ஆவணி அவிட்டம் – 11 – 08 – 2022 & காயத்ரி ஜெபம் – 12 – 08 - 2022
ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு
உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கும் சடங்காகும். ரிக் மற்றும் யஜுர்வேதிகள் இந்த தினத்திலும், சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்திலும் கடைப்பிடிப்பார்கள்.
ஆவணி அவிட்டம் என்பதை உபாகர்மா என்றும் சொல்வார்கள். அந்த தினத்தில் சிறுவர்களுக்கு முதன் முதலாக பூணூல் அணிவித்து, காயத்ரி மந்திரம் உபதேசித்து, வேதக் கல்வியை கற்க தயார் செய்யும் சடங்காக இது அனுசரிக்கப்படுகிறது.
முற்காலத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கற்க அனுப்புவதற்கு முன்னர் இந்த உபாகர்மா என்ற பூணூல் அணிதல் – காயத்ரி மந்திர ஜெபம் ஆகிய சடங்குகளைச் செய்து அதன் பிறகு அந்த தினத்தில் வேதக் கல்வியைத் தொடங்கி வைப்பார்கள்.
அனைத்து குழந்தைகளுக்கும் வேதக் கல்வி என்ற நிலை மாறி, பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட
சமூகத்தினர் மட்டுமே உபாகர்மா – காயத்ரி ஜெபம் செய்யும் நிலை ஏற்பட்டு, வேதக் கல்வியும் அந்த பிற சமூகத்தினர் கற்காமல் இருக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இவைகள் கல்வி கற்கும் முன் செய்யும்
சம்பிரதாயம், சங்கல்பம் என்ற சடங்குகளாகும். :
சந்திரனை அடிப்படையாக கொண்டு
குறிப்பிடப்படும் மாதம் அதாவது ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரையிலான காலம்
ஸ்ராவண மாதமாகும். இந்த மாதத்தில் வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் அல்லது
பெளர்ணமி திதியில் ஓர் ஆண்டுக்கான கல்வி தொடங்குகிறது.
இந்த உபாகர்மாவின் போது யக்னோபவீதா – அதாவது புனித பூணூல் அணிவது ஒரு முக்கிய அம்சமாகும். அதை முப்புரிநூல் அதாவது மூன்று நூல்கள் கொண்டது என்ற பொருளில் தான் பூணூல் அறியப்படுகிறது. அந்த பூணூலில் மூன்று நூல்கள் உண்டு. அந்த மூன்று நூல்களும் தனியாக
ஒன்றோறொன்று இணையாமல் அவைகள் ஒரு முடிச்சில் ஒன்றாக இணைகிறது. அந்த முடிச்சை – பிரம்ம முடிச்சு – அதாவது பிரம்மத்தை எப்போதும் மனத்திலே தரிக்க நினைவு படுத்தும் விதமாக அமைந்த முடிச்சு என்று சொல்கிறோம்.
முன்பெல்லாம் நாம் ஒன்றை மறக்காமல் இருக்கவும், நமக்கு ஞாபகப்படுத்தவும் நம் அங்கவஸ்திரத்திலே ஒரு முடிச்சுப் போட்டு வைத்திருப்பது ஒரு பழக்கம். அதைப் போலத்தான் இந்த பிரம்ம முடிச்சு பூணூல் அணிந்த ஒவ்வொருவரும் பிரம்மத்தை – தர்மத்தை – கர்மாவை, மேலான ஒழுக்க நெறி – ஆகியவைகளை ஒவ்வொரு நொடியும் மறக்காமல் கடைப்பிடிப்பதற்குத் தான் பூணூல் – அதன் பிரம்ம முடிச்சு அறிவுறுத்துகிறது.
மேலும், அந்தப் பூணூலில் உள்ள மூன்று நூல்கள் ஒவ்வொன்றும் அதை அணியும் நபர் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று கடமைகளைக் குறிப்பிடுகின்றன.
அவைகள் – பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள், பாரம்பரிய தர்மம் – கலாச்சாரம் காக்க வேண்டிய கடமைகள் – என்பனவாகும்.
காயத்ரி மந்திரம் ஸூரியபகவானை ‘இருளைப் போக்கி, சக்தி கொடுத்து, வாழ்வை நல்வழிப்படுத்தி அருள’ வேண்டும் என்ற ஒரு சக்தி மிக்க பிரார்த்தனை மந்திரமாகும்.
ஸூரியபகவான் காயத்ரி தேவியின் அம்சமாகும்.
