அரசமைப்பு சட்டம்தான் எனது புனித நூல்: நரேந்திரமோடி By கே. வைத்தியநாதன்
தனது 21ஆவது வயதில் ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான நரேந்திர மோடி, எமர்ஜென்சியின்போது தலைமறைவு வாழ்க்கை நடத்தி, அன்றைய
இந்திரா ஆட்சிக்கு எதிராகத் துணிந்து செயல்பட்டவர். அரசியல் நுணுக்கத்தில்
(பொலிடிக்கல் சயின்ஸ்) முதுகலைப் பட்டமும், நிர்வாகவியல்
பட்டமும் பெற்றவர். 1985இல் ஆர்.எஸ்.எஸ்.ஆல் பாரதிய ஜனதாக்
கட்சியை வலுப்படுத்த அனுப்பப்பட்டார். பரவலாக அத்வானியின் சீடர் என்று அறியப்படும்
நரேந்திர மோடியின் பலம் அவரது அயராத உழைப்பும் அபாரமான தன்னம்பிக்கையும்!
ஆர்.எஸ்.எஸ்.
பிரசாரகராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கிய மோடியின் அரசியல் பயணம் பிரமிப்பை
ஏற்படுத்தும். இவரது சுறுசுறுப்பும், மனவலிமையும்
நிகரற்றது. "சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான், அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது' என்கிற வள்ளுவப் பேராசானின்
குறளுக்கு நரேந்திர மோடியை உதாரணம் கூறலாம். இப்போது குஜராத் முதல்வர். தேர்தல்
முடிவுகள் வெளியானால், அநேகமாக இந்தியப் பிரதமர்.
""நரேந்திர மோடி என்கிற தனிமனிதரால், புரையோடிப்
போயிருக்கும் ஊழலை முழுமையாக ஒழிக்கவோ, கட்டுப்படுத்தவோ
முடியும் என்று நினைக்கிறீர்களா?''
""நேர்மையும், உறுதியும் உள்ள ஒரு தனிமனிதனின்
முனைப்பு மிகப்பெரிய சாதனைகளை, மாற்றங்களை
ஏற்படுத்தக்கூடியது. ஊழலைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்று நான் உறுதியாக
நம்புகிறேன். அதற்கு முனைப்பு, செயல்திட்டம், உறுதியான முடிவுகளை எடுக்கும் திறமை ஆகியவை வேண்டும் என்பதிலும் எனக்கு
சந்தேகமில்லை.''
""செயல்திட்டம் என்றால் எப்படி?''
""அரசு நிர்வாகம் கொள்கை முடிவின் அடிப்படையில் இயங்குமானால், பாரபட்சங்களுக்கு அதிக இடமிருக்காது. பாரபட்சங்கள் இல்லாத நிலையில்
ஊழலுக்கு வழியிருக்காது. அதனால், என்ன செய்வதாக இருந்தாலும்
அதற்கான கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். மக்களுக்கு இதுதான் முடியும்,
இதெல்லாம் முடியாது, இவையெல்லாம் வரைமுறைகள்
என்பது தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். விதிமுறைகளில் தெளிவில்லாமல் இருப்பதுதான்
பெருமளவு நிர்வாக அளவிலான ஊழலுக்குக் காரணம். முறையான ஆவணங்களுடன் அதிகாரியை
அணுகும்போது, ஊழலுக்கு வாய்ப்பிருக்காது. அடுத்தபடியாக,
தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துவது ஊழலைக் கட்டுக்குள்
கொண்டுவர நிச்சயமாக உதவும்.''
""ஊழலை ஒழிக்கத் தொழில்நுட்பமா? உங்களது கருத்து
வேடிக்கையாக இருக்கிறது.''
