செய்தி சொல்லும் சேதி: நந்திகிராமம் எழுதியவர்: கரன்சங்க்

'முப்பதுகளில் ஒருவன் கம்யூனிஸ்டாக இல்லாவிட்டால் அவன் மனிதன் இல்லை. முப்பதிற்குப் பிறகும் ஒருவன் கம்யூனிஸ்டாக இருந்தால், அவன் மனிதாபிமானமே இல்லாதவன்'

இவ்வாக்கியங்களை என் நண்பன் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். மேற்கோளா அல்லது அவனது சொந்தக் கருத்தா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இதில் ஏதோ உண்மை இருப்பதாகத் தான் எனக்கு அடிக்கடி தோன்றும். அதுவும் நந்திக்கிராமத்தில் இதுவரை நடந்த சம்பவங்கள் இதைத்தான் நிரூபிக்கின்றன.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியானது வளைந்த வெட்டருவாள்-கதிர்களுடன் முதலில் தொடங்கியதாக நினைப்பு. நிலட்சுவாந்தார்களின் சுரண்டலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க முன்னின்று போராடும் ஒரு உழைப்பாளிக் கட்சியாக சி.பி.ஐ. முதலில் உருவாகியது. விவசாயிகளுடன் ஆலைத் தொழிளர்களையும் காப்பதற்கு ஏதுவாக தன் கொடியில் கதிருக்குப் பதில் சுத்தியலை வைத்து - வெட்டருவாள் விவசாயியையும்-சுத்தியல் ஆலையத் தொழிலாளியையும் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம்- தன்னை இன்னும் தீவிர கொள்கையாளர்களாகக் காட்டுவதற்கு சி.பி.ஐ. எம். என்று பிரிந்து போராடத்துவங்கியது. இன்னும் தீவிரமானவர்கள் 'மார்க்சிஸ்ட்-லெலினிஸ்ட்', 'மாவோஸ்ட்' களாக தங்களைக் காட்டிக்கொண்டு இன்னும் தீவிரமாக தங்கள் கொள்கைகளில் - மக்கள் ஜனநாயத்தில் கூட நம்பிக்கை அற்றவர்களாகவும், தீவிர வாதங்களில் நம்பிக்கை கொண்டவர்களாகவும் பிரிந்து செயல்படுகிறார்கள். கொள்கைகளின் தீவிரத்தை அரிவாள்-சுத்தியுடன் நக்ஷத்திரமும் சேர்ந்து அக்கொடியும் மாறுபட்டு பிரதிபலிக்கின்றது. கொடியின் சிவப்பு நிறம் மேலும் மேலும் ரத்தத்ச் சிவப்பாக மாறுவதற்கு அவர்களின் பல முயற்சிகளில் நந்திக்கிராமம் நிகழ்ச்சியும் மெருகூட்டும் என்ற கணக்கு தவறி விட்டது.

நந்திக்கிராமம் ஹால்டி நதிக்கு தெற்கே உள்ள நல்ல விளைச்சல் உள்ள சிறு விவசாயிகள் கொண்ட கிராமம். ஒரு பெரிய ரசாயனத் தொழிற்சாலை கட்டுவதற்கு நந்திக் கிராமம் தேர்வு செய்யப்பட்டு, விவசாயிகளிடம் நிலங்களை வாங்கி, சிறப்பு பொருளாதார மண்டலம் (special economic zone) உருவாக்குவதற்கு இந்தோனேசியாவின் ஸலீம் என்ற ஸ்தாபனத்துடன் மேற்கு வங்க அரசு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஸ்தாபனம் முன்னாள் இந்தோனேசிய பிரதமர் காலஞ்சென்ற சுகார்டோ குடும்பத்தினருக்கு சொந்தமானது. சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் பெரிய பாலம், வேகப் பாதைகள் போடுவதற்கும் அந்த ஸ்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. JICA-யுடன் பாலம்-பாதைகள் போடுவதாக முன்பே ஆயத்தப் பணிகள் மேற்கொண்டாலும், அவர்கைளைத் தவிர்த்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது ஒரு செய்தி. மேலும், JICA என்ற ஸ்தாபனம் ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் செயல் படும் நிர்வாகம் என்பதுடன், அகில உலகத் தரம் வாய்ந்த செயல் திறம் மிக்கது என்பதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

வளமிக்க இந்த நந்திகிராமத்தைத் தேர்வு செய்வதற்கு என்ன காரணம்?

