விக்ரமனுடன் ஒரு உரையாடல் தொகுப்பு - பவித்திரன்.

ஏன் இதைப் பேட்டி என்று குறிப்பிடாமல் உரையாடல் என்று குறிப்பிடுகிறேன் என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். ஏனென்றால், விக்ரமன் அவர்களை நான் கேள்விகள் கேட்டது ரொம்பவும் கொஞ்சம். சீனிவாசனும் அப்பப்போ சில தகவல்களைச் சொன்னார். விக்ரமன் அவர்கள் தானாகவே பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். மிகவும் உற்சாகமாகவும் பேசினார். அவருக்கு எங்களிடம் ஏதோ ஒரு நம்பிக்கையும், பலவற்றைச் சொல்ல வேண்டும் என்ற அவாவும் அவரிடம் இருந்ததை நான் காணமுடிந்தது. இதற்கு என் இனிய நண்பர் திரு.வி.எஸ். சீனிவாசன் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததால் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது.

விக்ரமனின் குடும்ப நண்பர் சீனிவாசன் என்பது வெளிப்படை. அவரது பரம ரசிகரும் கூட. எதையுமே பாசிட்டிவாக நோக்கும் உள்ளம் கொண்டவர் சீனிவாசன். உரக்கப் பேசி நான் கேட்டதில்லை. எதிரில் உள்ள நபர் மிகவும் தவறாகப் பேசினாலும், மனம் பதறாமல் சமநிலை இழக்காமல் சம்பவங்களையும், சம்பந்தப்பட்டவர்களையும் கையாளும் திறமையைப் பார்த்து நான் பலமுறை வியந்ததுண்டு. ஒரு வேளை இந்த குணாதிசயங்களினால் தானோ என்னவோ, விக்ரமன் அவர்கள் எங்களிடம் மனம் திறந்து பேசினார். ஆகையால், இதைப் பேட்டி என்பதை விட, உரையாடல் என்று குறிப்பது தான் பொருந்தும் என்று நினைத்து அதற்கேற்ப தலைப்புக் கொடுத்துள்ளேன்.

கலைமாமணி விக்ரமன் என்ற அறிவிப்பு அவரது மாம்பலம் வீட்டில் பளிச்சென்று தெரிகிறது. சொந்த வீட்டில் மாடியில் மனைவியுடன் வசிக்கிறார். 4-ம் தேதி ஜீலை 2010 ஞாயிறு இரவு சுமார் 7 மணி அளவில் எனது அபிமான நண்பரும், விக்ரமனுடன் உரையாட ஏற்பாடு செய்த திரு. வி.எஸ்.சீனிவாசன் அவர்கள் துணையுடன் பழம் -பூவுடன் அவரைச் சந்தித்தோம்.


சுழல் நாற்காலியில் புத்தகங்கள் சூழ அமர்ந்திருந்தார்.

 இலக்கியப் பீடம் பத்திரிகைகள் கட்டுகளாக தபாலில் சேர்க்க தயாராக இருந்தது.

விக்ரமன் - நாளை பெட்ரோல் விலையேற்றத்திற்கு பந்த் நடைக்கப் போகிறது. இந்த பார்சல்கள் நாளைக்கும் தபாலில் சேர்க்க முடியாது என்ற கவலை.

சமீபத்தில் தி.மு.க. கோவையில் நடத்திய அகில உலக செம்பொழி தமிழ் மகா நாடு தமிழுக்கு எந்த விதத்திலும் பயன் அளிக்காது. வீண் செலவு. தமிழ் புத்தகங்களைக் கூட அதிக அளவில் இப்போதைய லைப்ரரிகளில் தமிழக அரசு வாங்கி ஆதரிப்பதில்லை. ஒரு லைப்ரரியில் ஒரு புத்தகம் இருந்தால், அதைப் பலர் படிக்கும் வாய்ப்பு உண்டு. கிராம, தாலுக்கா, ஜில்லா மற்றும் நகர லைப்ரரிகளில் அதிகமான புதிய தமிழ்ப் புத்தகங்களை வாங்கி ஆதரிக்க வேண்டும். அதுதான் நிரந்தரமான தமிழுக்குச் செய்யும் தொண்டு.

ஒரு பட்டி மன்றத்தில் தமிழை வளர்ப்பது சினிமாவா, சின்னத் திரையா, அச்சுத்துறையா என்று வாதமிட்டார்கள். அச்சுத்துறை என்ற தலைப்பே தவறு. எழுத்துத் துறை என்று இருக்க வேண்டும். இப்பொழுது கணிப்பொறி யுகமாகி விட்டது. அச்சுத்துறையிலேயே அது ஒரு பெரும் புரட்சியைக் கொண்டு வந்து விட்டது.

