பாட்டி ஒரு பொக்கிஷம்

என் பாட்டி ஒரு பொக்கிஷம். நான் பாட்டியை ஒரு விதவையாகத் தான் பார்த்திருக்கிறேன். விதவைகள் அந்தக் காலத்தில் உடுத்தும் வெறும் நூலானான பழுப்பு நிறக்கலரில் உள்ள புடவை. ரவிக்கை கிடையாது. தலையை அந்தப் புடவைத் தலைப்பால் மூடிக்கொண்டிருப்பார். நெற்றியிலே விபூதி. நான் கடைக்குட்டிப் பேரன் என்பதால் என்னிடம் தனிப் பிரியம். 

அப்பொழுது உலகம் இரண்டாவது யுத்தத்தில் தத்தலித்துக் கொண்டிருந்த காலம். எல்லா வற்றிற்கும் தட்டுப் பாடு. ரேஷன் கடைகளில் தான் அரிசி, கோதுமை, மக்காச் சோளம், சீனி இவைகள் வாங்க வேண்டும். என் பாட்டிதான் ரேஷன் கடைக்குச் சென்று சாமான் வாங்குவார். அந்த ரேஷன் கடை என் ஆராம்பப் பள்ளிக்கு அருகில் தான் இருந்தது. அங்கு ரேஷன் பொருள்களை வாங்க கையெழுத்துப் போட வேண்டும். கை நாட்டு ஒப்புக்கொள்ளப் படவில்லையோ என்னமோ? தெரியவில்லை. 

என் பாட்டி என் பள்ளிக் கூட வாசலில் இருந்து, ', சங்கரா! வாடா! ரேஷன் கடையிலே கையெழுத்துப் போடணும்!' என்று கத்துவார். அந்தப் பள்ளியே அதிரும். என் ஆசிரியரும், ', சங்கரா! உங்க பாட்டி கூப்பிடறா. போ, போ!' என்று விரட்டுவார். 

'ஏன், பாட்டி கத்தரே?' என்று நான் சொன்னால், 'கத்தினால் தான் காரியம் நடக்கும். பேசாம வாடா எங்கூட!' என்று என்னை ரேஷன் கடைக்குக் கூட்டிக் கொண்டு போவார். அங்கே நான் கையெழுத்துப் போட்டவுடன், 'போடா, பள்ளிக் கூடத்துக்கு, பாடம் போயிடப்போறது' என்று என்னை அங்கிருந்து விரட்டுவார். 

நான் தயங்கி இருப்பதைப் பார்த்து, 'சரி, சரி, இந்தா ஓரணா. வைச்சுக்க கண்டத வாங்கித் திங்காதே. லாலாக் கடையிலே அல்வா சாப்பிடு, காராச் சேவ் சாப்பிடு. போ போ' என்று ஓரணாவை என்னிடம் தந்து என்னை பள்ளிக்கு விரட்டுவார். 

************************

அந்தக் காலத்தில் பள்ளிச் சுவர்களில் பாடங்களைப் பற்றிய படங்கள் இருக்காது. ஹிட்லர் படம் சுவர்களில் மாட்டி இருக்கும். ஹிட்லர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக மாட்டப் பட்டிருக்கும். அவர் காளியைப் போல் நாக்கை வேளியே நீட்டிக் கொண்டு, அந்த நாக்கிலிருந்து ரத்தம் சொட்டுவதாக சித்தரிக்கப் பட்டிருக்கும். 

காலையில் தெய்வ வணக்கப் பாட்டுக்குப் பிறகு, கோரசாக பள்ளிப் பிள்ளைகள் அனைவரும், 'கொடுமைக் காரன் டீ, ஹிட்லர், கொடுமைக் காரன் டீ' என்ற பாட்டைத் தவறாது பாடவேண்டும். இது அந்தக் கால ஆங்கில அரசின் உத்தரவு. 

'பாட்டி! ஹிட்லர் கொடுமைக்காரன்!' என்று நான் சொல்வேன். 

'ஹிட்லர் கொடுமைக்காரன், வெள்ளக்காரன் கொள்ளைக்காரன்' என்று என் பாட்டி ஒரே போடாகப் போடுவார். அந்த வாக்கியங்கள் எவ்வளவு அர்த்த புஷ்டி உள்ளது என்பதை இப்போதும் நான் உணருகிறேன். 

*******************************************

எனக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க ஒரு ஆசிரியர் ஏற்பாடாகி இருந்தது. அவர் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பது அந்தக் கால கொள்கையின் பாற்பட்டது. அதாவது 'அடியாத மாடு, படியாது' என்பது தான் கொள்கை. 