ஹால்டியா பெட்ரோ கெமிகல்ஸ், இந்தியன் அயில் கார்பரேஷன் ரெஃபனரி -ஆகிய இரு பெரிய ஆலைகள் நந்திகிராமத்திற்கு அருகில் இருப்பது ஒரு காரணம். இன்னொறு காரணம் நந்திக்கிராமத்து கிராம வாசிகள், விவசாயிகள் அனைத்துப் பேர்களையும் சி.பி.ஐ. எம். தோழர்கள் அடைக்கி ஆண்டு கொண்டிருப்பதால், அவர்கள் தங்கள் கட்டளைக்கு அடிபணிவார்கள் என்ற நிச்சயமான நம்பிக்கை. அதற்கு முக்கிய காரணம் - முன்பு கம்யூனிஸ்ட்களின் போராட்டத்தால் தான் அந்தக் கிராமவாசிகளுக்கு நிலம் கிடைத்தது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. 'நிலம் அரசாங்கத்திற்கே சாரும்' என்ற அடிப்படை கம்யூனிஸத் தத்துவத்தைக் கடைப்பிடித்து, கிராம மக்கள் நிலத்தை மகிழ்வோடு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை. சில இடங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பினால், அவைகளை அடக்குவதில் கஷடமிருக்காது என்பதும் காரணமாகும். ஆனால், விவசாயிகள் தங்கள் நிலபுலன்களை எந்தக் காரணம் கொண்டும், எந்த விலைக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அத்துடன் கிராமத்து பல அடிமட்ட சி.பி.ஐ. எம். தோழர்களுக்கும் இதில் உடன் பாடு இல்லை. அவர்கள் தங்கள் கிராமத்து மக்களுடன் போராடத் தயாரானார்கள். பொலிட்பிரோ என்ற உயர்மட்டக் குழுவினரால் இதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

'நில ஆக்கிரமிப்பு எதிர்ப்பு கமிட்டி' என்ற அமைப்பை நந்திகிராம மக்கள் உருவாக்கி, அதில் கட்சிபேத மில்லாமல் எல்லோரையும் அணைத்துப் போராடத் தயாரானார்கள். கிராமத்தின் சில தீவிர கம்யூனிஸ்ட்கள் இதில் சேராமல் எதிர்த்தாலும், மேலிடம் மேலும் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. ஆகையால், இந்த வருடம் மார்ச் மாதம் 14-ம் தேதி, போலீஸ் நந்திக்கிராமத்தை முற்றுகை யிட்டது. அதில் சி.பி.ஐ.எம். தோழர்களும் அவர்களுடன் கூலிப்படையினரும் ஆயுதம் தாங்கி, போலீஸ் உடுப்புக்களுடன் அப்பாவி கிராம மக்களை - குழந்தைகள், பெண்கள் என்று பார்க்காமல் சுட்டுத் தள்ளிவிட்டார்கள். எவ்வளவோ கட்டுப்பாடுகள் செய்தும், இந்த அராஜகம் மாலையிலேயே தொலைக் காட்சிகளில் படங்களாக வெளிவந்து விட்டன. பலபேர்கள் இறந்து பட்டனர். அதன் பிறகு, சி.பி.ஐ.எம். தோழர்கள் நந்திக் கிராமம் பக்கத்திலேயே நெருங்க முடியவில்லை.

இந்த நிலையையும் பொலிட்பிரோ என்ற மேலிடத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 'மீண்டும் நந்திகிராம' முற்றுகை என்ற போர்வையில், நவம்பர் மாதம் 11-ம் தேதியில் போலீஸைக் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் படி உத்தரவு போட்டு விட்டு, சி.பி.ஐ. எம். தோழர்கள் நந்திக்கிராம மக்களை அவர்கள் வீடுகளிலிருந்து துப்பாக்கி முனையில் துரத்தி அகதிகளாக்கி விட்டார்கள். திரும்பவும் வீடுகளுக்குத் தீ, உயிரோடு எரிப்பு, கற்பழிப்பு போன்ற அதர்மக காரியங்கள் இப்போது அரசாங்கக் காரியமாகவே அரங்கேறியது.