பழய கருப்பையா என்ற அ.தி.மு.க.வின் இலக்கிய அணியின் செயலாளரை சில குண்டர்கள் அவரது வீட்டில் இருக்கும் போது தாக்கி இருக்கிறார்கள். இந்தக் கைதானே எங்கள் கலைஞரைத் திட்டி எழுதியது என்று சொல்லியே தாக்கி இருக்கிறார்களாம்.

அண்ணா சொன்னார் - சொல்லால் அடி, கல்லால் அடிக்காதே என்று. ஆனால், காலம் மாறி விட்டது. சொல்லால் அடிப்பவர்களைக் கல்லால் அடிப்பதுதான் திராவிட கலாச்சாரமாகிவிட்டது. அதைத் தலைவர்களே தண்டிக்காமல் இருப்பது, அதை ஊக்கிவிப்பதாகத் தான் நாம் கொள்ள வேண்டும். அதிகம் சொன்னால், நமக்கும் அதே கதிதான். இந்த மகா நாடு கலைஞரைப் பாராட்டி நடந்த ஒன்று. தமிழைப் பாராட்டி நடந்தது இல்லை என்பது தான் உண்மை.

பவித்திரன் - வாய்மை இணைய தளப் பத்திரிகையில் உங்களைப் பற்றி எழுதி உள்ளோம்.

விக்கிரமன் - நான் பார்க்க வில்லை. இண்டெர் நெட் சரியாகச் செயல்படுவதில்லை. அரசாங்க ஊழியர்களிடம் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கையூட்டு மூலம் தான் காரியத்தைச் சாதிக்க வேண்டிய நிலை.

பவித்திரன் - இண்டெர் நெட் செலவு இப்போது மிகவும் குறைந்து விட்டது. மேலும் நன்கு செயல் படுவதாகத்தான் என்னைப் பொருத்த அளவில் என் அனுபவம்.

விக்கிரமன் - புத்தகங்களையும் இணையதளத்தில் போடுகிறார்கள். அது எந்த விதத்திலும் அச்சடித்த புத்தகம் போல் வராது. மேலும் இந்த இணயதள வெளியீட்டினால், எழுத்தாளர்களின் சன்மானங்கள் குறைந்து போய் விடுகின்றன. மேலும், அவர்கள் ஏமாற்றப்படவும் செய்கிறார்கள். என்னுடைய பல சரித்திர நாவல்கள் இணையதளத்தில் போட கேட்ட போது, சன்மானத்தைப் பற்றிய ஒரு தெளிவு இல்லாமல் சொன்னார்கள். இப்பவும் அச்சிட்ட புத்தகத்தை வாங்கிப் படிப்பதையே பலரும் விரும்புகிறார்கள். சமீபத்தில் ஒரு மங்கை என்னிடம் வந்து நான் அமெரிக்கா போகப் போகிறேன். உங்கள் சரித்திர நாவல்கள் அனைத்தும் எனக்கு வேண்டும் என்று கேட்டார்கள். என்னிடம் இருக்கும் ஒரு சிறு நாவல்களை மட்டும் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு சென்றார்கள். அந்த மங்கையும் கணிப்பொறியில் நாவல்களைப் படிப்பதை விரும்பவில்லை என்றுதான் தெரிவித்தார்கள். மற்ற என் நாவல்களும் வேண்டும் என்றார்கள். அதற்கு உடனே ஏற்பாடு செய்ய முடியாது. சில நாட்களில் தருவித்துக் கொடுக்கிறேன் என்றேன். பெண்கள் தான் பழைய நாவல்களைத் தேடி விரும்பிப் படிக்கிறார்கள் என்று எனக்குப் படுகிறது.

பவித்திரன் - நீங்கள் சொல்வது சரியாக இருப்பினும், நாளாவட்டத்தில் கணினி மூலம் பத்திரிகைகள் வெளியிட்டு பிரபலமாகும் நேரமும் வர வாய்ப்பிருக்கிறது.

விக்கிரமன் - ஒன்றை நான் ஒப்புக் கொள்கிறேன். கணினி இப்போது பத்திரிகைகளை அச்சிடுவதற்கு மிகவும் அனுகூலமாக இருக்கிறது. முன்பு போல் கம்போஸ் பண்ண வேண்டிய அவசியமில்லை. விஷயத்தை அப்படியே அச்சுக் கோக்காமல், டைப் அடிப்பது, ப்ரூஃப் பார்த்து திருத்துவது ஆகிய அனைத்தும்  மிகவும் சுலபமாகப் போய் விட்டது.