""இதில் வேடிக்கை என்ன வேண்டிக் கிடக்கிறது. தொழில்நுட்பம் மிகப்பெரிய
அளவில் ஊழலைக் கட்டுப்படுத்த உதவும் என்பது, குஜராத்தில்
நாங்கள் அனுபவபூர்வமாகக் கண்டறிந்த உண்மை. உதாரணத்திற்கு, குஜராத்,
மகாராஷ்டிர மாநில எல்லையில் இருக்கும் இரண்டு மாநில விற்பனை வரிச்
சோதனைச் சாவடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மகாராஷ்டிரச் சாவடி, அலுவலர்களால் மட்டுமே செயல்படுவது. குஜராத் சோதனைச் சாவடியில்
தொழில்நுட்பத்தை, அதாவது கணினிப் பயன்பாட்டை, மேலதிகமாகப் பயன்படுத்துகிறோம்.''
""கணினி மயமாக்கப்பட்ட சோதனைச் சாவடியால் ஊழல் குறையும் என்பது ஆச்சரியமாக
இருக்கிறது.''
""சோதனைச் சாவடியில் மட்டும்தானா, இல்லை எல்லா
துறைகளிலும் இதுபோலத் தொழில்நுட்பத்தின் உதவியை குஜராத் பயன்படுத்துகிறதா?''
""முடிந்தவரை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த
முயற்சிக்கிறோம். இதை இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களையும் பின்பற்ற
வைப்போமேயானால், ஊழல் பெருமளவு குறைந்துவிடும் என்று நான்
நிச்சயமாக நம்புகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தால் அதற்கான
முயற்சியில் நாங்கள் முனைப்புடன் ஈடுபடுவோம்.''
""தலைமைப் பொறுப்பில் அமருகிறவர் நேர்மையாளராகவும், நாணயஸ்தராகவும்
இருப்பதும்கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பார்கள்.''
""ஓரளவுக்கு நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே போதாது. யோக்கியமானவர்கள் என்று பரவலாக அறியப்பட்டவர்களின்
தலைமையில் அமைந்த ஆட்சியில்தான் மெகா ஊழல்கள் நடந்தேறின என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஊழலைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்கிற முனைப்பும், வேகமும்
இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.''
""உங்கள் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தால், ஊழல் கறை
படிந்தவர்கள் உங்களது அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள் என்று உங்களால்
உறுதியளித்துக் கூற முடியுமா?''
""அதிலென்ன சந்தேகம். அப்படிப்பட்டவர்கள் அமைச்சரவையில் இடம்பெற மாட்டார்கள்
என்பது மட்டுமல்ல, அமைச்சரவையில் இடம் பெறுபவர்கள் ஊழலில்
ஈடுபட அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளிக்கிறேன்.''
""நதிநீர் இணைப்பு என்பது வாஜ்பாயால் அறிவிக்கப்பட்டதே தவிர, நிறைவேற்றப்படவில்லை. அதற்கு உங்களது ஆட்சியில் முன்னுரிமை அளிக்கப்படுமா?''
""குஜராத்தில் நர்மதை நதியுடன் 20 ஆறுகளை இணைத்திருக்கிறோம்.
இதனால் மிகப்பெரிய அளவில் குஜராத் பயனடைந்திருக்கிறது. இதை அனுபவபூர்வமாக
உணர்ந்திருக்கும் நான், பிரதமர் பதவியில் அமர்ந்தால்
கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி, எதற்காக நழுவவிட வேண்டும்?
நீர் மேலாண்மை என்பது நான் முன்னுரிமை அளிக்கும் ஒன்று. கிராமப்புற
விவசாயத்திற்கான நுண்ணீர்ப் பாசனத் (மைக்ரோ இரிகேஷன்) திட்டங்களானாலும், நகர்ப்புற கழிவுநீர் சுத்திகரிப்பு (வேஸ்ட் வாட்டர் ட்ரீட்மென்ட்) ஆனாலும்,
குடிநீர் பிரச்னை ஆனாலும் இவையெல்லாம் முன்னுரிமைத் திட்டங்களாகப்
போர்க்கால நடவடிக்கையாக நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்பது எனது கருத்து.
