யோக வாசிஷ்டம்
இந்தக் கட்டுரைக்கு மூலாதார முக்கிய ஆதாரம்: லகு யோக வாசிஷ்டம் என்ற ஆங்கில நூல்:
கே. நாராயண ஸ்வாமி அய்யர்- Link)
‘யோக வாசிஷ்டம்’ என்ற உபதேச வாசகங்கள் ராமாயணத்தில் உள்ளது. இது குரு வசிஷ்டர்
ராமபிரானுக்கு உபதேசம் செய்ததாகும். இது பகவத் கீதைக்கு இணையான ஒரு ஞானப் பொக்கிஷமாகும்.
திரிலோக
சஞ்சாரியான நாரதர் யோக வாசிஷ்டம் பற்றிச் சொன்ன விமரிசனமே அதன் உத்தம உயர்வுக்கு ஒரு
அத்தாட்சியாகும்: “பிரம்ம லோகத்திலும், சொர்க்கத்திலும், பூமியிலும் யோக விசிஷ்டம் போன்ற மகத்தான உபதேசத்தை என் செவிப்புலன்
கேட்டு புனிதம் அடைந்தது.”
யோக
வாசிஷ்டம் எந்தச் சூழ்நிலையில் உபதேசிக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
குருகுல
வாசம் முடிந்து ராமன் தன் சகோதரர்களுடன் தீர்த்த யாத்திரை போய்விட்டு வருகிறார். அந்த சமயத்தில்
உலக வாழ்க்கையின் நிலையாமை, அர்த்தமில்லாத வாழ்க்கை ஓட்டம் பற்றி எல்லாம் எண்ணி ராமனுக்கு
வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டிருந்தது. உற்சாகமில்லாமல் சோர்வாக இருந்தார்.
அந்த
நேரத்தில் தான் விசுவாமித்திர முனிவர் ராமரைத் தன்னுடன் காட்டுக்கு அழைத்துப் போக தசரதனின்
அனுமதி கேட்டு வந்திருந்தார். ஆரம்பத்தில் தயங்கினாலும் வசிஷ்டரின் அறிவுரையால் தசரதனும்
அனுமதி தந்திருந்தார்.
அந்த
சமயத்தில் ராமனின் விரக்தி மனநிலையைக் காண நேர்ந்த விசுவாமித்திரர், வசிஷ்டரிடம்
ராமனுக்கு உபதேசித்து மனம் தெளிவடைய வழிகாட்டச் சொல்கிறார். அப்படிப் பிறந்ததே
யோக வாசிஷ்டம்.
பகவத்
கீதையில் முதல் அத்தியாயம் முழுவதும் அர்ச்சுனனின் புலம்பல் தான். அதே போல் யோக
வாசிஷ்டத்திலும் முதன் காண்டம் முழுவதும் ராமனின் விரக்திப் பேச்சுக்களே.
‘பிறப்பு, இறப்பென்ற சம்சார வாழ்க்கையில் என்ன சுகம்? மனிதர்கள் இறக்கவே
பிறந்து, பிறக்கவே இறக்கிறார்கள். என் மனது கிராமத்து
நாய் போல் குறிக்கோளில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறது. கிடைத்துள்ள மேலான சுகத்தை இழந்து விட்டு மூங்கில் கூடையில்
அள்ளப்பட்ட நீர் போல் மனம் வீணாகிக் கொண்டிருக்கிறது.
அலைகடலை
அடக்கிக் குடித்து விடலாம். மேரு மலையைப் பெயர்த்து எறிந்து விடலாம். சுட்டெரிக்கும்
கனலை விழுங்கி விடலாம். ஆனால், மனதை அடக்குவது எளிதாக இல்லை. காலம் அனைவரையும், அனைத்தையும் விழுங்கி விடுகின்றது.’ - இப்படி எல்லாம்
மன அமைதியற்ற நிலைக்கான கசப்பான உண்மைகள் பலவற்றை ராமர் சொல்கிறார்.
கீதையில்
அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் இறுதியாகச் சரணடைந்து சொல்வது போல், ராமர் தமது
குருவான வசிஷ்டரிடம் கடைசியாக வேண்டுகிறார்: “சான்றோர்கள் உலகின் பிறப்பு இறப்புகளின் தன்மையை உணர்ந்து
சஞ்சலமற்ற நிலையை எவ்வாறு பெற்றாரோ அதனை எனக்கு உபதேசித்தருள வேண்டும்.”
அந்த
உபதேசங்களே யோக வாசிஷ்டம் என்று போற்றப்படுகிறது. அதில் சின்னச் சின்ன உதாரணக் கதைகள் உண்டு. அழகான உவமைகள்
உண்டு. எளிமையான வார்த்தைகளில்
வேதாந்த சாரம் உண்டு. மனதை உறுதியும், அமைதியும் படுத்தும் ஆத்ம ஞானம் உண்டு.
தத்துவ
விஷயமாகத் தோன்றும் ஐயங்களுக்கு தெளிவான விளக்கங்கள் தந்து முக்தியடையத் தேவையான அனைத்து
உபதேசங்களும் யோக வாசிஷ்டம் என்ற இந்த ஞான நூலில் உள்ளதால் இதற்கு ‘மோக்ஷோபாயி’ - அதாவது ‘முக்திக்கு
வழிகாட்டும் நூல்’ என்ற பெயரும் உண்டு.
வசிஷ்டர்
யோக வாசிஷ்டத்தில் சொல்லப்பட்ட முக்கிய கருத்துக்களின் தொகுப்பு:
v வேடனின் வலையில் இருந்து அல்லது பகைவனின் கூண்டிலிருந்து
சிங்கம் தன் முயற்சியால் இந்த சம்சாரமென்னும் கிணற்றிலிருந்து வெளிவர வேண்டும்.
v நிலையற்ற இந்த சம்சாரத்தில் வீழ்ந்து துயரப்படும் மனிதன்
உயர்ந்த சாஸ்திரங்கள், சத் சங்கம் இவற்றின் துணையோடு தனது அறியாமையை நீக்கிக் கொண்டு
ஆன்ம நாட்டம் பெற்று அனுபூதி நிலைக்கு உயர்தல் வேண்டும்.
v காலமெல்லாம் சுக போகங்களில் தம்மை இழந்து விட்டு, உடல் மற்றும்
மன நோய்களால் தள்ளாடும் முதுமையில் எதையும் சாதிக்க முடியாமல் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். எனவே ஆன்ம வித்தைக்கு
ஏற்ற பருவம் பால்யமும், வாலிபமுமே.
v முக்தியின் வாசலில் நான்கு துவார பாலகர்கள் உண்டு. அவை:
1. சமம்: புலன்களை தீமையில்லாத நல்ல வழிகளில் திருப்பி கட்டுப் படுத்துதல்.
2. விசாரம்: எதையும் ஆழமாய் சிந்தித்து தெளிந்து அதன்படி வாழ்தல். கொள்ளத்தக்கன
எவை, தள்ளத் தக்கன
எவை என்பதில் தெளிவாயிருத்தல்.
3. சந்தோஷம்: வேட்கைகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் பின் ஓடி சஞ்சலப்பட்டு
துயரம் கொள்ளாமல் தான் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து நிறைவாக, சந்தோஷமாய்
வாழ்தல்.
4. சத்சங்கம்: உண்மையான சாதுக்கள் மற்றும் அறநெறியில் உயர்ந்தோரை அணுகி
இருத்தல்.
இந்த நான்கு வழிகளில் ஒன்றையேனும் முழுமையாகப் பின் பற்றினால்
மீதி மூன்றும் தானகவே அமையும் என்கிறார் வசிஷ்டர்.
மனதை
அடக்குவதற்கான வழியை யோக வாசிஷ்டம் இப்படி விளக்குகிறது: ‘இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தால், மலைகளைப் பிளந்தது போல் இந்திரியங்கள் விஷப்பாம்புகளாக தலையெடுக்கும்
போதெல்லாம், விவேகம் என்ற
தடியால் தொடர்ந்து அடித்து நொறுக்க வேண்டும்.’
அப்படிச்
செய்தால் மனம் அடங்கி வசமாகி விடுமா, முத்தி கிடைக்குமா? என்றால், ‘இல்லை’ என்கிறார் வசிஷ்டர். அதற்கு பல ஜன்மா எடுக்க வேண்டும் என்கிறார். வசிஷ்டர் விளக்குகிறார்: ‘ராமா! ஜனன மரண ரூபமான
இந்த சம்சாரம் அனேக பிறவிகளில் சேர்ந்த பலனே. எனவே அது குறுகிய காலப் பயிற்சியால் மறைவதில்லை. வெகு காலம்
மிக விழிப்போடு, தொடர்ந்து செய்யும்
ஆன்மப் பயிற்சியால் மனமற்ற (அதாவது எண்ணங்களற்ற) நிலை தோன்றும். அப்போது மட்டுமே ஜனன மரண சம்சாரம் நீங்கி முக்தி கிட்டும்.’
‘சீறிப்பாய்கிற நெருப்புக்கு அருகில் உள்ளவன், அந்தத் தீ தன்னைத்
தீண்டாதிருக்கக் காட்டும் விழிப்புணர்வும், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கியவன் தன்னைக் காத்துக்
கொள்ள ஒரு துடுப்பாவது சிக்காதா என தவிக்கின்ற தவிப்பும், மலை உச்சியில் நிற்பவன் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
நழுவிப் போகாதிருக்கக் காட்டும் எச்சரிக்கை உணர்வும், ஜனன மரண சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி பெற விழைபவனிடம்
இருக்க வேண்டும்.’ - இந்த உபதேசங்களை
வசிஷ்டர் சொல்லக் கேட்ட ராமர் மனம் தெளிந்து ஞானம் பெற்றார் என்கிறது யோக வாசிஷ்டம்.
அத்தியாயம் 2: யோக வாசிஷ்ட முன்னுரை
யோக வாசிஷ்டம் என்பது இக-பர க்ஷேமத்திற்கு மனதைப் பக்குவப்படுத்தும் வழியினை விளக்கும்
உத்தமமான நூலாகும்.