பவித்திரன் - வள்ளுவரை கலைஞர் பல வழிகளில் சிறப்பித்திருக்கிறாரே?  அது தமிழுக்கு அவர் செய்த தொண்டு தானே?

விக்கிரமன் - சொல் ஒன்று செயல் வேறு என்று இருந்தால் சரியாகி விடுமா ?  வள்ளுவரின் முக்கிய கொள்கைகளில் ஒன்று கற்பு. இந்த மகா நாட்டில் வள்ளுவரைவிட முற்றும் அறிந்தவர் கலைஞர் என்று அவருக்குத்தான் முதல் மரியாதை மற்றும் கீரீடம் பலர் சூட்டி இருக்கின்றனர். வள்ளுவர் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் கலைஞர் ஏக பத்தினி விரதம் கொண்டவர் இல்லை. பல பெண்களைக் கட்டிக் கொண்டவர். அதனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது, அவர் வள்ளுவத்தைப் பற்றிக் கருத்துக் கூறும் தகுதியை இழக்கிறார் என்று தான் நான் சொல்லத் துணிகிறேன்.

பவித்திரன் - தமிழ் நாட்டில் தமிழ்மொழிக் கல்வி கற்றவர்களுக்குத் தான் வேலை என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்கப் போவதாக அறிக்கை வெளியுட்டுள்ளாரே ? அது தமிழ் படித்தவர்களுக்கு உதவும் செயல்தானே ?

விக்கிரமன் - தமிழ் நாட்டிலுள்ள பல மத்திய அரசாங்க அலுவலகங்களான போஸ்ட் ஆபீஸ், பேங்க் போன்றவைகளில் தமிழக அரசு உத்திரவு எப்படிச் செல்லும் ஆங்கிலமும் - ஏன் ஹிந்தியும் இல்லாமல் தமிழன் தமிழ் நாட்டிற்கு வெளியே சென்று தொழிலோ அல்லது வேலையோ பெற முடியாது.

சீனிவாசன் - இப்பொழுதும் தமிழக அரசின் கடிதங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. இன்னொரு வேடிக்கை என்ன வென்றால், கடிதத்தின் விஷயம் ஆங்கிலத்திலும், கையெழுத்து மட்டும் தமிழில் இருக்கும் அவலமும் இங்கு உண்டு.

விக்கிரமன் - தமிழை உண்மையாக வளர்த்த சிலரும் தி.மு.க.விலும் உண்டுதான். பெரும் தலைவர்களை விடுத்துச் சொல்ல வேண்டுமென்றால், தென்னரசு, சீனிவாசன் போன்ற நான்கு பேர்கள் தான் தேர்வார்கள்.

சீனிவாசன் - அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைத் தேர்வு செய்யும் பொழுதும், தமிழ் இல்லாமல் சம்ஸ்கிரதத்தை ஒரு மொழியாக எடுத்துப் படித்த பள்ளிகளையே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தவிற்கும் நிலைதான் தமிழகத்தில் நிகழ்கிறது. இது தவறான முறை.

விக்ரமன் - தினமணியில் தொடர்ந்து பலரைப் பற்றி வாரந்தோறும் எழுதிக் கொண்டு வருகிறேன். வை.மு.கோதை அம்மாள் அவர்களைப் பற்றிய மேலும் விபரங்கள் தெரிந்தால் நல்லது.

பவித்திரன் - அவரது வீடு திருவல்லிக்கேணியில் சிருங்கராச்சாரி தெருவின் கோடியில் தெருவை அடைத்த மாதிரி உள்ள பெரிய வீடு. திருவல்லிக்கேணியில் இருக்கும் பொழுது நான் அந்த வழியாகப் பலமுறை சென்றிருக்கிறேன். அவர் மிக அதிகமான நாவல்கள் எழுதி இருக்கிறார்கள். எல்லாம் சாணிப்பேப்பர் பத்திரிகை.

