திரத்திலிருந்து ‘ஹர ஹர மஹா தேவா .. நமப் பார்வதி பதயே – ஹர ஹர மஹா தேவா’ என்ற மந்திர கோஷங்களுடன் தான் தமது உரையை ஆரம்பித்தார்.

சுதந்திர இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்துக்கள் தங்கள் மதம், மதச் சடங்குகள், கோயில் நிர்மாணம் ஆகியவைகளை எந்தத் தடையும் இன்றி செய்யும் சுதந்திரத்தை 70 ஆண்டுகளுக்கும் மேலாக இழந்து அவதிப் பட்டார்கள் என்பது தான் உண்மை. ஆனால் மோடி மத்திய அரசில் பொறுப்பேற்றவுடன் ஹிந்துக்களுக்கு நியாயமான நீதிகள் கிடைக்க ஆரம்பித்துள்ளன. புண்ணிய ஸ்தலமான காசியின் முழங்கிய மோடியின் சிவ கோஷங்கள் தர்மத்தின் குரலாக – சர்வ ஜனோ சுசினோ பவந்து என்ற மூலாதாரத்தை முக்கிய கொள்கையாகக் கொண்ட சனாதன ஹிந்துமதம் அனவருக்கும் தர்ம்மும், நீதியும், சுபீக்ஷத்தையும் அளிக்கும் என்பதை உலகத்திற்கே பறைசாற்றியதாகத் தான் கொள்ள வேண்டும்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒரு மிகவும் முக்கியமான – இது நடக்காது, நடக்கவும் விடமாட்டோம் என்று எதிர்த்த பல எதிர்க்கட்சிகள் முக்கியமாக காங்கிரஸ் கட்சி – மோடி அரசுக்கு கீரீடம் சூட்டிய வெற்றிச் சாதனை ஆகும். அது அந்த ராமன் அருளால் தான் நடைபெற்றது என்று சொல்வது சாலப் பொருந்தும். அயோத்தி ராமர் கோயிலும் வெகு விரைவாக கட்டப்பட்டு, அதன் கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 

ஆன்மீகச் செயல்களுடன் பல முன்னேற்றத் திட்டங்கள் செயல்படுத்துவதிலும் மோடி அரசு முதலிடம் பெற்றுள்ளது..

இது குறித்து மோடி பேசியது: 

இன்றைய இந்தியா சோம்நாத் கோவிலை அழகுபடுத்துவது மட்டுமின்றி, கடலில் ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு ஆப்டிகல் பைபரையும் பதித்துவருகிறது.

கேதார்நாத் கோவிலை புதுப்பிப்பது மட்டுமின்றி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பவும் தயாராகி வருகிறது.

அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவது மட்டுமின்றி, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகளையும் திறந்து வருகிறது.

விஸ்வநாதர் கோயிலுக்குபிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுப்பது மட்டுமல்லாமல், ஏழைகளுக்கு கோடிக்கணக்கான கான்கிரீட் வீடுகளையும் கட்டிக் கொடுக்கிறது.

இவ்விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

 “காசி நகரம் விஸ்வநாதரின் மண் ஆகும். சுமார் 1,000 ஆண்டுகளாக இந்த புனித மண் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த 1777-1780-ம் ஆண்டில் விஸ்வநாதர் கோயிலுக்காக மகாராணி அகில்யா பாய் ஹோல்கர் தாராளமாக நன்கொடைகளை வழங்கினார். இதேபோல மகாராஜா ரஞ்சித் சிங், குவாலியர் மகாராணி உள்ளிட்டோரும் கோயிலுக்கு நன்கொடைகளை வழங்கினர்.

தேசத்தந்தை மகாத்மா காந்தி வாரணாசிக்கு வந்தபோது குப் பைகள், பக்தர்கள் நெரிசலை பார்த்து மனம் வருந்தினார். கோயில் வளாகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்று காந்தி கனவு கண்டார். அவரது கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.”