இந்த அராஜகத்தை, தற்போதைய வங்காள நாட்டின் முதல் அமைச்சர் 'நந்திகிராமத்து மக்களுக்குப் பதில் அடி கொடுத்தோம்' என்று நியாயப்படுத்திப் பேசினார். இன்னொரு பெரும் சிபிஐஎம் தலைவர் 'இது ஒரு புதிய மறுமலர்ச்சி' என்று நியாயப் படுத்திப் பேசினார். வங்காளத்தின் அறிவு ஜீவிகளால் இனியும் பொறுக்க முடியவில்லை. நடந்த சம்பவங்கள்அவர்களை விழித்தெழந்து வீதிக்கு வரச் செய்து விட்டன. மவுன ஊர்வலம் சென்றனர். நடிகர்கள், சைத்திரியர்கள், கலைஞர்கள், டைரக்டர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் - கொல்கத்தா வீதிகளில் மவுனமாக நடந்து சென்று, தங்களது கண்டனைத்தைத் தெரிவித்தார்கள். அவர்களுடன் மஹா ஜனங்களும் சேர்ந்து கொண்டார்கள். அவர்களில் ஐம்பது பேர்கள் கைது செய்யப் பட்டார்கள். அடுத்த நாள் வங்காளத்தின் மந்திரி ஒருவர் கூறினார்: “சைத்திரியர்கள் படம் வரையட்டும், எழுத்தாளர்கள் கதை-கட்டுரைகள் எழுதட்டும். அதை எல்லாம் விட்டு விட்டு, அரசியலில் நுழையவேண்டாம். நான் போலீஸ் கமிஷனராக இருந்தால், ஊர்வலம் போன அறிவுஜீவிகளை அப்படியே வங்காள வளைகுடாவில் அமுக்கிச் சாகடித்திருப்பேன்!”

ஆனால், அதற்கு அடுத்த நாளிலே இடது சாரிக் கொள்கையை ஆதரிக்கும் அறிவு ஜீவிகள் தனியாக ஊர்வலம் போனார்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கும் தோழர்களுக்கு நண்பர்கள் மேலிடத்தின் வார்த்தைக்குக் கட்டுப் பட்டவர்கள்; அவர்கள் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள்; மேலிடம் சொன்னதால் ஊர்வலம் சென்றார்களோ என்பது கடவுளுக்குத் தான்-இல்லை, அவர்கள் கடவுளாக வணங்கும் மார்க்சிஸ்டுக்குத்தான் வெளிச்சம். அந்த இடதுசாரி அறிவுஜீவிகள் மட்டும் வழிகாட்டுபவர்கள் - ஆகையால், மூழ்கடிக்கப் படவேண்டியவர்களல்லர்-வாழவேண்டியவர்கள் என்பது மந்திரியின் கருத்தாக இருக்கலாம்!

ஏன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்த இரட்டை வேடம் என்று ஒருவரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அவர்கள் கற்ற பாடமும் கொள்கைகளும் எதைச் சொல்கிறதோ அதைத் தான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். லெனினும்-ஸ்டானிலும் சொன்ன-செய்ததைத் தான் அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள் -கடைப்பிடிப்பார்கள்.

