நிழலும், நிஜமும் எழுத்து: கரன்சங்க

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம். அதுதான் வாழ்வின் ரசம். அதில்தான் வாழ்வின் சுவையும் அமைந்திருக்கின்றன. கலைகளின் ஆணிவேரே இந்த மாதிரியான தனிப்பட்ட மாற்றங்களில் இருக்கின்றன. இதனால், வேதனையும், வெறுப்பும், அன்பும், அனுதாபமும், கோபமும் மனத்திலே கொழுந்து விட்டு எரியும் தீப்பந்தமாக ஒளிவிட்டுப் பிறகு அணைந்து விடும். இதைத்தான் வாழ்வின் அனுபவம் என்று அழைக்கிறார்கள். அதைச் சில சமயங்களில் புரட்டிப் பார்ப்பதால், நன்மைகளும், பலன்களும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

எப்போதோ நடந்த நிகழ்ச்சி தான். எனது டைரியைப் புரட்டியபோது என் கண்களில் பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியதால், இக்கட்டுரை எழுதுகிறேன்.

9-2-1957 என்று தெய்தி இடப்பட்டிருக்கிறது. தெய்தியில் ஒரு விசேஷமும் இல்லைதான்.

நான், என் கல்லூரி நண்பர்கள் இருவருடன், மைலாப்பூரிலுள்ள கல்லூரியிலிருந்து திருவல்லிக்கேணி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தேன்..

என்னுடன் வந்த இருவரில் ஒருவன் மேல் ஒரு சிறுபையன் தெரியாமல் லேசாகப் பட்டுவிட்டான். அவன் கருப்பாக கோமணதாரியாக இருந்தான். அந்த என் நண்பன் தன் சட்டையைத் தட்டிவிட்டுப் பார்த்தான். அவன் சட்டையின் நுனியில் மிகமிக லேசாக அழுக்குப் படிந்து விட்டது. மிகவும் கூர்ந்து பார்த்தால் தான் அது தெரியும்.

அவன் சொன்னான்: 'முட்டாள்கள்! கொஞ்சம் கூட ஒழுங்கு கிடையாது!'

எனக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. அந்தப் பையன் நாங்கள் எல்லோரும் நடுத்தெரிவில் போய்க்கொண்டிருக்கும் போதுதான் தெரியாமல் லேசாக அவன் மேல் பட்டுவிட்டான்.

நான் கஷ்டப்பட்டதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

அன்று காலை வகுப்பில் எங்கள் தமிழ் ஆசிரியர் ஆங்கில மொழிபெயர்ப்பான ரவீந்தரநாத தாகூர் எழுதிய கீதாஞ்சலியிலிருந்து ஒரு பகுதியை எங்களுக்குக் கொடுத்து, அதைத் தமிழில் மொழிபெயர்க்கச் சொன்னார். அப்பகுதி வருமாறு:

'ஜபமாலை உருட்டுவதை விட்டு விடு! மந்திரமும், தந்திரமும், ஆடலும், பாடலும் அவனைக் காட்ட மாட்டா! தாளிட்ட அடைபட்ட கோயிலின் இருளடைந்த மூலையில், யாரைப் பூஜிக்கிறாய்? கண்களைத் திறந்து, உன் கடவுள் உன் முன்னிலையில் இல்லையென அறிந்து கொள்!

'கடினமான தரையில் ஏர் கட்டி உழுபவரிடமும், சாலை அமைக்கச் சரளைக்கல் உடைப்பவரிடமும், அவன் இருக்கிறான். அவர்களுடன் அவன் மழையில் நனைகிறான், வெயிலில் உலர்கிறான். அவன் ஆடையில் தூசி படிந்திருக்கிறது. உன் காஷாயத்தைக் களைந்தெறி, அவனைப் போலவே நீயும் புழுதியில் இறங்கிவா!