விக்ரமன் - பேப்பர் கிடைக்காத காலம் அது. அந்த மாது சுதந்திரப்போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறார். சமூக சேவகியும் கூட. போன வாரம் தினமணி வார இதழில் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

தனது கட்டுரை வந்த தினமணி நாளிதழின் பக்கத்தை என்னிடம் கொடுத்தார். அது எனக்குக் கொடுத்த பிரதி என்று நினைத்தேன். விக்ரமன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். நான் அந்த நாளிதழை ஒரு நோட்டம் விட்டபடி, அந்த பேப்பரை மடித்தேன். அதைப் பார்த்த விக்ரமன் மிகவும் சாந்தமாக, ஒரு பிரதிதான் கைவசம் உள்ளது. மடிக்காதீர்கள் என்று சொன்னார். எனக்கு மிகவும் வருத்தமாகப் போய் விட்டது. எனக்கு அளித்த பிரதி என்று தவறாக நினைத்து விட்டேன். மன்னிக்கவும் என்ற படி அந்த பேப்பர் மடிப்பைச் சரிசெய்து, மிகவும் பக்தி சிரத்தையுடன் அதை பக்கத்தில் உள்ள புத்தகங்கள் நிறைந்த மேஜையில் ஒரு புத்தகத்திற்கு அடியில் வைத்தேன்.

என் செய்கையை நினைத்து வருந்தினேன். ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்று என்னையே நொந்து கொண்டேன். எந்த ஒரு இலக்கிய கர்த்தாவும் தன் பிரசுரம் மடிக்கப்படுவது, அதை அவமதிப்பதாகவே கருதுவர். மேலும், அந்த கர்த்தாவின் முன்னிலையில் நான் செய்தது தண்டிக்கத் தக்கது தான். ஆனால், விக்ரமனோ எந்தவிதமான கோபமும் கொள்ளாமல் அதே சமயத்தில், தன் நிலையை சுருக்கென்று அடுத்தவரைப் புரியவைத்த பாணி அவரது முதிர்ந்த தேர்ச்சிக்கு ஒரு எடுத்துக் காட்டு.

விக்ரமன் - நாமக்கல் கவிஞர் ஒரு சிறந்த கவிஞர் மட்டுமல்ல, சமூக லட்சியம் கொண்டவர். சுதந்திரப் போராட்ட வீரர். தினமணியில் நான் குறைந்தது ஒரு 100 பேர்களைப் பற்றி எழுத விழைந்துள்ளேன். இலக்கியவாதியாக மட்டும் ஒருவர் இருந்தால் போறாது. சமூக விழுப்புணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும்.

பவித்திரன் - இலக்கியவாதி சமூகத்திற்கு உதவும் இலட்சியவாதியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் அளவுகோல் அவசியமானதாக எனக்குப் படவில்லை. இலக்கியவாதி இலக்கியவாதியாக மட்டுமே இருந்தால், அவனை நான் ஏற்கமாட்டேன் என்ற உங்கள் கருத்து சரியானதா என்ற சந்தேகம் எழுகிறது. கதைகளில் ஒரு கருத்து இருக்க வேண்டும், விழுப்புணர்வு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பு தவறில்லை. ஆனால் அதையே ஒரு நிபந்தனையாக வைப்பதைத் தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

விக்ரமன் - இந்த அளவுகோல் இல்லை என்றால் இலக்கிய கர்த்தாக்கள் 100 எண்களையும் தாண்டிவிடும். நான் வைத்துக் கொண்ட அளவுகோல் இது. இதை வைத்துப் பார்த்தால், மணிக்கொடி மன்னர்கள் என்று தலையில் வைத்துக் கொண்டாடும் சில எழுத்தாளர்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணத்திற்கு கு.ப.ரா. வையே எடுத்துக் கொள்வோம். அவர் எழுதிய கதைகளில் என்ன புதுமை காண்கிறோம் ?  காமக் கலாசாரம் தான் அவரது கதைகளில் இருக்கும். செக்ஸ்தான் அவரது கதைகளில் பரவலாக உண்டு. தகாத உறவுகள், காமக் களியாட்டங்கள் இவைகள் தான் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவரைப் பற்றி நான் தினமணியில் எழுதுவதாக இருந்தால் எவ்வளவு எழுத முடியும். அவர் சமூகத்திற்குச் செய்த சேவை ஒன்றுமே இல்லையே !