சோவியத் நாட்டின் சரித்திரத்தின் சில ஏடுகளைப் புரட்டினால் இது தெரிந்து விடும்.
மாக்ஸிம் கார்க்கியும், லெனினும் அரசியல் நண்பர்கள். லெனின் பதவிக்கு வந்து சில வருடங்களில், பல எழுத்துலகப் பிரமுகர்கள், இலக்கிய வாதிகள் - இதில் கார்க்கியின் நெருங்கிய நண்பர்களும் அடக்கம், சிறைபிடிக்கப்பட்டு, சைபீரியாவுக்குக் கடத்தப்பட்டு, துன்புறுத்தப் பட்டார்கள். இதை கடுமையாகக் கண்டித்தார் மாக்ஸிம் கார்க்கி. இது குறித்து1919 செப்டம்பர் மாதத்தில், லெனின் மாக்ஸிம் கார்க்கிக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில் லெனின் எழுதிய வாசகங்கள் இதோ: “ஏன் இப்படி நான் நம்மமுடியாத அளவுக்கு வார்த்தைகளைக் கொட்டி எழுதியிருக்கிறீர்கள்? நான் பல டஜன் பேர்களை-ஏன், நூறுபேர்களுக்கு மேல் கூட இருக்கலாம், ஜெயிலில் தள்ளியதற்கா இந்த ஆத்திரமும், கோபமும்? அவர்கள் எல்லாம் நமது திட்டங்களுக்குத் தடைபோடும் கலகக்காரர்கள். அவர்களை பல நாட்கள் ஜெயிலில் தள்ளாமல் எப்படி இருக்க முடியும்? இவர்கள் எல்லாம் கலாச்சாரம், பேச்சுரிமை என்று சொல்லும் முதலாளி வர்க்கத்தின் அடிவருடிகளும், பூஷ்வாக்களுமான சிறு மதிபடைத்த அறிவுஜீவிகள். இவர்கள் தங்களைத் தாங்களே தேசத்தின் மூளை என்று கற்பனை செய்யும் உலக சஞ்சாரிகள். அவர்கள் மண்டையில் இருப்பது மூளையில்லை, எல்லாம் நாற்றமெடுக்கும் மலம்.

“எனக்கு எந்த அறிவுஜீவிகளிடமும் நம்பிக்கை கிடையாது. இந்த என் கருத்து உங்களுக்குத் தெரியும் என்று நான் நம்புகிறேன். 'எழுத்தறிவின்மையை அகற்றுவோம்' என்ற நமது புதிய கோழத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை என்று தான் நான் கருதுகிறேன். நமது மக்களை அறிவாளிகளாக ஆக்கவேண்டும் என்பது அல்ல இதன் நோக்கம். ஒவ்வொருவரும் நமது அறிக்கைகளையும், உத்தரவுகளையும், வேண்டுகோள்களையும் மற்றவர்கள் உதவியின்றிப் படிக்கும் அளவுக்கு அவர்களுடைய கல்வி இருந்தால் மட்டும் போதும். 'எழுத்தறிவின்மையை அகற்றுவோம்' என்ற நமது திட்டத்தின் நோக்கம் இது தான். இதற்கு மேல் அவர்களுக்குக் கல்வி புகட்ட வேண்டிய அவசியமில்லை.”

இது வெளி உலகத்திற்குத் தெரியக் கூடாது என்று ஸ்டாலின் இரும்புத்திரை போட்டு சர்வாதிகாரியாக மக்களை அடிமைப்படுத்தினார். ஹங்கேரியில் அரங்கேறிய ராணுவ அடக்குமுறைகள், கம்போடியாவில் நடத்திய பலிகள், சைனாவின் தினான்மின் வட்டத்தில் மாணவ-மாணவிகளின் படுகொலைகள், திபெத்திய அராஜகம் என்று பட்டியல் விரிவடைந்து தற்போதைய நந்திக்கிராமத்தின் நிகழ்ச்சியும் சேர்ந்து, இந்த ரத்தங்களெல்லாம் அவர்களின் கொடியின் செந்நிறத்தை மேலும் ரத்தச் சிவப்பாக்குகின்றன.

மனித உரிமை மீறல்களுக்கு முன்னின்று குரல்கொடுப்பவர்கள் இந்திய கம்யூனிஸ்ட்கள் என்ற நற்பெயரை நந்திக்கிராமத்து நிகழ்வுக்குப் பிறகு இழந்து விட்டார்கள். மனித உரிமை எல்லாம் இப்போது 'மார்க்ஸ் உரிமை' என்ற குறிகிய வட்டத்தில் அவர்களை நிறுத்தி விட்டது. இந்த அவப்பெயர் மாற வெகுகாலம் பிடிக்கும்.

“கல்கத்தா இப்போது கொல்கத்தாவாக மாறிவிட்டது. அப்போது கல்லெறிந்து கட்சியை வளர்த்தவர்கள், இப்போது கொலைசெய்து கட்சியை வளர்க்கப்பார்க்கிறார்கள்” என்று மக்களைக் கவலை கொள்ள வைக்கிறது.

காலம் தான் கண் திறக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017