'விடுதலை? எங்கிருந்து விடுதலை கிடைக்கும்? நம் ஆண்டவனே நம் மீது அருள் சுரந்து சிருஷ்டித்தளைகளை தன் திருமேனியில் பூண்டிருக்கிறான்; என்றும் நம்மை விட்டுப் பிரிய முடியாமல் அவன் இணைக்கப் பட்டிருகிறான்.'

'உன் காஷாயத்தைக் களைந்தெறி, உழைப்பாளியைப் போலவே நீயும் புழுதியில் இறங்கி வா.'

இப்பகுதியினைப் மொழிபெயர்த்த என் நண்பன், தமிழாசிரியரிடம் தான் மொழிபெயர்த்ததைக் காண்பித்து, 'நன்றாக இருக்கின்றதா? நன்கு மொழிபெயர்த்திருக்கிறேனா?' என்று கேட்டான். நான் இதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால், கீதாஞ்சலியின் ஒரு பகுதியினை மொழிபெயர்த்துவிட்டு, 'புழுதிபடிந்து இருப்பவனிடம் கடவுள் குடிகொண்டுள்ளார்' என்று முழங்கும் வாக்கியங்களை எழுத்துக்களாக காகிதத்திலே வடித்து விட்டு, தன் சட்டையின் ஓரத்தில் சிறிது புழுதி பட்டுவிட்டதற்கு-அதுவும் சிறுபையன் தெரியாமல் செய்த பிழைக்கு (உண்மையிலேயே அது பிழையே அல்ல. அந்தச் சிறுவன் தெருவழியே ஓடிக்கொண்டிருக்கும் பொழுது தெருவைக்கடந்தால், அது யாருடைய குற்றம்?)-அதை ஒரு பொருட்டாக்காமல் இருப்பதை விட்டுவிட்டு, என் நண்பன் தடித்த வார்த்தைகளால் திட்டுவது எந்த வகையில் நியாயமாகும்? இதா படித்ததின் அடையாளம்? பண்பின் படிப்பினை இதுதானா?

இரண்டாவது காரணம் ஒன்றும் இருக்கிறது.

என் இந்த நண்பன் ஒரு நாள் பொதுக்கூட்டத்தில் மிகவும் கம்பீரமான குரலில் பேசிக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அவனை எனக்குத் தெரியாது. அப்பொழுது அவன் என் கல்லூரியில் சேர்ந்திருக்கவில்லை.

அவன் செய்த பிரசங்கத்தின் சாரம் இதோ:

'திருமணம் விமரிசையாக நடத்துகிறார்கள். வாசலிலே எச்சில் இலைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஏழை மக்கள்-பிச்சைக்காரர்களும், பிச்சைக்காரிகளும்.

'தெரு நாய்களும் எச்சில் இலைகளுக்காக மூலையில் சோர்ந்து உட்கார்ந்திருக்கின்றன.

'இலைகள் வந்து விழுகின்றன. மனிதப் பிச்சைக்காரர்களுக்கும், நாய்களுக்கும் போட்டி. அவர்கள் நாய்களை விரட்டுகிறார்கள்.

'நாய்களுக்குள்ளும் போட்டிகள். எறிந்த இலைகளை அவைகள் குறைத்துக்கொண்டும், உறுமிக்கொண்டும் நக்கிச் சாப்பிடுகின்றன.

'ஏழ்மை ஒழிய வேண்டும். ஏழை மக்கள் நிலை உயர்த்தப்பட வேண்டும்.'

இது மாதிரிப் பேசிய நபர்தான், தன் சட்டையில் சிறிது அழுக்குப் படிந்ததற்கு, ஒரு ஏழைச் சிறுவனைத் திட்டினான் என்றால், அதை நாம் வேதனையுடன் நினைவு கூறத்தானே வேண்டும்.

'சொல்லுக்கும், செய்கைக்கும் இவ்வளவு தூரமா?' என்று நான் எண்ணிக்கொண்டே அவர்கள் இருவரையும் பிரிந்து என் வீட்டை நோக்கிச் செல்லும் பாதையில் மெதுவாகச் செல்ல ஆரம்பித்தேன்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017