இரும்பு மனிதர் வல்லபாய் படேல் பற்றிய சரித்திரச் சான்றுகள்

காட்சி 1:

நாள்: 30-04-1948.


இடம்: மந்திரிசபைக் கூட்டம் - முக்கிய நபர்கள்: ராஜாஜி, நேரு, பட்டேல்.


அன்றைய நிலைமை: ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு, இந்தியாவுடன் இணைய விரும்பவில்லை. நிஜாம் படைகளான ரிஸ்வி - ராஸாகார் அட்டூஷியங்களில் இறங்கி விட்டனர். ஹைதராபாத் நிஸாம் பாகிஸ்தானுக்கு ஒரு தூதுவரை அனுப்பினார். லண்டன் பாங்கிலிருந்து அரசாங்கப் பணத்தின் ஒரு பெரும் தொகை பாகிஸ்தானுக்கு மாற்றப்பட்டது.

கூடிய மந்திரிசபை கூட்டத்தில், இந்த மோசமான நிலைமையை விளக்கி, பட்டேல் சொன்னார்: ‘ஹைதராபாத்திற்கு ராணுவத்தை அனுப்புவதைச் தவிர வேறு மார்க்க மில்லை

நேரு தம்முடைய சுயநிலை மறந்து கோபமாக பட்டேலைப்பார்த்துக் கத்தினார்: ‘நீங்கள் ஒரு முழுமையான சாதிவெறியர். நான் ஒரு போதும் உங்களது கோரிக்கையை ஏற்க மாட்டேன்.”

இதைச் செவியுற்ற வல்லபாய் படேல் தமது காகிதங்களை எடுத்துக் கொண்டு, ஒன்றும் பேசாமல் அறையை விட்டுச் சென்று விட்டார்.

ஆதாரம்: எம்.கே.கே.நாயர், ..எஸ். அதிகாரியின் புத்தகம்: “The Story of an Era Told without Ill Will”.

காட்சி 2:

இடம்: ராஷ்ரபதி பவன்

பங்கு பெறுவோர்: ராஜாஜி, நேரு, பட்டேல், வி.பி.மேனன்.

காட்சி 1 நடந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு.

ஹைதரபாத் நிலை நாளுக்கு நாள் மோச மடைந்து கொண்டு வந்ததை உணர்ந்த ராஜாஜி, நேரு-படேல் ஆகியவர்களுக்குள் இருக்கும் கருத்து வேற்றுமையைக் களைந்து, உரிய நடவடிக்கை எடுக்க, அனைவரையும் வரவழைத்தார்.

வி.பி.மேனனும் அந்தச் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டார். மேனன் வரும் போது, புச் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி பிரிட்டிஷ் ஹைகமிஷனரிடமிருந்து வந்த ஒரு கடிதத்தை மேனனிடம் கொடுத்தார். அதில், நிஸாமின் ரக்ஸார் படைவீரர்களால் கான்வெண்டில் பணிபுரியும் ஒரு 70 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது.  அந்தக் கடிதத்தை மேனன் ராஜாஜியிடம் ஒப்படைத்தார்.

ராஜாஜி தமக்கே உரிய பாணியில் நிலைமையை விளக்கி, இனியும் தாமதம் செய்யாமல் ராணுவத்தை அனுப்ப வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்தினார். நேரு அப்போதும் உலக அளவில் இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படும் என்பதில் கவலை கொண்டார். அந்த சமயத்தில், மேனன் கொடுத்த கடிதத்தை நேருவிடம் ராஜாஜி நீட்டிப் படிக்கச் சொன்னார்.