இது வால்மீகி முனிவரால் வசிஸ்டர் ராமனுக்கு உபதேசம் செய்வதாக
அமைந்துள்ளது. ராமன் சிறுவயதில்
லோக சஞ்சாரம் செய்து திரும்பினான். அவன் பார்த்தவைகள், கேட்டவைகள் ஆகியவைகளால் மனம் சஞ்சலப்பட்டு விட்டது. இதை தகப்பன்
தசரதன் அறிந்து மிகவும் மனக்கிலேசம் அடைந்த தருணத்தில் தான் விஸ்வாமித்திரர் அரச சபைக்கு
வந்து, ‘ராமனை என்னுடன்
நான் செய்யும் யாகத்தைக் காக்க காட்டிற்கு அனுப்பி வைக்கவும்’ என்று தெரிவித்தார். தன் கோரிக்கை
ஏற்கப்பட்டதும், ராமனின் மனச்
சோர்வை அறிந்த விஸ்வாமித்திரர் ராமனது சஞ்சலத்தைப் போக்க குல குரு வசிஷ்டரை ராமனுக்கு
உபதேசம் செய்ய வேண்டினார். அதன் மூலம் பிறந்தது தான் யோக வாசிஷ்டம். இது தனிப்பட்ட
முறையில் ‘வசிஷ்டர் - ராமன்’ உபதேசமாக இல்லாமல், அந்த சம்பாஷணைகள்
அனைத்தும் மஹா ஜனங்கள் முன்னிலையில் அரச சபையிலேயே நடைபெற்றுள்ளது என்பது இதன் சிறப்பாகும். அனைவரும் பலன்
பெற வேண்டும் என்பது தான் இந்த யோக வாசிஷ்டத்தின் நோக்கம் என்பது இதன் மூலம் தெரிய
வருகிறது.
யோக வாசிஷ்டம் பல செய்யுட்களைக் கொண்டிருந்தாலும், தற்போது கிடைக்கப்
பெற்றவை 64,000 வரிகளைக் கொண்ட 32,000 பாடல்கள் மட்டுமே. இதுவே ப்ருஹத் (பெரிய) யோக வாசிஷ்டம்
என்று வழங்கப்படுகிறது. இதைப் படிக்க முடியாதவர்கள் இதன் சுருக்கப் பதிப்பான லகு
யோக வாசிஷ்டம் என்ற நூலைப் படிக்கலாம். இதில் 6000 ஸ்லோகங்கள் இருக்கின்றன. இந்த நூல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு காஷ்மீரத்தின் அபிநந்தா
என்ற பண்டிதரால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த யோக வாசிஷ்டம் இன்னும் சுருக்கப்பட்டு 230 பாடல்களாக 10 அத்தியாயங்களில் ‘யோக வாசிஷ்ட
சாரம்’ என்ற தலைப்பில்
எழுதப்பட்டுள்ளது. ஆனால், இதன் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை.
‘நான் யார்?’ என்ற கேள்வியை
எழுப்பி அதற்கான பதிலும் இந்த யோக வாசிஷ்டத்தில் விஸ்தாரமாக விளக்கப்பட்டுள்ளதை இங்கு
பதிவு செய்ய விழைகிறோம். ரமண மகரிஷியும் இதன் அடிப்படையிலேயே 6 பாடல்களைப்
புனைந்துள்ளது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த யோக வாசிஷ்டம் கீதை, உபநிடதங்கள் போன்று அவ்வளவு பிரபலமாக வில்லை என்பது ஒரு கசப்பான
உண்மையாகும். வேதாந்தப் பண்டிதர்களாலும்
இந்நூல் அதிகமாகப் பேசப்படுவதில்லை.
அதற்கான காரணத்தை ஊகித்து அறிவது நலம்.



‘அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி’ என்ற கொள்கை
அந்தப் பதவி வகிப்பவர்களின் புத்தி, திறமை, நடுநிலமை, ஒழுக்கம் ஆகிய குணநலன்கள் காலப்போக்கில் குறையவும், படிப்படியாக
அரசாட்சியும் பிரஜைகளின் வசமாயின. இதன் காரணமாக, எதையும் ஆராந்து செயல்படும் போக்கு ஏற்படும்போது பொது மக்கள்
பக்தி, கர்மம், யோக மார்க்கங்களிலிருந்து
ஞானமார்க்கத்தில் நாட்டம் செலுத்த ஆரம்பித்து உள்ளனர். மெளட்டிகமான பக்தி, கருணை இல்லாத கர்மம், இன்பமற்ற யோகப் பயிற்சி ஆகியவைகளில் நம்பிக்கை இழந்தவர்கள்
பலர், ஞானமார்க்கதில்
ஈடுபட்டு பூரண மன அமைதியைப் பெறுகிறார்கள்.
பக்தி, கர்மம், யோகம் ஆகியவைகள் மக்களை வெவ்வேறு கொள்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு மதங்களாக மக்களைப் பிரிக்கும்
சூழ்நிலை உண்டாகிறது. அதனால் பரஸ்பர கலகங்களும், அமைதிக்குப் பங்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஞானமார்க்கம்
மதம் - ஜாதி - இனம் ஆகியவைகளுக்கு
அப்பாற்பட்டதாகும்.
‘அனைத்து மதங்களின்
தெய்வமும் ஒன்று தான்’ என்று சத்தியப் பிரமாணமாகச் சொல்லும் வெவ்வேறு மதத்தினர்
ஒற்றுமையாக இருக்காமல், மதத்தின் பேரால் சண்டை சச்சரவு செய்வதேன்? இந்த நிலையை
ஞான மார்க்கம் ஒன்றால் தால் மாற்ற முடியும் என்பது யோக வாசிஷ்டம் சொல்லும் உண்மை.
‘தெய்வம் என்பது
என்ன? அதன் சொரூபம்
எவ்வாறு காணப்படுகிறது?’ என்ற பொதுவான கேள்விகளுக்கு ஏற்புடைய பதில்களால் மக்களின்
மனதில் மத ஒற்றுமை ஏற்பட வழி பிறக்கும். அதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது தான் யோக வாசிஷ்டமாகும்.
யோக வாசிஷ்டத்தின் ‘வைராக்கிய பிரகரணம்’ என்ற ஆரம்ப அத்தியாயமே ஒருவித ஞான விசாரணையில் தொடங்குகிறது. சுதீஷ்ணன் என்ற
ஒரு பிராமணன் அகஸ்தியர் ஆசிரமத்திற்குச் சென்று, அவரிடம் “மோக்ஷத்தை அடைய, சாதனம் செய்ய வேண்டியது கர்மமா அல்லது ஞானமா?” என்று கேள்வி
எழுப்புகிறான். அதற்கு அகஸ்தியர், ‘பறவைகள் எவ்வாறு
தம்முடைய இரண்டு இறக்கைகளையும் உபயோகித்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனவோ, அதே மாதிரி
மோக்ஷ சாதனத்திற்குக் கர்மம் - ஞானம் இரண்டையும் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு உதாரணமாக
ஒரு கதை சொல்கிறேன், கேள்’ என்று விளக்குகிறார்.
இதைப் போல் பல கதைகள் யோக வாசிஷ்டத்தில் உண்டு. இத்தகைய கதைகளின்
மூலம் சொல்லும் கருத்துக்கள் வாசகர்களின் மனத்தில் தெளிவை ஏற்படுத்தும். அவைகளைப் பற்றி
எல்லாம் எளிதான நடையில் வரும் அத்தியாயங்களில் விளக்க உள்ளோம்.
வாசிஷ்டத்தில் உள்ள சில முக்கிய கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு:
v ‘ஒரு கருத்தை
குழந்தை சொன்னால் கூட அந்தக் கருத்து சரியான காரணத்தின் அடிப்படையில் இருந்தால், அதை ஒப்புக்
கொள்ள வேண்டும். அதே போல், உலகத்தைப் படைத்த
பிரம்மாவின் கருத்தாக இருப்பினும், அது காரணத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்குமானால், அந்தக் கருத்தை
ஒரு பதர் போல் ஒதிக்கித் தள்ளி விட வேண்டும்’ என்ற அளவில் வசிஷ்டர் அந்தக் காலத்திலேயே உண்மை என்பது ஆராயந்து, ஏற்றுக் கொள்ளப்படவேண்டுமே
அல்லாது அது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமையக் கூடாது என்றே வலியுறுத்திவதாகப்
படுகிறது.
v காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தது என்ற பழமொழியை முதலில்
வெளிப்படுத்திய பெருமை யோக வாசிஷ்டத்தையே சாரும். இந்தப் பழமொழி இந்த நூலில் பல இடங்களில் அடிக்கடி சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒரு
இரண்டு நிகழ்வுகளுக்கும் நேரம் - இடம் ஆகியவைகளில் தொடர்பு இல்லாவிடினும், அவைகளுக்குள்
ஒரு தொடர்பு இருப்பதான மாயத் தோற்றத்தை உருவாக்கும் மனநிலையைக் காட்ட இந்தப் பழமொழி
கையாளப்படுகிறது.
v இன்னொரு கருத்தும் அடிக்கடி யோக வாசிஷ்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. ‘இந்த உலகத்
தோற்றம் ஒரு குழப்பத்தை உண்டாக்கும் தன்மை கொண்டது. ஆகாயம் நில நிறமாகத் தோற்றமளிப்பது, நம் கண்களை
ஏமாற்றும் ஒரு மாயத் தோற்றமே. ஆகையால், மனம் இத்தகைய மாயத் தோற்றங்களால் மயங்கக் கூடாது. அத்தகைய தோற்றங்களைப்
புறக்கணிக்க வேண்டும்.’
