மோடியின் மதச் சின்ன அடையாளமும், மதச் சார்பின்மையும்


ஆர்.எஸ்.எஸ்.கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் திரு.எஸ். குருமூர்த்தி. அவர் ஒரு ஆடிட்டர். திறமைசாலி. அத்துடன் பயமில்லாமல் தம் தரப்பு நியாயத்தை மிகவும் தெளிவாகச் சொல்லும் ஆற்றல் மிக்கவர். அவரது கருத்துக்களை ஒப்புக் கொள்ளாதவர்கள் கூட அவர் கூற்றின் ஆழத்தையும், தெளிவையும் உவந்து பாராட்டி இருக்கிறார்கள். அம்பானி குடும்பத்தில் குழப்பம் வந்த போது, அவரை நாடும் போது, ‘உங்களுக்கு பணம் பண்ணுவது மட்டுமே தெரியும். நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்காதவர்களாயிற்றே நீங்கள். இப்படிப்பட்ட உங்களின் குடும்ப விவகாரங்களில் நான் என்ன செய்ய முடியும்?’ என்று முதலில் சொன்னாலும், அவர் அவர்களுக்கு உதவிகரமாக இருந்தார். காஞ்சி பெரியவாளிடம் தீராத பக்தி கொண்ட பக்தர். அவரது கட்டுரை சமீபத்தில் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழில்மோடியின் மதச் சின்ன அடையாளமும், மதச் சார்பின்மையும்என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. (Link).

அந்த ஆங்கிலக் கட்டுரையை அடிப்படியாக வைத்து, அதில் தெரிவித்துள்ள மையக் கருத்தை இங்கு என் பாணியில் பதிவு செய்ய விழைகிறேன். முழு ஆங்கிலக் கட்டுரையை, மேலே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.


மோடி தமது காசி வெற்றியைக் கொண்டாடுவதற்கும், காசி மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, காசியில் கங்கைக் கரையில் கங்கா மாதாவை வணங்கும் விதமாக ஆரத்தி பூஜை செய்து வணங்கியதை, ‘இது செக்குலர் அரசியலுக்கு ஏற்புடையது அல்லஎன்ற குரல் எழப்பப் பட்டது. ஆனால், மோடி ஆஜ்மீர் தர்காவுக்கு அவர்களின் மத வழக்கப்படி தலையைச் சுற்றி மூடும்சடார்துணியுடன் சென்று வணங்குவது எந்த வகையில் செக்குலர் கொள்கையாக ஏற்றுக் கொள்ள முடியும்?’ என்று வினா எழுப்பினார். ஆனால் இந்த இரட்டை வேடம், செக்குலர் கொள்கை கொண்டாடும் நபர்களை எந்த விதத்திலும் பாதிக்காதது மட்டுமல்லாமல், அறிவு ஜீவிகளால் பாராட்டவும் படும். ஹிந்து ஹிந்துவாக இருந்து, தனது மதக் கொள்கையைக் கடைப்பிடித்தால், அதுசெகுலர்கொள்கைக்கு எதிரானதாகவும், முஸ்லீம் முஸ்லீமாக இருந்து தனது மதக் கொள்கையை அவர்களும் - மற்ற மத்த்தினருடன் கடைப்பிடித்தால், அந்தச் செயல்கள் செகுலர் கொள்கைக்கு ஏற்புடையது என்ற எண்ணம் தான் இந்தியாவில் நேருவிலிருந்து சோனியா காந்திவரை நிலைபெற்றுள்ளது. பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கையில் காலம் காலமாகச் சொல்லப்படும் மூன்று அம்சங்கள் - பொதுவான சிவில் சட்டம், இந்திய அரசியல் சட்டம் ஷரத்து 370 நீக்கம், ராமர் கோயில் - இந்தத் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஃபாசியாபாடில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில், ராமர் - அயோத்தியா கோவில் ஆகிய படங்களின் பிண்ணனியில் மோடி பேசியது மதப் பிரசாரம் என்று குற்றம் சாட்டப்பட்டு, தேர்தல் ஆணையம் அதற்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சோனியா காந்தி டெல்லி ஜிம்மா மசூதிக்குச் சென்று அங்குள்ள மதத்தலைவர்களிடம் முஸ்லீம்கள் எல்லோரையும் காங்கிரசுக்கு ஓட்டுப் போட வேண்டி, அதை ஏற்று மதத் தலைவர்களும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சோனியாவின் செய்கையை செகுலர் கொள்கைக்கு எதிரானது என்று செகுலர் மேதாவிகள் ஒருவரும் குற்றம் சாட்ட வில்லை. மேலும் பல மசூதிகளில் தொழுகைக்குப் பிறகு அரசியல் - யாருக்குப் போடவேண்டும் - என்பதை அந்தந்த இஸ்லாமிய மதகுருமார்கள் எந்தவித அச்சமோ - கூச்சமோ படாமல் பிரசாரம் செய்வதை எந்த அறிவு ஜீவிகளும் - இதில் இடது சாரிகளும் அடங்கும் - முனுமுனுப்பு எதிர்ப்பாகக் கூடச் சொல்வதில்லை. அது செக்குலர் கொள்கைக்கு ஏற்புடையதா? - என்று கூட அந்த அறிவு ஜீவி செகுலர் கூட்டத்தினர் நினைத்துப் பார்ப்பதோ - கேள்வி எழுப்புவதோ கிடையாது. அது சிறுபான்மையினரின் உரிமை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