இதைக் கேட்ட எனக்கு மனசிற்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. கு.ப.ரா.வின் பல கதைகளைப் படித்த வாசகன் என்ற நிலையில் நின்று பார்த்தால், பல அவரது கதைகள் மிகவும் உன்னதமானவைகள் என்பதை மறுக்க முடியாது. கு.ப.ரா. சிறுகதை மன்னன் என்று போற்றப்பட்டவர். பிரஞ்சு சிறுகதை மன்னன் கைடி மாப்பசானுக்கு இணையாக அவர் மதிப்பிடப்பட்டவர். அவரது ஒரு கதையில் குழந்தை குணமாவதற்காக ஒரு மஞ்சள் துணியில் பணத்தை முடிந்து சுவாமிக்கு காணிக்கையாக முடிந்து வைத்திருப்பாள் தர்ம பத்தினி. வாசலில் ஒரு பிச்சைக்காரன். அந்தப் பிச்சைககாரனைப் பார்த்த கணவனுக்கு காசுபோட்டே தீரவேண்டும் என்ற எண்ணம். மஞ்சள் துணியில் முடிந்திருந்த பிரார்த்தனைப் பணத்தை பிச்சைக்காரனுக்குப் போட்டுவிடுகிறான். அவன் பத்தினியோ அம்மாவோ கேட்கிறாள்- கோயிலுக்கு காணிக்கை செலுத்திவிடு. செலுத்தி விட்டேன் என்று அவன் சொல்ல, பிரசாதம் எப்போ வரும் என்று கேட்க, ஏழைக்குப் போட்டதே பிரசாதம் தானே என்று அந்தச் சிறுகதை முடிகிறது. என் ஞாபகத்திலிருந்து எழுதிகிறேன். கு.ப.ரா.வின் எழுத்தில் கண்களில் கண்ணீர் வரும் கதை இது. என் மனத்தில் பட்டதை ஓரளவாவது சொல்ல நினைத்தேன். ஆனால் விக்ரமனிடம் சொல்ல ஏனோ மனம் இசையவில்லை.

பவித்திரன் - கு.ப.ரா. ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று பெயர் எடுத்தவர்           அல்லவா ?

விக்ரமன் - கும்பகோணத்தில் உட்கார்ந்து கொண்டு தாங்கள் தான் இலக்கியம் செய்கிறோம். மற்றவர்கள் எல்லாம் இல்லை என்று ஒரு சிறிய கூட்டம் சொன்னதை எப்படி ஏற்க முடியும்? இதில் புதுமைப் பித்தனும் சேரும். விரசமான கதைகளை எழுதுவதால் யாருக்கு என்ன லாபம்?

கா.நா. சுப்பிரமணியம் தான் சிறந்த விமர்சகர் என்று சொல்லும் ஒரு கூட்டமும் உண்டு. கா.நா.சு. ஆங்கிலத்திலே சிந்தித்து, தமிழில் எழுதுபவர். அதில் என்ன சிறப்பு இருக்க முடியும்?  எதற்கெடுத்தாலும், ஆங்கிலத்து இலக்கியத்தையே அடிகோலாகக் கொள்வது எந்த விதத்தில் ஞாயம்?  கல்கி இலக்கியவாதி இல்லை என்று சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு இலட்சணம் என்ன வென்றால், அவன் வாசகர்களை உருவாக்க வேண்டும். அதில் வெற்றி கண்டவர் கல்கி. வாசகர்களை உருவாக்கிய ஒரு சிறந்த வெற்றி கண்ட இலக்கியவாதி. மணிக்கொடிக் காரர்களெல்லாம் பத்திரிகை உலகத்தில் தோல்வி கண்டவர்கள். ஆனால் அதிலே கல்கி வெற்றி கண்டவர். என்னைப் பார்க்கும் போதெல்லாம் கா.நா.சு. சொல்வார் - நீ கல்கி ஆள். அதில் நான் பெருமைப் படுகிறேன்.

பவித்திரன் - கா.நா.சு. ஒரு கட்டுரையில் திருக்குறள் இலக்கியம் இல்லை அது ஒரு அறநூல் என்று எழுதியதற்கு, தமிழ்பத்திரியாளர்கள் பலர் அவரை மிகவும் மோசமாக நடத்தினார்களே

விக்ரமன் - ஆங்கில அறிவை மட்டும் வைத்து மதிப்பிடும் அவரது அளகோல் சரியானதாக இருப்பதில்லை. ஆங்கிலத்தில் எழுதிய அவரது கதை-கட்டுரைகளில் ஒரு குறையும் காணமுடியாதுதான். ஆனால், அதே நிலை அவரது தமிழ் எழுத்துக்களில் இல்லை. வாசகன் படிப்பதில் சிரமப்படுவதை நாம் காணலாம். கல்கி ஒரு சிறுகதை எழுதாளரே இல்லை என்று சொல்வதற்கு கா.நா.சு.க்கு என்ன அருகதை இருக்கிறது. ஒரு பெரும் வாசகர் கூட்டத்தை உருவாக்கிய கல்கியின் சாதனை சாதாரணமானதா என்ன ? கல்கி விகடனில் ஆசிரியராகச் சேர்ந்த பிறகுதான், வாசன் சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்தார். விகடன் சரியான ஒருவரிடம் இருக்கிறது என்ற வாசனின் கணிப்பு மிசச் சரியானது என்பதை கல்கி நிரூபித்து விட்டார். ஏனென்றால், வாசன் விகடனை மிகவும் ஆத்மார்த்தமாக நேசித்தவர். அதன் விற்பனைக்கு தானே வாசகர்களிடம் சென்று பிரசாரம் செய்தவர்.