v இந்த சாஸ்திர நூலின் மூலமாக மட்டுமே, ஒருவன் எக்காலத்துக்கும்
எது நல்லது என்பதை அறிந்து கொள்ள முடியாது. ஆகையால், பரப்பிரம்மத் தத்துவத்தை முழுமையாக உணர்ந்துகொள்ள சுய அறிவு
மற்றும் இறுதியான மோக்ஷம் ஆகியவைகளைப் பற்றிச் சொல்லும் வேறு எந்த சமயநூலகளைப் படித்தும்
தெளிவு பெறலாம். ஆனால் ஒன்றை
மட்டும் மிகவும் ஆணித்தரமாகச் சொல்லுகிறேன். இந்த நூலை தினமும் ஒரு சில பக்கங்களையாவது படிக்கவும். அப்படிப் படிக்கும்
போது, மனக் கவலைகள்
நீங்குவதை அவர்கள் உணர்வார்கள். முதல் வாசிப்பில் விளங்காதவைகள் எல்லாம், மீண்டும் அவைகளைப்
படிக்கும் போது, உங்களுக்குத்
தெரிய வரும். தெளிவு பிறந்து, மனம் தூயமை
அடையும்.
|
ஸ்ரீராமபிரானின் மனக்கிலேசம்
ராமன்
சிறுவனாக இருக்கும் போதே நான்கு வேதங்கள், மற்றும் அனைத்துத் துறைகளில் சொல்லப்பட்ட அறிவு சார்ந்த விஷயங்கள்
ஆகியவைகளில் தேர்ந்து தனது இளமைக் காலத்தை மிகவும் சந்தோஷமாகவும், விளையாட்டாகவும்
கழித்தான். அதற்குப் பிறகு, ராமனுக்கு பல
க்ஷேத்திரங்களுக்கும், புனிதமான ஆஸ்ரமங்களுக்கும் தேசாந்திரமாகச் செல்ல ஆசைப்பட்டான். அதைச் செயல்படுத்துவதற்காக, நீல வர்ண சியாமளனான
ராமன் தனது தந்தையான தசரத சக்ரவர்த்தியை ஒரு அன்னம் போல் சென்று அடி பணிந்து வேண்டினான்: ‘தந்தையே! தபஸ்விகளின்
புனிதமான குடில்களுக்குச் சென்று அவர்களின் யாகம், தபஸ் ஆகியவைகளை நேரில் பார்க்கவும், பல புனித ஸ்தலங்களைத்
தரிசிக்கவும் நான் விழைகிறேன். இதற்கு தாங்கள் உத்தரவு கொடுக்க வேண்டுகிறேன்.’ தந்தை தசரதரும்
தமது குலகுருவான வசிஷ்டரைக் கலந்து ஆலோசித்து, அவரது அனுமதியுடன், ராமனின் வேண்டுகோளுக்கு இசைந்தார். ‘ராமா, அதிக நாட்கள்
எடுத்துக் கொள்ளாமல், சீக்கிரம் திரும்பி வா’ என்று தசரதர் சொல்லி அனுமதி வழங்கினார்.
ராமன்
தமது சகோதர்களுடன் ஒரு நல்ல நாளில் தமது புனித யாத்திரையைத் தொடர்ந்தார். கோசலை நாட்டைக்
கடந்து பல ஆஸ்ரமங்கள், பாலை வனங்கள், அடர்ந்த காடுகள், துறைமுகங்கள், நகரங்கள், மலைகள் என்று அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து, முடிவாக நாடு
திரும்பி, தந்தையிடம்
விளக்கமாக தமது பயணத்தைப் பற்றி ராமன் சொன்னான். பல தேசங்களில் கடைப்பிடிக்கப்படும் வித விதமான பழக்க வழக்கங்களையும்
ராமன் தந்தையிடம் தெரிவித்தான்.
அப்போது
ராமனுக்கு 15 வயது. இந்தச் சமயத்தில்
கோடை காலத்தில் வரண்ட நதி போல், ராமனின் சிவந்த முகம் ஒரு வெள்ளைத் தாமரைப் பூப்போல் வாடியது. ராமன் பத்மாசனத்தில், தாடையில் கைகளை
வைத்துக் கொண்டு, நெடுநேரம் அசையாமல் இருக்க ஆரம்பித்து விட்டான். அன்றாட வேலைகளில்
ராமன் மனம் செலுத்த வில்லை. இதைக் கவனித்த ராமனின் சேவகர்கள் பயந்து போய், அதற்கான காரணத்தை
ராமனிடமே கேட்டார்கள்.
ராமன், ‘என் மனம் சஞ்சலம்
அடைந்துள்ளது. தினசரி செய்ய
வேண்டிய கர்மாவில் ஈடுபாட என்னால் முடியவில்லை’ என்று தெரிவித்தான். உடனே, சேவகர்கள் இந்த ராமனின் நிலையை தசரதரிடம் தெரிவித்தனர். தசரதர் ராமனை
வரவழைத்து, தம் மடியில்
உட்கார வைத்து, ராமனின் இந்த
மன நிலைக்கான காரணத்தைச் சொல்லும் படிக் கேட்டார்.
ராமன்
பதில் சொல்லாமல், தந்தையை வணங்கி, விடை பெற்றுச் சென்று விட்டான்.
இந்த
நிலையில் தான் விஸ்வாமித்திரர் வந்து ராமனைத் தம்முடன் தமது வேள்வியைக் காக்க அனுப்பும்
படி வேண்டினார். முதலில் தயங்கிய
தசரதர் வசிஷ்டரின் ஆலோசனைப் படி ராமனை விஸ்வாமித்திரருடன் அனுப்ப சம்மதித்தார்.
இருப்பினும், தசரதர் ராமன்
மனம் குழப்பி இருப்பதற்கான காரணத்தைச் சொல்லும் படி ராமனின் சேவகர்களைப் பணித்தார்.
சேவகர்கள்
சக்ரவர்த்தி தசரதரைப் பணிந்து ராமனின் நிலையை இவ்வாறு விளக்கினார்கள்:’பல முறை நாங்கள்
ராமனின் கால்களில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்ட பிறகு தான் தினசரி செய்ய வேண்டிய
கர்மாக்களைச் செய்கிறார். ‘பிள்ளை பெற்றல், செல்வம் திரட்டல், வீடு-வாசல் கட்டல் ஆகியவைகளில் என்ன சுகம் இருக்கிறது? இவைகள் எல்லாம்
உண்மையான சுகத்தைக் கொடுக்குமா? - என்று ராமர் சொல்லுகிறார். ராமருக்கு தூய வெள்ளை ஆடைகளிலோ அல்லது ஆறுவிதமான ருசிகளிலோ (காரம், புளிப்பு, திதிப்பு, கரிப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகியவைகள்), நல்ல நீரைப்
பகிர்வதிலோ ஆர்வம் இல்லை. துறவியைப் போல் எதிலும் அபிமானம் இல்லாமலும், அரசாங்கச் செயல்களில்
ஈடுபாடு கொள்ளாமலும் ராமர் இருக்கிறார். இன்பம் - துன்பம் ஆகியவைகளால் ராமர் பாதிக்கப்படவில்லை. ‘தமது வாழ்க்கையே
வீண்’ என்ற விரக்தியில்
ராமர் ஒரு ஜீவன் முக்தி அடைந்தவர்கள் போல் காணப்படுகிறார். செல்வமே தீராத ஆபத்தைக் கொடுக்கும் மூலாதாரம் என்ற மன நிலையில்
ராமர் செயல்படுகிறார். ராமரின் மனத்தில் இடம் பெற்றுள்ள எண்ணங்களின் ஆழத்தை எங்களால்
அறிய முடியவில்லை. ஞானிகள் பலர் அடங்கிய இந்த சபையில் உள்ளவர்கள் தான் எங்களது
இளம் வயது யுவராஜாவான ராமரிடம் உயர்ந்த தத்துவங்களையும், குணங்களையும் எடுத்துக் கூறி, ஒரு சிறந்த அரசராக ராமரை உருவாக்க வேண்டும்.’
இதைச்
செவியுற்ற வசிஷ்டர், ‘உடனே ராமரை இங்கே அழைத்து வரவும்’ என்று உத்திரவு
பிறப்பித்தார். ‘ராமர் அனைவராலும்
நேசிக்கப்பட்டவர். கூட்டத்திலிருந்து திசைமாறிச் சென்று தவிக்கும் ஒரு மானைப்
போல் ராமர் இருக்கிறார். ராமர் ஒரு பெரிய குழப்பத்தில் மூழ்கி இருக்கிறார். இது ஒரு விபத்து
போல் நிகழ்ந்துள்ளது. என்றாலும், இது உயர்ந்த ஞானத்தை அடையக் கிடைத்த ஒரு படிக்கல்லாகும். உலக ஆசைகளிலிருந்து
விடுபட வைராக்கியம் அவசியம். விவேகம் உண்மையைப் பொய்யிலிருந்து இனம் காண உதவும். எங்களைப் போல்
ராமர் உயர்ந்த பிரம்ம நிலையை எய்துவார்.அதன் பிறகு, ராமரின் மனதிலே உள்ள மாயையான சந்தேகங்கள் பல விதமான ஆத்ம
விசாரங்களால் விலகும். ராமரின் மனது முழுமையாக குழப்பங்களிலிருந்து விடுபட்டு, பழைய படி சந்தோஷமாக
தமது அனைத்து கர்மாக்களையும் எந்தவித குறைவின்றிச் செய்வார் ’ என்று வசிஷ்டர்
சபையோர்களைப் பார்த்துச் சொன்னார்.
வசிஷ்டர்
இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே, ராமர் சபைக்கு வந்தார். சமையிலுள்ள அனைவரையும் வணங்கினார் ராமர்.
ராமரை
அன்போடு தமது மடியில் வந்து அமர தசரதர் வேண்டியும், ராமர் தமது மேல் துண்டைத் தரையில் விரித்து, அதில் அமர்ந்து
கொண்டார்.