அடையாள சின்னமான காசி விஸ்வநாதர் வளாகம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் புத்துணர்ச்சியூட்டும் புதிய சகாப்தத்தை கண்டுள்ளது. இந்தியாவின் புனித நகரங்களில் ஒரு நகரின் புனித கோயில்களில் ஒன்று அதன் பிரம்மாண்டமான வரலாற்றுக்கு பொருத்தமான பாரம்பரிய வழித்தடத்தை தற்போது பெற்றுள்ளது. கோயிலை சுற்றிலும் உள்ள பரந்தவெளியை அடையும் பிரம்மாண்டமான நுழைவு வாசலில் ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் செல்ல முடியும். சிக்கலான வடிவில் இருந்த சுவர்கள் அகற்றப்பட்டு கங்கைக்கு அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாபா விஸ்வநாதரின் கோயில் மாற்றமடைந்துள்ளது.

கூடுதல் நவீன வசதிகளுடன் காசி விஸ்வநாதர் ஆலய வளாகம் பழமை மற்றும் நவீனத்துவத்தின் சரியான கலவையாக திகழ்கிறது.

காசி விஸ்வநாதர் கோவில் முன்பு 3000 சதுர அடிகளில் இருந்த்து. ஆனால் இன்றோ அந்தக் கோயில் வளாகம் 5 லட்சம் சதுர அடியில் விரிவாக்கம் செய்யப்பட்டு, கங்கைக் கரையிலிருந்து புனித நீரை எடுத்து நேராக எந்தவிதமான இடையூறுகளும் இன்றி கோயிலுக்கு வந்து சிவபிரானுக்கு அபிஷேகம் செய்து, தரிசனம் செய்யும் அளவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 800 கோடி ரூபாய் திட்டம் இது. காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு குறுகலான தெருக்கள், கடைகள், வீடுகள், குப்பை கூளங்கள் என்று 3000 சதுர அடியில் கோடானு கோடி இந்துக்களின் இதய தெய்வமான காசி விஸ்வநாதர் முடங்கி இருக்கும் நிலையில் தான் நாம் சுதந்திரம் அடைந்த பிறகும் இருந்தது.

மேலும் இந்தப் புனிதமான காசிக் கோயில் இந்தியாவை ஆண்ட முஸ்லீம் மன்னர்களான 1194 –ல் முஹமத் கோரியாலும், 1505-ல் சிகந்தர் லோடியாலும் , 1669-ல் அவுரங்கசீப்பாலும் இடிக்கப்பட்டு, அந்தக் கோயில்கள் முறையே 1585-ல் மான்சிங்க் 1 – 1780-ல் அஹல்யா பாய் ஹோல்கார் மீண்டும் கட்டப்பட்டு இப்போது மோடி அரசால் மிகவும் விஸ்தாரமான பல வசதிகளுடன் கூடிய கோயிலாகப் புதுப் பொலிவுடன் காட்சி அளிப்பது அந்த சிவனின் அருளால் தான்.

ஹிந்து பக்தர்கள் லலிதா காட்டிலிருந்து 20 அடி அகலப் பாதையில் கங்கா ஜலத்தை எடுத்துக்கொண்டு கோயிலைச் சென்று அடையும் படி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கோயிலைச் சுற்றி உள்ள 300-க்கும் அதிகமான வீடுகள், கடைகள், மண்டபங்கள் ஆகியவைகளை விலை கொடுத்து வாங்கி அவைகளை இடித்து அந்த இடங்களில் சுமார் 23 புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதில் பக்தர்களுக்கு உதவ உருவான சேவை மையங்கள், முமுக்க்ஷு பவன், போகசாலா, மியூசியம், காசிக் கோயிலைப் பார்க்கும் காலரி, சாப்பாட்டு மையம் என்று பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ருத்ராட்ச மண்டபம் சிவலிங்க வடிவில் ஒரே சமயத்தில் 1200 பேர்கள் அமரும் நிலையில் ஸ்டேடியம், உரையாடும் ரூம்கள், ஆர்ட் காலரி என்று பல அமைந்துள்ளன.

காசி கோயில் விரிவாக்கப்பணியில் வீடுகள் இடிக்கப்படும் போது 40-க்கும் மேலான கோயில்கள் மண்ணில் புதைந்து இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டது. கங்காதேஷ்வர் மஹா தேவ் கோவில், மனோகாமேஷ்வர் மஹா தேவ் கொவில், ஜாவுவினாயக் கோவில், ஸ்ரீ கும்ப மஹாதேவ் என்று பல கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளின் கலை வண்ணம் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. அவைகளின் கலைப் பொக்கிஷங்கள் டெல்லி தேசிய ம்யூசியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு காசியிலும் இதைப்பற்றிய விளக்கங்கள் – காசியின் 84 காட்களைப் பற்றிய தொல்பொருள் மற்றும் பழைமையான கலைச் சிற்பங்களின் மகிமைகளையும் விளக்கும் தகவல் மையமும் நிறுவப்பட்டுள்ளன.