தண்ணீரும், மின்சாரமும் எங்களது செயல்திட்டத்தில் முன்னுரிமை
பெற்றவையாக இருக்கும்!''
""வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை
இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவருவது சாத்தியமா? இது வெறும்
தேர்தல் நேர வாக்குறுதியா, இல்லை உங்களது செயல்திட்டத்தில்
முன்னுரிமை பெற்ற ஒன்றா?''
""இது எனது உறுதி மொழி! வெளிநாடுகளில் இந்தியர்கள் சிலருடைய கணக்கில்
காட்டப்படாத கருப்புப் பணம் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது
உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பான இந்திய, வெளிநாட்டு
சட்டதிட்டங்களை ஆய்வுசெய்து அந்தக் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது
இந்திய அரசின் தலையாய கடமை. இதற்காக ஒரு சிறப்புக் குழுவை அமைத்து நடவடிக்கை
எடுத்தே தீர வேண்டும். அந்தப் பணத்தை மீட்டெடுத்துக் கொண்டுவந்து சேர்த்தேயாக
வேண்டும். இதை விட்டுவிட முடியாது''.
""குஜராத் மாடல், குஜராத் மாடல் என்கிறார்கள். ஆறு
கோடி மக்கள்தொகையுள்ள குஜராத்தில் வெற்றி பெற்ற திட்டங்கள், சுமார்
125 கோடி மக்கள்தொகையுள்ள இந்தியாவுக்கு எப்படி பொருந்தும்?
தேசிய அளவில் செயல்படுத்துவது சாத்தியம்தானா?''
""குஜராத்தில் செய்திருப்பதை அப்படியே இந்தியா முழுமைக்கும் செய்யப்
போகிறேன், செய்து காட்டுவேன் என்று நான் ஒருபோதும்
கூறியதில்லை. குஜராத்தையே எடுத்துக் கொண்டால், ஒரு
மாவட்டத்தில் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் இன்னொரு மாவட்டத்திற்கு "காப்பி'
அடிக்கப்படுவதில்லை. பாரத தேசம் ஒரே மாதிரியாக நிர்வகிக்கப்பட முடியாது, கூடாது. அந்தத் தவறைத்தான் காங்கிரஸ் தலைமையிலான
அரசு 60 ஆண்டுகளாகச் செய்து வருகிறது. நான் அதை
ஆதரிக்கவில்லை. குஜராத் மாடல் என்றால் என்ன? 24 மணிநேர
மின்சாரம், அனைவருக்கும் குடிநீர் இவையெல்லாம் லட்சியங்கள்.
மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற சிந்தனைதான்
குஜராத் மாடல். அதை எப்படி செயல்படுத்துவது என்பது மாவட்டத்துக்கு மாவட்டம்,
மாநிலத்துக்கு மாநிலம், தேவைக்கு ஏற்றபடி
மாறும்.''
""அப்படியானால் உங்களது திட்டம்தான் என்ன?''
""கடற்கரைப் பகுதிக்கு ஒருவகையான வளர்ச்சித் திட்டம் தேவைப்படும். வறட்சியான
பகுதிகளின் தேவையும், முன்னேற்றத்திற்கான வழிமுறைகளும் வேறு.
கங்கையும், பிரம்மபுத்திராவும் பாயும் செழிப்பான விவசாய
பூமிக்கான அணுகுமுறையே வித்தியாசமானது. தில்லியிலிருந்து இந்தியா முழுமைக்கான
திட்டமிடல் அகற்றப்பட்டு, அந்தந்தப் பகுதிக்கு, அதுபற்றிய புரிந்துணர்வுள்ளவர்களின் துணையோடு திட்டமிடுவது என்பதுதான்
எங்கள் அணுகுமுறையாக இருக்கும்.''