தசரதர்
ராமனைப் பார்த்துச் சொன்னார்: ‘என் அருமை ராமா! நீ அறிவின் சிகரம். அனைவரும் உன்னிடம் உயர்ந்த நிரந்தரமான அருளை அடையக் காத்திருக்கும்
போது, நீயே மனம் கலங்கலாமா? இது அஞ்ஞானிகளின்
செயல்களல்லவா? குல குருவும்
பிரம்ம ரிஷியுமான வசிஷ்டர் இருக்கும் போது ராமா, நீ மனம் கலங்கலாமா? உன்னுடைய தற்போதைய மனக் கலக்கம் நீங்குவது எப்போது?’
அப்போது
வசிஷ்டர் பேச முயன்ற போது, அதைத் தடுத்து, விஸ்வாமித்திர்ர் ராமரைப் பாரத்துச் சொன்னார்: ‘ஐம்புலன்களையும்
வென்ற ராமா! நீயே குழப்பசமுத்திரத்தில்
மூழ்கி இருப்பது தகுமா? அஞ்ஞானத்தில் உழலும் அறிவிலிகள் அதிகமாக இருக்கும் இந்த உலகத்தில், ஞான மூர்த்தியாகிய
உன்னிடம் இந்த மயக்கம் வர வேண்டிய அவசியமே இல்லையே! ராமா, நீ மனம் திறந்து பேசு’
ராமன்
பிறகு சபையினரைப் பார்த்து தனது மனக் குழப்பத்திற்கான காரணங்களை விவரித்தான்.
செல்வம்: குடும்பத்தில் குழந்தைச் செல்வம் இருந்தால் மட்டும், அந்தக் குடும்பம் சந்தோஷமாக இருக்க முடியாது. அதனால்
அந்தக் குடும்பத் தலைவனுக்கு பலவிதமான ஆபத்துக்கள் வரக்கூடும். அதே போல் தான், பெரும் செல்வமும் மனித மூளையில் பலவிதமான
எண்ணங்களை உருவாக்கி, மன நிம்மதியைக் குலைத்து விடும்.
ஆகையால், பணம் மனிதனுக்கு அருளை அளிக்காது.
ஒரு அரசன் தன்னை விடப் பலசாலியான அரனுடன் - அந்த
அரசன் எப்படிப் பட்டவனாக இருப்பினும், நட்பு பாராட்டுவதைப் போல்,
பணம் படைத்த ஒருவன் ஞானிகளால் வெறுக்கப்பட்டாலும், அவனை அண்டி, அடைக்கலம் பெறுவது எவ்வளவு கேவலம்?
செல்வத்தைப் பார்த்த உடன் யார் தான் பனிக்கட்டி போல் மனம் உருகிப் போக
மாட்டார்கள் அல்லது செல்வத்தினால் வரும் பலவிதமான விஷம் போல் உள்ள தீமைகளை ஞானிகள்
பேசினாலும், செல்வத்தின் மூலம் பெரும் சந்தோஷத்தால் கவரப்படுவதைப்
பார்க்கிறோமே! சிவப்பு ரத்தினக் கல் தூசியால் ஒளி மங்கி விடுவதைப்
போல், அனைத்துப் பேர்களும் தங்களது உறவினர்களுக்கு நன்மையோ அல்லது
தீமையோ - அறிவாளியோ அல்லது ஏழையோ அல்லது தீரர்களோ - எந்த நிலையில் இருப்பினும், இந்த செல்வத்தின் மோகத்தில்
மூழ்கி, கீழாகச் சென்று விடுகிறார்கள். இந்த செல்வ மயக்கத்தால், அப்பழுக்கில்லாத மனிதர்களையும்,
சொன்ன சொற்களைக் காப்பாற்றும் வீரர்கள்/அரசர்கள்
ஆகியவர்களை இந்த உலகத்தில் காண்பது மிகவும் அரிதாகும். மனம் கவரும்
செல்வம் நிரந்தரமான ஒன்றல்ல. உண்மையில் கிணற்றில் ஒரு பாம்பு
சுற்றி இருக்கும் ஒரு கொடியில் பூத்த மலர் எப்படி ஒருவருக்கும் பயன்படாத பொருளாக இருப்பதைப்
போல் தான் அந்தச் செல்வம் பயன்படாது.
அத்தியாயம் 5: ராமனின் கருத்துக்கள் - வாழ்க்கை & அஹங்காரம்
வாழ்க்கை
பற்றி ராமன் சொன்ன கருத்துக்கள்:
அத்தியாயம் 4: ராமனின் மனக்கிலேசத்தின் மூல காரணங்கள்
ராமன்
தன் மன நிலையை அரச சபையில் இப்படி விளக்கினான்:
‘தசரத சக்ரவர்த்தியின் வீட்டில் பிறந்த காரணத்தால், நான் அனைத்து
அறிவு நூல்களிலும் தேர்ச்சி பெற்றேன். மதம் போதிக்கும் வழிகளையே நான் மிகவும் கடுமையாகக் கடைப்பிடித்தேன். பிறகு, தேசாந்திரமாக பல நாடுகளுக்குச் சென்றேன். பல புண்ணிய
நதிகளில் நீராடினேன். இந்த யாத்திரையை முடித்து அரண்மனை திரும்பியதும், உலக பந்தங்களில்
உள்ள ஆசைகள் அனைத்தும் என்னிடமிருந்து நீங்குவதை உணர்ந்தேன். அழிவு தான்
உலகத்தில் உலவுவதாக உணர்ந்தேன். பிறப்பது இறப்பதற்கே, இறப்பது மீண்டும் பிறப்பதற்கே என்பது தான் உலக நியதியாக இருப்பதைக்
கண்டேன். ஆகையால், உலகமே ஒரு மாயையாகத்
தோன்றியது. உலகத்திலுள்ளவைகள்
அனைத்தும் வலியை மட்டும் தான் தருகிறது, அவைகள் அனைத்திலும் ஆபத்துக்கள் நிரம்பி வழிகின்றன. இவைகள் மனத்தின்
நிகழ்வுகளாக இருப்பதுடன் அவைகள் வெறும் அழியும் செல்வத்தையே அடைய உதவுகின்றன. ஆகையால், இதன் மூலம்
பெறும் பொருட்கள் மற்றும் அரசு பதவிகளால் அடையும் இன்பங்களால் என்ன பயன்?
இவைகளைப்
பற்றி நாம் ஆழ்ந்து ஆராய்ந்தால், ‘நான் யார்?’ என்ற கேள்வி எழும். இந்த நான் என்பது இந்த எனது உடம்பா? ஆத்மாவிற்கு
அனித்தியமான அனைத்தும் பொய் அல்லது மாயை என்பதை உணர வேண்டியது அவசியமல்லவா? இந்த உலகத்தில்
உள்ள அனைத்துப் பொருட்களும் மாயை என்றால், இவைகளை உற்பத்தி செய்யும் பொருட்கள் உள்ள உலகத்தை நேசிக்கும்
எண்ணம் என்னிடம் மறையத்தானே செய்யும். ஒரு பிரயாணி பாலைவனத்தில் காணும் கானல் நீர் எவ்வாறு உண்மையான
நீர் இல்லையோ அதைப் போல் அந்தக் கானல் நீர் போன்ற உலகப் பொருட்களில் மனம் செலுத்துவது
பேதமை அன்றோ? ஆகையால், வலியிலிருந்து
விடு படும் இந்திரிய சுகத்திற்கு அப்பாற்பட்ட நிலையைக் காட்டும் பாதையை அறிய நான் முயன்று
வருகிறேன். ஒரு பழைய மரம்
எரியும் உஷ்ணம் போல், என் உள் மனம் அனல் போல் தகிக்கின்றது. எனது அஞ்ஞானம்
என் வயிற்றில் மாட்டிக் கொண்ட ஒரு கல்லைப் போன்று எனக்கு தாங்க முடியாத வலியினைக் கொடுக்கின்றது. இந்த என் நிலையைப்
பார்த்தால், என் உறவினர்கள்
மிகவும் கவலைப் படுவார்கள் என்பதால், நான் என் துக்கத்தை வாய்விட்டுக் கதறி அழக்கூட முடிய வில்லை.’
இதன்
பிறகு ராமன் பலவிதமான பொருள்கள் பற்றி தனது சந்தேகங்களையும், கருத்துக்களையும் தெரியப்படுத்தினான். ராமன் கீழ்க்கண்ட பொருள்களின் தலைப்புகளில்
தெரிவித்த கருத்துக்கள் அரச சபையோரை ராமனின் ஆழ்ந்த சிந்தனை செய்யும் திறனையும்,
உண்மையை அறியும் ஆர்வத்தையும் நன்கு வெளிக்காட்டியது.
செல்வம், வாழ்க்கை, அஹங்காரம், மனம்,
ஆசைகள், குழந்தைப் பருவம், இளமைப் பருவம், காமம், வயோதிகம்,
நேரம், அழிக்கும் சக்தி, அறிஞர்களின் தொடர்பு - ஆகியவைகள் பற்றிய ராமனின் கருத்துக்களும்,
சந்தேகங்களும் இனி இங்கு குறிக்கப்படும்.
முதலில்
செல்வம் பற்றி ராமனின் கருத்தினை அறிவோம்.
அத்தியாயம் 5: ராமனின் கருத்துக்கள் - வாழ்க்கை & அஹங்காரம்
வாழ்க்கை
என்றாலே அது பிராணம் என்ற மூச்சுக் காற்றில் குடிகொண்டுள்ளது. அந்தப் பிராணனும்
ஒரு இலையின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு மழை நீர்த் துளியைப் போல் ஒட்டிக்
கொண்டிருக்கிறது. அந்த நீர்த் துளியான பிராணனும் உடலிருந்து எந்த நேரத்திலும்
வெளியே சென்று விடும்.