இப்போது தூய்மையின் சின்னமாக காசிக் கோவில் திகழ்கிறது.

இதற்குக் காரண கர்த்தர்களான இரண்டு கர்ம யோகிகளான மோடி – யோகி ஆகிய இருவர்களையும் எவ்வளவு போற்றினாலும் தகும்.

அவர்கள் இருவரும் பாரதத்தின் மாமணிகள். 33 மாதங்களில் – அதுவும் கொரோனா உலக அளவிலும், இந்தியாவிலும் கொடும் தாண்டவம் ஆடிய போதிலும், எதிர்க்கட்சிகள் – காசி திட்டம் இந்தக் கொரோனா காலத்தில் நிறுத்தி வைத்தால் என்ன? – என்ற அபசகுனக் கூக்குரல்களை எல்லாம் புறம் தள்ளி கர்மமே கண்ணாயினார் – என்ற சொல்லுக்கு இலக்கணமாகி காசி விஸ்வநாதனின் அருளால் இத்திட்டம் செயல்பட்டு முதல் கட்டப்பணி வெற்றியுடன் முடிபெற்று அதன் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. 

காசிக்குப் புலம் பெயர்ந்து தனது வாழ்வையே மாற்றியமைத்த மகாகவி சுப்பிரமணிய பாரதி தமிழில் எழுதிய கவிதையில், "காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்" என்று கூறுகிறார். இதையும் மோடி தம் உரையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். இரு நாட்களுக்கு முன்பு தான் பாரதியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பதால்  இந்த மோடியின் பாரதி மேற்கோள் தமிழ் மக்களை மகிழ வைக்கும்.

இன்றைய உரையில் மோடி ராணி அகில்யபாய் ஹோல்க்ரையும், சீக்கிய மன்னன் ரஞ்சித் சிங்கையும், வீர சிவாஜியையும் குறிப்பிட்டு சொன்னார்.

பாரத தேசம் பல ஆண்டுகளாக அடிமைப் பட்டு இருந்த காரணத்தால், நாம் நமது தன்னம்பிக்கையை வெகுவாக இழந்து, நமது உருவாக்கும் தனித்திறமைகளையும் இழந்து விட்டோம். ஆனால் இன்று, பல ஆயிரக்கணக்கான பழமை வாய்ந்த இந்த காசி க்ஷேத்திரத்திலிருந்து நான் ஒவ்வொரு இந்நாட்டு மக்களை வேண்டுகிறேன்: முழு நம்பிக்கையோடு உற்பத்தி செய்யுங்கள், புதியவைகளைப் பற்றிச் சிந்தியுங்கள், புதியன உருவாக்குங்கள், அத்துடன் தூய்மை, புதுமை, சுய சார்பு இந்தியா ஆகிய மூன்று கொள்கைகளையும் கடைப்பிடிக்க உறுதிபூண இந்திய மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.”

விழித்து விட்டது வீர இந்தியா.  உலக அரங்கில் பாரதம் கோலோச்சும் நாள் நெருங்கி விட்டது.

அதற்கு வீரமும், விவேகமும் வேண்டும். தொழில் வளமும், யாரையும் சாராத உற்பத்தித் திறனும், ராணுவபலமும், அதிநவீன தொழில் நுட்பமும், தேசபக்தியும், ஒற்றுமையும் வேண்டும்.

இதை எல்லாம் விட நமது பாராம்பரிய கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு நமது புராதனமான ஆலயங்கள், சின்ன்ங்கள் புணருத்தாரணம்  செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.

மோடியின் ஆன்மீகப் பணி – வளர்ச்சிப் பணி இரண்டும் இரு சக்திகளாகச் செயல்பட்டு பாரதத்தை ஒளி மிகுந்ததாக உருவாக்க வேண்டும்.







Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017