சமையல் சக்ரவர்த்தி வாசுதேவன் எழுத்து: பவித்திரன், வாய்மை நிருபர்
வாய்மை என்ற மாதப் பத்திரிகை ஒரு ஆன் லைனில் வெளியிடப்படும் ஒரு மின் அஞ்சல் பத்திரிகையாகும். அதில் மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள் சுமார் 150 பேர்கள் அந்த பத்திரிகையின் உறுப்பினர்களாகச் சேர்ந்து, அதைப் படிக்கிறார்கள்.
இந்தப் பத்திரிகை 2007-ம் ஆண்டு தமிழ் வருஷப்பிறப்பான சித்திரை 2007-ம் ஆண்டு தொடங்கி, கடந்த 15 வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. எந்த மாதத்திலும் பத்திரிகை வெளிவராமல் இருந்ததில்லை என்பதை தெய்வ சங்கல்பம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்தப் பத்திரிகை – ஆசிரியர் – எஸ். சங்கரன் – உதவி ஆசிரியை – ஆசிரியரின் தர்ம பத்தினியான வத்ஸலா சங்கரன் – இருவரின் முயற்சியில் வெளியிடப்படுகிறது என்பதால் இந்தச் சாதனையை ‘தெய்வ சங்கல்பம்’ என்று சொல்ல விழைகிறேன்.
இந்தப் பத்திரிகை இதழ் 41 – ஆவணி – ஆகஸ்ட் 2010 அன்று “சமையல் சக்ரவர்த்தி வாசுதேவன்’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை தான் இங்கு பிரசுரமாகிறது.
எஸ். சங்கரன் - வத்ஸலா சங்கரன்
சமையல் சக்ரவர்த்தி வாசுதேவன்
எழுத்து: பவித்திரன், வாய்மை
நிருபர்
செய்யும் தொழிலே தெய்வம் என்பது பாரதி வாக்கு. அதில்
ஒரு பெருமையும், பெருமிதமும் கொண்டு, தான் செய்யும் தொழிலையே உயர்ந்ததாகக் கருதுவோர்
வெகு சிலரே. அதுவும் சமையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும் அலுப்பும் சலிப்பும்
கொண்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், நான் சந்தித்த வாசுதேவன் ஒரு தனி ரகம். அவர் குடும்பமே
இந்த சமையல் தொழிலில் ஈடுபட்டிருபதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறார். அவர் பயணிப்பதோ
ரேவா புதிய காரில். அந்தக் காரையும் என்னிடம் காட்டினார். நானும் முதன் முதலில் அந்தச்
சிறிய பேட்டரி காரைப் பார்த்தேன். மிகவும் நன்றாகவே இருந்தது.
‘மாமா! இந்தக் காரில் ஒரு செளகரியம் உண்டு. ஒரு வீட்டில்
வேலை செய்து விட்டு, அடுத்த வீட்டிற்குச் செல்வதற்கு ஒரு சில மணிகள் இருந்தால் என்
காரை ஒரு நிழலான இடத்தில் நிறுத்தி வைத்து, சீட்டை நீட்டி விட்டு, அதிலேயே சிறிது நேரம்
ஓய்வு எடுத்துக் கொண்டு விடுவேன். இந்த செளகரியம் டூவிலரில் கிடையாது” என்ற விளக்கத்துடன்
தொடர்ந்தார்.
“குக்குக்கும் சில குணாதிசயங்கள் இருக்க வேண்டும்.
எனது கஷ்டமர்களுக்கும் சில கடமைகள் உண்டு. COOK – என்ற பதம் தான் குக்கின் குணாதிசயம். சி என்பது கேர். இரண்டு ஓ என்பது
ஓப்பீனியன், ஆர்டர். கடைசி எழுத்தான கே என்பது கைண்ட் என்பதைக் குறிக்கும். ஆகையால்
Care - கவனமாகவும், கஷ்டமர்களின் Opinion – டேஸ்டைக் கேட்டு சமைக்க
வேண்டும். சமைத்த பிறகு சமையல் அறையை Order – ஒழுங்குபடுத்த வேண்டியது மிக அவசியம். இறுதியாக வேலை செய்து விட்டுச் செல்லும்
பொழுது மனம் விட்டு Kind – அன்பாக விசாரிக்க வேண்டும்.
அப்பொழுதுதான் சமையல் மணக்கும். சாப்பிடுவதற்கும் இனிக்கும்.”
“கஷ்டமர்களுக்கும் கடமைகள் உண்டு. அது EAT
– என்ற ஆங்கில வார்த்தையிலேயே இருக்கிறது.. இ என்பது என்கரேஜ்மண்ட். ஏ என்றால்
அட்ஜஸ்ட் மெண்ட், டி என்றால் தாங்க்ஸ்.