பிராணன் வெளியே செல்வது ஒரு பைத்தியக்காரன் எந்த நேரத்தில்
என்ன செய்வான் என்று எதிர்பார்க்க முடியாதது போலவே நிகழும். ஐம்புலன்களின்
ஆசைகள் விஷப்பாம்புகள் போல் தலைகாட்டி, உண்மையான ஞானமில்லாதவர்களின் மனங்கள் கொண்ட மனிதர்களாக தங்கள்
வாழ்க்கையை மாய்த்துக் கொள்வார்கள். இந்த உடம்பை நிஜம் என்று கருதும் மாயையான கருத்தில் ஒரு மின்னல்
போல் மயங்கும் இந்த வாழ்க்கையில் இன்பம் காண நான் விழையமாட்டேன்.
இந்த உலக வாழ்க்கை
என்பது ஓடும் மேகம் அல்லது எண்ணை இல்லா விளக்கு அல்லது கடல் அலைகள் போன்றது. வாழ்க்கை என்பது
நிஜம் அல்ல. நிஜம் போல்
தோன்றும் மாயை. அது எல்லை இல்லா
அஞ்ஞானத்தில் மூழ்கியதாகும். உண்மையான மனித வாழ்விற்கு வழிகாட்டாது. மீண்டும் மீண்டும்
பிறக்கும் வலியைத் தான் அந்த வாழ்க்கை தரும். இந்த வலிகளிலிருந்து மீளும் ஆன்மீக வாழ்க்கையை அடைவது தான்
மிகச் சிறந்த ஆன்மீக அறிவாகும். அது தான் நிலையான பேரானந்தத்தை அருளும்.
அங்கு வாழ்வின்
வலிகள் இருக்காது. மரங்கள், மிருகங்கள் அல்லது பறவைகள் ஆகியவைகள் பற்றிய சிந்தனைகளில்
காலம் கழிக்காமல், உயர்ந்த ஆன்மீகத் தேடல்களில் மனத்தை ஈடுபடுத்துவதுதான் உத்தமம். இதன் மூலம், மறுபிறவியிலிருந்து
விடுதலை அடையலாம். மற்றவர்கள் எல்லாம் கிழக் கழுதைகளுக்குச் சமம்.
எல்லாவற்றையும்
அறியவேண்டும் என்று அலையும் மனோபாவம் உள்ளவனுக்கு படிப்பு ஒரு பெரும் சுமையாகும். அமைதி இல்லா
மனம் கொண்டவனுக்கோ, அவன் மனமே ஒரு சுமையாகும். ஆனால், ஆசை போன்ற கறைகளைக் கொண்ட மனிதர்களுக்கும், ஆத்ம ஞானம்
ஒரு பெரும் சுமையாகும்.
இந்தச் சுமைகளைப் போக்க வழி என்ன?
தனது ஆத்மாவின்
ஒளியிலே சுகம் காண வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த அழகான உடம்பு, வாழ்வு, மனம், புத்தி, அஹங்காரம், செய்கை ஆகியவைகள் அனைத்தும் சுமக்க முடியாத சுமையாக இருக்காது. இளமையாக இருக்கும்
போதே இறந்தாலும், அதை அறிவாளிகள் வஞ்சகர்களின் நட்பை வெறுத்துத் தள்ளுவது போலவே
கருதுவார்கள். நிலையில்லா இன்பம், அழியும் தன்மை ஆகிய குணங்கள் கொண்டது இந்த உலக வாழ்க்கை. ஆகையால், இந்த வாழ்க்கையைப்
போல் தள்ளத் தகுதியானது ஒன்றும் இல்லை.
அஹங்காரம் பற்றிய ராமனின் கருத்துக்கள்:
அஹங்காரம்
என்பது நான் என்ற மமதை கொண்ட மனத்தினைக் குறிக்கும். அத்தகைய மனம் உடையர்களின் மாயமான மயக்கும் எண்ணங்களால் ஜனிக்கும்
காரியங்களால் உண்டாகும் விளைவுகள் மிகவும் கெடுதல்களைக் கொடுக்கும். இந்த பயங்கரமானதும், மனத்தை மயக்கி
ஹானி உண்டாக்கும் அஹங்காரத்தைக் கண்டு நான் மிகவும் பயம் கொள்கிறேன்.
மனச் சஞ்சலங்கள், ஆபத்துக்கள், வாழ்வின் வேண்டாத
அதீதமான செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் இந்த அஹங்காரத்தின் மூலம் வெளிப்படுகின்றன. இந்த அஹங்காரத்தை
விட மோசமான பெரிய சத்துரு இந்த உலகில் கிடையாது. இந்த சத்துருவின் பிடியில் வெகு நாட்கள் இருந்த காரணத்தால், என் மனம் மிகவும்
கொந்தளிப்புக் கொண்ட நிலையில் இருக்கிறது. இதனால், ஆகாரம் எனக்கு ருசிக்க வில்லை. நீர் அருந்தவும் பிரீதி இல்லை.
இப்படி அவதிப்படும் நான் மற்ற இன்பங்களைப் பற்றி என்ன சொல்ல
முடியும்?
அஹங்காரத்தின்
அடிப்படையில் செய்யப்படும் அன்றாடச் சடங்குகள், யாகங்கள், இன்பங்கள் ஆகியவைகள் அனைத்தும் வீணாகும். ஆகையால்,
உண்மையான வாழ்க்கைத் தத்துவம் இந்தப் பாழான அஹங்காரத்தை முற்றிலும்
துறப்பதில் தான் உள்ளது. இந்த அஹங்காரம் ஒருவனின் மனத்தில் பரவி தெளிவற்ற நிலையை உருவாக்கும்
வரை ஆசைகள் அதிகமாக நம்மிடம் தோன்றும்.
அஹங்காரத்தின் பிடியிலிருந்து என்னை விடுவிப்பதற்காக நான்
அனைத்து கர்மாக்களையும் விட்டுவிட்டாலும், என்னுடைய வேதனைகள் நீங்கவில்லை. எனது ஆத்மாவையும் நான் அறிய முடியவில்லை. ஆகையால், ரிஷிகளே! இந்த சாபம்
போன்ற அஹங்காரம் தான் இநத உலகத்து எல்லா வகையான அபத்துக்களுக்கும் மூல காரணமாகும். இந்த அஹங்காரம்
அறிவையும், சரியாகத் தேர்வு
செய்யும் திறனையும் சிதறடித்து மனத்தில் இடம் பிடித்து, நம்மை பயித்திய நிலைக்குக் கொண்டு சென்றுவிடும். ஆகையால், அப்படிப்பட்ட அஹங்காரத்திலிருந்து நான் விடுபட நீங்கள் என்னை
ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
அத்தியாயம் 6: ராமனின் கருத்துக்கள் - மனம் & ஆசைகள்
மனம்:
தங்க ஆபரணங்களை அணிந்த ஜொலிக்கும்
பெண்களைப் போல் அல்லது சூரிய கிரணங்கள் தாமரை மலரை மலரச் செய்வதைப் போல், அந்த ஆசைகள் மனிதனை வெளியிலிருந்து ஆட்கொண்டு ஆழமாக தாக்கும். இப்படிப்பட்ட மனத்தில் எழும் ஆசைகள் ஒரு வைர முனைபோல் அல்லது கூரிய முனை உள்ள
வாள் போல் அல்லது உலைத் தீயில் சூடாக்கிய இரும்பிலிருந்து தெரிக்கும் நெருப்புக் கனல்கள்
போல் ஒரே நொடியில் மேரு மலை போல் இருக்கும் பெரிய மனிதர்களையும் அல்லது அறிவார்ந்த
அழகிய மனிதர்களையும் அல்லது வீரம் சொரிந்த போர் வீர்ர்களையும் ஒன்று மில்லாத நிலைக்குத்
தள்ளிவிடும். இந்த உடம்பு வெறும் குடல், தசை நார்கள் ஆகியவைகளால் ஆனது. அது மாற்றங்களுக்கு உட்பட்டது.
அது ஒரு சமயம் குண்டாகவும், பிற சமயங்களில் ஒல்லியாகவும்
மாறும் தன்மை கொண்டு, வலிக்கு அடிமையாகி இந்த வெற்று உலகத்தில்
உலவும். இவ்விதம் துன்பம்-இன்பம் என்று
மாறி மாறி கஷ்டப்படும் இந்த உடம்பில் தான் அஹங்காரம் ஆட்கொண்டு, பத்துவிதமான இந்திரிய பசுக்கள், சங்கல்பம் செய்யும் மனம்
என்ற வேலையாள், குரங்கு குணமுள்ள நாக்கைக் கொண்ட ஆசைகளுக்கு கூட்டாளி
ஆகியவைகள் ஒன்று சேர்ந்து தொல்லை கொடுக்கும். செல்வம்,
ராஜ்யம், செயல்கள் ஆகியவைகளை அனுபவிக்க அவசியமான
இந்த உடம்பு எப்போதும் நிரந்தரமானதாக இருப்பின், இந்த உடம்பை
நேசிப்பதில் தவறில்லை. ஆனால் இந்த செல்வம் போன்றவைகள் அனைத்தும்
யமன் வந்த பிறகு மறைந்து விடும். நமது உடம்பு வெறும் ரத்தமும்
- சதையும் கொண்டு, அழுகி விடும் தன்மை கொண்டிருப்பதால்,
இதில் என்ன அழகைக் காண முடியும்? ஏழை- பணக்காரன் என்ற பேத மில்லாமல் இந்த உடம்பு எந்தவித பாகுபாடு மின்றி வளர்ந்து-அழியும் தன்மை கொண்டது. தோன்றி மறையும் மின்னல் அல்லது
கோடை மேகம் ஆகியவைகளை நிரந்தரம் என்று நம்புபவர்கள் தான் இந்த உடல் சாஸ்வதம் என்று
அந்த உடலையே பேணிக்கொண்டு உலகில் உழலுவார்கள்.
அத்தியாயம் 6: ராமனின் கருத்துக்கள் - மனம் & ஆசைகள்
மனம்:
ஆசை மற்றும் வெறுப்பு ஆகிய பொருட்களில்
எனது மனம் கவரப்பட்டு,
புயல் காற்றில் தத்தளிக்கும் லேசான இறகு போல் அந்த மனம் ஊசலாடுகிறது.
