மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய்க் கிரஹப் பயணம்


நவம்பர் மாதம் 7-ம் தேதி செவ்வாய்க் கிழமை செவ்வாய்க் கிரஹத்தை ஆய்வு செய்ய ரூ.450 கோடி செலவில் 1,350 கிலோ எடைகொண்ட  மங்கள்யான் செயற்கைக் கோள் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்

விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை பல கட்டங்களில் அதிகரிக்கும் முயற்சியில் முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்து இன்னும் இதேபோல் நான்கு முறை சுற்றுப் பாதை அதிகரிக்கப்பட்டு, சுமார் 300 நாள்களில் 68 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்த பிறகு, மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரஹத்தைச் சுற்றியபடி ஆய்வை மேற்கொள்ளும்.

புவி நீள்வட்டப் பாதையில் 27 நாட்கள் பயணம் செய்யும் மங்கள்யான் விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே, டிசம்பர் 1-ம் தேதி நள்ளிரவு 12.42 மணிக்கு புவி நீள்வட்டப் பாதையில் இருந்து வெளியேற்றி, செவ்வாய் கிரக பாதையை நோக்கிச் செலுத்துவர். அந்த பாதையில் 300 நாட்கள் பயணம் செய்யும் இந்த விண்கலம், அடுத்த ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அதன் பின்னர் அது செவ்வாய் கிரகத்தைச் சுற்றி ஆய்வுசெய்யும். இதற்குத் தேவையான நவீன சாதனங்களும், கேமராக்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மனிதர்கள் உயிர் வாழத் தேவையான மீத்தேன் வாயு செவ்வாய் கிரகத்தில் இருக்கிறதா? என்பதை ஆராய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை மீத்தேன் சென்சார் கருவியும், கனிம வளங்களை தெர்மல் இன்பிரா-ரெட் இமேஜிங் ஸ்பெக்ட்ரோ மீட்டரும், வளி மண்டலத்தை லைமன் ஆல்பா போட்டோ மீட்டரும், நுண்ணிய துகள்களை எக்சோபெரிபிக் நியூட்ரல் கம்போசிசன் அனலைசரும் ஆராயும். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு பகுதிகளை மார்ஸ் கலர் கேமரா பல கோணங்களில் படம் பிடிக்கும்.

கடந்த 2008-ம் ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உலக நாடுகளை வியப்படையச் செய்த இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம், தற்போது மங்கள்யான் விண்கலம் அனுப்பியதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியவுடன் செவ்வாய் கிரஹ ஆராச்சியில் போட்டு போடுகிறது. இந்த செவ்வாய்க்கிரஹ விண் கலம் அனுப்புதலில் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது என்பதை நோக்கும் போது, நமது இந்திய விஞ்ஞானிகளின் வெற்றியில் இந்தியர் ஒவ்வொரும் பெருமிதம் கொள்ளலாம்


இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன், பி.எஸ்.எல்.வி. சி-25 திட்ட இயக்குனர், கே. குன்னி கிருஷ்ணன், மங்கள்யான் திட்ட இயக்குனர் அருணன் மற்றும் இதர விஞ்ஞானிகளுக்கும் இன்ஜினியர்களுக்கும் இந்தியா என்றும் கடமைப்பட்டதாகும். அவர்களை ஒவ்வொரு இந்தியனும்  மனமாறப் பாராட்டிப் போற்றவேண்டியது அவசியமாகும்.

வெற்றுப் பெருமிதத்துக்காக ரூ. 450 கோடி செலவு தேவையா?’ என்ற விமர்சனத்திற்கு இஸ்ரோ தலைவர் சக்சிதமாக ரத்தினச் சுருக்கமாக சொன்னது ஒப்பற்ற அற்புதமொழியாகும்: “ஆய்வுகளுக்காக ஒரு நாடோ அமைப்போ செலவிடும் தொகை செலவு அல்ல; முதலீடு.

அவர் மேலும் இது குறித்துச் சொன்னவைகள்: நிலவு, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்களை ஆய்வு செய்வதற்கான விண்வெளி ஆய்வுத் திட்டங்கள், தேசத்தின் தொலைநோக்கு விண்வெளி ஆய்வுத் திட்டங்களின் ஓர் அங்கம்.
இத்திட்டங்கள் விண்வெளி அறிவியல் துறை ஆலோசனைக் குழுவால் திட்ட மிடப்பட்டவை. நாம் மூன்று நீண்டகால விண்வெளித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். செயற்கைக்கோள்கள், ஏவுகலங்கள், கிரகங்களின் ஆய்வுகளில் ஈடுபடுதல் என அவற்றை வரிசைப்படுத்தி மேற்கொண்டு வருகிறோம். நம் கைகளில் உள்ள விரல்களைப் போல அனைத்துமே சமமான முக்கியத்துவம் கொண்டவைகள்.

அனைத்து விரல்களும் நமக்குத் தேவைதான். சந்திரயான், அஸ்ட்ரோசாட் திட்டங்களைப் போன்று செவ்வாய்க்கிரக சுற்றுப்பாதைத் திட்டம் (எம்ஓஎம்) என்பது கிரக ஆய்வுகளில் ஈடுபடும் திட்டத்தின் ஒரு பகுதி. இஸ்ரோ பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் 7 சதவீத நிதி, சூரியக்குடும்பத்தைப் பற்றிய நமது அறிவின் எல்லையை விரிவுபடுத்துவதற்காகச் செல விடப்படுகிறது.

இந்த நியாயத்தைத் தாண்டியும் மங்கள்யான்இன்னொரு நியாயத்தை உள்ளடக்கியிருக்கிறது: சிக்கனப் பொறியியல்வியூகம் இந்திய அறிவியல் துறையின் முக்கிய அம்சமாகும். வளர்ந்த நாடுகள் பெரும் பொருட்செலவில் விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்தும் சூழலில், ‘இஸ்ரோவின் சிக்கன விண்வெளித் திட்டங்களின் வெற்றி ஒரு நம்பகத்தன்மையை உலக அரங்கில் உருவாக்கிஅயல்பணி ஒப்படைப்பு முறையில், ஒப்பந்தங்களைப் பெற்று, வணிகரீதியிலான ஒரு நல்ல போட்டியாளராக பல நாடுகள் நம் நாட்டை நம்பி பணிகளை அளித்து, அதன் மூலம் நமது நாடு பல முனை முன்னேற்றம் அடையவும் வழி வகுக்கும்.

சந்திரயான் 1 - என்ற விண்கலத்தை சந்திரனுக்குச் செலுத்தி, சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்பதை உலகத்திற்கு உறுதி செய்ததைப் போல்,  செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ உதவும் மீதேன் வாயுக்கள் 
இருப்பதை உறுதி செய்தால், அது இந்தியாவிற்கு உலக அரங்கில் பெருமையைத் தேடித் தரும். அந்தப் பெருமையை அடைய மங்கல்யான்
உதவ இறைவனைப் பிரார்த்திப்போம்.
.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017