அதை படித்து முடித்தவுடன், நேருவின் கண்கள் கோபத்தால் சிவந்து, அவரது வழுக்கைத் தலையின் நரம்புகள் முறுக்கேறி துடித்தன. தான் உட்கார்ந்து கொண்டிருந்த நாற்காலியை உதைத்துச் தள்ளினார். தன் முஷ்டியால் மேஜையை ஓங்கிக் குத்தி, உரக்க சத்தம் போட்டுச் சொன்னார்:’இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது. அவர்களுக்கு நாம் சரியான பாடம் கற்பிப்போம்

உடனே உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

நேரு தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டார். பிறகு டீ அருந்தினார். ராஜாஜி நேருவிடம் மெதுவாக சிரித்துக் கொண்டே சொன்னார்: ‘அது ஒரு புற்று நோய். அதனால் வலி உண்டாகிலும், அதை நீக்க வேண்டியது அவசியம்.’

காட்சி 3:

காட்சி 2 நடந்த சில நாட்களுக்குள்


பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒரு ஆங்கிலேயர். இந்தியாவின் ராணுவ தளபதியான புச்சரும் ஒரு ஆங்கிலேயர் தான். புச்சர் பாகிஸ்தான் ராணுவ தளபதியைத் தொடர்பு கொண்டு அவர்கள் இருவரும் பிரஞ்சு மொழியில் பேசினர்.

அடுத்த நாள் புச்சர் அறைக்கு மேனன் சென்றார். புச்சர் ஹைதராபாத் நிலையைப் பற்றிக் கேட்கத் தான் மேன்ன் வந்ததாக நினைத்தார்.

மேன்ன்: ஹைதராபாதின் நிலை பற்றி எனக்கு நன்கு தெரியும். நீங்கள் நேற்று மாலையில் பாகிஸ்தான் தளபதியுடன் பேசினீர்களா?

புச்சரின் முகம் பேயறைந்தமாதிரி வெளிறியது.

புச்சர்: நண்பர்களுடன் பேசக் கூடாது என்று சொல்கிறீர்களா?

மேனன்: உங்கள் பேச்சு வெறும் நண்பர்களின் விசாரிப்பாகவா இருந்தது?

புச்சர்: உங்களுக்கு அதில்  சந்தேகமா?

மேனன்: நீங்கள் ஏன் பிரஞ்சு மொழியில் பேசினீர்கள்?

புச்சர்: நீங்கள் ஒட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டீர்களா?

மேனன்: சூழ்நிலையால் அது அவசியமானால், அதை நாங்கள் செய்யக் கூடாதா என்ன? உங்கள் உரை வெறும் நண்பர்களுடனான பேச்சா?

புச்சர்: ஆமாம்.

இப்போது, வி.பி.மேனன் ஒரு காகித்த்தை எடுத்து, புச்சரைப் படிக்கச் சொன்னார். அது புச்சரும், பாகிஸ்தான் தளபதியும் பிரஞ்சு மொழியில் உரையாடினதின் ஆங்கில மொழி பெயர்ப்பு.

அதில் உள்ள உரையாடல்:

புச்சர்: இன்று இரவே ஹைதராபாத் முற்றுகை ஆரம்பமாகி விட்டது. அது அதிக நாட்கள் நீடிக்காது. நீங்கள் ஏதாவது செய்வதாக இருந்தால், அதை உடனே செய்யவும்.

 பாகிஸ்தான் தளபதி: மிக்க நன்றி. இதை லியாக் அலி யிடம் சொல்கிறேன். ஜின்னா சாகக் கிடைக்கிறார்.

புச்சர்: நான் என்னுடைய கடமையைச் செய்த பிறகு, நான் உங்களுக்கு கையாளாக இருப்பேன்.

புச்சருக்கு வேர்த்துக் கொட்டியது. வி.பி.மேன்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கேட்டார்: நான் இப்போது என்ன செய்ய வேண்டும? நான் தப்பு செய்து விட்டேன். என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

மேனன் ஒரு சிறிதும் தாமதிக்காமல் புச்சரின் ராஜினாமாக் கடிதத்தை வாங்கி, கரியப்பாவை ராணுவ தளபதியாக்க வழி வகுத்தார்.

ஆதாரம்: எல்.கே. அத்வானியின் மின் வலைப் பக்கம்.
 

ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைவதில் நேருவை ஒப்பவைத்த பட்டேலின் சாதுர்யம் பற்றிய சரித்திரக் காட்சிகள்.