தெருவில் திரியும் நகர நாய்
போல் அந்த மனம் காமத்தைக் கிளரும் அம்சங்களில் ஈடுபட்டு, ஞானிகளின் சகவாசத்தைத் தவிர்க்கும்
நிலையை அடையும். ஆனால், இந்த நிலையினால்
எந்த ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை. மூங்கில் பூவினால் நீரைத்
தக்க வைத்துக் கொள்ள முடியாது. அதைப் போல் தான் இந்த அல்லாடும்
மனது உண்மையான இன்பத்தை தக்க வைத்துக் கொள்ளாமல் தவிக்கும். அதீதமான
செல்வத்தைக் கண்ட உடன் அப்படிப் பட்ட மனம் நீர் சுழற்சிபோல் கவர முனையும். வெறிகொண்ட நாய் போல் மனம் ஆசைகளை ஆலிங்கனம் செய்து, மோசமான
அறியாமையால் அவதிப்படும். சிறிய துரும்பு காற்றில் எவ்வாறு அங்கும்
இங்கும் அல்லாடுகிறதோ, அதே போல் எனது மனதும் எல்லாவிதமான மயக்கங்கள்
- வலிகள் ஆகியவைகளால் தாக்கப்பட்டு, ஒரு பெரிய
வெற்றிடத்திற்கு நான் தள்ளப்படுகிறேன். ஆபத்தான இந்த மனது,
மாயை என்ற குணத்தால் சூழப்பட்டு, குழப்பமான ஒரு
வாலிபன் போல் பலவிதமான உலக பந்தங்களில் ஈடுபட வைக்கிறது. ஒரு
நொடியில், மனம் இந்த பூமியிலிருந்து கீழ் உலகத்திற்கும்,
கீழ் உலகத்திலிருந்து இந்த பூமிக்கும் பாய்ந்து செல்லும் தன்மை கொண்டது.
கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படுத்தும் இற்றுப் போன கயிறுபோல்
இந்த ஏமாற்றும் மனம் என்னை உயர் நிலைக்கு உயர்த்துவது போல் தோற்றமளித்தாலும்,
அது உண்மையிலேயே என்னை மேலும் கீழ் நிலைக்குத் தள்ளி விடும்.
இந்த விஷமான மனம் ஒரு பூதமாகும். அது தீயை விடக்
கொடூரமானது. பெரிய மலையை விட ஏறமுடியாத கடினமானது. ஒரு பெரிய வைரத்தை விட உறுதியானது. சமுத்திரத்தின் நீரைக்
குடித்து விடலாம். மஹா மேரு மலையைக் கூட நகர்த்திவிடலாம்.
கொழுந்து விட்டு எரியும் நெருப்பையும் விழுங்கி விடலாம். ஆனால், நமது மனத்தை அடக்குவது என்பது முடியாத செயலாகும்.
அனைத்துத் தோற்றங்களுக்கும் மூல காரணம் இந்த மனம் தான். இந்த அழியும் உலகம் மனம் இருக்கும் வரைதான். மனம் மறைந்தால்,
இந்த உலகமும் மறைந்து விடும். ஆகையால்,
மனம் அழியவேண்டும். துன்பங்கள் மற்றும் இன்பங்கள்
ஆகியவைகள் மனத்தினால் தான் மலைபோல் எழுகின்றன. அவைகள் அழிய வேண்டு
மென்றால், மனமும் அழியவேண்டும்.
ஆசைகள்:
கட்டுப்படுத்த முடியா உணர்ச்சியும், கோபமும் தான் ஆத்மாவை ஆட்டிப் படைக்கும் இரண்டு கோட்டான்கள் ஆகும்.
அதீத மயக்கத்தை மனதில் ஏற்படுத்தி,
இரவெல்லாம் மனிதனை அலைக்கழிக்கும். ஒரு எலி கயிற்றைக்
கடித்துக் குதறுவதைப் போல் என்னுடைய ஆசைகள் எனது பல காலம் சேமித்த தூய கர்மாக்களை எல்லாம்
முழுவதும் துவம்சம் செய்து விடுகின்றன. ஆத்ம ஞானம் இல்லாது தவிக்கும்
இந்த மனது, வலையில் மாட்டிக்
கொண்டு தவிக்கும் ஒரு பறவை போல் இருக்கிறது. ஆசைகளானான நெருப்பு
என் மனத்தை சுட்டெரித்து புண்ணாக்குகிறது. நான் இருக்கும் இப்போதைய
நிலையில், அமிர்தத்தில் குளித்தாலும் அது என்னை குளிர்விக்காது.
அம்மாவாசை இரவில் மிகவும் துணிவுள்ளவர்களையும் பயம் கொள்ளச் செய்து,
அவர்களின் அறிவை மழுங்கடித்து, மிகவும் பொறுமையாக
இருக்கும் அறிவாளிகளின் உள்ளங்களிலும் அத்தகைய மனம் திகிலை உண்டாக்கும். ஆந்தையைப் போன்ற தீராத ஆசைகள் மனிதர்களைத் தொடர்ந்து, அவர்களைச் செல்வம் சேர்க்கத் தூண்டினாலும், அந்தச் செயல்கள்
தோல்வியுரறும். வயதான சதிர் செய்யும் பெண் வேண்டா வெறுப்பாக நடனம்
ஆடுகிறாளோ அதைப் போல் தான் என் அனைத்து ஆசைகளும் என்னைத் தாக்குகின்றன. குரங்குகளைப் போல், ஒரு இடத்தில் நிலையில்லாமல்,
என் மனம் சுற்றித் திரிகிறது. ஒரு பூவிலிருந்து
இன்னொரு பூவிற்குத் தாவிச் செல்லும் தேனிக்களைப் போல் என் மனம் உலகத்தின் அனைத்து எட்டு
திக்குகளுக்கும் பயணம் செய்கிறது. தீராத ஆசைகள் தான் அனைத்து
வலிகளுக்கும் மேலான வலியான மறு பிறவி என்ற வலியினைக் கொடுக்கின்றது. தேவர்கள் தான் ஆசைகளிலிருந்து மனதை விடுவித்து உதவுகிறார்கள். கோட்டைச் சுவர்களால் பாதுகாக்கப்பட்டு பெரிய அரண்மனைகளில் வசிப்போர்களையும்
ஆசைகள் என்ற வியாதி தாக்கும். அப்படி பாதிக்கப்பட்டவர்களையும்
காப்பாற்றும் மிகப்பெரிய சர்வலோக நிவாரணியாகத் தேவர்கள் செயல்படுகிறார்கள்.
அத்தியாயம் 7: இளமைப் பருவம்
இந்த சம்சார சாகரத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஜீவனும், பலவிதமான மனச் சஞ்சலங்கள், பலவிதமான மாறுபட்ட செயல்கள் ஆகிய அலைகளில் உழல வேண்டிய நிர்பந்தங்களைத் தவிர்க்க
இயலாது. அந்த இளமையான குழந்தைப் பருவம் தான் மனிதர்களுக்கு மிகுந்த
தாங்கமுடியாத வேதனைகளைக் கொடுக்கும் பருவமாகும். அந்த பருவ காலத்தில்,
தவிர்க்க முடியாத ஆபத்துக்கள், பலவீனங்கள்,
கருத்துக்களை வெளியிடமுடியாத அவல நிலை, அறியாமை,
ஆசைகள், நிலையில்லா எண்ணங்கள் ஆகியவைகளால் அவதிப்பட
வேண்டியதாகிவிடும். நமது உடலில், மனது தான்
செயல்களுக்குக் காரணமாகும். கடல் அலைகள் போல் அல்லது அழகிய மாதுவின்
கண்களின் மிரட்சியைப் போல் அல்லது காற்றில் அசையும் விளக்குச் சுடர் போல் அல்லது ஒரு
மின்னல் ஒளி போல் அந்த மனது ஒரு நிலையில்லாது ஊசலாடும். அந்த
மழலைப் பருவத்தில் சுற்றித் திரியும் நாய் போல் சோற்றைத் தின்று, சின்னச் சின்னக் காரியங்களுக்குச் சந்தோஷப் பட்டும் அல்லது துக்கப்பட்டும்
நாட்களைக் கடத்தும். சில நேரங்களில், மண்ணைச்
சாப்பிடும். ஆகாயத்தில் உலவும் சந்திரனைத் தன் அருகில் வரும்படி
வேண்டுதல் செய்யும். இந்த அறியாமையால் விளந்த செயல்களை அருளான
செயல்கள் என்று கருத முடியுமா? இந்த பருவத்தில் செய்யும் குறும்பான
செயல்களினால் ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவரின் உள்ளங்களிலும்
பீதியினை ஏற்படுத்தும். அதன் காரணமாக, அவர்கள்
அனைவருக்கும் இவைகள் எப்போதும் பயத்தை அளித்து, பலவகையான மனக்
கிலேசங்களை உண்டு பண்ணும். எதையும் பகுத்தறியும் தன்மையை இழந்து
தவிக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். இந்தப் பருவத்தில் சந்தோஷம்
என்பதை ஒருவரும் அனுபவிக்க முடியாது.
அத்தியாயம் 8: வாலிபப் பருவம்
பலவிதமான ஆபத்துக்கள் கொண்ட இளமையான குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிபப் பருவத்தை
அடைகிறார்கள். இந்தப் பருவத்திலும்,
இன்னொரு வகையான வலிகளைச் சுமந்து, பிசாசு போன்ற
மன்மத பானத்தால் தாக்குண்டு, மனம் புண்பட்டு அவதிக்கு உள்ளாக
வேண்டும். இந்தச் சமயத்தில் தகுந்த குருவை நாடி மனத்தில் ஒளிபெற
முயலவேண்டும். அதன் மூலம், பலவிதமான துறைகளிலும்
அறிவினை வளர்த்து, மனது விசாலமாக வேண்டும். சகதியுள்ள ஓடையைப் போன்ற மனதைத் தூய்மையாக்க நல்ல கர்மாக்களைச் செய்ய வேண்டும்.
