1235 – வது ஆதிசங்கரர் ஜெயந்தி : 25 – 04 - 2023
இன்று சித்திரை/வைசாக சுக்ல பஞ்சமி. நம்மையெல்லாம்
அத்வைத சாகரத்தில் ஆழ்த்தி ஞான மார்க்கத்தைக் காட்டுவதற்காக அன்னை ஆர்யாம்பாள் மணி
வயிற்றிலிருந்து ஆதிசங்கர பகவத்பாதாள் உதித்த நாள்..
அந்த ஆச்சார்ய கருணா மூர்த்தியின்
சிறப்புகளைப் பாடும்,
நம் பரமாச்சார்யாளின் மனதிற்கு மிகவும் பிடித்த
ஸ்தோத்திரம்தான் தோடகாஷ்டகம்..
ஆதிசங்கர பகவத் பாதாளுக்கு ஆறாயிரம் சிஷ்யர்கள் இருந்தனராம்.. அவர்களில் பிரதானமான நால்வர் “சுரேஸ்வராசார்யர்”, “பத்மபாதாசார்யர்”, “ஹஸ்தாமலகாசார்யர்”, “தோடகாசார்யர்”
இதில் தோடகாச்சார்யரின் பூர்வீகப் பெயர் ஆனந்தகிரி..
இவருக்கு மற்ற மூன்று சீடர்களைப் போன்று அப்படி ஒன்றும் சாஸ்திர ஞானம் கிடையாது. அபாரமான குரு பக்தி.. குருவிற்கு சேவை செய்வது மட்டுமே தனது பாக்கியம், கடமை என்று இருப்பவர்.
ஒருநாள் ஆச்சார்யாள் பாடம் நடத்த அமர்ந்து விட்டார். மூன்று சீடர்களும் தயாராக இருக்கின்றனர். கிரி மட்டும் வரவில்லை.. பக்கத்தில் உள்ள ஆற்றில் சங்கரரின் வஸ்திரத்தை துவைத்துக் கொண்டிருக்கிறார்..
இங்கு காத்துக் கொண்டிருக்கும் மூன்று சீடர்களுக்கும் பொறுமை குறைகிறது. கிரி வகுப்பிற்கு வந்தாலும் அவனுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை.. அவன் வருவதற்காக ஏன் ஆச்சார்யர் காத்திருக்க வேண்டும்..
பத்மபாதாள் குருவிடம் கேட்டே விடுகிறார்.. கிரி மெதுவாக வரட்டும். நாம் பாடத்தைத் தொடங்கலாமா? என்று..
அங்கோ, கிரி துணி துவைத்துக் கொண்டே "குருநாதா! எனக்கு மட்டும் நீங்கள் சொல்லிக் கொடுப்பது ஏன் புரியவே மாட்டேன் என்கிறது.. எனக்கேன் இந்த ஞானக் குறைவு.. நீங்கள்தான் எனக்கு நல்ல ஞானத்தை அருள வேண்டும்" என்று புலம்பிக் கொண்டே இருப்பது ஆச்சார்யாள் காதில் விழுகிறது.
உடனே கருணா சாகரமான ஆச்சார்யாள் ஒரு நொடியில்
அபரிமிதமான ஞானத்தை ஆனந்தகிரிக்கு அளித்து விடுகிறார். ஞானம் வந்தவுடன் கிரிக்கு
உடனே புரிந்து ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறார்.
இரண்டு கைகளையும் தட்டிக் கொண்டு தோடகம் என்னும் விருத்தத்தில் “விதிதாகில சாஸ்திர சுதா ஜலதே" என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டே ஆச்சார்யரை நோக்கி ஓடி வருகிறார்.
முதலில் ஆச்சரியப்பட்ட மற்ற மூன்று சீடர்களும் இவரது ஞானத்தைப் புரிந்து கொள்கிறார்கள்..
விதி³தாகி²ல
ஶாஸ்த்ர ஸுதா⁴
ஜலதே⁴
மஹிதோபனிஷத்-கதி²தார்த² நிதே⁴ ।
ஹ்ருத³யே கலயே விமலம் சரணம்
ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 1 ॥
குருவே! இந்த உலகத்தில் இதுவரை அறியப்பட்ட, அமிர்தத்திற்கு
இணையான,
சமுத்திரம் போன்ற சாஸ்திரங்கள் எல்லாமே
நீங்கள்தான்..
நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கும் உபநிஷத்துகளின்
உருவமே சாக்ஷாத் நீங்கள்தான்..
உங்களது கறை படியாத பாத கமலத்தை என் இதயத்தில்
வைத்திருக்கிறேன்.
சங்கர தேஸிகரே! உங்கள் பாதம் மட்டுமே எனக்கு புகலிடம்.
இப்படியாக,"சங்கர தேஸிகரே! உங்கள் பாதம் மட்டுமே எனக்கு புகலிடம்" என்று முடியும்படி எட்டு ஸ்லோகங்களைப் பாடுகிறார்.
தோடக விருத்தத்தில் இந்த ஸ்லோகத்தைப் பாடியதால் அவருக்கு 'தோடகாச்சார்யர்' என்ற பெயர் நிலைத்தது.
நமது மகா பெரியவா, "தோடகாச்சாரியருக்கு அவரது குருவின் பாதம்தான் புகலிடம்..
நமக்கெல்லாம் குருவைப் பற்றி பாடும் இந்த தோடகாஷ்டகம்தான் புகலிடம்" என்பாராம்.
அவர் முன் யார் இந்த ஸ்லோகத்தை சொன்னாலும் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு நின்று விடுவாராம்..
ராம நாமா கேட்கும் இடத்தில் எப்படி ஆஞ்சநேயர் இருப்பாரோ அதுபோல் தோடகாஷ்டகம் கேட்கும் இடத்தில் பரமாச்சாரியாள் இருப்பார் என்பது நிச்சயம்..
ஆகவே, இன்று இந்த தோடகாஷ்டகத்தைப் படித்து ஆதிசங்கர பகவத் பாதாளை மனமார பிரார்த்திப்போம்.
பவசங்கர தேசிக மே சரணம்
Comments