காயத்ரி
மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம்
என்று போற்றப்படுவது. இந்த மந்திரம் ரிக், யஜுர், ஸாம என்ற மூன்று வேதங்களின் சாராம்சம் என்பதால்
காயத்ரி மந்திரத்தை “திரிபாத காயத்ரி” என்று
சிறப்பித்து அழைக்கிறார்கள். மேலும், திரிகால
சந்தியா வந்தனம் செய்யும் போது, வேதத்தின் அன்னை காயத்ரி விடியற்காலையில்
காயத்ரியாகவும், மத்தியானத்தில் சாவித்ரியாகவும், சந்தியா வேளையில் சரஸ்வதியாகவும் துதிக்கப்படுகிறாள்.
க்ஷத்திரியர் ராஜரிஷி
விசுவாமித்திரரால் வழங்கப்பட்ட இந்த மந்திரம், மந்திரங்களின்
தாய் என்ற பெருமையைக் கொண்டுள்ளது. தியானத்தில் ஈடுபட்டிருக்கும் வேளையில் ஆகாயத்தில்
சூட்சும ஒலியாக விசுவாமித்திரர் கேட்டு உலகத்திற்கு வழங்கி அருளினார். கீதையில் கிருஷ்ண பரமாத்மா 'மந்திரங்களில்
நான் காயத்ரி மந்திரம்' என்றே
குறிப்பிட்டுள்ளார்.
ரிக் வேதத்தின்
மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள இந்த மந்திரம் சாவித்ரி மந்திரம் என்றும்
கூறப்படுகிறது. இந்த மந்திரத்தின் பெருமையால் பிறகு ஒவ்வொரு கடவுளருக்கும்
தனித்தனியே காயத்ரி மந்திரம் உருவாகத் தொடங்கியது.
பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர் இயற்றி, உலகிற்கு அருளிய காயத்திரி மந்திரம் இது தான்:
பதினொரு சொற்களைக் கொண்ட புனித காயத்ரி மந்திரத்தின்
பொருள்:
“பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம்
ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய
சக்தியை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள்
எங்களது அறிவை மேம்படுத்தட்டும்.” ‘
காயத்திரி’
என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி
மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று என்றும் சொல்வர்.
யோகாவின் இருதயமான
மூச்சுக் காற்றுப் பயிற்சியினைச் செய்யும் போது இதை ஜெபிப்பவர்கள் அதிகமான
பிராணசக்தியைப் பெற்று ஆயுள் விருத்தி அடைவர் என்கிறது வேதம்.
“நமது புத்தியை
இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம்” என்பது தான் காயத்ரி
மந்திரத்தின் சுருக்கமான பொருள்.
காயத்திரி
மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153) பின்வருமாறு
பாடியுள்ளார்.
"செங்கதிர்த்
தேவனின் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்
அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக"
சர்வே ஜனா சுகினோ பவந்து! – அனைத்து ஜனங்களும் சுகமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம் என்பது தான் உபாகர்மா – காயத்ரி மந்திரம் ஆகியவைகளின் முக்கிய நோக்கமாகும். அது தான் வேதத்தின் உபதேசமாகும்.
இந்த காயத்ரி மந்திரம் போல் தான் பிருகதாரண்யக
உபநிடத ஷாந்தி என்ற பரப்பிரம்மாவை வேண்டும் மந்த்ரமும் அமைந்துள்ளது:
ஓம் அஸதோ மா
ஸத் கமய
தமஸோ மா
ஜ்யோதிர் கமய
ம்ர்த்யோர் மா
அம்ர்தம் கமய
ஓம் ஷாந்திஹ்
ஷாந்திஹ் ஷாந்திஹ்
அதன் பொருள்:
ஓம்:
பொய்யான உலக வாழ்வினை
நீக்கி, மெய்யான வழியினை நோக்கிச்
செல்ல துணை புரிக.
இருள் நீக்கி, ஒளியை நோக்கிச் செல்ல துணை புரிக.
இறப்பை நீக்கி, இறவாமையை நோக்கிச் செல்ல துணை புரிக.
மூன்று வகையிலும் அமைதி நிலவட்டும் – அமைதி நிலவட்டும் – அமைதி நிலவட்டும்.
அதைத் தான் மஹா கவி பாரதியும் – யாகத்திலே தவ வேகத்திலே – தனி யோகத்திலே .. உயர் நாடு – பாரத நாடு என்றும், வேதம் நிறைந்த தமிழ் நாடு என்றும் முழங்கியுள்ளார்.
‘ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம் இத் தேசத்தின் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே’
- என்ற பாரதியின் அமுத மொழிகளும் ஹிந்து சனாதன தர்மத்தைத் தான் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்துகின்றன.
பாரத தேசத்தின் முகவரியே வேதம், பக்தி, தர்மம், அனைவரின் சுகம் ஆகியவைகளைக் கடைப்பிடிப்பதில் தான் அடங்கி உள்ளது.
உலகம் உய்ய அனைவரும் பாடுபடுவோம், வாரீர்.
Comments