ஆசைகள் இந்த உடம்பில் காட்டில் வளரும் மரங்கள் போல் பெருகி, மான் போன்ற மனதை இந்திரிய சுகங்களான படுகுழியில் தள்ளிவிடும். வாலிப வயது ஆசைகளைப் பூர்த்தி செய்யும் செயல்களால், வலிகள்
தான் அதிகமாக உடலைத் தாக்கும். ஆனால், இந்த
வாலிப வயதில் எதிர்கொள்ளும் அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி காணும் சக்தியைப் பெற்றவர்கள்
தான் சிறந்தவர்கள். அப்படிப் பட்ட வாலிப மனிதர்கள் தான் அனைவராலும்
துதிக்கப்படுபவர்களாவர். அவர்கள் தான் உண்மையிலேயே அறிவாளிகள்.
அந்த அவர்கள் அடைந்த நிலைதான் உண்மை நிலையாகும். விலைமதிக்கப்பட முடியாத இயல்புகளான தேஜஸ், பணிவு ஆகியவைகளைக்
கொண்ட வாலிப்ப் பருவத்தை அடைபவர்கள் தான் இந்த உலகத்தில் உத்தம ஆத்மாக்கள்.
அத்தியாயம் 9: காமம்
எலும்பும், தசைகளும், சதைகளும் கொண்ட பெண்களின் உடல்களின் மூலம் என்ன சுகத்தைக்
காண முடியும்? அழகான பெண்களைப் பார்த்தால், மிகுந்த ஆசைகள் எழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை தான். ஆனால், அழகிய கூந்தல் உடைய பெண்களைப் பார்க்கும் பொழுது, நாம் நமது மனத்தின் கண்களால் ஆராய்ந்தால், அந்தப் பெண்களின் கண்களும், அவர்களது மயக்கும் பிற உடல் பாகங்களும் வெறும் தோல், சதை, ரத்தம் ஆகியவைகளுடன் கண்ணீரும், வேர்வைகளும் கொண்டவைகள் என்பதை அறியலாம். முத்துக்கள், மலர்கள் மற்றும் பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பெண்களின்
மார்பகங்கள் நம் மனத்தைக் கவருவது, நாய்கள் நகர மயானத்தில் சிந்தப்பட்ட சாதங்களுக்கு சண்டை போடுவதற்கு ஒப்பாகும். காமத்தீக்கு இறையாகும் மனிதர்களின் கண்கள் பெண்களின் கருங்கூந்தலால்
ஈர்க்கப்பட்டு, இருள் உலகத்தில் உழலுவதற்கு பாபத்தில் வீழ்கிறார்கள். பெண்களின் உடல்களில் சுகம் காணுவது, உலர்ந்த விறகினால் நகரத்தில் தங்களையே எரியூட்டுவதற்கு ஒப்பாகும். காமம் மனிதர்களின் மனங்களை அறியாமை என்ற பாழும் கிணற்றில்
தள்ளிவிடும். இது தூண்டிலில் வைக்கப்பட்ட புழுக்கள் மனித மீன்களை மீண்டும்
மீண்டும் பிறவி எடுக்கும் நிலையை உண்டாக்கி, அவர்களின் உள்ளங்களை சகதியாக்கி பாழ்படுத்தி விடும். ஓ, பெண்களின் சுகம் நிரந்தரமல்ல. அது பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்ட எல்லை இல்லாத துன்பங்கள், வெறுப்புகள், தீராத ஆசைகள் ஆகியவைகளை விலை உயர்ந்த முத்துக்களாக நினத்துக் காப்பாற்றும் பேதமைக்குச்
சமம். நமது உடம்பைப் பற்றிய உண்மையான நிலையை ஆராய்ந்து அறிந்து
விட்டால், பிறகு பெண்களால் ஏற்படும் ஈர்ப்பு மறைந்து விடும். பெண்களைப் பற்றி நிலாவின் குளுமை என்று நினைக்கும் கருத்தும்
மறைந்து விடும். ஆகையால், பெண்களின் மேல் ஏற்படும் மோகம் நம் மனத்திலிருந்து அகல வேண்டும். அப்போது தான் நிரந்தரமான அருள் நம்மை வந்து சேரும். தேனைச் சுவைத்த வண்டுகள் மீண்டும் மீண்டும் தேனை நாடிச் செல்வதைப்
போல் இயங்கும் நம் மனத்தை பெண்களின் இச்சையிலிருந்து மீட்டு வரவேண்டும். இது மிகவும் கடினமான ஒன்றாகும். காமத்தால் உண்டாகும் விளைவுகளான வியாதிகள், சாவுகள், வயோதிகம், மன வியாதிகள், வலிகள் ஆகியவைகளால், மனிதன் அதன் பின்னால் மனத்தை செல்ல அனுமதிக்கக் கூடாது. காமத்தைத் துறக்காமல், மிகவும் அரியதான பிரம்ம நிலையை எப்படி அடைய முடியும்?
அத்தியாயம் 10: வயோதிகம்
குழந்தைப் பருவம் பிறகு வாலிபப் பருவம் ஆகியவைகளுக்குப் பிறகு
வயோதிகம் வந்து நம்மை பெரிய மாற்றங்களுக்கு உட்படுத்துகிறது. மயக்கம், வியாதிகள், வலிகள் போன்றவைகள் வயோதிகத்தில் வரும். பிறகு, அறிவு மங்கிவிடும். இரண்டாம் கல்யாணம் செய்த பிறகு, முதல் மனைவியிடம் கொண்ட அன்பு எப்படி விலகி விடுமோ அதே போல், அறிவு
விடைபெற்றுச் சென்று விடும். நமது உடம்பின் ஒன்பது வாசல்களும் செயல் இழப்புகள், ஞாபக மறதி, அன்றாட கர்மாக்களைத் தனியாகச் செய்ய முடியாத நிலை, மகன்கள் மற்றும் மற்றவர்களின் கடும் சொற்கள் ஆகியவைகளை வயோதிகக் காலத்தில் சந்திக்க
வேண்டும். வயோதிகத்தால் தள்ளாடும் போதும், நண்பர்கள், உறவினர்கள், வேலைக்காரர்கள் சிரிப்பார்கள். ஆந்தை மரப்பொந்தில் தங்கி இருப்பதைப் போன்று, வலுவிழந்து, தன் குணம் இழந்து தவிக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இந்தத் தள்ளாத வயதில், பலவிதமான கற்பனையான பயங்கள் எழும். தான் நற்கதி அடைய முடியாத நிலை ஏற்படும் என்ற பயத்தைப் போக்க முடியாமல் திண்டாடும்
நிலையில் தவிப்பார்கள். ஆனால், வயதாக வயதாக, உலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற தாகம் அதிகரிக்கும். ஆனால், வயோதிகம் அந்த தாகத்தைத் தணிக்க முடியாமல் வலுவிழந்து தவிக்கும். இந்த நிலையால், அவர்களின் அனைத்து எண்ணங்களும் வலுவிழந்து, மறந்துவிடும். சாவு தனது கைகளை அந்த வயோதிக வெளிறிய தலைகளில் வைத்து, இழுக்கும். இது பழுத்த பூசணிக்காய்கள் வெள்ளையாகி கீழே விழுவதைப் போலாகும். சாவு என்ற ராஜா தனது போர்வீர்ர்களான மனம் - உடல் வியாதிகள் ஒன்றாக அணிவகிப்பது போல் வயோதிகத்தைச் சூழ்ந்து
கொள்ளும். இந்த வயோதிகத்திலும், மூன்று விதமான ஆசைகளைத் துறப்பது என்பது கடினம். மகன், மனைவி, செல்வம் ஆகியவைகள் தான் அந்த மூன்றும்.