காட்சி 1:


பங்குகொள்வோர்கள்: வி.பி. மேனன், மனேக்ஷா, மஹாராஜா மான் சிங், மெஹார்சந்த் மஹாஜன்.

அப்போதைய காஷ்மீர் நிலைமை:

ஜம்மு - காஷ்மீர் மஹாராஜாவின் படைவீரகளில் 50 சதவீதம் முஸ்லீம்கள், மற்ற 50 சதவீதம் பேர்கள் தோக்ராக்கள். முஸ்லீம் படை வீரர்கள் புரட்சி செய்து, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்து விட்டனர். பாகிஸ்தான் படையினால் தூண்டப்பட்ட முஸ்லீம் ஆதிவாதிகள் ஸ்ரீநகரிலிருந்து 7 அல்லது 9 கிலோமீட்டர் தூரத்துற்குள் வந்து கொண்டிருப்பதாகத் தகவல். எந்த நேரத்திலும் ஸ்ரீநகர் தாக்கப்படலாம் என்ற பதற்றமான நிலைமை.

மஹாராஜா மிகுந்த கவலையுடனும், பதட்டத்துடனும் அங்குமிங்கும் அறையறையாகச் சென்று கொண்டிருந்தார். அறை எங்கும் நகைகள் - ரத்தினங்கள், பவள நகைகள், முத்துக்கள், தங்கங்கள் - அவைகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தனர். அரண்மனை வாயிலில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மஹாராஜா: என்ன தான் இந்தியா எதிர்பார்க்கிறது? ராணுவ உதவி செய்ய என்ன தயக்கம்? சரி. இனி தாமதிப்பதில் பிரயோசனம் இல்லை. இந்தியா உதவ வில்லை என்றால், நானே போருக்குச் சென்று, சண்டை செய்வேன்.

மனேக்ஷா: மஹாராஜ், அது உங்கள் படைவீர்ர்களை ஊக்கப்படுத்தும்.

காட்சி 2:

மஹாஜன் மற்றும் மஹாராஜாவுடன் வி.பி.மேனன் பேச்சு நடத்தி,  இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் இணையும் ஒப்பந்தத்தில் மஹாஜனின் கையெழுத்தை வாங்கினார். உடனே வி.பி.மேனனும், மனேக்ஷாவுடன் டெல்லிக்கு அன்று இரவே பறந்து, டெல்லியில் மவுண்ட் பேட்டன் தலைமையில் கூட்டப்பட்ட மந்திரிசபைக் கூட்டத்தில் அந்த இருவரும் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்ட மற்றவர்கள்: நேரு, பட்டேல் இன்னும் சிலர்.

அந்தக் கூட்டத்தில் இந்தியாவுடன் இணையும் மஹாராஜாவின் ஒப்பந்தம் மவுண்ட் பாட்டனிடம் அளிக்கப்பட்டது.

மவுண்ட் பேட்டன்: மனேக்ஷா, ஸ்ரீநகர் நிலைமை எப்படி இருக்கிறது?

மனேக்ஷா: நிலமை படு மோசம். ஆகாய மார்க்கமாக நமது படைவீரர்களை ஸ்ரீநகருக்கு உடனே அனுப்பாவிட்டால், ஸ்ரீநகரை நாம் இழக்க வேண்டியது தான். ஆயுதங்கள் ஏந்திய முஸ்லீம் ஆதிவாசிகள் விமான தளத்தையும், ஸ்ரீநகரையும் கைப்பற்றி விட்டால், நம்மால் நமது ராணுவ வீர்ர்களை ஆகாய மார்க்கமாக அனுப்பமுடியாது. தரைவழியாகச் செல்வதற்குள், காரியம் கைவிட்டுப் போய்விடும்.

நேரு: இது இந்தியாவை ஒரு ஆக்கிரமிப்பு நாடாக உலக அளவில் குறைகூற வைக்கும். யு.என். நம்மைத் தூற்றும். ரஷ்யா, ஆப்பிரிக்கா - ஏன், கடவுளே கூட இந்தக் காரியத்தைச் செய்தால், மன்னிக்க மாட்டார்.