'பிள்ளைகளை அடித்துத் தான் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்பொழுது தான் மூளையில் பதியும்' என்ற அழிக்க முடியாத எண்ணம் ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடம் நன்கு பதிந்து இருந்தது. 

என் ஆங்கில ஆசிரியர் ஒவ்வொரு ஆங்கில வார்த்தையைச் சொல்வதற்கும் தலையில் நறுக் கென்று குட்டுவார். சரியாகச் சொன்னால் ஒரு குட்டு. தப்பாகச் சொன்னால் இரண்டு குட்டு.ஆகையால் குட்டிலிருந்து தலை தப்பாது. ஆகையால் ஆங்கில வாத்தியார் வருகிறார் என்றாலே எனக்கு இனம் புரியாத பயம் வந்துவிடும். ஆனால், இதிலிருந்து நான் தப்ப முடியாது என்பதும் தெரியும். 

ஒரு நாள் காலை. 

'சி. யே. டி. கேட் - பூனை, ஆர்.யே.டி. ரேட் - எலி.' என்று அந்த ஆங்கில ஆசிரியர் என் தலையில் குட்டிக் கொண்டே பாடம் நடத்தினார். 

'டி. யு.பி. டப் - குப்பைத் தொட்டி' என்று ஆங்கில ஆசிரியர் சொன்னதை என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. அதற்காக, பத்துமுறை இவைகளைத் திரும்பத்திரும்பச் சொல்லச் சொல்லி, அவரும் விடாமல் என் தலையில் குட்டிக் கொண்டே இருந்தார். 

நானும் அழுது கொண்டே, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தேன். 

இதைப் பார்த்த என் பாட்டியால் பொறுக்க முடியவில்லை. 

'காலங்கார்த்தாலே .. இதென்ன அபசகுனம் மாதிரி குப்பத் தொட்டி, குப்பத்தொட்டி என்று. எத்தன குட்டு குழந்தை தலையிலே! நீ டீயூஷன் படிச்சது போதும், இனிமே வேண்டாம்' என்று இதற்கு ஒரு முடிவு கட்டி விட்டார் என் பாட்டி. 

என் பாட்டி சொல்லி விட்டால், அதற்கு மறு பேச்சே கிடையாது. என் பாட்டி வாக்கு வேத வாக்கு. யாரும் அதை மீற முடியாது. 

என் தலை தப்பியது என் பாட்டியால்!

********************************
அப்பளாம் இடுவதற்கு உளுந்தை கருங்கல்லால் ஆன இயந்திரத்தில் கையால் ஆட்டி அரைக்க வேண்டும். அதை ஆட்டி அரைப்பது என் பாட்டி தான். அரைப்பதற்க்கு முன், முறுக்கை பொடி செய்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொண்டு, அதைச் சுவைத்த படியே பாட்டி அந்த கனமான கருங்கல் இயந்திரத்தில் அரைப்பார். நான் அப்போது பாட்டியின் முதுகில் சாய்ந்து கட்டிக் கொண்டு, ஊஞ்சல் போல் ஆடுவது ரொம்பவும் சுகம். 

'டே, அரைக்கிறதே சிரமம். அதிலே நீ வேற முதுகிலே! .. ஏ, பிச்சம்மா! உன் புள்ளையப் பாரடி' என்று ஸ்ந்தேஷப் படுபவர் என் பாட்டி. அந்தக் கிண்ணத்தில் உள்ள பொடித்த முறுக்கை எடுத்தால், 'டே, பல் இல்லா தாத்தாவாயிட்டயா, என்ன?' என்று தன் பொக்கை வாயால் சிரிப்பது எனக்கு ஆனந்தமாக இருக்கும். 

பாட்டியின் முதுகிலே சாய்ந்து இருக்கும் பொழுது, அந்த இயந்திரம் நாம் நினக்கும் வார்த்தைகளையே சொல்வதாகப் படும்.

'முருகா, முருகா' என்று நினத்தால், அந்த இயந்திரமும் 'முருகா, முருகா' என்று சொல்வதாகப்படும். 'ராம் ராம்' என்று நினைதாலும், அதுவும் அதையே எதிரொலிப்பதாகப் படும். இதில் உள்ள ஆச்சரியம் இன்றுவரை எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. 

******************************

என் பாட்டிக்கு கண் சிறிது மங்கல். தன்னைப் பார்க்க வரும் பெண்களை எடை போடுவதில் மிகவும் திறமைசாலி. 