பவித்திரன் - சி.சு.செல்லப்பாவும் கா.நா.சு. கட்சி தானே

விக்ரமன் - சி.சு.செல்லப்பாவும், கா.நா.சு.வும் பிறகு எதிரிகளாகச் செயல்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ராமையா கதைகளை செல்லப்பா சிறந்தது என்று பாராட்டினால், கா.நா.சு. இல்லை என்று எதிர்ப்பார். இது செல்லப்பாவுக்கு உடந்தை இல்லை.

பவித்திரன் - உங்களுக்கு கல்கி எப்படியோ, அப்படி செல்லப்பாவுக்கு ராமையா

விக்ரமன் - அப்படியெல்லாம் ஒப்பிடமுடியாது. அது இருக்கட்டும். வாசகர்களிடம் பிரபலமான யாரையும் ஒரு இலக்கியவாதி என்று ஒப்புக்கொள்ளாத கூட்டம் தான் இவர்களது. கல்கி வாசகர்களிடையே மிகவும் பிரபலமானவர். தேசபக்தர். நல்ல பேச்சாளர். வெற்றி கண்ட பத்திரிகையாளர்.

பவித்திரன் - கல்கி இறந்த பிறகு விகடனில் கல்கி வளர்த்த தமிழ் என்று அப்போது ஆசிரியராக இருந்த தேவன் தொடர்ந்து கட்டுரைகளைப் பிரசுரித்தது கல்கியை நான் நன்கு அறிய உதவியது.

விக்ரமன் - அது தேவன் தானாகச் செய்தது இல்லை. வாசன் வற்புறுத்தினால் தான் தேவன் அந்தக் கட்டுரைகளை வெளியிட்டார். கல்கி விகடனில் இருக்கும் வரை தேவன் வெளிச்சத்திற்கு வரமுடியவில்லை. அவர் தமக்கென்று கல்கி என்ற பத்திரிகையை ஆரம்பித்தவுடன் தான் தேவன் பிரபலமானார். தேவனும் தன் கதைகளை மட்டுமே விகடனில் பிரபலப்படுத்தினார். பிற எழுத்தாளர்களுக்கு விகடனில் இடம் அளிப்பதில் தவறி விட்டார்.

பவித்திரன் - இருக்கலாம். என்றாலும் வாசன் தேவனிடம் சிறிது மனிதாபமானத்துடன் நடந்து கொண்டிருக்கலாமோ என்று எனக்குப் படுகிறது. தேவன் உயிரோடு இருக்கும் வரை அவரது எந்த நாவலும், சிறுகதையும் புத்தகமாக வெளிவர அனுமதிக்க வில்லை. ஆனால், லட்சுமி எழுதிய அத்தனை எழுத்துக்களும் உடனேயே புத்தமாக வெளியிட வாசன் அனுமதி அளித்துள்ளார். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு நாடகக் குழுதான் தேவனின் நாவல்களை நடித்து வெற்றிகரமாக மேடை ஏற்றி ஓரளுக்காவது தேவனுக்கு ஒரு மன நிம்மதியைக் கொடுத்தனர்.

விக்ரமன் - லட்சுமி - வாசன் உறவில் கூட தவறு என்று கூடச் சொல்பவர்கள் உண்டு. தேவன் இறந்து போய், அவரை வாசன் மரியாதை நிமித்தமாகப் போய்ப் பார்க்கும் போது, தேவன் மனைவி - என் கணவரை நீ தான் கொன்றாய் என்ற அளவில் கொதித்தெழுந்தார் என்று கூறுவார்கள். தேவனுக்குப் பிறகு கொத்த மங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாளை வாசன் எடுக்க விழைந்த போது, அதை மற்றொருவருக்கு அனுமதி அளித்தது வாசனுக்குப் பிடிக்க வில்லை.

பவித்திரன் - விகடன் விற்பனை குறைந்த போது, வாசன் மகன் பாலசுப்பிரமணியன் துணிந்து ஜெமினி நிலத்தை விற்று, ஜெமினி கலர் லபாரட்டியையும், விகடன் அச்சு இயந்திரங்களை எல்லாம் நவீனப் படுத்தி, மீதிப்பணத்தில் ஸ்ரீபரம்பதூர் ஊருக்கு அருகில் தோட்டங்களையும் வாங்கியது உண்மையிலே ஒரு சிறந்த முடிவு என்று கருதுகிறேன். வங்கிக் கடனை எதிர்பார்க்காமல் இதைத் துணிந்து செய்ததற்காக அவரைப் பாராட்டலாம்.