சமையல்காரர் ஒரு சில நாளில் சிறிது காலதாமதமாக வந்தால்,
அதற்காக அவரைக் கோபித்துக் கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால், அந்தச் சமையல்காரரின்
மனம் புண்பட்டு, சமையலும் சோபிக்காமல் போய்விடும். சமையல்காரரையும் மனிதாபினாமனத்துடன்
நடத்தி, அவரை கூடிய மட்டும் உற்சாகப்படுத்த வேண்டும். சமையல் நன்றாக இருந்தால், அதற்கு
அவரைப் பாராட்டி, நன்றி சொல்ல வேண்டும்.
அப்பொழுதான் சாப்பாடே ருசியோடு நிறைவாக அமையும்.”
COOK – EAT – என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் விரிவான விளக்கம்
கொடுத்தார். சொல்ல வந்ததை எல்லாம் சொல்லத் துடிக்கும் இதயம் அவரது என்பதை உணர்ந்து
நான் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
பூம், பூம் மாடு மாதிரி அவ்வப்போது தலையை மட்டும்
ஆட்டிக் கொண்டிருந்தேன்.
“மாமா! நான் கோயிலுக்குப் போவதில்லை. ஆனால், நான்
செல்லும் ஒவ்வொரு கிரஹத்தையும் ஒரு கோயிலாகத்தான் பாவிக்கிறேன். அந்தக் கிரஹமெல்லாம்
ஒவ்வொரு நவக்கிரஹமாகும். எனக்கு ஒவ்வொரு வாரமும் என் தொழிலாலேயே நவக்கிரஹப் பிரதட்சணம்
செய்வதாகவே நினைத்து விடுகிறேன். இதற்கு நான் அணியும் சட்டையே சாட்சி.
ஞாயிறும், செய்வாயும் சிவப்புச் சட்டை. திங்களும்,
வெள்ளியும் வெள்ளைச் சட்டை. புதன் பச்சைச் சட்டை. வியாழன் மஞ்சள் சட்டை. சனி கருப்புச்
சட்டை. எனது சட்டையைப் பார்த்தே அன்று என்ன கிழமை என்று தெரிந்து கொள்ளலாம்! இன்று
நான் அணிந்திருப்பது சிவப்புக் கலர் கொண்ட சட்டை. இன்று ஞாயிற்றுக் கிழமை.
“இந்தத் தொழிலுக்கு எனக்கு குரு என் மனைவி. அவளிடமிருந்து
கற்ற வித்தைதான் என்னைக் காப்பாற்றுகிறது. ஆகையால் அவளுக்கு நன்றி சொல்லும் விதமாக,
ஒவ்வொரு நாளும் தவறாது மஞ்சள் பொட்டையும் அணிந்து வெளியே வேலைக்குச் செல்கிறேன். அது
குருவான என் மனைவிக்குச் செய்யும் நன்றி. குரு பகவானுக்கு மஞ்சள் நிறம். ஆகையால் தான்
தினமும் மஞ்சள் பொட்டை குங்கும்ம் விபூதியுடன் அணிகிறேன்.”
மூச்சு விடாமல் தொடர்ந்து பேசியதினால், குடிக்கத்
தண்ணீர் கேட்டார். தண்ணீரைக் கொடுத்தேன்.
வாசுதேவனுக்குக் காப்பியும் கொடுத்தோம்.
“கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். எங்களுக்கு எப்போதும்
வேலை வந்து கொண்டே இருக்கும். நாங்கள் அதைத் தேடிச் செல்வதில்லை. ஆனால், எங்களுக்கு
ஒரு மின் வலை ஒன்று இருக்கிறது. அதன் மூலம் பல பேர்கள் தொடர்பு கொள்கிறார்கள்” என்று
தன் பேச்சை முடித்துக் கொண்டார்.
“சார், உங்கள் வாக்கு அமுதமாக இருக்கிறது. அவைகளை
வாய்மை இதழில் பிரசுரிக்கப் போகிறேன். உங்களை என் செல் போனில் படம் படிக்க அனுமதி வேண்டும்”
என்று கேட்டு, பிடித்த போட்டோ தான் இங்கு மேலே இடம் பெற்றிருக்கிறது.
“அது, சரி! சமையல் சக்கரவர்த்தி என்ற பட்டம் அவருக்கு
யார், எப்போ கொடுத்தது?” என்று நீங்கள் கேட்பதில் ஒரு ஞாயம் இருக்கத் தான் செய்கிறது.
“தான் செய்யும் தொழிலை இவ்வளவு மேம்பட நினைக்கும் ஜீவன். மொத்த குடும்பமுமே இதில் ஆர்வமாக ஈடுபட்டிருக்கிறது. அதற்காகவே வாய்மை வாயிலாக அவருக்கு ‘சமையல் சக்ரவர்த்தி’ என்ற பட்டம் கொடுத்து விட்டேன். ஒருவரும் ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!” என்பது தான் என் விளக்கம்.
Comments