'கமலியா! வா வா. எப்போ வந்தே ஊரிலேருந்து?' என்று கமலியை தன் பக்கத்தில் உட்காரவைத்துக் கொள்வார் என் பாட்டி. 

அப்பொழுது தன் இரு கரங்களால் கமலியின் கரங்களைப் பற்றிக் கொள்வார் என் பாட்டி. பார்ப்பவர்களுக்கு, 'பாட்டிக்கு, என்ன அன்பு?' என்று தான் தோன்றும். ஆனால், பாட்டி கமலியின் கைகளைப் பிடிப்பது, அவள் கைகளில் 'எவ்வளவு தங்க வளையல்கள் போட்டிருக்கிறாள்? அவைகளில் புதிதாக உள்ளவைகள் எத்தனை?' என்ற மதிப்பீட்டிற்குத் தான் என்பதை ஒருவருக்கும் தெரியாதபடி செயல்படுவது பாட்டியின் சிறப்பு அம்சம். 

'ஏண்டி, இந்த வளையல் புதுசா இருக்கே? ஆத்துக்காரர் போட்டதா? ரொம்ப சமத்து நீ' என்று கமலிக்குப் பாராட்டிப் பட்டம் வேறு கொடுப்பார். 

'காதிலே வைரமா?' என்று கேட்கும் பாட்டிக்கு, 'வைரம் இல்ல .. வெறும் கல் தோடு தான். வைரத் தோடு, வைர மூக்குத்தி எல்லாம் ஆத்திலே இருக்கு. தினசரி போட்டுண்டா எண்ணை இறங்கிடுது, பாட்டி' என்ற விளக்கம் கேட்டு, 'கமலி பணக்காரி தான் .. புக்காத்தில் சந்தேஷமாக இருக்கிறாள்' என்று பாட்டி ஊகித்துக் கொள்வார். 

***********************
என் பாட்டியிடம் மனம் விட்டுப் பேசும் பெண்களும் ஏராளம். அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுவதுடன், பல முறைகள் தானே தலையிட்டு பல குடும்பப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்திருக்கிறார். பிறரிடம் மரியாதை காட்டும் பாட்டிக்கு, பயம் என்பது கிடையாது. 

'பாட்டி, என் மாமியார் என்னை ரொம்பவும் திட்டுகிறார்' என்று சொல்லிக் கொண்டு வரும் பெண்களிடம் 'ஏண்டி, உன் மாமியாரை எனக்கு உன்னை விட அதிக நாளாகத் தெரியும். நீ ஒரு தூங்கு மூஞ்சி. நான் தான் பார்க்கிறேனே. வீட்டு வாசல் தெளிப்பது உன் மாமியார். நீ விடிகாலையில் எழுந்து, வாசல் தெளித்துக் கோலம் போட்டா என்ன? அப்படி என்னடி தூக்கம்? உன் ஆம்படையான் உன் புடவைத் தலைப்பை விட மாட்டான். நீயும் 'ஏண்ணா, விடுங்கோண்ணா'ன்னு சொல்ல மாட்டே! உன் மாமனாரோ பரப்பிரம்மம். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று ஒதிங்கிடுவார். வீட்டு மஹாலெட்சுமியா நட. எல்லாம் சரியாப்போயிடும். வயசான காலத்திலே உன் மாமியாரை வீட்டு வேலை செய்ய வைக்கிறயே .. வேண்டாம் டீ, வேண்டாம்' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடுவார். 

வந்த பொண்ணும், 'சரி பாட்டி, நீங்க சொல்லற படியே செய்யறேன்' என்று சென்று விடுவாள். மீண்டும் அவளைப் பார்த்தாள், பாட்டி ஞாபகமாக, 'இப்போ எல்லாம் சரியாப் போச்சா?' என்று விசாரிப்பார். 

'ஆமாம், ஆனால், என் மாமியார் இப்போ காலையிலே எழுந்திருக்க விடமாட்டேன் என்கிறா?'

'என்னடி இது, அதிசயமா இருக்கு?' என்று தன் விரலை மூக்கின் மேல் வைத்து கேட்பார். 

'எனக்கு இது நாலு மாசம் ... 'முதல் பிரசவம் ஜாக்கிரதையா' இருக்கணும் என்கிறார் என் மாமியார்.'

'எப்படியோ மாமியார் அப்போ அழுதுண்டே வாசல் தெளித்துக் கோலம் போட்டா, இப்போ சிரித்துக் கொண்டே வாசல் தெளித்துக் கோலம் போடவைச் சுட்டே! .. அதிர்ஷ்டக்காரப் பொண்ணு' என்று பாராட்டோடு அந்தப் பெண்ணும் வெட்கிக் தலை குனிந்து தன் வீட்டிற்குச் சென்று விடுவாள். 