பட்டேல்: நேரு, இது வாதிடுவதற்கான நேரமோஅல்லது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ - நினைப்பார்களோ என்று கவலை கொள்ளுவதற்கான நேரமில்லை. நேருவே, நான் நேரிடியாகவே உங்களைக் கேட்கிறேன். காஷ்மீர் உங்களுக்கு வேண்டுமா? அல்லது வேண்டாமா? உடனே பதில் சொல்லுங்கள்.

நேரு: இதில் என்ன சந்தேகம், காஷ்மீர் எனக்கு வேண்டும்.

பட்டேல்: அப்படி என்றால், படைகளுக்கு உத்திரவு கொடுங்கள்.

பட்டேல்: (நேருவின் பதிலுக்குக் கூடக் காத்திரமால்) மனேக்ஷா! உத்திரவு உங்களுக்குக் கிடைத்தாய் விட்டது. செயலில் இறங்குங்கள்

இது தான் நேருவுக்கும் பட்டேலுக்கும் உள்ள வித்தியாசம். நேருவின் உலக சிந்தனைக்கும், பட்டேலின் இந்திய சிந்தனைக்கும் உள்ள வித்தியாசம்

நேரு தாம் உலக நாயகனாக மதிப்பதை அதிகம் விரும்பினார். ஆனால், பட்டீலோ இந்திய நாயகனாக மதிக்கப்பட்டால் போதும் என்று திருப்தி கொண்டார்.

நேரு சிந்தனையாளர். பட்டேல் செயல்வீரர்ஒரு வேளை பட்டேலின் கீழ் நேரு பணி ஆற்றி இருந்தால், இந்தியா இன்னும் சிறப்பாக முன்னேறி இருக்குமோ? பல சம்பவங்கள் - யுத்தங்கள், ஏமாற்றங்கள் - ஒரு வேளை நிகழாமல் இருந்திருக்குமோ?” என்று தற்போதைய இளைய சமூதாயம் நினைத்தால், அதற்காக இது நேருவின் மேல் எழும் குற்றச் சாட்டு என்றோ அல்லது பட்டேலின் மேல் எழும் ஆதாரமற்ற புகழ் என்றோ ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.

இதில் உள்ளவைகள் எல்லாம் ஏதோ ஒருவரின் கூற்றுக்கள் தான். நாம் யாரும் சாட்சிகள் இல்லை. என்றாலும், சொல்லுபவர்களின் குணம் - நேர்மை ஆகியவைகளை அறிந்து, சரித்திரத்தை உணரவேண்டும்.
 

இந்தியாவின் இரும்பு மனிதரைப்பற்றிய புகழ்ந்துரைகள்

இந்தியாவின் சுதந்திரச் சட்டத்தில் 560 தனிப்பட்ட ராஜாக்களின் சம்ஸ்தானங்களைப் பற்றிச் சொல்ல வில்லை. சர்ச்சில் இந்தியாவை பாகிஸ்தான், ஹிந்துஸ்தான், பிரின்ஸ்தான் (Princestan)  என்ற மூன்றாகத் துண்டாட விழைந்தார்

அதை அற்புதமாகக் கையாண்டு வெற்றி கண்ட வல்லபாய் பட்டேலைப் பற்றி இந்தியாவின் வெளிநாட்டு செயலாளரான கே.பி.எஸ். மேனன் தனது சுயசரிதையில் இப்படி புகழ்ந்து எழுதி உள்ளார்: ‘பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, ராஜாக்களின் கீழ் உள்ள மாகாணங்கள் அவர்கள் விருப்பம் போல் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேரலாம் என்ற நிலையில் இந்தியா பல துண்டுகளாக பிரிந்து விடும் அபாயம் இருந்ததை, இரும்பு மனிதரான சர்தார் வல்லாபாய் படேல் தான் ஒன்று சேர்த்தார்.’
அவர் அத்துடன் வல்லபாய் பட்டேலை பற்றி அப்போதைய மற்ற தலைவர்கள் புகழ்ந்த வாசகங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

வைஸ்ராய் லார்ட் வாவெல்

வல்லபாய் பட்டேல் இந்தியாவின் பிஸ்மார்க், குஜராத்திலிருந்து வந்த இரும்பு மனிதர்.





