பத்திரிகைகளில் படித்து ரசித்த ரத்தினங்கள்:
முகவுரை: பத்திரைகளில் சிறுவர்-சிறுமிகள் எழுதும் எழுத்துக்கள் பல நன்றாக ரசிக்கும் படி இருக்கின்றன. வேறு விலாசம் தெரியாத நபர்க்களின் எழுத்துக்களும் ரசிக்கும்படி இருக்கின்றன. அதில் அவர்களின் மேதா விலாசம் தெரிகின்றன. பலருக்கு அதைப் படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போகலாம். அதை நிவர்த்தி செய்வது தான் இந்தப் பகுதி. வாசகர்களும் இதில் பங்கு கொள்ள விழைகிறேன். -ஆசிரியர்.
1. நட்டவன்
நட்ட மரமெல்லாம்
நிமிர்ந்து விட்டன.
நடும் போது குனித்தவன்
இன்னும் நிமிரவே இல்லை.
- மலேசியப் புதுக்கவிதை (விகடன்)
(இன்றைய மலேசிய வாழ் தமிழர்களின் இடர்களைப் பற்றிய கட்டுரையிலிருந்து.)
2. பாச அழுகை
ஈன்றவளின்
வலி உணர்ந்ததோ---
பிறந்ததும்
அழுகிறதே மழலை.
-போளூர் சி. ரகுபதி.
3. நட்பு
கடல் ஓரத்தில் நம் நட்பை
எழுதி வைத்தேன்.
அலை வந்து
அடித்துச் செல்லவில்லை.
படித்துச் சென்றது.
***
காயப்பட்ட இதயத்தை
நேசி;
நேசித்த இதயத்தைக்
காயப்படுத்தாதே!
- மா. ஜெயபாரதி, ஸ்ரீ கற்பகவிநாயகர் கல்லூரி, மதுரை.
4. மெழுகுவர்த்தி
உயிர் கொடுத்து
உயிர் விட்டது
தீக்குச்சி!
அதை நினைத்து உருகி,
கண்ணீர் விட்டது
மெழுகுவர்த்தி!
- வி. விஜயலெட்சுமி, அய்யம்பேட்டை.
5. மரப்பலகை
மரப்பலகையில்
அறிவிப்பு!
மரங்களை
வெட்டாதீர்கள்!
- கோ. செந்தில், சென்னை-19.
6. அழுகையின் அர்த்தம்
தாய்
அழுகிறாள் ---
டி.வி. தொடர் பார்த்து ---
குழந்தை அழுகிறது
பசியால்
தாய் முகம் பார்த்து!
- மு. சிவ சுப்பிரமணியன், ஆலத்தம்பாடி.
7. புனிதமான இடங்கள்
உலகில் இரண்டு இடங்கள் புனிதமானவை.
ஒன்று தாயின் கருவறை.
மற்றொன்று வகுப்பறை.
ஒன்றில் குழந்தை உருவாகிறது.
மற்றொன்றில் நாட்டின்
எதிர்காலம் உருவாகிறது.
***
அறிவு வேறு. ஞானம் வேறு.
படைப்புகளைப் பற்றி அறிவது அறிவு.
படைத்தவனைப் பற்றி அறிவது ஞானம்.
***
கேள்வி ஒரு சாவி.
அந்தச் சாவியின் வழியாக
திறக்கப்படும் கதவுகள் ஏராளம்.
- பேராசிரியர் க.ராமச் சந்திரன் - இதயவாசலைத் திறக்க சாவிகள் என்ற கட்டுரையிலிருந்து - நன்றி: தினத்தந்தி.
8. மான் வேட்டை
நன்றி:தினத்தந்தி
மான் மேய்ந்து கொண்டிருந்தது. வேடன் குறிவைத்து அம்பு எய்தப் பார்த்தான். குறிப்பறிந்த மான் ஓடி வேறு ஒரு பதருக்குள் புகுந்தது. வேடன் தொடர்ந்து துறத்தினான்.
மான் தான் தப்பி விட்டோம் என்று நினைத்தது. புகலிடம் கொடுத்த புற்புதரைப் புசிக்க ஆரம்பித்தது.
இலைகளின் சலனம் வேடனுக்கு மானை அடையாளம் காட்டி விட்டது.
அம்பு எய்தான் வேடன்.
மான் மாண்டது.
Comments