அத்தியாயம் 11 - காலம்
உலகத்தில் உள்ள சகல இன்பம் கொடுக்கும் பொருள்கள் அஞ்ஞானத்தின்
காரணத்தால் மேலும் மேலும் பிறப்பினைக் கொடுக்கும். அந்த நிலையில்லா இன்பமும் காலம் என்ற காலன் வந்த உடன் ஒரு
எலி எப்படி வலையினை கடித்துக் குதறுமோ அதே போல் மறைந்துவிடும். இந்தக் காலம்
அழிக்காத பொருள் ஒன்று கூட இந்த உலகத்தில் இல்லை. முதலைகள், மீன்கள் ஆகியவைகள் நிறைந்த சமுத்திரமும் வாதவா அக்னி என்ற
பயங்கரமான தீயினால் அழிக்கப்படுவதைப் போன்றே காலம் அழிவை உண்டாக்கும். ஏன், இமாலய அளவு
பெரிய ஞானிகள் கூட அவர்களின் நேரம் வந்து விட்டால், அவர்களும் கூட ஒரு செகண்ட் கூட இந்த உலகத்தில் தாமசிக்க முடியாது. அனைத்தையும்
அந்தந்த நேரம் வரும் போது கபளீகரம் செய்யும் தன்மை கொண்டது யமன். புகழ் பெற்ற
அரசர்கள் அனைவரும் பருந்து கால்களில் அகப்பட்ட பாம்புபோல் காலத்தின் கால்களில் கட்டுண்டு
உயிரிழக்கத்தான் வேண்டும். இந்த பிரபஞ்சமான காட்டில் காலையில் அத்திப்பழங்கள் காய்க்க
வைத்து, அதைச் சுற்றி
ஈகோ என்ற ஈக்கள் வர, மத்தியான வேளையில் சூரியனின் கதிர்களால் பழங்களைப் பழுக்க வைத்து, இரவிலே அவைகள் சாப்பிட ஏதுவாக அமைந்து காலம் அழிவை அளித்துவிடுகிறது. மிகப்பெரிய
உயர்ந்த மனிதனும் மூன்று குணங்களான கயிற்றால் கட்டப்பட்டு, காலம் அவர்களையும் தனக்கு இறையாக்கி விடும். இந்த இடுபாடுகள்
கொண்ட சிறிய உலகமான இருப்பிடத்தில், காலம் உலகத்தில் வாழும் மனிதர்கள் எங்கிருந்தாலும் அவர்களை
சாவு என்ற கூடையில் முயல் குட்டிகளைப் போல் சேகரிக்கும். இப்படி வேட்டையாடிய உயிரினங்கள் காலத்தினால் கபளீகரம் செய்யப்படும். இந்தக் காலத்தின்
செயல்கள் திரும்பத் திரும்ப இந்த உலகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
அத்தியாயம் 12 - அழிக்கும் சக்தி
பலம் பொருந்திய அழிக்கும் சக்திதான் பிரம்மத்தின் மூலாதாரவீரியமான
சக்தியாகும். மாயை போன்ற
காட்டில் வெற்றிகரமாக உலாவும் ஒரு பெண் புலியைப் போல், இந்த பிரபஞ்சத்தையே அந்த சக்தி ஆட்டிப் படைக்கிறது. அந்த சக்தியைத்
தான் துர்காதேவியாகக் காண்கிறோம். இந்த பூமியை அந்த மஹா சக்தி தன் கைகளில் ஒரு தேன் கிண்ணம்
போல் தாங்கிக் கொண்டிருக்கிறாள். மூன்று லோகங்களும் அவளது கழுத்தில் நீலம், சிகப்பு, வெண்மை ஆகிய
மூன்று நிறங்களைக் கொண்ட தாமரை புஷ்பமாலையாக அலங்கரிக்கிறது. கூண்டுக்குள்
அடைபட்டு கர்ஜித்துக்கும் ஒரு ஆண்சிங்கம் அவளது கைகளில் இருக்கிறது. அவளது உடம்பு
தான் காலமாக இனிமையான புல்லாங்குழல் இசைபாடும் ஒரு இளமையான குயில்போல் இருக்கிறது. வெற்றிகொள்ள
வில்லும், வலியை அளிக்கும்
அம்புகளும் அவளது ஆபரணங்கள். பிரளயகாலத்தில் அவளது நடனம் உலகெங்கும் ஒளி வீசும். சுவர்க்கம்
தான் அவளது கிரீடம். பாதாளம் அவளது பாதம். அந்தப் பாதாளத்தில் தான் பல நரகங்கள் இருக்கின்றன. சூரியனும், சந்திரனும்
அவளது காதணிகள். ஹிமாலயம் அவளது
எலும்புகள். மஹா மேரு அவளது
தங்க ஆபரணம். அவளது ஒட்டியாணம்
சக்ரவாளா மலை. அவளது வாகனம்
சிலசமயம் முருகனின் வாகனமான மயில். சில சமயங்களில் அவள் ருத்ரனின் தலையை -மூன்று கண்கள், பிறை -ஆகியவைகளுடன்
அணிந்து கொள்வாள். சில சமயங்களில் மண்டை ஓடுகளை மாலையாக அணிவாள். உக்கிர பிரளய
தாண்டவத்தினையும் சில சமயங்களில் அவள் ஆடுவாள்.
மனம் அஹங்காரத்தினால் ஆக்கிரமித்துள்ளது. உலகத்தில் காணும்
பொருட்களெல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. பிறப்பின் காரணங்களையும் முழுவதும் என்னால் கணிக்க முடியவில்லை. ஆகையால், எனது மனம் மயங்குகிறது. ஆசைகள் என்ற
வியாதிகள் மனத்தை அலைக்கழிக்கின்றன. முற்றும் துறந்த ஞானிகளை இந்த உலகத்தில் பார்ப்பது மிகவும்
அரிது. எனது வாலிபப்
பருவம் அர்த்தமில்லாத செயல்களில் ஈடுபட்டு, உயர்ந்த ஞான மார்க்கத்தை அடைய முடியாமல் கழிந்துவிட்ட்து.
அத்தியாயம் 13 - அறிஞர்களுடன் தொடர்பு
சிறந்த ஞானிகளுடைய உண்மையான அன்பு இல்லாமல், மோக்ஷப் பாதை
தெரியாமல் தவிக்கிறோம். இதனால் மற்றவர்களின் இன்பங்களை தங்களது சொந்த இன்பம் போல்
நினக்கும் பரந்த மனப்பான்மை கொண்ட ஆத்ம-தத்துவம் தடைப்படுகிறது. மேலும் மற்றவர்களுடை நல்ல செய்கைகளைப் பார்த்து சந்தோஷப்படும்
குணமும் இல்லாமல், உள் மனதின் நிம்மதியும் பறிபோகிறது. மேலும் எங்கோ
நடக்கும் தீய காரியங்கள், கீழ்ந்தரமான மனத்தினால் பாதிக்கப்படாமல் போய்விடும். இதனால், எங்கு தைரியம்
வேண்டுமோ அங்கு அதைரியம் குடிகொண்டுவிடும்.
அழியும் எல்லாப் பொருட்களும் தளைகளாகவே அமைகின்றன. நமது பூர்வ
ஜென்ம வாசனைகளால் ஏற்படும் எல்லாவகையான ஈகோக்களும் மறைந்த பின், சொர்க்கம் கிட்டும். நாம் சென்ற
எல்லா நாடுகள், பெரிய மலைகள்
எல்லாம் மறைந்து, சத்தியம் ஒன்று தான் பிரளய காலத்தில் நிலைத்து நிற்கும். மூன்று உலகங்களான - ப்பூ, அந்தரிக்ஷா, தேவ ஆகியவைகள், சமுத்திரங்கள், தேவ-அசுரர்கள் ஆகியவர்கள்
எல்லாம் மறைந்துவிடுவார்கள். மும் மூர்த்திகளான - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் - ஆகியவர்கள் பரப்பிரம்மத்தோடு கலந்து விடுவார்கள். சிருஷ்டிகள்
நின்றுவிடும்.
சிறந்த அறிஞர்களின் வாழ்க்கையினைப் பின்பற்றி நடக்காதவர்கள்
எப்படி இரவில் நன்கு தூங்க முடியும்? அவர்கள் மனம் - செயல்கள் அனைத்தும் தங்களது மனைவி, குழந்தைகள், செல்வம் என்று
அதிலேயே சுழன்று அவைகளையே அமிர்தம் என்று கருதி வாழும் நிலையில் இருக்கும் போது, அவைகள் சில
ஆபத்தான விபத்துக்களால் அழியும் போது, அவர்கள் படும் கவலைக்கு அளவே இல்லை. எதிரிகளை வென்று, வெற்றி வாகை
சூடி, பலவிதமான செல்வங்களைப்
பெற்று வாழ நினைக்கும் அந்த நேரத்தில், யமன் நமக்கு இடஞ்சலாக வந்து, நமது வாழ்வையே முடித்து விடுவான். இந்த உலகத்தில்
மனைவி, மகன்கள் ஆகியவர்கள்
எல்லாம் நிரந்தரமில்லை. நேரம் பற்றிய முழுமையாக அறிவது முடியாத ஒன்றாகும். வலிகள் தான்
வாழ்வில் எங்கும் காணப்படுகிறது. அந்த வலிக்குக் காரணமான பயம், செல்வம், பிறப்பு, சாவு ஆகியவைகள் காலத்தால் தான் மறையவேண்டும் என்று நமது சாஸ்திர
புத்தகங்கள் கூறுகின்றன. தைரியமுள்ள ஒரு வீரன் ஒரு கோழையால் இறக்க நேரிடலாம். நூறுபேர்கள் கூட ஒரே மனிதனின் கையால் கொல்லப்படலாம். அவர்களின் வீரமும்
கொண்டாடப்படலாம். இது தான் காலத்தின் கோலம்.
ஆகையால் தான் செல்வம் என்பது பாலைவனத்தில் தெரியும் கானல்
நீர் போன்றது என்பதை என் மனம் நன்கு தெரிந்துள்ளது. ராஜ வாழ்க்கையை நான் விரும்ப வில்லை. எனக்கு விரக்தி
வந்து எனது மனம் குழம்பிப் போய் விட்டது. ஐம்புலன்களும் மிகவும் கொடூரமான விஷத்தை விட ஆபத்தானவைகளாக
இருக்கின்றன. விஷம் உடம்பை
மட்டும் தான் பாதிக்கும், ஆனால் புலன்களால் வரும் ஆசைகள் பல பிறவிகளை உண்டாக்கும்.
ஆசைகள், வலிகள், உறவினர்கள், நண்பர்கள், வாழ்க்கை, இறப்பு போன்றவைகள் அறிவுடையவர்களின் மனத்தைக் கவராது. அவர்களுக்கு
இந்த வாழ்வானது காற்றினால் தெளிக்கப்பட்ட நீர்த்திவலைகள் போலாகும். புலன் இன்பங்கள்
அவர்களுக்கு மின்னல் ஒளிபோல் நிலையில்லாத ஒன்றாகும். இதை எல்லாம் உணர்ந்த முனிவர்கள் ஆழ்ந்த சமாதி நிலையில் தங்களை
ஈடுபடுத்திக் கொண்டார்கள். ஆனால் நான் அந்த உயர் நிலையை அடைய முடியாது தவிக்கிறேன். இந்த மயக்கத்திலிருந்து
நான் தெளிவு பெற விரும்புகிறேன். அதற்கு பெரியவர்கள் தான் வழி காட்ட வேண்டும். இப்போது உள்ள
என் நிலைமையில், எனக்கு எதிலும்
ஈடுபாடு இல்லை. துக்கம் - சுகம், அன்பு - வெறுப்பு ஆகியவைகளால்
பாதிக்கப்படாமல், நான் ஒரு கற்சிலை போல் ஆகிவிட்டேன்.’
ராமன் தனது மன நிலையை மிகவும் தெளிவாக ராஜசபையில் முனிவர்களின்
முன்னிலையில் விளக்கிச் சொன்னான். அதன் பிறகு, இடி முழக்கம் கேட்ட ஒரு மயிலின் கூக்குரல் போல் ராமன் முனிவர்களின்
அறிவுரைகளைக் கேட்க ஆயத்தமாகி இருந்தான்.
Comments