விக்ரமன் - இது மிகவும் தவறான முடிவு. அப்பா சேர்த்து வைத்த சொத்தை அழித்ததற்குச் சமம். ஒரு பத்திரிகையை அடிக்கடி மாற்றுவது ஒரு தவறான செய்கை. பத்திரிகை என்றால் அதற்கு ஒரு முகம், ஒரு தரம் இருக்க வேண்டும். விகடன் பத்திரிகையின் அளவை மாற்றியும், பலவிதமான கட்டுரைகள் போட்டும் விகடன் எடுபடவில்லை என்று தான் சொல்வேன். அவள் நன்றாக உள்ளது. இதைத் தொடர்ந்து விகடன் காரியாலத்திலிருந்து பல வார மாதப் பத்திரிகைகள் வெளிவந்து விட்டன. அவைகள் எல்லாம் தரமானவைகளாக எனக்குப் படவில்லை. இப்போது விகடன் பத்திரிகைகள் வாசனின் பேரன் சீனிவாசன் வசம். விகடன் பிராண்ட் பெயரே தாரை வார்க்கப் பட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. பணம் தான் பிரதாண்யம் என்று வந்த பிறகு, பத்திரிகை தர்மம் எங்கே தலை தூக்கும் ?

பவித்திரன் - இதை எல்லாம் பார்க்கும் போது சோ துக்ளக் பத்திரிகையை வெகு இலகுவில் தொடங்கி வெற்றி கண்டது ஆச்சரியமாக இருக்கிறது. விகடனில் ஒரு ஆபீஸ் அறையை மட்டும் எடுத்துக் கொண்டு, அச்சிடுதல், விளம்பரம், விற்பனை அனைத்தையும் விகடன் பார்த்துக் கொள்ளும் படிச் செய்து விட்டார்.

விக்ரமன் - பத்திரிகை என்றால் சொந்தமான வெளியிடும் முறைதான் சிறந்தது. இப்பொழுது சோ கல்கி ஆபீஸுக்கு மாறிவிட்டார். சோவுக்கு ஒரு ஸ்திர புத்தி கிடையாது. ஹாஸ்யமாகப் பேசும் அவர் பேச்சை ஒரு பொருட்டாகக் கொள்ள முடியாது. அவர் மாறிக் கொண்டே இருப்பார். அது அவரது இயல்பு.

பவித்திரன் - செல்லப்பாவும் பத்திரிகை நடத்தி வெற்றி காணவில்லை.

விக்ரமன் - செல்லப்பாவுக்கு வீண் ஜம்பம் உண்டு. மனைவி அந்தக் காலத்திலேயே 100 பவுன் தங்க நகைகளோடு வந்தாள். அத்தனையையும் இலக்கியம், பத்திரிகை என்று தொலைத்தார். அதை அவரால் மீட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால் அதற்காக அவரது அகம்பாவம் குறையவில்லை. இதற்கு ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவர் கடைசிகால கட்டத்தில் எழுதி வெளியிட்ட சுதந்திர தாகம் என்ற பெரிய புத்தகம் சரியாக விற்பனையாக வில்லை.  அவரது விசிரிகள் அவரைப் பாராட்டிப் பரிசு கொடுக்க ஏற்பாடாகி இருந்த விழாவிற்கு அவரை மனைவியுடன் வரவழைத்திருந்தார்கள். அவருக்கு பட்டு வேஷ்டி, அவரது மனைவிக்கு பட்டுப் புடவை, தங்கநகைகள் என்று வெகுமதிகள் வழங்கப்பட்டன. அதைப் பார்த்த செல்லப்பா, பட்டு வேஷ்டியையும், பட்டுப் புடவையையும் ஏற்றுக் கொண்டு, தங்க நகை வேண்டாம் என்று மறுத்து விட்டார். அவர் திரும்பிப் போக ஏற்பாடு செய்திருந்த கார் வசதியையும், இன்று நீங்கள் கார் ஏற்பாடு செய்து விட்டீர்கள், நாளை நான் ஆட்டோ அல்லது நடந்துதானே செல்ல வேண்டும் என்று சொல்லி தன் செலவிலேயே ஆட்டோவில் தம் மனைவியுடன் வீட்டிற்குச் சென்று விட்டார். இது எதைக் காட்டுகிறது ?  செல்லப்பா கதர் அணிவதை ஒரு விரதமாகப் பூண்டவர். அப்படி இருக்கும் பொழுது, அவர் பட்டு வேஷ்டி அன்பளிப்பைப் பெற்றது என்ன நியாயம் இது கொடுத்தவர்களை மதிக்கும் செயல் என்றால், செல்லப்பா ஒழுங்காக அவர்கள் கொடுத்த அன்பளிப்பு முழுவதையும் ஏற்பதுதான் ஞாயம். வீண் ஜம்பம் எதற்கும் உதவாது.