***************

என் பாட்டி என் அம்மாவிடம் அவ்வளவு பிரியம். அவர்களை மாமியார்-மாட்டுப்பெண் என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். என் அம்மாவை பாட்டி 'பிச்சு பிச்சு' என்று தான் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாளைக்கு எத்தனை முறை பாட்டி சொல்லுவார் என்று ஒரு கணக்கே கிடையாது. பாட்டி 'முருகா, முருகா', 'ராமா, ராமா' என்று சொன்னதைவிட 'பிச்சு, பிச்சு' என்று சொன்னது தான் அதிகம் இருக்கலாம். அவ்வளவு அன்பு, அன்நோன்யம். அந்தக் காலத்தில் இப்படி இருப்பது என்பது ஒரு அதிசயம். 

தன் புடவை கிழிந்திருந்தால், அதை கூடிய மட்டும் தானே தைத்துக் கொள்வார். சுருட்டித் தான் கையால் தைப்பார். அந்தத் தையல் வெளியில் நன்கு தெரியும். 

'புதுசா ஒரு புடவை வாங்கிக்கிங்கோ?' என்று என் அம்மா சொன்னாள், 'முதல்லே உனக்கு இரண்டு, மூன்று புடவைகள் உடனே வாங்கணும். அதற்கு வழியைப் பாரு' என்று சொல்லி ஒரே போடாகாப் போட்டு விடுவார்கள். 

'பாட்டி வேறு கிழியாத புடவையாய் உடுத்திக்கோ!' என்று சொன்னால், 'இந்தப் புடவைக்கு என்ன குறைச்சல்டா? வயசான பாட்டிக்கு பொக்கை வாய்தான் அழகு. நரைமுடிதான் பாந்தம்!' என்று சொல்லும் பாட்டியிடம், 'ஆள் பாதி ஆடைபாதி என்பார்களே, பாட்டி' என்று சொன்னாள்: அது ஆளே பாதியாய் இருப்பவர்களுக்குத் தான். முழு ஆளுக்கு ஆடை அழகு அவசியமில்லைடா!

************************************
'பாட்டி! அடுத்த வீட்டு ராமு என்னை திட்டரான்' என்று நான் சொன்னால், 'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. அதையேன் நினைச்சுண்டே இருக்கே. மறந்துடு. அவனும் மறந்துட்டு, உன்னோடு விளையாடுவான். அது தான் குழந்தைகளுக்கு நல்லது. ராமு நல்லவண்டா .. அவன் கூட விளையாடு' என்று என்னை உற்சாகப் படுத்துவார். 

'நல்லதை நாரிலே தொடு, பொல்லாததைப் புழிதியைப் போட்டு மூடு' என்ற என் பாட்டியின் அமுத மொழிக்கு அட்சர லட்சம் பரிசு கொடுத்தாலும் போறாது. அந்த வாசகத்தை வாசகர்கள் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தால் அதன் ஆழ்ந்த பொருள் வெளிப்படும். 

'என்ன அர்த்த புஷ்டியான வார்த்தைகள் .. அவ்வையின் அமுத மொழிமாதிரி' என்று நான் பல நாட்கள் இவைகள் நினைத்து மகிந்திருக்கிறேன். 

'பாட்டி நீ ஒரு பொக்கிஷம்' என்று நான் பாட்டியை அப்படியே கட்டிப்பேன். 

'பிச்சு! பாரடி உன் பிள்ளையை, பொக்கிஷமாம் சொல்லரான். கடையிலே போனா, இந்தப் பொக்கிஷத்திற்கு ஒரு பொட்டலம் கடுகுகூட இனாமாக் கிடைக்காது. பொக்கிஷம் இல்லை நான். பொக்கை வாய்!' என்று சொல்லி பொக்கை வாயால் சிரிப்பார் என் பாட்டி. 

'பாட்டி பொக்கை வாயால் சிறிப்பதே ஒரு பொக்கிஷம் தான்' என்று நான் ஆனந்தித்த நாட்கள் அனந்தம். 

'பாட்டி ஒரு பொக்கிஷம், பாட்டி ஒரு பொக்கிஷம்' என்று என் அம்மாவை 'பிச்சு, பிச்சு' என்று என் பாட்டி சொல்வதைப் போல் நான் சொல்லவிழைகிறேன். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017