தூய்மை இந்தியா இயக்கம்
காந்தி
ஜெயந்தி தினமான 2-ம் தேதி அக்டோபர்
மாதம் 2014 அன்று, தூய்மை இந்தியா
இயக்கம் என்ற மிகவும் தேவையான, அவசியமான, அவசரமான இயக்கத்தை மக்கள் இயக்கமாக அரசியலுக்கு அப்பாற்பட்ட
ஒன்றாகத் தொடங்கி வைத்தார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவை வருகிற 2-ம் தேதி அக்டோபர் 2019-க்குள் - அதாவது மஹாத்மா
காந்தியின் 150-வது பிறந்த
நாளுக்குள் - தூய்மையான நாடாக
உருவாக்குவதற்கு இந்திய மக்கள் அனைவரும் ஒத்துழைத்து வெற்றிபெற அறைகூவல் விடுத்து, தாமே முன்னின்று
துடைப்பத்தை ஏந்தி குப்பைகளை அகற்றி அந்த இயக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த இயக்கத்திற்குத்
தேர்வான சின்னத்தை உருவாக்கியவர்களுக்கும், விளம்பர கவர்ச்சிச் சொற்றொடரை எழுதியவர்களுக்கும் பரிசுகள்
வழங்கப்பட்டன. உண்மையிலேயே தேர்வான சின்னம் மிகவும் அழகாகவும், பொருத்தமாகவும்
அமைந்துள்ளதைப் பார்த்து மக்கள் மகிழ்ந்ததைப் பார்க்க முடிந்தது. அந்தச் சின்னம்
பொறித்த தொப்பிகளை மக்கள் பரவலாக அணிந்து தூய்மை இந்தியா இயக்கத்தில் கலந்து கொண்டார்கள்.
‘இந்தச் சின்னம் மஹாத்மா காந்தியே தமது மூக்குக் கண்ணாடி வழியாக
நாம் தூய்மை இந்தியாவை இன்னும் உருவாக்க வில்லையா? என்று கேள்வி கேட்பதைப் போல் அமைந்துள்ளது ‘என்று மோடி
விளக்கி உள்ளார். ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம் எவ்வாறு நமக்கு சந்தோஷத்தைக்
கொடுத்ததோ அதே அளவு, இந்த தூய்மை இந்தியா இயக்கமும் சந்தோஷத்தைக் கொடுக்கும்’ என்று மோடி
தெரிவித்துள்ளார்.
‘தற்போதைய பதவி வகிக்கும் புதிய அரசு தான் சுகாதாரத்திற்கு
அனைத்தும் செய்ததாகச் சொல்ல வில்லை. எனக்கு முன் பதவி வகித்த அனைத்து மத்திய மாநில அரசாங்கங்கள், கார்பரேஷன்கள், தன்னார்வுக்
குழுக்கள் ஆகிய அனைவரையும் போற்றுகிறேன். இந்த இயக்கம் மக்கள் இயக்கம். அரசியல் நோக்கமின்றி செயல்படும் இயக்கம். அதில் 9 முக்கிய பிரமுகர்களை
இந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட அழைக்கிறேன்: கோவா கவர்னர் மிருதுலா சின் ஹா, சசி தரூர், சச்சின் தெண்டுல்கர், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், அனில் அம்பானி, பாபா ராம்தேவ், தாரக் மெஹ்தா கா உல்டா சாஸ்மா. இந்த 9 பேர்களும் இந்த இயக்கத்தில் சேர்ந்து செயல்படுவதுடன், அவர்கள் ஒவ்வொருவரும்
இன்னும் 9 பேர்களை இந்த
இயக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன். இப்படி இந்த இயக்கம் தொடர்ந்து பலபேர்கள் இணைந்து வெற்றி
பெற வேண்டும்.’ - இது தான் மோடியின்
அறைகூவல்.
இந்த
இயக்கத்திற்கான உறுதி மொழியும், நடைப் பயணமும் மோடியின் தலைமையில் நிகழ்ந்தது.
மோடி
பல இந்திய மற்றும் அயல் நாட்டு நிறுவனங்களையும் இந்த இயக்கத்தில் சேர்ந்து, தூய்மை இந்தியா
இயக்கம் வெற்றி அடைய வேண்டுகோள் விட்டார். அத்துடன் மோடிசன் ஸ்கொயர் கார்டன் கூட்டத்தில் பேசும் போதும், அயல் நாட்டில்
தங்கியுள்ள இந்திய வம்சாவளியினரையும் இந்த இயக்கத்தில் சேர்ந்து, இந்தியாவிற்கு
உதவி செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில்
ஒரு நீதிபதி, இந்த இயக்கத்தின்
சின்னத்தையும், அதில் அரசியல்
தலைவர்கள் படங்கள் இல்லாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டி, பாராட்டி உள்ளார். இருப்பினும், மற்ற அரசியல் கட்சிகள் இந்த இயக்கத்தில் அவ்வளவாக ஆர்வம்
காட்டுவதாகத் தெரியவில்லை. ஆனால், மக்கள் இயக்கமாக இது உருவாகும் நிலையில், இந்த இயக்கம்
ஏதோ மோடி இயக்கம் என்று குறுகிய அரசியல் கண்ணோட்டம் இன்றி, அனைத்து கட்சிகளும் இதில் முழு மூச்சுடன் ஈடுபட்டால், தூய்மை இந்தியா
உருவாகி, அது இந்தியாவை
உலகலாவிய அளவில் பாராட்டைப் பெற்று, அதன் மூலம் சுற்றுலாத் துறை செழிப்பாக வளரும் என்பது திண்ணம்.
Comments