வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் – டிசம்பர் 14 – செவ்வாய்க்கிழமை

 


ஏகாதசி என்பதற்கு 11 ஆம் நாள் என்பது பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து  - வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம் என்பன. ஐந்து கர்மேந்திரியங்கள்மெய், வாய், கண், மூக்கு, செவி. இத்துடன் ஆறாவதாக மனம் சேர்த்தால் ஏகாதசியாகிறதுஅதாவது 11 ஆகிறது. அவைகள்  பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசியின் த்துவமாகும். இப்படி உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றி உபவாசம் இருப்பதையே ஏகாதசி புண்ணிய தினம் வலியுறுத்துகிறது.

மாதத்திற்கு 2 ஏகாதசி என ஆண்டிற்கு 24 ஏகாதசி விரதம் இருந்தாலும் மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்ற பெருமைக்குரியது. இந்த நாளில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

அசுரன் முரனை அழிக்க விஷ்ணுவிடம் இருந்து சக்தியாக அவதரித்தவள் ஏகாதசி. அசுரனை அழித்த உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன் என்று வரம் அளித்தார் பெருமாள். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகுந்த தொல்லைகள் கொடுத்து வந்தான் முரன் எனும் அசுரன். இதனால் துன்பம் அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களை திருமாலிடம் அனுப்பிவைத்தார் சிவன். உடனே பெருமாளும் தேவர்களை காக்க அசுரனுடன் போரிட்டார். ஆயிரம் ஆண்டுகள் நீடித்த போர் முடிவுக்கு வரவில்லை. பெருமாளோ அசுரனுக்கு பயந்தது போல நடித்து சிம்ஹாவதி என்னும் குகையில் போய் உறங்கி விட்டார். அப்போது திருமாலின் உடம்பில் இருந்து ஒரு சக்தி பெண் வடிவில் வெளிப்பட்டது.

அப்போது அங்கேயும் தேடி வந்து பெருமாளை போருக்கு கூப்பிட்டான் முரன். பெண் சக்தியை அழிக்க அசுரன் நெருங்கும் போது, அந்த பெண்ணிடம் இருந்து ஹும் என்ற சத்தம் மட்டுமே எழுந்தது அதுவே அந்த அசுரனை எரித்து சாம்பலாக்கியது. உறக்கத்தில் இருந்து பெருமாள், ஏகாதசி என்று அந்தப் பெண் சக்திக்கு பெயரிட்டார், அதோடு உன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டம் அளிப்பேன் என்றும் வரம் தந்தார்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை 'வைகுண்ட ஏகாதசி' என்று போற்றுகிறோம். மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது.

சொர்க்கவாசல் திறக்கப்படும் கதை:  

ஸ்ரீமகாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டதால் பரமபத பாக்கியம் பெற்றவர்கள் மது-கைடபர் என்ற அரக்கர்கள். தங்களுக்குக் கிடைத்த வைகுண்டப் பேறு உலக மாந்தர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று இந்த அசுரர்கள் விரும்பினர். எனவே வைகுண்ட ஏகாதசி அன்று,  “ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் வழியாக உற்சவ மூர்த்தியாக தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசித்து பின்தொடரும் பக்தர்களது பாவங்களை நீக்கி முக்தி அளிக்க வேண்டும்'' என்று பெருமாளிடம் பிரார்த்தித்தனர். அப்படியே அருள் செய்தார் பெருமாள். இதன்பொருட்டே, சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் திருமால்! ஸ்ரீரங்கம் உள்பட நாடுமுழுவதும் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்க வாசல் இன்றும் திறக்கப்படுகிறது.

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீரங்கப் பெருமாளின் அருள் கிட்ட இந்த சொர்க்கவாசல் திறக்கப்படும் இந்த வைகுண்ட ஏகாதசி நன் நாளில் பிரார்த்திக்கிறோம்.

 



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017