செல்லப்பா தன் தாயைப் பற்றி எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை. நானும் பலரிடம் விசாரித்து விட்டேன். தகப்பனாரைப் பற்றிக் குறிப்பிட்ட செல்லப்பா தன் தாயைப் பற்றிக் குறிப்பிடாதது சற்று ஆச்சரியமாகவே இருக்கிறது. கா.நா.சு.வும் செல்லப்பாவும் ஈகோ மிகவும் உள்ள எழுத்தாளர்கள். அதுவே அவர்களது பலமும், பலவீனமும் ஆகும்.

இந்தத் தருணத்தில் எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் எனக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தார்கள். அந்த விழாவில் எனக்கு பணமுடிப்பு கொடுத்தார்கள். பட்டம் கொடுப்பதில் ஒரு பலனும் எழுத்தாளனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பணமுடிப்பு தான் உதவும் என்று சொன்னார்கள். நானும் அவர்கள் கொடுத்த பணமுடிப்பை நன்றியோடு பெற்றுக் கொண்டேன்.

பவித்திரன் -  தி. ஜானகிராமனும் ஒரு எழுத்தாளர் தான். சமூக சேவகரோ, சமூக விழுப்புணர்வு கொண்டவரோ அல்ல. அவர் உங்கள் எழுத்தாளர் பட்டியலில் இருக்கிறாரா

விக்ரமன் - ஜானகிராமன் அகில இந்திய ரேடியோவில் பணிபுரிந்து பல அரிய செயல்களும் செய்தவர். அவரைப் பற்றிய செய்திகள் பல உண்டு. லா.ச.ரா.விற்கும் இலக்கியத்தில் தனி இடமுண்டு. அவரது பல கதைகளை நான் அமுதசுரபியில் வெளியிட்டிருக்கிறேன் என்பதை நினைத்து பெருமைப் படுகிறேன்.

பவித்திரன் - தமிழ் மொழி வளர நீங்கள் சொல்லும் அறிவுரை ஏதாவது உண்டா

விக்ரமன் - தமிழ் தொன் மொழிதான். அதற்காக சம்ஸ்கிரதம், ஏன், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்கக் கூடாது. இவ்வளவு ஏன் ? ஐம்பெரும் காப்பியம் என்று சொல்கிறோமே அதில் கம்பராமாயணம் இல்லை  ஆனால் கம்பராமாயணம் போல் அந்த ஐம்பெரும் காப்பியங்கள் மக்களிடம் பரவவில்லை. ஏன்  மற்ற ஐம்பெரும் காப்பியங்களெல்லாம் ஜைனமத கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டவைகளாகும். ஆனால் கம்பராமாயணம் பக்தியை முக்கிய கருவாகக் கொண்டு எழுந்த காவியம். குரு பக்தி, பதி பக்தி, பெற்றோர் பக்தி, உடன் பிறந்தோர் பக்தி என்ற அளவில் இருக்கும் காவியம் கம்பராமாயணம். மிகவும் முக்கியமாக ராமன் ஏக பத்தினி விரதன். ராவணனும் சீதையை அபகரித்தாலும், அவளது மாற்றத்தைத் தான் வற்புறுத்தினான்.

சிலப்பதிகாரத்தின் கோவலன் காமுகனாகி மாதவியை அண்டி, தன் பத்தினி கண்ணகியை கண்கலங்க வைக்கிறான். பிறகு கண்ணகி தன் கணவனை தவறாகத் தண்டித்ததற்காக மதுரையை எரிக்கிறாள். கணவன் முன்பு தவறிழைத்தவன் என்றாலும், கள்வன் என்று தவறாகத் தண்டிக்கப்பட்டதால், கண்ணகி அப்பாவி மதுரை மக்களையே பழிவாங்கியது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. ஆகையால், ஐம்பெரும் காப்பியமாக சிலப்பதிகாரம் இடம் பெற்றாலும், கம்பராமாயணம் போல் பேர் பெறவில்லை. இது மக்களின் மன நிலையைப் பொருத்த விஷயமாகவும் ஆகிவிடுகிறது. 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017