""சில்லறை
வணிகத்தில் அன்னிய முதலீடு போன்ற முடிவுகளை எதிர்க்கிறீர்கள். அன்னிய முதலீடு
அதிகமாக வராமல் பொருளாதாரத்தை எப்படி மந்த நிலையிலிருந்து மீட்கப் போகிறீர்கள்?''
""சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
வேண்டாம் என்று சொல்கிறோமே தவிர, அன்னிய முதலீடே வேண்டாம்
என்றெல்லாம் சொல்லவில்லையே. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் துறைகளில்
எல்லாம் அன்னிய முதலீடு வரவேற்கப்பட வேண்டும். இந்தியாவின் வருங்காலத்தையும்,
பல கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்காத வகையில் அன்னிய
நேரடி முதலீட்டை வரவேற்பதில் எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இருக்காது.''
""அதேபோல நிலம் கையகப்படுத்தும் பிரச்னையில் உங்கள் நிலைப்பாடு என்ன?''
""அதேபோல நிலம் கையகப்படுத்தும் பிரச்னையில் உங்கள் நிலைப்பாடு என்ன?''
""தொழில் வளர்ச்சியோ, முதலீடோ விவசாயிகளின் நலனுக்கு
எதிராகவோ, அவர்களது வாழ்வாதாரத்தைப் பலியாக்கியோ
ஏற்படலாகாது. நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகள் போதிய, திருப்திகரமான இழப்பீடு பெற வேண்டும். திட்டமிட்டபடி குறிப்பிட்ட
காலத்தில் தொழில் தொடங்கப்படுமானால், விவசாயிகளுக்கு நிலம்
கையகப்படுத்த அதிகமான இழப்பீடு கொடுத்தாலும் அது ஈடுகட்டப்படும். காலதாமதத்தால்
இழப்பில்லாமல் பார்த்துக் கொள்வது பிரச்னையைத் தீர்த்துவிடும்.''
நரேந்திர
மோடி என்று சொன்னால், 2002 குஜராத் கலவரத்துடன்தான் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள். நீங்கள் அதை
எப்படி எதிர்கொள்கிறீர்கள்?''
""இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யாருக்கும் யாரையும் விமர்சனம் செய்யவும்,
குறை கூறவும் உரிமை உண்டு. செய்யாத குற்றத்திற்காக ஒருவர் குற்றம் சாட்டப்படும்போது
சற்று வேதனை இருக்கத்தான் செய்யும். உச்சநீதிமன்றம் ஒரு சிறப்புப் புலனாய்வுக்
குழுவை அமைத்து அந்தக் குழு எனக்கும் குஜராத் கலவரத்திற்கும் தொடர்பில்லை என்று
தெளிவுபடுத்திய பிறகும், அரசியல் ஆதாயத்திற்காக என் மீது
பழிசுமத்தி அதில் சிலர் குளிர்காய்கிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோது
அப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது, அதற்காக நிச்சயமாக
வருத்தப்படுகிறேன். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேள் என்கிறார்கள். அந்தச்
சம்பவத்திற்கு நான் காரணமல்ல எனும்போது ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்?''
""தில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்குக் காங்கிரஸ் மன்னிப்புக்
கேட்டிருக்கிறதே?''
""அவர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது. மனசாட்சி
உறுத்தியிருக்கலாம். மன்னிப்புக் கேட்டார்கள். குஜராத் கலவரத்தைப் பொருத்தவரை,
எங்கள் அரசு கலவரத்தை அடக்கப் பெரும் முயற்சி செய்தது என்பதுதான்
நிஜம். அதனால் வருத்தம்தான் தெரிவிக்க முடிகிறதே தவிர மன்னிப்புக் கேட்க வேண்டிய
அவசியம் புரியவில்லை.''
""செக்யூலரிசம் எனப்படும் மதத் தலையீடின்மை பற்றிய உங்கள் கருத்து என்ன?
அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? மத
நல்லிணக்கத்தை எப்படி நீங்கள் பாதுகாப்பீர்கள்?''
""என்னைப் பொருத்தவரை, செக்யூலரிசம் அல்லது மதத்
தலையீடின்மை என்பது "இந்தியா முதலில்; மற்றவை பின்னால்'
என்கிற அடிப்படை உடையது. எனக்கு ஒரே ஒரு புனித நூல்தான். அது இந்திய
அரசமைப்புச் சட்டம் மட்டுமே. எனது அரசுக்கு ஒரே ஒரு மதம்தான் உண்டு. அதுதான்
முதலில் சொல்வதுபோல "இந்தியா முதலில்!' ஒரே ஒரு
பக்திதான். அது தேசபக்தி. எனது நிர்வாகத்தின் தாரக மந்திரம் - "எல்லோருடனும்,
எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்!' எனது அரசின்
அணுகுமுறை என்னவென்றால், ""யாருக்கும் தனி நீதி
இல்லை; அனைவருக்கும் சம நீதி!' என்பதாக
இருக்கும்.''
""உங்களை ஹிந்து தேசியவாதி என்று கூறுகிறார்களே, பயப்படுகிறார்களே.
அதுபற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?''
""நான் ஒரு தேசியவாதி. தேசபக்தியுடையவன். அதில் என்ன தவறு காண முடியும்?
பிறப்பால் நான் ஹிந்து. அதனால் ஹிந்து தேசியவாதி. நான் ஹிந்துவாகப்
பிறந்தது தவறா, தேசியவாதியாக இருப்பது தவறா? ஒருவர் தேசப்பற்று இல்லாதவராக இருந்தால்தான் தவறே தவிர, ஹிந்து தேசியவாதியாகவோ, முஸ்லிம் தேசியவாதியாகவோ,
கிறிஸ்தவ தேசியவாதியாகவோ இருந்தால் அதிலென்ன தவறு?''
""இதெல்லாம் சொன்னாலும் முஸ்லிம்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று
கருதுகிறீர்களா?''
""நான் இந்திய பிரஜைகளை ஹிந்து, முஸ்லிம் என்று
பிரிப்பதை ஆதரிப்பவனல்ல. எல்லா பிரஜைகளும், எல்லா
வாக்காளர்களும் என்னைப் பொருத்தவரை எனது நாட்டு மக்கள்தான். மதத்தின் அடிப்படையில்
பிரச்னைகளை அணுகுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சி, தனக்கு வாக்குவங்கி வேண்டும் என்பதற்காகத் திரும்பத் திரும்ப
சிறுபான்மையினருக்காக முதலைக்கண்ணீர் வடித்து, தேசத்தையே
மதத்தின் பெயரால் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது. ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து
காங்கிரஸ்தானே தவிர நாங்களல்ல. சிறுபான்மையினரைப் பயமுறுத்தி அதில் அரசியல் ஆதாயம்
தேடப் பார்க்கிறார்கள். ஜனநாயக வழிமுறையில் மதத்துக்கு இடமில்லை. இந்தியர்கள்
அனைவரின் பொதுப் புனித நூல் இந்திய அரசமைப்புச் சட்டம் மட்டுமே!''
""மதக் கலவரமோ, ஜாதிக் கலவரமோ அறவே இல்லாத இந்தியாவை
உருவாக்குவது சாத்தியமா?''
""கல்விதான் அதைச் சாத்தியப்படுத்த முடியும். கல்வியும், பொருளாதார முன்னேற்றமும், ஜாதி, மத அடிப்படையில் பிரச்னைகளை அணுகாத நிர்வாகமும் வருங்காலத்தில் அப்படியொரு
இந்தியாவை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.''
""தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும் என்று மட்டும்தான் திரும்பத்
திரும்பக் கூறுகிறீர்கள். இலங்கைவாழ் தமிழர்கள் பற்றி அவர்களது பாதுகாப்புப் பற்றி,
அவர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவது பற்றி எதுவுமே பேசுவதில்லையே
ஏன்? உங்கள் தேர்தல் வாக்குறுதியிலும் அதுபற்றி எதுவும்
இல்லையே, ஏன்?''
""நீங்கள் குறிப்பிடும் பிரச்னைகளுக்கு எல்லாம் காரணம் மத்திய ஆட்சியில்
இருந்த பலவீனமான அரசு. மத்திய அரசு துணிவுள்ள, செயல்
திறமையுடைய, பலமான அரசாக இருக்குமானால் இலங்கை மட்டுமல்ல,
பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லா அண்டை நாடுகளும் இந்தியாவுடன் நல்லுறவு
பேணும், நமது கருத்துகளுக்கு செவி சாய்க்கும். இன்னொன்றையும்
நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மலேசியா, சிங்கப்பூர்,
மேற்கு இந்தியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை என்று உலகின் எந்தப் பகுதியில் இந்திய வம்சாவளியினர் வாழ்ந்தாலும்,
அவர்களது நலனைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு. அது
நமது கடமை. அவர்களது பாஸ்போர்ட்டின் நிறத்தை வைத்து முடிவெடுக்க வேண்டிய பிரச்னை
அல்ல இது. ரத்தத்தின் அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்னை இது.
""மாநிலங்களுக்கு முன்னுரிமை என்று பேசி வருகிறீர்களே, அதிகாரப் பகிர்வை ஆட்சிக்கு வந்தால் வலியுறுத்துவீர்களா?''
""நமது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல, கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிப்பவன் நான். மாநில உரிமைகளை மதிப்பதும்,
மாநிலங்களை ஒருங்கிணைத்துத் திட்டங்கள் தீட்டுவதும், எல்லா பிரச்னைகளுக்கும் மாநில அரசுகள் தில்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை
மாற்றி அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலுவதும்தான் எனது அணுகுமுறையாக இருக்கும். மாநில
முதல்வராக நான் அடைந்திருக்கும் 12 ஆண்டு கால அனுபவத்துடன்
தேசியத் தலைமையை ஏற்பதால், மாநிலங்களின் பிரச்னையும்
எனக்குத் தெரியும். மத்திய அரசின் முக்கியத்துவமும் புரியும்.''
""நீங்கள் ஒரு சர்வாதிகாரி, விமர்சனங்களைத் தாங்கிக்
கொள்ள மாட்டீர்கள் என்று கூறுகிறார்களே?''
""ஜனநாயகத்தின் பலமே விமர்சனம்தான் என்று கருதுபவன் நான். நாம் தவறு
செய்யாமல் இருக்கவும், வளரவும் விமர்சனங்கள் அவசியம். அதனால்
விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். விமர்சனம் என்பது வேறு, ஆதாரமற்ற
குற்றச்சாட்டு என்பது வேறு. இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. நான் விமர்சனங்களை
வரவேற்பவன். ஆனால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை
விரும்புவதில்லை. அதனால் பயனில்லை என்பது மட்டுமல்ல, அனாவசியமாகப்
பொழுதுதான் வீணாகும்.''
""தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?''
""தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி
அமைக்கும். இதுநாள்வரை இந்தியா எதிர்கொண்ட சோம்பேறித் தனத்திலிருந்து
விழித்தெழுந்து, வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போடத்
தொடங்கும். இந்தியாவை வல்லரசாக்கத் துடிக்கும் கோடானுகோடி இளைஞர் பட்டாளத்தின்
ஆதரவுடன் "ஸப்கா ஸாத், ஸப்கா விகாஸ்!' ("எல்லோருடனும், எல்லோருடைய வளர்ச்சிக்காகவும்!')
என்கிற முழக்கத்துடன் எங்கள் நிர்வாகம் செயல்படும்.''
Comments