முஸ்லீம்கள் தலையில் அணியும் வட்டமான குல்லாய் ஆராபிய முஸ்லீம்களின் மத அடையாளச் சின்னமாகும். அது கடந்த  பல ஆண்டுகளாக இந்திய முஸ்லீம்களின் மதச் சின்னமாக - காந்தி குல்லாய் காங்கிரஸ் கட்சியை அடையாளம் காட்டும் சின்னம் போல் - ஏற்பட்டு விட்டது. முஸ்லீம்களின் மதப் பண்டிகைகளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு, தலையில் அந்த ஒட்டியபடி உள்ள குல்லாயை அணிந்து கொண்டு, கஞ்சி சாப்பிடுவது, செகுலருக்கு எதிரான செயல் அல்ல என்பது தான் இந்தியாவில் பலரும் கருதி, ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம். ஆனால், மோடிக்கு இது உடன்பாடு இல்லை. ஆகையால், சென்ற வருடம் குஜராத்தில்சம்பாவனா உண்ணாவிரதம்இருந்த போது, ஒரு கூட்டத்தில் முஸ்லீம் ஒருவர் மோடிக்கு குல்லாயைக் கொடுத்த போது, அதை அன்போடு வாங்கிக் கொண்டு, அதை தலையில் அணியாமல், தமது பையில் வைத்துக் கொண்டார். இதை அப்போதும், இப்போதும் - ஏன், எப்போதும், மோடி முஸ்லீமிற்கு எதிரானவர், முஸ்லீம்களை அவமதிப்பவர் - என்ற எதிர்ப்புகளும், மீடியாவில் தீவிரமான எதிர்ப் பிரசாரங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றும் அதற்கு முடிவில்லை. மோடி அதற்கு அருமையாகப் பதில் சொன்னார்: ‘மற்றவர்களின் மதத்தின் சடங்குகளை அனுசரிப்பது தான் செகுலரிசத்தின் அடையாளம் என்று சொன்னால், முஸ்லீம்களும் திலகம் மற்றும் இந்துமதச் சின்னங்களை அணிந்தால் தான் அவர்கள் மதச் சார்பற்றவர்கள் என்று சொல்ல முடியும்.’ அதாவது, ஓட்டுக்காக மற்றவர்களின் மதச் சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உண்மையிலேயே தங்களையும், பிற மதத்தினர்களையும் ஏமாற்றுவதாகும். இந்த செகுலர் வேஷம் மோடிக்கு ஏற்புடையது அல்ல.

இதற்கு வித்திட்டவர் நேரு. அவர் கடவுளை நம்பாதவர். அது தான் செகுலர் என்ற நிலைக்கு அவசியம் என்ற கொள்கை வேரூன்றிவிட்டது. ஆனால், நேரு இப்போதுள்ள அரசியல் வாதிகளைப் போல், போலியாக, முஸ்லீம் குல்லாய் - இந்துக்களின் சடங்குகள் - ஆகியவைகளை ஏற்க மாட்டார். ஏற்காதது மட்டுமல்ல - வெளிப்படையாகவே எதிர்ப்பவர். இதனால் முஸ்லீம்கள் நேருவின் கொள்கைக்கு ஒத்துப்போகவில்லை. என்றாலும், இந்துக்கள் தங்களது மதச் சடங்குகளை வெளிப்படையாகச் செய்வதைத் தவிர்ப்பது தான் செகுலர் கொள்கையின் அடையாளம் என்று நினைத்துக் கடைப்பிடித்தனர்.

செகுலர் பற்றிய ஒரு முழு நாள் கருத்தரங்கம் 1980-ல் சென்னையில் நடந்தது. அதில் குருமூர்த்தி, என்.ராம், அருண் செளரி, சோ, மணி சங்கர் அய்யர் ஆகியவர்கள் கலந்து கொண்டார்கள். எப்போதும் போல், மணி சங்கர் அய்யர் அந்தக் கூட்டத்தில் சொன்னார்: “நான் ஒரு செகுலர் ஆசாமி. அதற்கான அடையாளம், நான் அய்யராக இருப்பினும், நான் பூணூல் அணிவதில்லை. மாட்டுக் கறி சாப்பிடுபவன்.’ மணி சங்கர் அய்யர் இப்படிப் பகர்ந்ததும், உடனேதாடி மழித்த முஸ்லீம்களும், பன்றிக் கறி சாப்பிடும் முஸ்லீம்களும் தான் செக்குலர் என்பதன் அடையாளமான முஸ்லீம்களா?’ என்ற விவாதம் எழுந்தது. ஆகையால் அந்தந்த மதத்தினர்கள் அவரவர்கள் மதச் சடங்குகளைக் கடைப்பிடித்து, ஒற்றுமையாக இருப்பது தான் உண்மையான செகுலர் கொள்கை என்பது இன்னும் இந்தியாவில் தெளிவுபடவில்லை. அந்தத் தெளிவைத் தான் மோடி இந்தியாவில் அத்தனை மக்களின் மனங்களிலும் - ஜாதி, மதம், இனம் பார்க்காமல் உருவாக்க முயன்று வருகிறார். அதில் மோடி வெற்றி அடைந்தால், மதத்தால் ஏற்படும் பிளவுகளும், கலவரங்களும் மறைந்து, அமைதியும் - வளர்ச்சியும் மலரும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017