மவுண்ட் பேட்டன் பட்டேலிடம்: 

பல வருடங்களாக நீங்கள் இந்தியாவின் இரும்பு மனிதராக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் மனதில் ஒரு முடிவெடுத்து விட்டீர்கள் என்றால், அதை எதிர்த்து உங்கள் முன்னால் ஒரு மனிதன் கூட இந்த தேசத்தில் இருக்க முடியும் என்பதை நான் நம்ப மாட்டேன்.



ஜே.ஆர்.டி. டாட்டா: 

காந்திஜியைச் சந்தித்து வெளியே வரும் போது, நான் மிகவும் உற்சாகமாகவும், ஊக்கமாகவும் இருப்பதை உணர்வேன்

ஜவஹர்லால் நேருவுடன் உரையாடினால், உணர்ச்சி வசப்பட்டு, பல சமயங்களில் குழப்படைந்து, ஒப்புக்கொள்ள முடியாத நிலையை அடைவேன்

ஆனால், வல்லபாய் படேலுடனான சந்திப்புகளுக்குப் பிறகு நமது தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு புத்துணர்வான நம்பிக்கையின் சந்தோஷம் என் மனத்தை ஆட்கொள்வதை நான் உணர்வேன். ஜவர்ஹர்லால் நேருவை விட படேல் இளம் வயதினராக இருந்திருந்தால், இன்றுள்ள பொருளாதார நிலையை விட நன்றாக இருந்திருக்கும் என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு

குருசேவ் 

படேலின் ராஜதந்திரத்தைப் பற்றிய புகழுரை: ‘இந்தியர்களாகி நீங்கள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பல ராஜாக்களின் ஆட்சிகளை அழித்த நீங்கள் அந்த  ராஜாக்களை அழிக்காமல் இது எப்படி முடிந்தது என்பது நம்ப முடியாத விந்தையாகும்




சர்ச்சில்:

(சர்சிலும், வல்லபாய் படேலும் காரசாரமாக கடிதங்களிலும், உரையாடல்களிலும் மோதி உள்ளனர். சர்ச்சிலின் சொற்கள் பல சமயங்களில் வரம்பு மீறிச் செல்லும். ஆனால், படேல் தமது எதிர்ப்பை கடுமையான வார்த்தைகளால் அவருக்கு இந்திய பண்பாட்டை மதித்துப் பதில் சொல்லி இருக்கிறார். இந்தப் பின்னணியில் சர்சில் பட்டேலைப் பற்றிச் சொன்ன கீழ்க்கண்ட வாசகங்களைப் படித்தால் தான், அதன் உண்மையான தீவிரம் விளங்கும். பகைவனிடமும் புகழ பெறும் தன்மையால் பட்டேலின் பெருமையின் சிறப்பு விளங்கும்.)

புதிய இந்திய அரசின் பிரச்சனைகளையும், கடமைகளையும் வெகு விரைவில் புரிந்து கொண்டு, செயல்பட்ட விதத்தைப் பார்க்கும் போது, நான் பட்டேலின் நிர்வாகத் திறமையைப் போற்றாமல் இருக்க முடியாது. அதிலும், பிளவுபட்டிருந்த பல ராஜாங்க சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, சுமுகமான உறவை ஏற்படுத்திய விதம் என்னை வியக்க வைக்கிறது

பட்டேல் தமது திறமையை இந்திய எல்லைகளுக்குள் ஒடுக்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், உலகம் அவரது  செயல்களைப் பார்த்துப் பயன் அடையும் உரிமையைப் பெற்றுள்ளது.
 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017